Mar 12, 2018

கடவுளின் குழந்தைகள்

தமிழ்நாட்டில் சிலவற்றை பாராட்டியே தீர வேண்டும். கல்வித்துறையின் சில முன்னெடுப்புகள் அதில் அடக்கம்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று புஞ்சை புளியம்பட்டி என்ற ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. 'அங்க ஒரு பள்ளிக்கூடம் இருக்கு...போய்ட்டு வாங்க' என்றார்கள். அரசுப் பள்ளிக்கூடம்தான். அதில் ஒரு வகுப்பறையை மன நலம் குன்றிய குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள் அவர்கள். தமிழகம் முழுக்கவும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளியை இப்படி ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித் தொகையளிக்கிறது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் அல்லவா? 'இவன் பள்ளிக்கூடம் போகலைன்னா குடி முழுகிப் போயிடுமா?' என்று பெற்றவர்கள் சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து பள்ளியில் விடுவதற்காக பெற்றோருக்கும் 'எஸ்கார்ட்' என்ற பெயரில் நிதி ஒதுக்கிறது அரசாங்கம்.

இந்தப் பள்ளியில் இருபத்தைந்து மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் சென்றிருந்த போது சுமார் இருபது பேர்கள் இருந்தார்கள். 'நிறைய பேருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாம போயிடுதுங்க' என்றார்கள். இருபது பேர் என்பது சராசரியான எண்ணிக்கை போலிருக்கிறது. இந்த மாணவர்களுக்கென இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு ஆயா. ஒரு பிசியோதெரபிஸ்ட். 





சில ஆட்டிசம் குழந்தைகள் இருக்கிறார்கள். சிலர் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். ஒரு பெண்ணுக்கு  'ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்'. எல்லாவற்றையும் ஐந்து நிமிடங்களில் மறந்துவிடுகிறாள். ஒரு மாணவனுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. ஆனால் அற்புதமான ஓவியன். இப்படி கலவையான குறைகள். அவர்களுக்குக் கலவையான வயது. ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். ஓரளவுக்கு தேறும் மாணவர்களைத் தேர்வு எழுதவும் அனுப்புகிறார்கள். 

ஒரு மாணவன் 'சார் எனக்கு குறள் தெரியும்' என்றான். அவனால் தெளிவாகப் பேச முடியவில்லை. 'எங்க சொல்லு பார்க்கலாம்' என்ற பிறகு குறளைச் சொல்லிவிட்டு அதன் பொருள் விளக்கமும் சொன்னான். 'வெரி குட்.போதும். நீ உக்காருப்பா' என்று சொன்னாலும் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.

'எங்க பசங்க எல்லோருமே உற்சாகமானவங்க' என்றார் பொறுப்பாளர். சந்தோஷமாக இருந்தது. 

உடன் அரசு தாமஸ் வந்திருந்தார். கேரளாவில் மதுவை அடித்துக் கொன்ற நிகழ்வை தமது பள்ளி மாணவர்களிடம் சொல்லி 'அவன் நினைவாக மூன்று நாளைக்கு தின்பண்டத்தை நிறுத்திடுங்க..அந்தக் காசில் இல்லாத குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தரலாம்' என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைக்கும்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு மூட்டை உணவுப் பண்டத்தை வாங்கிக் குவித்திருந்தார்கள் அந்த மாணவர்கள். இரண்டு மூன்று பள்ளிகளுக்கு மாணவர்களே சென்று அவற்றை விநியோகம் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியை புளியம்பட்டி குழந்தைகளுக்கும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் உண்டு முடிக்கவும் பள்ளி முடியும் நேரம் ஆகவும் சரியாக இருந்தது.

மாணவர்களை அழைத்து வர பெற்றோர் சிலர் வந்திருந்தார்கள். 'நீங்க பசங்களை அனுப்பிடுங்க' என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு பொறுப்பாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அரசாங்கம் செய்து கொண்டிருப்பது மிகப் பெரிய சேவை. இதைச் சிந்தித்து செயல்படுத்திய அந்த நல்ல மனம் வாழ்க. 

இந்தப் பள்ளியைப் பொறுத்த வரைக்கும் உள்ளூர் லயன்ஸ் கிளப் தினமும் அந்த மாணவர்களுக்கு சிறப்பு உணவு தயாரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். 

மாணவர்களில் சிலர் கிளம்பிச் சென்ற பிறகு 'கற்பித்தலில் இருக்கும் சிரமங்கள்' பற்றி ஆசிரியர்கள் பேசினார்கள். இந்த ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சிறப்புப் பயிற்சியளித்திருக்கிறது. 

