Mar 26, 2018

மதில் மேல் பூனை

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நிசப்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்கள் குறித்தும், வாழ்வு குறித்துமான உள்ளார்ந்த கேள்விகளுக்கு அதில்  பதில் கிடைப்பதாக நம்புகிறேன். தங்களைச் சந்திக்க வேண்டுமென எப்பொழுதும் விரும்புவதுண்டு. முப்பது நிமிடங்களை ஒதுக்க முடியுமா? 

இப்படியொரு மின்னஞ்சல் வந்திருந்தது. 

'நம்மையும் ஒரு ஜீவன் நம்புது பாரு' என்கிற தருணம் எனக்கு. முப்பது நிமிடம் கூட ஒதுக்க முடியாதளவுக்கு நாம் என்ன அப்படக்கரா? ஊரில் இருந்தால் பார்த்துவிட வேண்டியதுதான். இந்த வாரம் பெங்களூரில்தான் இருந்தேன். நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு குளம் இருக்கிறது. வந்தவரை அழைத்துக் கொண்டு குளத்தைச் சுற்றியபடியே நடந்தேன்.

'உட்கார்ந்து பேசலாமா' என்றார்.

'ரொம்ப நடக்க வெச்சு கொடுமைப் படுத்திட்டோமோ' என்று நினைத்துக் கொண்டேன். நான் நடக்காத தயங்கவே மாட்டேன்.

வீட்டு மொட்டை மாடி சௌகரியமாக இருக்கும். ஏரிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. 

அவர் ஐடி துறையில்தான் இருக்கிறார். இரண்டு வருட அனுபவம். வருடம் ஒன்பது லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அவரது அனுபவத்துக்கு அது அதிகமான சம்பளம்தான். வரும் வெள்ளிக்கிழமையோடு கடைசி. வேலையை விட்டுவிட்டார். யாராவது வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னால் பகீர் என்று இருக்கும்.'இந்தத் துறையில் வேலை வாங்குவது ஒன்றும் பெரிய காரியமில்லை' என்கிற மனநிலை இப்பொழுது சாதாரணமாகியிருக்கிறது. அதுவும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் துணிந்து முடிவெடுத்துவிடுகிறார்கள்.

இவர் திரும்பவும் இந்த வேலைக்கு வரப் போவதில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகவிருக்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் சம்பாதித்த பணம் மூன்று லட்ச ரூபாய் கையில் இருக்கிறதாம். அது தீர்ந்து போவதற்குள்ளாக தேர்ச்சி அடைந்துவிடுவேன் என்றார். கடந்த சில வருடங்களாகவே தயரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார். சரியான தருணம் என்று கருதி வேலையை விட்டுவிட்டார். இனி சென்னையில் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேரவிருக்கிறார். அதற்கு ஒரு தேர்வு வைக்கிறார்கள். அதில் தேர்ச்சியடைந்துவிட்டால் பயிற்சிக்கு என பணம் செலவழிக்க வேண்டியதில்லை. 

பெற்றோர் இவரிடமிருந்து பணம் எதிர்பார்ப்பதில்லை. அதுவொரு சுதந்திரம். ஆனால் இந்த வயதில்தான் ஊரில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். 'பையனுக்கு எப்போ பொண்ணு பார்க்கப் போறீங்க?' என்பதில் ஆரம்பித்து 'இப்போ இந்தக் கம்பெனியில் இருக்கான்' 'எவ்வளவு சம்பளம்?' வரைக்கும் தாளித்துவிடுவார்கள். இந்தப்பக்கம் சிரித்துவிட்டு அந்தப்பக்கமாக 'நல்ல வேலையை விட்டுட்டான்..கிறுக்கன்' என்பார்கள். வீட்டில் இருப்பவர்களும் இதுதான் பிரச்சினை. தேர்வுக்குத் தயாராகிறவர்களுக்கும் அதுதான் பிரச்சினை.

ஊர் ஆயிரம் சொல்லும். இருந்தாலும் சொல்லும். இறந்தாலும் சொல்லும். கண்டுகொள்ளவே வேண்டியதில்லை.

