அதிகப்படியான மிரட்டல் என்று எதை நினைக்கிறீர்கள். அப்படி செய்பவரை நேரில் காணும்போது என்ன செய்ய தோன்றும். சும்மா ஒரு General Knowledge-க்குத்தான்?
எதிராளிகள் நம்முடைய பலவீனத்தை வைத்து மிரட்டுவதுதான் அதிகப்படியான மிரட்டலாக இருக்க முடியும். பத்து வருடங்களுக்கு முன்பாக ஓர் அரசியல்வாதியைத் திட்டி எழுதியிருந்தேன். அது இணையத்தில் பரவலான போது அதுவரையிலும் என்னிடம் நன்கு பழகியிருந்த நபரொருவர் அழைத்து நல்லது செய்வது போலப் பேசினார். ‘ஆட்சி அவங்ககிட்ட இருக்குது...நீ ஏம்ப்பா அப்படி எழுதுன? அவங்க கோபப்படுறாங்க..உங்க அம்மா அப்பா எல்லாம் அரசு ஊழியர்கள்தானே..அவங்களை கண்காணிக்க ஆரம்பிச்சுடுவாங்க...நீ பண்ணுற பிரச்சினைக்கு அவங்க ஏன் மாட்டணும்?’ என்று எனக்கு ஆதரவாக இருப்பது போலவே மிரட்டினார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு ‘அதெல்லாம் ஜோக்குக்கு எழுதினேன்..மன்னிச்சுடுங்கன்னு எழுது...மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அம்மாவும் அப்பாவும் அரசு ஊழியர்கள் என்பதுதான் அப்பொழுது என்னுடைய பலவீனமாக இருந்தது. அதைச் சரியாகப் பயன்படுத்தி மிரட்டினார்- மிரட்டுவதே தெரியாமல். எப்பொழுதும் மறக்கவே முடியாது. இத்தகைய மனிதர்களைத் திரும்பச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் மிரட்டியதைக் காட்டிக் கொண்டதில்லை.
சங்கர்-கெளசல்யா தீர்ப்பு குறித்து உங்கள் எண்ணம் என்ன? நீங்கள் மரண தண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவரா? இத்தகைய தீர்ப்புகள் ஆணவக் கொலைகளை தடுக்கும் என நினைக்கிறீர்களா?
சமீபமாக இரண்டொரு காதல் பிரச்சினைகளில் தலையிட்டிருக்கிறேன். சாதியப்பற்றும் வெறியும் அதிகம் கொண்ட பகுதியில் இருந்து வந்தவன் என்ற முறையில் இது பற்றி பிறிதொரு சமயம் விரிவாகவே எழுத வேண்டும். பொதுவாகப் பெற்றவர்களின் சிக்கலே ‘ஊர் என்ன சொல்லும்?’ என்பதாகத்தான் இருக்கிறது. ‘வெள்ளையும் சொள்ளையுமா நாளைக்கு நான் நல்லகாரியம் கெட்ட காரியம்ன்னு போக முடியுமா?’என்கிறார்கள். குழந்தைகளின் வாழ்க்கையைவிடவும் ஊர்ச் சொல்தான் முக்கியம் என்று உருவேற்றப்பட்டிருக்கும் சாதியக் கட்டமைப்புகளில் இத்தகைய தீர்ப்புகள் பெரிய மாறுதலை உண்டாக்கிவிடாது. ஒருவேளை பயத்தை உண்டாக்கலாம். கொல்வதற்கான பயம் இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு ‘திவ்யா இளவரசனுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும்’ ‘சங்கருக்கு என்னாச்சு தெரியும்ல..ஆளை வெச்சுக் கொன்னுட்டு தூக்குல தொங்கிடுவேன்’ என்று காதலர்களை எமோஷனல் ப்ளாக் மெயில் செய்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிற சாத்தியங்களும் அதிகம். ‘மானம் போனதுக்கப்புறம் உசுரு போனா கெடக்குது...’ என்று அருகாமையில் அமர்ந்து உசுப்பேற்றுகிறவர்களுக்கும் இதுவொரு நல்ல வாய்ப்பு. எந்தவிதமான குற்றமாக இருப்பினும் மரண தண்டனையளிக்க மனிதனுக்கு உரிமையில்லை என்பதுதான் என் நிலைப்பாடு.
