ஓர் அமைச்சர் தனக்கு சம்பந்தமேயில்லாத பெண்ணிடம் நேரடியாக 'நீ அழகா இருக்க' என்கிறார். தம்மைப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். 'நம்மை என்ன செய்துவிடும் முடியும்' என்கிற கெத்துதான். கேட்க ஆள் இல்லாத சூழல். ஜெயலலிதா இருந்திருந்தால் நாம் இவ்வளவு அழிச்சாட்டியங்களை நேரில் பார்க்க வேண்டி இருந்திருக்காது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்திருப்பார்கள். இவர்களை எல்லாம் அவர் தனது சுண்டுவிரல் அசைவில் வைத்திருந்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறது.
தலைகால் புரியாமல் இருக்கிறார்கள்.
தி.மு.கவின் அமைச்சர்களைத்தான் சிற்றரசர்கள் என்பார்கள். இப்போதைய தலைகளை ஒப்பிட்டால் அவர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு வேலை நியமனத்துக்கும் லட்சங்களை வாங்கிக் கொள்கிறார்கள். பணி மாறுதலுக்கும் கூட சில லட்சங்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு கொழுத்த வருமானம். 'யாரவது ட்ரான்ஸ்பர் கேட்டாங்கன்னா சொல்லுங்க பார்த்துக்கலாம்' என்று வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. ஆள் பிடித்துக் கொடுத்தால் நமக்கும் கமிஷன் வந்துவிடும். எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சாதாரண கட்சிக்காரன் கூட இருபத்தைந்தாயிரம் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து தமது மகன்/மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வைக்கிறார்கள். பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
'அந்த அமைச்சர் ரொம்ப சாதுங்க' என்பார்கள். அவரே இப்பொழுதெல்லாம் இஷ்டத்துக்கு மிரட்டுகிறார். அதிகார மமதை. அமைச்சர் தன்னை 'போய்யா வாய்யான்னு திட்டினார்' என்று ஒருவர் வருத்தப்பட்டுச் சொன்ன போது 'போடா வாடான்னு சொல்லாத வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்' என்றேன். அப்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றைய தேதிக்கு பெரும்பாலான தலைகள் இப்படி அடுத்தவர்களை மிரட்டியே காரியம் சாதிக்கிறார்கள். சொன்னால் நம்ப முடியாது. எங்கள் ஊர் பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்பு தருகிறவரைப் பார்த்து பயந்து கிடக்கிறார்கள். 'எடப்பாடிக்காரனாமா...எதுக்கு வம்பு' என்று காரணத்தைச் சொல்லும் போது கடுப்பாகுமா ஆகாதா?
ஜெயலலிதா இறந்தாலும் இறந்தார். இவர்களையெல்லாம் கையிலேயே பிடிக்க முடிவதில்லை. தி.மு.க சற்றே விழிப்போடு இருந்திருக்க வேண்டும். தானாகக் கலைந்தால் மக்கள் தமக்கு வாய்ப்புக்கு கொடுப்பார்கள் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். தானாகக் கலைகிற மாதிரியெல்லாம் தெரியவில்லை. ஆட்சி முடிவதற்குள் நறுக்கென்று சம்பாதித்துக் கொள்வார்கள். கடந்த தேர்தலில் இருபத்தைந்து கோடிகளை செலவு செய்தவர்கள் இனி வரவிருக்கும் தேர்தலில் நூறு கோடிக்கும் குறைவில்லாமல் அள்ளி இறைத்தாலும் இறைப்பார்கள். எதிர்க்கட்சிகள் எப்படி ஈடு கொடுக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அது அவர்கள் பாடு.
இவ்வளவு அக்கப்போர்களுக்கு மத்தியிலும் சில அதிமுக புள்ளிகளின் செயல்பாடுகளை பாராட்டிதான் தீர வேண்டும். திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா அப்படியான ஒரு ஆள். 'எம்.பி ஆகிட்டா அவ்வளவுதான்..திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க' என்று நினைப்பதுதான் நம் வழக்கம். ஆனால் சத்யபாமா டெல்லியில் ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து ஏதாவது ஒரு கோரிக்கையை முன் வைத்துக் கொண்டேயிருக்கிறார். கூடுதல் ரயில் வேண்டும் என ரயில்வே மந்திரியைச் சந்திக்கிறார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கோரி ராணுவ அமைச்சரைச் சந்திக்கிறார். ஜி.எஸ்.டி சம்பந்தமாக நிதியமைச்சரைச் சந்தித்திருக்கிறார்.