'எங்க கிட்ட நிறைய சி.டி இருக்கு சார்..டி.வி இருந்தா நல்லா இருக்கும்' என்றார்கள்.

பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் உதவிகளைக் கேட்பார்கள். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டார்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லை. உள்ளூர் ஆசிரியர்களிடமெல்லாம் வசூல் செய்து இருபத்தியிரண்டாயிரம் ரூபாய் வைத்திருக்கிறார்கள். 

'நாங்க இந்தத் தொகையை தந்துடுறோம்..மேல தேவைப்படுற பணத்துக்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்' என்றார்கள்.

இத்தகைய பள்ளிகளுக்கு உதவாமல் யாருக்கு உதவப் போகிறோம்? அந்த மாணவர்களை வெகு நேரம் பார்க்கவே முடியவில்லை. எவ்வளவு ஏற்றத்தாழ்வுகளுடன் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறது? ஒரு பக்கம் பாவத்தின் மேல் பாவமாக மனிதன் செய்து கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் வாய் குழறி, எச்சில் ஒழுக, நினைவு சிதைந்து இந்தக் குழந்தைகள். அவர்களைப் பெற்றவர்களின் மனம் எப்படி வெம்பிக் கிடக்கும். நினைக்கும் போதே மனம் பதறுகிறது

தொலைக்காட்சி பெட்டியின் அளவு, விலை என எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு இன்னும் சில நாட்களில் ஒரு தொலைக்காட்சியை ஏற்பாடு செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வர வெகு நேரம் பிடிக்கவில்லை. சில குழந்தைகள் பெற்றோருக்காகக் காத்திருந்தார்கள். அவர்களிடம்  'இங்க ஒரு டி.வி வாங்கி வெச்சுடலாமா' என்றதற்கு 'ஹூய்ய்' என்று கத்தினார்கள். 

'உனக்கு யாரைப் பிடிக்கும்' என்றேன். விஜய் அல்லது அஜீத் என்பார்கள் என நினைத்தேன். அவர்கள் சிரித்தார்கள். 

கடவுளின் குழந்தைகள். 

புஞ்சை புளியமப்பட்டி சுற்றுவட்டாரத்தில் நிசப்தம் நண்பர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள். நான்கு அல்லது ஐந்து பேர் வருவதாக இருந்தால்  ஒரு நாள்- வார இறுதி நாள்- முடிவு செய்து டி.வியை வாங்கிப் பொருத்திவிடலாம். பெரிய தொகை தேவைப்படாது. டிவி இரண்டாம்பட்சம். அன்றைய தினம் அந்தக் குழந்தைகளையும் வரச் சொல்லிவிடலாம். நாடகம், கதை சொல்லல் என அரை நாள் அவர்களுடன் இருந்துவிட்டு வருவோம். நிசப்தம் ஆட்கள் உடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். வெளியூர் நண்பர்கள் வருவதானாலும் சரி. ஏற்பாடு செய்யலாம். எப்பொழுதாவதுதானே இதையெல்லாம் செய்கிறோம்?

vaamanikandan@gmail.com

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

வர விருப்பம் உள்ளது......!

சேக்காளி said...

//இத்தகைய பள்ளிகளுக்கு உதவாமல் யாருக்கு உதவப் போகிறோம்? //
அதானே

www.rasanai.blogspot.com said...

im interested mani. would like to contribute in one or the other way. sundar g chennai.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான அரசு திட்டங்கள் இவ்வளவு செயல்முறையில் இருக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது. Integrated Education for differently abled என்ற முறையில் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன . தனியார் பள்ளிகள் கைவிட்ட நிலையில் வேலைக்கு செல்லும் ஏழைப் பெற்றோர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். மய்யத்திற்கு வர இயலாதவர்களுக்கு HOME BASED பயிற்சியும் உண்டு.நல்ல விஷயங்களை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

kmr.krishnan said...

மாவட்டத்திற்கு ஒரு பள்ளிதான் இயங்குகிறது.திருச்சி மாவட்டத்திற்கு மண்ணச்சநல்லூரில் இருக்கிறது.ஒருமுறை சென்று வந்தேன். தனியார் பள்ளிகளில் இருப்பதைக் காட்டிலும் மிக நல்ல வசதிகள் அரசுப்பள்ளியில் உள்ளது என்பது உண்மை.

Anonymous said...

Ahaa, its pleasant discussion on the topic of this paragraph at this place at this webpage, I
have read all that, so at this time me also commenting here.

Anonymous said...

It is perfect time to make some plans for the future
and it is time to be happy. I have read this post and if I could I
desire to suggest you few interesting things or advice.
Perhaps you can write next articles referring to this article.
I desire to read even more things about it!