Mar 23, 2018

படகில் ஏறிக்குங்க

ஒரு மாணவன். கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வேலை தேடுகிறான். 'என்ன கோர்ஸ் சேரலாம்?' என்று கேட்டார்கள். இன்றைய சூழலுக்கு க்ளவுட், க்ரிப்டோ மாதிரியான படிப்புகளைத்தான் சொல்வேன். ஆனால் அவை மட்டுமே வேலைக்கான திறவுகோல் இல்லை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு சூடான களம் தகவல் தொழில் நுட்பத் துறையில் உருவாகும். கவனித்துக் கொண்டிருந்து சூட்டோடு சூடாக உள்ளே நுழைந்துவிட வேண்டும். அடுத்த பதினைந்து வருடங்களுக்கு ஓட்டிவிடலாம்.

இப்பொழுது வேலைச் சூழல் சற்று நல்லபடியாக மாறியிருக்கிறது. படித்து முடித்துவிட்டு வேலை தேடுகிறவர்கள் அல்லது ஏற்கனவே  வேலையில் இருப்பவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையிலேயே வேறு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை செய்யும் போது சிலவற்றை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. 

தகவல் தொழில் நுட்பத் துறையில் சில பிரிவுகளில் மட்டும்தான் வருடாவருடம் பல்லாயிரம் பேர்கள் உள்ளே நுழைவார்கள். ஆனால் சில துறைகளில் அப்படியில்லை. உதாரணமாக பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஆரக்கிள் ஆப்ஸ், எஸ்.ஏ.பி போன்ற படிப்புகளைச் சொல்லித் தர ஹைதராபாத் அமீர்பேட்டில் வீதிக்கு வீதி நிறுவனங்கள் முளைத்திருந்தன. பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் முடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாயில் வேலைக்கு சேர்ந்துவிட முடியும் என்கிற சூழல் நிலவியது. வேலை வாய்ப்புகளும் நிறைய இருந்தன. இன்றைக்கும் கூட இந்தப் படிப்புகளைச் சொல்லித் தருகிறார்கள். ஆனால் சொல்லித் தருகிற நிறுவனங்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். படிக்கிறவர்களின் எண்ணிக்கையும் குறைவு. படித்துவிட்டு வெளியில் வந்தாலும் வெகு ஜோரான வேலை வாய்ப்பு என்று சொல்ல முடியாது. நிறுவனங்களும் ஏற்கனவே பணியில் இருக்கிற ஆட்களை அவ்வளவாக வெளியில் அனுப்புவதில்லை. காரணம்- புதிதாகப் படித்துவிட்டு வருகிறவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆள் கிடைப்பது சிரமம். 

ஓரளவு தேக்க நிலையை அடைந்த இத்தகைய பிரிவுகளில் நுழைய விரும்பினால் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை நுழைய முடியாமல் போய்விட்டால் மீண்டும் மண்டை காய வேண்டியிருக்கும். 

வேலையை நாமாகவே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கும் போது 'டொமைன் அறிவை வளர்த்துக் கொள்ளுகிற வேலை' என்பதாகப் பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணமாக ஜாவா படித்தவர்கள் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் சேரும் போது ஜாவாவை விடவும் தொலைத் தொடர்பு நுட்பங்களைத்தான் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாவா, டாட் நெட், லொட்டு லொசுக்கு என்பதெல்லாம் கருவிகள். அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் படித்துவிட முடியும். ஆனால் தொலைத் தொடர்புத் துறை குறித்தான அறிவு என்பது அனுபவத்தில் வருவது. தமது பணியினால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஆட்களுக்குத்தான் பற்றாக்குறை  நிலவுகிறது. 