செய்கிறார்களோ இல்லையோ- இவர் விடாமல் துரத்துகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் கொண்டு வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ம்க்கும். அவர்களாவது கொண்டு வருவதாவது. ஆனாலும் பேச ஆள் இருக்கிறாரே என்று சந்தோஷமாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தமது தொகுதிக்கு எதையாவது கேட்டு வாங்கி 'பார்த்தீங்களா செஞ்சுட்டேன்' என்று வாக்கு வாங்குகிற அரசியல்வாதிகளைத் தெரியும். மாநிலத்துக்காக கோரிக்கைகளை வைப்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.
தேசிய அளவில் எடுத்துக் கொண்டால் நூறு சதவீத வருகை, ஆயிரக்கணக்கான விவாதங்களில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழக அளவில் எடுத்துக் கொண்டால் சத்யபாமா எண்பத்தைந்து சதவீத வருகைப்பதிவுடன் தமிழக எம்.பிக்களில் இரண்டாமிடத்திலும் தொண்ணூற்றாறு விவாதங்களில் கலந்து கொண்டு முதலிடத்திலும் இருக்கிறார். முந்நூற்று நாற்பத்தியிரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளின் எண்ணிக்கையில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் டாப். 703 கேள்விகள்.
சத்யபாமா எம்.பி குறித்து நிறையச் செய்திகள் உலவுவதுண்டு. எதிர்மறையான செய்திகள். இவரது செயல்பாடுகளையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தால் மற்ற அரசியல்வாதிகளைவிடவும் வித்தியாசமான அரசியல்வாதிதான் என்கிறார்கள். 'எதிர் அரசியலில் ஆண்கள் என்றாலே சாணத்தை வாரி வீசுவார்கள். பெண் என்றால் கேட்க வேண்டுமா..அதுவும் குடும்பப் பிரச்சினை' என்றார்கள். அது எப்படியோ போகட்டும். அரசியல் என்றிருந்தால் குற்றச்சாட்டுகள், வதந்திகள் இருக்கத்தான் செய்யும். நூறு சதவீதம் சரியான அரசியல்வாதியாக இருப்பதும் சாத்தியமில்லை. எல்லாவற்றையும் தாண்டி செயல்பாடுகள் முக்கியம். மக்களுக்காக இயங்குதல் வேண்டும். அவ்வளவுதான்.
மத்திய அரசின் ஏ.டி.ஐ.பி (Assistance to Disabled persons for Purchasing/Fitting Aids/Appliances) என்றொரு திட்டமிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான திட்டம் அது. ஆனால் பதிவு செய்து வைத்தால் வெகு காலம் பிடிக்கும். இப்படியொரு திட்டமிருப்பதைக் கண்டறிந்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் அவர்களைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் எம்.பி. திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக உதவியை வழங்கும்படி அமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறாராம்.
திருப்பூரைச் சேர்ந்த ரேவதி என்றொரு பெண்மணியால் நடக்க முடியாது. சக்கர வண்டி வாங்குவதற்காக உதவி கேட்டிருந்தார். 'நேரில் வந்து இயன்றதைச் செய்கிறேன்' எனச் சொல்லியிருந்தேன். தற்பொழுது அழைத்து 'அண்ணா, கவர்ன்மெண்ட்டிலேயே வண்டி தர்றேன்னு சொல்லிட்டாங்க...அந்தப் பணத்தை வேற யாருக்காச்சும் கொடுதுங்கண்ணா' என்றார். விசாரித்துப் பார்த்தால் எம்.பி. செயல்பட்டிருக்கிறார். பாராட்டுவதில் தவறொன்றுமில்லையே.
எனக்கு அவரோடு எந்த அறிமுகமுமில்லை. அழைத்தால் வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் புஞ்சை புளியம்பட்டி பள்ளியில் கடவுளின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வழங்க அவரையே அழைத்துவிடலாம் என்று தோன்றுகிறது. மார்ச் 31 சனிக்கிழமை. காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அரை நாள் குழந்தைகளோடு இருந்துவிட்டு வரலாம்.
9 எதிர் சப்தங்கள்:
என்னமோ முந்தைய திமுக ஆட்சிக்காலங்களில், ஜெ ஆண்டபோதெல்லாம், லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடந்தது போல.
காமராசரை தோற்கடித்து, அறிவுபூர்வமாக லஞ்சம் கொடுக்க , வாங்க பழக்கியது திமுகவே. பின்வந்தோர் அதைப் பின்பற்றி அதிகப்படுத்தினர். ஏதோ பாவம் என்று மக்களையும் நினைக்கும் பாமாக்கள் வாழ்க.