வேலை, பணம், வீடு, கார் என்பதெல்லாம் Materialistic. இவையெல்லாம் நாம் அடைய விரும்புகிற இலக்கில் சில மைல்கற்களாக இருக்கலாம். 'இந்த வயதில் கார் வாங்குவேன்' 'இந்த வயதில் வீடு காட்டுவேன்' என்பதெல்லாம் அப்படியான மைல் கற்கள்தான். ஆனால் அதை மட்டுமே நாம் இலக்குகளாக வைத்திருந்தால் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகப் போய்விடும். மனிதர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இப்படியான பொருள் சார்ந்த இலக்குகளுக்குள்தான் சிக்கிக் கொள்கிறோம். '

நாம் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்க வேண்டுமானால் பொருள் சாராத ஏதாவதொரு இலக்கு இருக்க வேண்டும். non-materialistic target. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்முடைய இலக்கை நாம்தான் கண்டடைய வேண்டும். அப்படியான இலக்கைக் கொண்டவர்களிடம்தான் தேடுதல் இருக்கும். வெறுமனே பொருள் சார்ந்த ஓட்டத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்க்கை ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விடும். நாற்பத்தைத் தொடுவதற்குள்ளாக வெறுப்படைந்த மனிதர்கள் எத்தனை பேர்களைச் சந்திக்கிறோம்? தேடுதல் இல்லாத எந்த மனிதனும் வாழ்க்கையை வெற்றுக் குமிழியாக்கிவிடுகிறான். அவன் எவ்வளவுதான் பெரிய தேர்வில் வெற்றி பெற்றவனாக இருக்கட்டுமே.

ஒவ்வொரு வருடமும் எத்தனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகிறார்கள்? எத்தனை பேரை இந்த உலகம் நினைவில் வைத்திருக்கிறது. தேசம் முழுமைக்கும் தெரிய வேண்டியதில்லை. மாநிலம் முழுக்கவும் தெரிய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அந்தந்த மாவட்ட மக்களாவது நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தில் பணியாற்றிய எத்தனை ஆட்சியாளர்களின் பெயர் நினைவில் இருக்கிறது? பொருள் சாராத இலக்கற்ற மனிதன் இந்த உலகின் பிடிக்குள் சிக்கிவிடுவான். அதன் பிறகு  'நீ என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும்' என்பதை இந்த உலகம்தான் முடிவு செய்யும். பணம் முக்கியம், பணி முக்கியம் என்று நினைக்கிற யாருக்குமே அது மட்டுமே தேடலாகிப் போகிறது. அந்தப் பொருளும் அதிகாரமும் எந்த ஆத்மார்த்தமான தேடுதலுமில்லாத வேட்டைக் குதிரைகளாக நம்மை மாற்றி ஓட விடுகின்றன. குனிந்து, பயந்து, பம்மி, நடுங்கி கடைசியில் குண்டுச் சட்டிக்குள் ஓடுகிற குதிரைகளாகி விடுகிறோம். 

பொருள் சாராத இலக்கை வைத்திருக்கிற மனிதனுக்கு 'இவையெல்லாம் பொருட்டே இல்லை' என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். 'இது போனா அடுத்ததைப் பார்த்துக்கலாம்' என்ற மனநிலை அவனுக்கு மிக எளிதில் வாய்த்துவிடும். ஆனால் பொருளை மட்டுமே தேடுகிறவர்களுக்கு அப்படியொரு மனநிலை வாய்க்கவே வாய்க்காது. 

நிறையப் பேசினோம். 

பாரதி என்றொரு ஐ.ஆர்.எஸ் அதிகாரிதான் 'நிசப்தம் படி' என்று சொன்னதாகச் சொன்னார். அவர்தான் இவருக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். பாரதி எனக்கு அறிமுகமில்லை. எங்கேயாவது யாராவது இப்படி பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. சந்திக்க வருவதற்கு முன்பாக 'You have no idea about the kind of impact that your writing has brought into me' என்று அவர் எழுதியிருந்த கடிதத்தின் வரிகள் நினைவுக்கு வந்தன. இவையெல்லாம் என்னைத் திருப்தியடையச் செய்யக் கூடிய வரிகள் 

நல்ல சம்பளம், பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று போய்க் கொண்டிருக்கும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகிறேன் என்று சொல்ல மிகப் பெரிய தைரியம் வேண்டும். நண்பருக்கு அந்த தைரியமும் துணிச்சலும் இருந்தது. அவருடன் பேசுவதற்கு எனக்கும் உற்சாகமாக இருந்தது. 

'வேலையை விட்டா வேற வேலை கிடைக்குமா' என்று பயந்து கொண்டிருந்தால் காலம் ஓடிக் கொண்டேயிருக்கும். பணம் பிரச்சினையே இல்லை. அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். வேலை என்பது இருப்பதிலேயே சுலபமான வழி. ரிஸ்க் குறைவு. பணத்தை அடைய அதைத் தவிர ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நமக்கென்று ஒரு லட்சியமும் இலக்கும் இருக்கும் பட்சத்தில் துணிந்து இறங்கி விட வேண்டும். ஒன்றை அடைய இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும். இருப்பதையும் பிடித்து பறப்பதையும் பிடிப்பேன் என்று நம்பினால் அது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது. 