ஒருவரை உதாரணமாகச் சுட்டிக் காட்ட முடியும். என்னை விட ஒரு வருடம் மூத்தவர் அவர். திருச்சி ஆர்.ஈ.சியில் படித்தவர். (அப்பொழுது ஆர்.ஈ.சி என்றுதான் பெயர். இப்பொழுதுதான் என்.ஐ.டி). அவருக்கு  'இன்டிகிரேஷன் ஸ்பெசலிஸ்ட்' என்று பெயர். ஒரு வரி கூட ப்ரோக்ராம் எழுத மாட்டார். எழுதத் தெரியாது. ஆனால் உற்பத்தித் துறையில் அக்குவேறு ஆணிவேறான அறிவு. பெரும் நிறுவனத்தில் உற்பத்தித் துறையில் இந்தச் செயல் எங்கே நடக்கும் என்று விரல் நுனியில் வைத்திருப்பார். இரண்டு மூன்று மென்பொருட்களை இணைக்க வேண்டியிருக்கும் சமயங்களில் அவரைத்தான் அழைப்பார்கள். 'இதை இரண்டையும் இணைக்கும் போது இதிலிருந்து என்ன தகவல்கள் அங்கே செல்ல வேண்டும் அங்கிருந்து என்ன தகவல்கள் இங்கே வர வேண்டும்' என்பதை முடிவு செய்து கொடுக்கிற வேலை அவருக்கு. அவர் ஆவணப்படுத்திக் கொடுப்பதை மற்றவர்கள் வடிவமைப்பார்கள். 'ப்பூ இவ்வளவுதானா' என்று கேட்க முடியாது. இருப்பதிலேயே கடினமான பணி இது. அவரால் முடிகிறது. அதற்குத்தான் அவருக்கு சம்பளம். இப்பொழுது இயக்குநராக இருக்கிறார். அவரிடம் பேசும் போதெல்லாம் 'என்னை உதாரணமா வெச்சுக்க...டொமைன் அறிவை வளர்த்துக்க' என்பார்.இரண்டு பாட்டில் வைட்டமின் டானிக்கை ஒன்றாகக் குடித்தது போல இருக்கும்.

உண்மையிலேயே சொல்லப் போனால் மென்பொருள் துறை மிக மிகச் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் போக்கிலேயே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. திரும்ப வேண்டிய இடத்தில திரும்பாமல் அசமஞ்சமாக நின்று கொண்டிருந்தால் தள்ளிவிட்டுப் போய்விடும். டொமைன் அறிவு, புதிய நுட்பங்கள், அந்த நுட்பங்கள் நம்முடைய துறையில் எப்படியெல்லாம் பயன்படும், அப்படிப் பயன்படுத்துவதற்கு நாம் எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கொஞ்சம் சூதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

என்னைவிட பெரியவர்கள் எனக்கு இதைத்தான் அறிவுறுத்துகிறார்கள். என்னை விட இளையவர்களுக்கு இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். 

ஜாவாவும், டாட் நெட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகும். உற்பத்தித்துறையும், தொலைத்தொடர்புத் துறையும், மருத்துவத் துறையும் எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கும். 'எனக்கு அந்த மருத்துவமனைதான் கிளையண்ட்' என்று சொங்கு முறிந்து போய்விட வேண்டியதில்லை. மருத்துவத் துறையில் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. எப்படி பொருட்களை வாங்குகிறார்கள் என்பதில் ஆரம்பித்து, காப்பீட்டு நிறுவனங்களுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள் என்பது வரைக்கும் எவ்வளவோ இருக்கின்றன. 

தகவல் தொழில் நுட்பத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த கடும் சூழல் சற்று தளர்ந்திருக்கிறது. வளாக நேர்முகத் தேர்வுகளில் நிறையப் பேர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். ஆட்களை வெளியில் அனுப்புவது குறைந்திருக்கிறது. புதியவர்களுக்கு கதவுகள் திறந்திருக்கின்றன. அனுபவஸ்தர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இப்படியான சமயம் வாய்க்கும் போது நம்மைத் தகுதி படுத்திக்க கொண்டு நல்லதொரு இடத்துக்கு பாய்ந்துவிட வேண்டும்.

மிக முக்கியமாக-

ஒரேயொரு நுட்பத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு 'நமக்கு எல்லாமே தெரியுமே' என்று நினைத்திருப்பதை போன்ற முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. தகவல் தொழில் நுட்பத் துறை கடல் போல விரிந்து கொண்டேயிருக்கிறது. நாம் ஒரு கரையில் நின்று கொண்டு அடுத்த கரையைப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மட்டும் எப்பொழுதுமே இருக்க வேண்டும். அப்பொழுதான் கப்பல் இல்லாவிட்டாலும் படகிலாவது  ஏறிக் கொள்ள முயற்சிப்போம். 

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

One of the best article. will forward it to everyone.