Dec 19, 2017

கைவிடப்படாதவர்கள்

பிரபாகர் அழைத்து ‘எங்க இருக்கீங்க?’என்றார். நீட் கோச்சிங் அறையில் இருந்தேன். இப்பொழுது வாரம் ஒரு முறை வகுப்புகள் நடைபெறுகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்குத் தனித்தனி ஆசிரியர்கள் வருகிறார்கள். அது பற்றித் தனியாகச் சொல்கிறேன்.

இடத்தைச் சொன்னேன். ‘அப்பா உங்களைப் பார்க்கணும்ன்னு சொல்லுறாங்க’என்றார்.

வரச் சொல்லியிருந்தேன். மாலையில் குடும்பத்தோடு வந்தார்கள். ‘பிரபுவையும் எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க’ என்று அதிர்ச்சியாக இருந்தது. பிரபுவுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவரையும் அழைத்து வந்திருந்தார்கள். குளிர் காதுக்குள் செல்லாமல் இருக்க இரண்டு பக்கமும் காதுகளை அடைத்து ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்திருந்தார். அவரது உடல் வெகுவாக இளைத்திருந்தது.

‘அவரை ஏங்க தொந்தரவு பண்ணுறீங்க?’ என்றேன்.

‘அண்ணன் உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாரு’ என்றார் பிரபாகர். பிரபுவும் வருவதாக இருப்பின் நானே அவர்களின் வீட்டுக்குச் சென்றிருப்பேன்.

லம்பாடிகளின் குடும்பம் அது. பிரபுவுக்கு என்னைவிடவும் வயது குறைவாகத்தான் இருக்கும். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு தாலசீமியா. அவ்வப்பொழுது குருதி ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரபுவுக்கு இருதயப் பிரச்சினை. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சில சிகிச்சைகளைச் செய்தும் பெரிய பலனில்லை.

‘உங்க லிமிட் முடிஞ்சுடுச்சுங்க’ என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு அங்குமிங்குமாகப் பணம் புரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அணுகிய போது நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்திருந்தோம். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது.  

அதற்கு நன்றி சொல்வதற்காகத்தான் வந்திருந்தார்கள்.

எளிய மனிதர்கள் அவர்கள். எப்படிப் பேசுவது என்பது கூடத் தெரியாது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மாதுளம் பழங்களை வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு ஒரு தட்டத்தையும் எடுத்து வந்து அதில் வைத்து நீட்டினார்கள். அவர்கள் அவ்வளவு செலவு செய்திருக்க வேண்டியதில்லை. உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் திரும்ப அழைப்பதே அரிதினும் அரிது. இவர்கள் தேடி வந்துவிட்டார்கள். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. ‘இதெல்லாம் வேண்டாங்க’ என்று மறுத்த போதும் அவர்கள் விடுவதாக இல்லை. நம்மிடமெல்லாம் வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக் கொண்டேன். அவர்களுக்கு அது திருப்தி. 

‘மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுங்க பிரபு’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரபு, அம்மா, அப்பா என மூன்று பேரும் காலைத் தொட்டுக் கும்பிட வந்துவிட்டார்கள். ஒரு குதி குதித்து அந்தப் பக்கமாக நகர்ந்த போதும் பிரபு எழவே இல்லை. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். ‘என் குழந்தைகளுக்காவது நான் உசுரோட இருக்கணும் சார்’ என்றார். அந்தக் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். இரு குழந்தைகளின் முகமும் நினைவில் வந்து போனது. இவர் தப்பினால்தான் தாலசீமியா குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும். அவர்களால் முடியுமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் முயற்சிப்பார்கள். 

இத்தகைய மனிதர்களைத்தான் தேர்ந்தெடுத்து உதவ வேண்டும். ஒவ்வொரு ரூபாயும் யாரோ ஒருவருடைய உழைப்பு; நம்பிக்கை. 

கடந்த வாரத்தில் கார்த்திக் மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்த இந்த பதிவு செய்யப்பட்ட ஒலியைக் கேளுங்கள். ஒரு குழந்தை தனது பிறந்த நாளுக்காக யாரும் தமக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டாம் எனத் தனது உறவினர்களிடம் சொல்லி அதற்கு பதிலாக பணம் அனுப்பி வைக்கச் சொல்லிக் கேட்கிறது. கிடைக்கும் பணத்தை நிசப்தம் தளத்துக்கு அனுப்பி வைக்கப் போகிறார்களாம். எந்தச் சலனமுமில்லாமல் கவின் பேசுவதைக் கேட்டால்  மனதுக்குள் என்னவோ பிசையும்.

