Mar 23, 2018

குருவி

ராஜ்குமார் இன்று காலையில் வீட்டுக்கு வந்திருந்தார். அவரது குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது. ரிஷிகேஷ் என்று பெயர்.

பிறந்த மூன்று மாதத்திலிருந்தே அவனுக்கு உடலில் தொந்தரவு. உடல் முழுவதும் பச்சை நிறமாக மாறுவதும், வாந்தியெடுப்பதுமாக இருந்திருக்கிறான். சோதனைகளுக்குப் பிறகு அவனுக்கு  கல்லீரல் செயல்படுவதில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். மிகப்பெரிய செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சை அது. ராஜ்குமார் தச்சு வேலை செய்கிறார். 

கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான பிரயத்தனங்களுக்குப் பிறகு அங்கேயும் இங்கேயுமாய் புரட்டி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முடித்துவிட்டார்கள். பெங்களூர் நாராயண ஹிருதயலயா மருத்துவமனையில்தான் செய்திருக்கிறார்கள். ராஜ்குமார் கடந்த சில நாட்களாகவே தொடர்பில் இருக்கிறார்.

திடீரென அழைத்து 'அண்ணா பெங்களூர் வந்துட்டேன்' என்பார். 

'சாயந்திரம் இருக்கீங்களா..நான் ஆஃபிஸ் முடிச்சு வர்றேன்' என்று சொல்வேன். ஆனால் அவர் கிளம்பிச் சென்றுவிடுவார். 

அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவர் வருவதும் ஓடுவதும் பணத்தைப் புரட்டுவதற்காகத்தான். தனது கூட்டில் குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்க் குருவி தானியம் தேடச் செல்வது போல அவர் பறந்து கொண்டிருந்தார். மனைவியும் மகனும் இங்கேயிருந்தார்கள். இரவோடு இரவாக பேருந்து பிடித்து வந்து பெங்களூரில் மகனுக்குத் தேவையானவற்றையெல்லாம் செய்துவிட்டு அன்றிரவே கிளம்பிப் போய் பணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வார். மீண்டும் நான்கைந்து நாட்கள் கழித்து அதே போல வந்து போவார்.

'வேலை செய்யலைன்னா எப்படிங்கண்ணா இவ்வளவு பெரிய பணத்தை புரட்டறது' என்றார். அதுவும் சரிதான். 

கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய் செலவு. எவ்வளவுதான் வசதியான குடும்பமாக இருந்தாலும் முப்பது லட்ச ரூபாய் புரட்டுவது என்பது சாதாரணக் காரியமில்லை. அது தவிர இனி அடுத்த  ஆறு மாதங்களுக்கு இங்கேயே இருக்க வேண்டும். நோய்த் தொற்று எதுவும் வந்துவிடாமல் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில், மருந்து மாத்திரைகளோடு பெங்களூரிலேயே தங்கி இருப்பார்கள். மருந்து மாத்திரைக்கே மாதம் இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு பிடிக்கும் போலிருக்கிறது. அது போக வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு, மருத்துவ மனைச் செலவு எல்லாம் தனிக் கணக்கு. 

நாராயண ஹிருதயாலயாவுக்கு வெளிநாட்டு நோயாளிகள் நிறைய வருவார்கள். அப்படி வந்த இலங்கைக் குடும்பம் ஒன்று தொண்ணூறாயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறது. மருத்துவர் நல்லவர் போலிருக்கிறது. அவர்தான் அந்தக் குடும்பத்திடம் ரிஷிகேஷ் குறித்துச் சொல்லியிருக்கிறார். மருத்துவமனையும் இரண்டரை லட்ச ரூபாயைக் குறைந்திருக்கிறது. அப்படியிருந்தாலும் பெருந்தொகைதான்.

அம்மா திடடம் என்றொரு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. அதில் பாதித் தொகை வரைக்கும் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு விண்ணப்பம் அனுப்பிய போது 'கல்லீரலை வேறொரு வெளியாளிடமிருந்து தானமாகப் பெற்றுக் கொள்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் ரிஷிகேஷின் அம்மாவே கல்லீரலைக் கொடுத்திருக்கிறார். 'விண்ணப்பத்தில் தவறாகக் குறிக்கப்பட்டிருக்கிறது' எனச் சொல்லி நிராகரித்துவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர் வழியாக மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிசப்தம் சார்பில் கொடுப்பட்டிருக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்என்பது பொருட்டே இல்லை. அவர் கடைசி வரைக்கும் 'முடிஞ்சதை மட்டும் கொடுங்கண்ணா' என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். 

மருத்துவ உதவிகளைப் பற்றி அதிகம் எழுத வேண்டியதில்லை என நினைப்பேன். ஆனால் ராஜ்குமார் மாதிரியானவர்களை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இதையெல்லாம் எதிர்கொள்ள எவ்வளவு மனவுறுதி வேண்டும் என்பதை இத்தகைய வாதைகளை அனுபவித்தவர்கள் புரிந்து கொள்ள முடியும். நினைத்தாலே நடுங்குகிறது. 


