தாங்கள் படித்த புத்தகங்களில் இன்றைய தலைமுறையினர் இது மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று சில புத்தகங்கள் தங்களுக்கு தோன்றியிருக்கலாம். அந்த மாதிரியான புத்தகங்களை பட்டியலிடுக.
புத்தங்கள் மனிதர்களை தன்னையறிந்தவர்களாக மாற்ற வேண்டும். . 'வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானதில்லை' என்பதையும் 'நாம் கருதிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இந்த உலகம் பன்மடங்கு பரிமாணங்களைக் கொண்டது' என்பதையும் உணரச் செய்ய வைப்பதாக இருக்க வேண்டும். புனைவுகளைக் காட்டிலும் காந்தியடிகளின் சத்திய சோதனை மாதிரியான ஆளுமைகளின் வாழ்க்கை குறித்தான புத்தகங்கள், சமூக, அரசியல் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த புத்தகங்கள் என்பவை பட்டியலின் முதலிடத்தில் இருக்கும்.
உங்கள் பணி சிறப்பாக நடைபெற்றால் எத்தனை மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.
எத்தனை காலத்துக்குச் செய்யப் போகிறோம் என்பதில் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? செய்ய முடிகிற காலம் வரைக்கும் செய்து கொண்டிருப்போம். இந்தக் கணக்கை எதிர்காலம் போடட்டும். நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
இலக்கியம் என்பது என்ன? அது அனைவருக்குமானதா?
நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளவும், நம் அக உணர்வை விழிப்படையச் செய்யவும் நல்ல இலக்கியம் உதவும். இலக்கியம் நம்மை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவுவது. பக்குவத்தன்மையை நோக்கி நகர்த்துவது. நமக்கு நாமே உரையாடலை நிகழ்த்திக் கொள்வதற்கான திறப்பு அது. அதன் வழியாக பிறருடன் உரையாடலைத் தொடங்குவதற்கான சாத்தியங்களும் அதிகம். தமிழில் இலக்கியம் படித்துவிட்டு இலக்கியவாதிகளிடம் மட்டும் பேச முடியாது. மற்றவர்களிடம் பேசலாம்.
அரசியலில் யார் வெல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள்? ரஜினியா? கமலா?
இரண்டு பேருமே தோற்க வேண்டும். ரஜினியை ஒப்பிடும் போது கமல் சற்று தகுதியானவராகத் தெரிகிறார்.
எப்போதாவது சாமியாராகப் போகலாமென்று நினைத்ததுண்டா?
உறவுக்கார பெண்மணிக்கு பண்ணாரி கோவிலில் திருமணம் நடந்தது. முந்தைய இரவே சென்றிருந்தோம். எல்லோரும் அறையில் தூங்கிய பிறகு வனத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தேன். காட்டுப் பன்றிகள் அதிகம் உலவும் பகுதி அது. வனத்தில் ஒரு சிமெண்ட் திண்டு இருந்தது. அதன் மீது ஒரு சாமியார் அமர்ந்திருந்தார். சந்நியாசி. இந்தியா முழுக்கவும் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒற்றைக் காவி வேஷ்டி கையில் ஒரு குச்சி, சில ஜோதிட புத்தகங்கள் நிறைந்த பை ஒன்று. இதுதான் அவருடைய உடைமைகள்.
பேச்சுக் கொடுத்தேன். 'வாழ்க்கைல எல்லாமே வெறுத்துப் போச்சு..அப்புறம்தான் இந்த வேஷம்' என்றார்.
'இது வேஷமா?'
'இடுப்பில் நிற்கும் வேஷ்டி, இந்தக் குச்சி- இதை இந்தக் காலத்திலும் என்னால் துறக்க முடியும் என்று தெரியவில்லை. இந்த உலகம் விடாது..அடுத்தவர்களுக்காக வாழ்ந்தால் அது வேஷம்தானே'
'எங்கயாச்சும் சாப்பிட்டுக்குவேன்...ட்ரெயின்ல காசு கேக்கமாட்டாங்க...தோணும் போது ஏறிக்குவேன்' என்றார்.
இப்படியான வாழ்க்கையைக் குறித்து கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாத வாழ்க்கை. ஆனால் இதையெல்லாம் விடவும் வாழ்க்கையின் பொறுப்புகளும் சச்சரவுகளும் சுவாரசியமானவை. திருமணத்துக்கு முன்பாக சாமியாராகலாம் என நினைத்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகும் அப்படி நினைத்தேன் என்று சொன்னால் இருக்கிற நான்கே முக்கால் முடியையும் பிடுங்கிவிடுவார்கள். என்னை ஏன் பாஸ் கோர்த்து விடுறீங்க!
அண்ணே, பொண்டாட்டி புள்ளைங்கன்னு குடும்ப வாழ்க்கையில ஏண்டா ஈடுபட்டோம்னு எப்பவாது நினைச்சதுண்டா?
விடமாட்டார்கள் போலிருக்கிறதே. அந்த நாலு முடி மேல் உங்களுக்கு என்னய்யா பிரச்சினை?
Sarahah கேட்கப்பட்டவை.
2 எதிர் சப்தங்கள்:
//புனைவுகளைக் காட்டிலும் காந்தியடிகளின் சத்திய சோதனை மாதிரியான ஆளுமைகளின் வாழ்க்கை குறித்தான புத்தகங்கள், சமூக, அரசியல் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்த புத்தகங்கள் என்பவை பட்டியலின் முதலிடத்தில் இருக்கும்.//
Good Suggestion
//தமிழில் இலக்கியம் படித்துவிட்டு இலக்கியவாதிகளிடம் மட்டும் பேச முடியாது. மற்றவர்களிடம் பேசலாம். //
HA HA HA .. Fact...
ரஜினியை ஒப்பிடும் போது கமல் சற்று தகுதியானவராகத் தெரிகிறார்
https://othisaivu.wordpress.com/2018/03/28/post-816/#more-8241
Post a Comment