இதே ஒலிக்கோப்பை பிரபுவையும் கேட்கச் சொன்னேன். இப்படி எத்தனை எத்தனை பேரின் அன்பும் ஆதரவும்தான் பிரபு போன்றவர்களை எழுந்து வரச் செய்கிறது.

‘உலகத்துல எங்கேயோ இருக்கிற எத்தனையோ பேரின் பணம் இது. பணம் மட்டுமில்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என ஒரு கணமாவது பிரார்த்திப்பார்கள்..உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது..வந்தாலும் பார்த்துக்கலாம்’ சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரபுவின் அம்மா உடைந்துவிட்டார். அழத் தொடங்கினார். இங்கே எந்த மனிதனும் கைவிடப்பட்டவர்கள் இல்லை. அல்லவா? இந்த உலகம் எளிய மனிதர்களின் அன்பினால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வேறு எதுவுமில்லை. நிச்சயமாக வேறு எதுவுமில்லை. பாசாங்கில்லாத வெறும் அன்பு மட்டுமே. இந்த நம்பிக்கையும் பாஸிட்டிவிட்டியும்தான் நாம் இயங்குவதற்கும் வாழ்வதற்குமான அச்சாணி.  

12 எதிர் சப்தங்கள்:

Unknown said...

வார்த்தை வரலை.....
அழுக மட்டுமே தோணுது......

Anonymous said...

இந்த உலகம் எளிய மனிதர்களின் அன்பினால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.//உண்மை

Anonymous said...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு.....

சேக்காளி said...

ஒரு கமெண்டு எழுதினேன்.அதை திரும்ப வாசிக்கும் போது அதிகமா உணர்ச்சிவயப் படுறது மாதிரி இருந்துச்சு.அதனால அதை Copy Paste செஞ்சு வச்சிருக்கேன். நாளையோ இல்ல இன்னொரு நாளோ வாசிக்கும் போதும் அதே உணர்வு இருந்தா பதிவிடுகிறேன்.

செ. அன்புச்செல்வன் said...

ஆரஞ்சு, ஆப்பிள் என்று தொடங்கும்போதே அழத்தொடங்கிவிட்டேன். உங்கள் பணி மென்மேலும் சிறக்கவேண்டும். நிசப்தத்தின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரியும் உங்களின் அருளுள்ளம்!!

Robert said...

வேறெதையும் எழுதத் தோன்றவில்லை. நெகிழ்ச்சியாய் இருக்கிறது.

Vinoth Subramanian said...

May god bless those people.

மதுரை சரவணன் said...

உங்கள் பணி சிறப்பானது. கல்வி, மருத்துவம், பேரிடர் எனத் தொடர்கின்றது. இப்பணிக்கு உதவும் நல் உள்ளங்களைப் பாராட்ட வேண்டும். எத்தனையோ நபர்கள் உதவ இருந்தாலும் அதை சரியாக சரியான நபர்களுக்கு கொண்டு செல்வது கடினம். அப்பணியினை உங்கள் வேலைப்பளூவின் ஊடே செய்து வருவது பாராட்டுக்குரியது.

tirupurashok said...

இதுதான் வாழ்க்கை!

அன்பே சிவம் said...

🙏🙌👏💪🚀🆙

சேக்காளி said...

Copy Paste செஞ்சு வச்ச பின்னூட்டம்
//இப்படி எத்தனை எத்தனை பேரின் அன்பும் ஆதரவும்தான் பிரபு போன்றவர்களை எழுந்து வரச் செய்கிறது//
அதையெல்லாம் ஒருங்கிணைப்பது மணி. அந்த மணி மனசளவுல நமக்கும் கொஞ்சம் நெருக்கமானவர் ங்கறத நெனைக்கும் போது கொஞ்சம் மெதப்பா இருக்கு ய்யா.
போதை யில இருக்கும் போது மணி பக்கத்துல இருந்தா முத்தம் கன்பர்ம்.

செந்தில்குமார் said...

செய்யும் உதவி சரியான நபருக்கு போய் சேரவேண்டும். சரிபார்த்து கொடுப்பது மிகப்பெரிய வேலை.மனம் வேண்டும்,பணமிருந்தாலும்.👍.