இன்று காலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பைக்கை எடுத்துவிட்டேன். முன்பு இரண்டொரு முறை அந்த மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். பெரிய கடவுளர்களின் சிலைகளை வைத்திருப்பார்கள். யாராவது அங்கே நின்று அழுது கொண்டிருப்பதை எப்பொழுதும் பார்த்திருக்கிறேன்.  பெருமருத்துவமனைகளில் மனம் வலிக்காமல் நுழைந்து வெளியேறுவது அவ்வளவு சாமானியமில்லை. அதுவொரு வாதை. 

மருத்துவமனைக்குள் நுழையாத வரைக்கும் வாழ்க்கையின் சகல சந்தோஷமும் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும். எப்பொழுது மருத்துவம் என்ற பெயரில் உள்ளே நுழைகிறோமோ அப்பொழுதிருந்து நம் உலகம் வேறொன்றாகிவிடுகிறது. 

'நீங்களே வந்துடுறீங்களா' என்று ராஜ்குமாரிடம் கேட்டேன். அவரே கிளம்பி வந்துவிட்டார். 

இரண்டரை வயதுக்கு குழந்தை என்ன பாவம் செய்தது? அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து சந்தோசம் அத்தனையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். கடன் சேர்ந்திருக்கிறது. நினைக்கவே சங்கடமாக இருக்கிறது. எதிரிக்கும் கூட இத்தகையதொரு வலி கூடாது.

ரிஷிகேஷ் முழுமையாகக் குணமடையவும் அவனது பெற்றோர் மனநிம்மதி பெறவும் உளமார வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பெரும் போராட்டத்திலிருந்து அவர்கள் விரைவில் மீளட்டும். 

மாலையில் ராஜ்குமாரை அழைத்துப் பேசினேன். 'இன்னும் நாற்பதாயிரம் காட்டானுங்கண்ணா' என்றார். பணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். பணத்தைக் கட்டிவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிடுவார்கள். ஊரில் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. இரவுக்குள் தெரிந்துவிடும் என்றார். 

'நீங்க தேவைப்பட்டா சொல்லுங்க..யோசிக்க வேண்டாம்' என்று சொல்லியிருக்கிறேன். 

3 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

anbin mani

manathai pisaigirathu. # " thirukumaran kutty papavai " ninaikka vaithuviteergal mani. almost a year back same scenario. i know the practical difficulty and severe trauma, mental hardships undergone by the whole family and esply the parents -- the saddened mother and the hapless father knocking all doors for a miracle to save the child. this article rekindled the LAST MOMENTS OF BABY when we were told to WAIT OUTSIDE by the doctors and nurses. i still remember the flowing tears on their faces ( ippothu kooda ennal ezhutha mudiyavillai ) sorry. yes you are true, we cannot explain their stress and also their fighting determination to save the child by toiling one or the other way. hats off to them and also all the good samaritans who had helped them till date thus by giving A RAY OF HOPE. praying god to shower grace to save ALL RISHIKESH AND RISHIKESHIS.
apart from the help already given, yes you are right, more help from nisaptham trust shall be given to THIS DESERVING PEOPLE. anbudan sundar g chennai
P.S: Cell chargil irupathal whapp pannamal udaney blogil comment pottuvitten. NO NEED TO POST MY COMMENTS IN BLOG. I JUST WANT TO CONVEY QUICKLY. # TEARS, UNABLE TO WRITE SORRY BYE.

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு, வணக்கம்.

நாற்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்தே கொடுத்துவிட முடியும். பணமும் இருக்கிறது. ஒன்றில் உறுதியாக இருக்க வேண்டும். 'இவரால் புரட்டவே முடியாது' என்கிற சூழலில் மட்டும்தான் உதவியளிக்க வேண்டும். இவரால் பணத்தை புரட்டிவிட முடியும் என் தோன்றுகிறது. பல லட்சங்களைத் திரட்டிய அவருக்கு நாற்பதாயிரம் என்பது கடினமான தொகை என்றாலும் சாத்தியமான தொகைதான். அதனால்தான் 'தேவைப்பட்டா சொல்லுங்க' என்று அவரிடம் சொல்லியிருக்கிறேன். இத்தகைய கட்டுரைகளை எழுதும் போது 'எமோஷனல்' ஆகி 'நானும் தருகிறேன்' என்று கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது அவசியமில்லை. இவரைவிடவும் பாதிக்கப்பட்டு பணம் தேவைப்படுகிற எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். தேவைப்படுகிற மனிதர்களுக்கு தேவையான அளவுக்கு உதவுவதுதான் சரியான உதவியாக இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Rakki said...

Please share me his contact no