Dear Mani,
I've been experiencing this for a long time and it doesn't seem to get fixed. Maybe no one reported it to you like I was waiting.
I check your blog in my Android phone using chrome or Firefox. When I open your page only the first or first couple of posts will load and progress bar will stop at about two thirds of the page. Whatever I do will not fix it. Any other blog or website works fine. Could you please take a look? Thanks.
//ஆனால் புஞ்சை புளியம்பட்டி பள்ளியில் கடவுளின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வழங்க அவரையே அழைத்துவிடலாம் என்று தோன்றுகிறது//
√
இவர்களை எல்லாம் அவர் தனது சுண்டுவிரல் அசைவில் வைத்திருந்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறது./////////////////////
இப்படி ஒரு பொத்தாம் பொதுவான கருத்துரை நாம் உணராமலே நம் எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டது எப்படின்னு யோசிச்சீங்களா?
பொதுவா எல்லாருடைய கருத்தும் இதுவாகதான் இருக்கிறது,,,
இவ்விடத்தில் ஜெ, இப்படிபட்ட ஆட்களை ஏன் வைத்திருந்தார்,, அவருக்கு தகுதியான ஆட்களை தேர்ந்தெடுக்க தெரியவில்லையா? அப்படிய யாரும் தமிழ்நாட்டில் இல்லையா? அப்படி என்றால் அவர் தலைமை பண்புக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் தகுதியானவர்தானா? தனக்கு அடிமையாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்த ஒருவரை அவரின் அரசியல் திறமை குறைபாடுகளை ஏன் இப்போதும் விமர்சனம் செய்ய. சோ கால்டு முறப்போக்கு எழுத்தாளர்கள் முதற்கொண்டு தயங்குகிறார்கள்,,,,, அதுதான் பொதுப்புத்தி,,,, சராசரி மக்களுமே ஜெ, வின் பிளஸ் பாயிண்ட்களாக அவர் மற்றவரை அடக்கி ஆண்ட அந்த செயலைதான் வீரம் என்றும் அதுதான் அவரின் அரசியல் பிளஸ் என்றும் அதுவே போதும் என்ற மனநிலைக்கு என்றோ வந்துவிட்டார்கள், சராசரி மக்கள் பேசும் அரசியல் உதிர்க்கும் யோசனைகள் எல்லாம் ஏதோ ஒரு ஊடகத்திலிருந்து பரப்பபடுபவைதான்,,,, அதைதான் அப்படியே கிளிப்பிள்ளை போல மீண்டும் ஒப்புவிக்கிறார்கள், இதில் துக்ளக் தினமலர் போன்ற பார்ப்பனீய பத்திரிக்கைகளை படித்து அவர்களின் கருத்துகளையே தாங்கள் சந்திக்கும் மற்ற நபர்களிடம் மீண்டும் ஒப்பிக்கும் அரசியல் அறிவுதான் கட்சி சாராதா மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என்றழைக்கப்படும் படித்தவர்களிடம் இருக்கிறது,
இத்தனை வருடம் ஆட்சிசெய்த அவருக்கு அரசியலுக்கு தகுதியான நேர்மையான ஒருவரை கூடவா தன் அருகில் வைத்துக்கொள்ள முடியாமல் போயிற்று,,,, அப்படியென்றால் அவரின் அரசியல் திறமை நேர்மை என்றெல்லாம் போற்றிப்புகழப்படுது என்ன நியாயம்,,,
இந்த சம்பவத்தில் நம் தமிழக ஊடகத்துறையினர் இயங்கும் விதத்தை மற்ற மாநில ஊடகதுறையினர் செயல்படும் விதத்தோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் அவசியம்,,, அவ்வளவு தைரியமாக எரிச்சல்மூட்டும் வண்ணம் கேலியாகவும். சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அரசியல்வாதிகளை நேரிடையாகவே துளைத்தெடுக்கிறார்கள்,, இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி சாத்தியமானது, மற்ற மாநில ஊடகத்துறையினருக்கு இந்த தைரியம் அந்தளவிற்கு வராமல் போனதேன்,,,, இந்த இடத்தில் தான் தமிழகத்தில் பார்ப்பனீயம் என்ற ஒரு வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகார சுதந்திரத்தையும் உற்று நோக்க வேண்டியிருக்கிறது,,, இந்த விசயத்தில்தான் ராமசாமியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவையாக இருந்திருக்கின்றன,, (ஆனால் திரைமறைவில் அவர்களின் ரகசிய ஒப்பந்தம் உறவு வேறு கதை)