கமல் எழுதும் என்னுள் மையம் கொண்ட புயல் படிக்கிறீர்களா? எவ்வகையாயினும் ஏனென்று கூறவும்.
வாசிப்பதில்லை.
தமிழில் தற்போது வெளிவரும் தினசரிகளில் எது சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?
தமிழ் இந்து.
பொதுவாகவே ஒவ்வொரு தினசரிக்கும் ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருக்கும். தினமலர், தினகரனின் தீவிரமான ஒரு பக்கச் சார்புத் தன்மை, உள்ளூர் தாண்டிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தராத தினத்தந்தி, மிகக் குறைவான செய்திகளை மட்டுமே வழங்கும் தினமணி போன்றவைகளை ஒப்பிடும் போது இந்துவில் வெளியாகும் செய்திகளின் ஆழம், அதன் பரந்துபட்ட தன்மை போன்றவை அதனைச் சிறந்ததாகக் கருத வைக்கிறது. அவ்வப்போது, ‘சாய்கிறார்கள்’ என்ற எண்ணம் தோன்றுவதும், அதிகளவில் பிம்பப்படுத்துவதும் அதன் பலவீனம் என நினைக்கிறேன்.
எப்படி நண்பா உன்னை போல் இவ்வளவு நல்லவனாக இருப்பது?
வெளிப்படையாக இருக்கிறேன். நல்லவனாக இல்லை. (நீங்கள் கலாய்க்கவில்லை என்ற நம்பிக்கையில் பதில் எழுதியிருக்கிறேன்)
This is Rajkumar. I am basically from Kanyakumari. I came to know from my friends about your organisation.Its regarding recent ockii cyclone which caused huge losses to people living in southern coastline. Sir if possible can your trust help them in whatever way possible.
Sarahah தளத்தை சில நாட்களாக கவனிக்காமல் விட்டுவிட்டுவிட்டதால் தங்களுடைய இந்தச் செய்தி கண்ணில்படாமல் தவறிப் போனது. ஓகி புயல் குறித்தான செய்திகளை கவனித்த போது நம்மால் ஏதாவது செய்ய இயலுமா என்று யோசித்ததுண்டு. சில நண்பர்களிடமும் விசாரித்தேன். மீனவர்களைக் காணவில்லை என்பதுதான் முக்கியமான பிரச்சினை என்பதால் களத்தில் இறங்கி நாம் செய்யக் கூடிய பணிகளாகத் தெரியவில்லை. ஒருவேளை என்னுடைய புரிதல் தவறாக இருக்கலாம். என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும் என்பதைத் தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் அனுப்பினாலும் சரி. தேவைப்படும்பட்சத்தில் நிச்சயமாக பரிசீலித்துவிட்டுச் செய்யலாம்.
(இனி வாரம் ஒரு முறை Sarahah கேள்விகளுக்கு பதில் எழுதிவிடுகிறேன். தவற விட்டமைக்கு மன்னிக்கவும்.)
3 எதிர் சப்தங்கள்:
//அதிகப்படியான மிரட்டல் என்று எதை நினைக்கிறீர்கள்//
நான் இன்னும் மிரட்டவே இல்லையே.
//‘ஊர் என்ன சொல்லும்?’ என்பதாகத்தான் இருக்கிறது. ‘வெள்ளையும் சொள்ளையுமா நாளைக்கு நான் நல்லகாரியம் கெட்ட காரியம்ன்னு போக முடியுமா?’என்கிறார்கள். குழந்தைகளின் வாழ்க்கையைவிடவும் ஊர்ச் சொல்தான் முக்கியம் என்று உருவேற்றப்பட்டிருக்கும் சாதியக் கட்டமைப்பு//
உண்மைதான்.
உள்ளூரிலேயே இருப்பவர்களுக்கு இது சரி.ஆனால் இன்றைய சூழ்நிலையில் படிப்பு, வேலை பொருட்டு சொந்த ஊரை விட்டு வெளியிடங்களில் தங்காத உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் மிகக் குறைவு.ஆயினும் கட்டமைப்பு உறுதியாகவே இருக்கிறதென்றால் பிரமிப்பாக தான் உள்ளது.
தமிழ் இந்து அநியாயத்திற்கு PRO DMK ஆகவும் ANTI பிஜேபி ஆகவும் இருக்கிறது,அதுவும் எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் செய்கிறது.
Post a Comment