நண்பருக்கு வயது இருக்கிறது. வாய்ப்பும் இருக்கிறது. வென்றுவிடுவார். வாழ்த்துக்கள். 

துணிந்து இறங்கிப் பார்க்கிற இவரைப் போன்றவர்கள்தான் பூனை மேல் மதிலாகவோ அல்லது மதில் மேல் பூனையாகவோ இருப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். பயந்து கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்போம். சரியான தருணத்தில் ஏதாவதொரு பக்கம் எட்டிக் குதித்துவிட வேண்டும்.

இழப்பதற்கு எதுவுமில்லை. அடைய எவ்வளவோ இருக்கின்றன. 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//பூனை மேல் மதிலாகவோ//
இதை எழுதுனது ஓனரா இல்ல அட்மினா?
உறுதிப் படுத்தவும்.
மனநல சோதனைக்கெல்லாம் அனுப்ப வசதி இல்லை.

raja said...

மிக மிக அற்புதமான கட்டுரை. பணம் சம்பாதிப்பதில் அவசரம், லட்சியங்கள்,அடுத்தவர்களை பார்த்து பொறாமை, மகிழ்ச்சி,நியாபகங்கள், வெறுப்புக்கள், பதவி, அதிகாரம் அனைத்தும் மனிதனின் இறப்போடு முடிந்து விடுகின்றன.

மரணம் எப்போதும் பக்கத்திலேயே இருக்கிறது, எந்த நிமிடமும். இதில் தத்துவ விசாரணை எல்லாம் இல்லை. மிக மிக உறுதி செய்யப்பட்ட ஒன்று இந்த உலகத்தில் உண்டென்றால்,அது மரணமின்றி வேறு எதுவும் இல்லை.

மனிதர்கள் பயந்து நடுங்குவது தேவை அற்ற செயல். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அது என்னவென்று கண்டுபிடித்து அதில் ஈடுபடும்போது தான் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். நேரம் போகிறதே என்று முகத்தை தொங்க போட்டு கொண்டே அலுவலகம் போக வேண்டியதில்லை.

இளைஞர்களோ முதியவர்களோ மணிகண்டனின் இந்த கட்டுரையை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் செயல்படுத்தி வாழ வாழ்த்துக்கள். நன்றி, மணிகண்டன்!!

Selvaraj said...

நல்ல கட்டுரை. பெரும்பாலானவர்கள் பொருள் சார்ந்த இலைக்கைதானே வைத்திருக்கிறோம்.
‘பொருள் சாராத இலக்கை வைத்திருக்கிற மனிதனுக்கு 'இவையெல்லாம் பொருட்டே இல்லை' என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். 'இது போனா அடுத்ததைப் பார்த்துக்கலாம்' என்ற மனநிலை அவனுக்கு மிக எளிதில் வாய்த்துவிடும். ஆனால் பொருளை மட்டுமே தேடுகிறவர்களுக்கு அப்படியொரு மனநிலை வாய்க்கவே வாய்க்காது. குனிந்து, பயந்து, பம்மி, நடுங்கி கடைசியில் குண்டுச் சட்டிக்குள் ஓடுகிற குதிரைகளாகி விடுகிறோம்’.
சத்தியமான வார்த்தைகள்:
'1. வேலையை விட்டா வேற வேலை கிடைக்குமா' என்று பயந்து
கொண்டிருந்தால் காலம் ஓடிக் கொண்டேயிருக்கும்.
2. ஒன்றை அடைய இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும்.
3. இருப்பதையும் பிடித்து பறப்பதையும் பிடிப்பேன் என்று
நம்பினால்அது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது.
4. பயந்து கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்போம். சரியான
தருணத்தில் ஏதாவதொரு பக்கம் எட்டிக் குதித்துவிட வேண்டும்.
5. இழப்பதற்கு எதுவுமில்லை. அடைய எவ்வளவோ இருக்கின்றன.

Anonymous said...

Dear Mani anna, as usual your article and writing style are good. i want to share an experience of one of my friend he did B.Tech, Phd and PDF then he pursued his dream of IAS for two years (full time). He is a bright student and have the same family condition of the person you mentioned in this article. But some how he could not achieve his target but still trying. So it is better to have second option.