ஆனால் நாம் அதை செய்வதில்லை,, இப்படிப்பட்ட நிகழ்வுகள் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் பத்திரிக்கை துறை ஓரளவுக்காவது பந்தாடப்பட்டிருக்கும்,,, பதிலுக்கு அவர்களும் தங்கள் ஊடக வலிமையை காட்டி மல்லுகட்டியிருப்பார்கள், ஆனால் இப்போதைய அதிகாரத்திலிருப்பவர்களுக்கு இக்கலை கைகூடிவரவில்லை,, ஏன் என்றால் அவர்கள் அரசியல் பயின்றது திராவிடத்திடம் அல்ல,, பார்ப்பனீயத்திடம் அடிமையாய் இருந்தார்களே தவிர அவர்களிடமும் அரசியல் பயிலவில்லை,,,, இதெல்லாம் கலையா என்று கேட்டால் ஆம் திருடுவது ஒரு கலை என்று வசனம் எழுதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,, ஊடகத்துறையை சமாளிப்பது எவ்வளவு பெரிய அரியகலை என்று சொல்லுவார்கள்,,
மற்றபடி இப்போதைய அதிகாரவர்க்கத்தின் செயல்பாடு எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் லாபம் என்பது போலதான் இருக்கிறது,,,, என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்,
இப்பதிவில் நீங்கள் திமுகவை இப்போதைய அதிகார வர்க்கத்தோடு ஒப்பிட்டு சற்று நெகிழ்ச்சியோடு பாராட்டியிருப்பது போல தெரிகிறது,,,, கவலை வேண்டாம்
இவ்விசயத்தில் திமுக என்றும் நம்பர் ஒன் தான்,, அவர்களின் திறமையை சியின்டிபிக்கான அவர்களின் ஸ்பெஷல் பகுத்தறிவை குறைத்து மதிப்பிட வேண்டாம்,,, இவ்விசயத்தில் அவர்களின் (திமுகவின்) கால்தூசுக்கு ஈடாகமாட்டார்கள் இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள்,,,,
இந்தியாவிற்கே ஊழலை எப்படி நுணுக்கமாக கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு திரைமறைவில் செய்வது அப்படியே வெளியே விசயம் கசிந்தாலும் அதை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியாத அளவிற்கு செய்வது என்ற பார்முலா வை யெல்லாம் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே,,,, அவர்களின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டவர்கள் கேஸிலிருந்து வெளியேறிய விசயம்தான்,, மாறன் பிரதர்ஸ் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா (????) அவர்களும் எப்படி வெளியே வந்திட்டாங்கன்னு பாத்தீங்கல்ல? அதே வேளையில் நம்ம ப,சிதம்பரம் செட்டியார் அவ்ளோ பெரிய அதிகாரத்திலிருந்தும் அவர் படுகிற அவஸ்தையை பாத்துக்கிட்டிருக்கோமே,,,, இந்த மாதிரி அரசியல் ஞானம் எல்லாம் திராவிட இயக்க பல்கலைக்கழங்களில் மட்டுமே மிகச் சிறப்பா கற்றுத்தரப்பட்டிருக்கிறது,,,
ஹாஹாஹா சந்தடி சாக்குல திருடர்
கழகத்தையும் சுடலையையும்
புனிதராக்கிறீங்களே.
எனக்கென்னமோ எம்ஜியார், ஜெயா,
கட்டுமரத்தோட ஒப்பிடில்ல எடப்பாடியார்
தேவலாம் போலருக்கு.
@Ravi, Mani
for me the loading stops while accessing FB site, static.ak.fbcdn.net.
facebook plugin may be causing the problem.
If I add a entry for static.ak.fbcdn.net in /etc/hosts it loads faster.
ஒரு பச்சை தமிழன் வெளிப்படையாக
வெகுளிதனமாக வேடிக்கையாக பேசியதை
பெரிதுபடுத்துகிறீர்களே!!
தமிழரல்லாத ஒருவர் ஒரு தமிழ் பெண்னை
பார்த்து விஷமத்தனமாக பாவாடை நாடாவை
அவிழ்து பார்க்க சொன்னதை ரசித்து
கொண்டு, முத்தமிழை விற்றவர் என்று
கொண்டாடுவதோடில்லாமல் மூன்றாம்
தலைமுறையும் முடிசூட முடியவில்லையே
என அங்கலாய்கிறீர்களே.
அருமை ஐயா!!!
Below link has content copied from this post.
http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/thirupur-people-appriciate-admk-mp-sathyabama-118040200049_1.html
Post a Comment