Oct 30, 2017

விளம்பரப் பதாகைகள்

திருலோச்சன சுந்தரி யாரென்று தெரியவில்லை. தம் வீட்டுக்கு முன்பாக யாரோ பேனர்களை நட்டு அழிச்சாட்டியம் செய்ய நீதிமன்றத்தை நாடி அட்டகாசமான தீர்ப்பை வாங்கியிருக்கிறார். ‘உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகைகள் வைக்கக் கூடாது’ என்கிற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமாகியிருக்கிறார். அந்த அம்மையாரும் அவர்தம் குடும்பமும் வாழ்க வளமுடன். இத்தகைய பிரச்சினைகளில் உள்ளூர் அதிகாரிகளிடம் கெஞ்சினாலும் சரி; காவல்துறையை அணுகினாலும் சரி- துரும்பைக் கூட அசைக்க முடியாது. ‘ஏங்க பிரச்சினை பண்ணுறீங்க?’ என்று நம்மிடமே திருப்பிக் கேட்டு அனுப்பி வைத்துவிடுவார்கள். 

கடந்த சில மாதங்களாக- ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடைபெறுகிற ஆட்சியில் தமிழகத்தில் அபரிமிதமான விளம்பர மோகம் தலை தூக்கியிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பிரஸ்தாபித்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். இந்த அணி, அந்த அணி, உள்ளூர் அமைச்சர், கட்சிப் பிரமுகர்கள் என்று ஒருத்தர் பாக்கியில்லை. சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என்று ரேட் கொடுத்துத் பதாகைகள் அச்சடித்துத் தந்துவிடுகிறார்கள். வாங்கி வந்து நான்கு குச்சிகளை நட்டு பல்லைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

வள்ளல்களையும் செம்மல்களையும் பேனர்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ‘இதுக்கு பேனர் கட்டுங்க..அதுக்கு பேனர் கட்டுங்க’ என்று மேலிடங்களிலிருந்தே அச்சடித்து ஒன்றியங்களுக்கும், நகரங்களுக்கும், கிளைக் கழகங்களுக்கும் அனுப்பிவைத்துவிடுவதாகச் சொன்னார்கள். இப்படியெல்லாம் விளம்பரம் செய்து ‘நாங்க அதைச் செய்தோம்; இதைச் செய்தோம்’ என்று காட்டிக் கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டும் என ஒவ்வொருவருக்கும் பயம் நாடி நரம்புகளில் எல்லாம் ஊறிக் கிடக்கிறது. நீங்கள் என்னதான் விளம்பரம் செய்தாலும் மண்ணைக் கவ்வியே தீர வேண்டும் என்று யாராவது சொன்னால் தேவலாம்.

எதுக்கு இவ்வளவு விளம்பரம் மோகம் என்று மண்டை காய வேண்டியதில்லை. அலுவலகங்களில் பணி புரிகிறவர்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும். வேலை செய்கிறவர்கள் விளம்பரங்களைச் செய்து கொள்ள மாட்டார்கள். வந்தோமா வேலையைச் செய்தோமா என்றிருப்பார்கள். ஆனால் இந்த உடான்ஸ்பாண்டிகள் இருக்கிறார்கள் பாருங்கள். வேலையே செய்யாமல் டபாய்த்தபடி சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிற அவர்கள்தான் அரை மணிக்கொரு மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அலுவலக மீட்டிங்களில் தங்களால்தான் நிறுவனமே இயங்குவது போலப் பேசுவார்கள். ஓணானைப் போலத் தலையைத் தூக்கித் தூக்கிக் காட்டினால் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள் என்கிற நம்பிக்கை அது. எல்லோருக்குமே தெரியும்- இவன் சீன் போடுகிறான் என்று. ஆனால் சீன் போடுகிறவனுக்கு மட்டும் அது உறுத்தவே உறுத்தாது. அப்படித்தான் இருக்கிறது நிலைமை.

இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது பார்க்கவே ‘அப்பாடா’ என்றிருந்தது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என்று எங்கேயும் பேனர்களைக் காணவில்லை. முக்குக்கு முக்காக வைத்திருந்த பதாகைகளையெல்லம் சுத்தபத்தமாக நீக்கியிருந்தார்கள். யாரும் இளித்துக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்புதான் காரணம். ஆளுங்கட்சி மட்டுமில்லை. எந்தக் கட்சிக்குமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்பது பெருத்த நிம்மதி. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எதிர்கட்சித் தலைவர் கலந்து கொண்ட இளைஞரணி விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. அங்கேயும் கூட கொடிகளைத் தவிர வேறு விளம்பரங்கள் இல்லை. சுவர்களில் எழுதியிருந்தார்கள். அது எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இல்லையென்றால் சூரியனே, நெருப்பே என்று அவர்களும் படம் காட்டியிருப்பார்கள். 

அவர்களுடைய பணம்; அவர்கள் செலவு செய்கிறார்கள். சரிதான். ஆனால் பதாகைகள் என்பவை விளம்பரங்கள் என்பதையும் தாண்டி சூழலியலுக்குக் கடும் பாதிப்பை உண்டாக்கக் கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வைத்துவிட்டு எடுத்து வீசும் அத்தனை பேனர்களும் மட்காமல் மண்ணுக்குள் புதைந்து கிடப்பவை. அவை மண்ணோடு மண்ணாகப் போக எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாது. ஏற்கனவே நிறைந்து கிடக்கும் பாலித்தீன் பைகளுடன் இவையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய நீர் புகாத திரையை உருவாக்குகின்றன. மழை நீர் உள்ளே இறங்க வாய்ப்பில்லாத திரையை உருவாக்கும் பதாகைகள் மிக ஆபத்தானவை. இதைப் பற்றியெல்லாம் எந்த அரசியல்வாதிக்கும் அக்கறை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கூழ் ஊற்றுவதாக இருந்தாலும் சரி; பூப்பு நன்னீராட்டு விழாவாக இருந்தாலும் சரி- அரசியல் பிரமுகர்கள் வருகிறார்கள். வழியெங்கும் தோரணங்கள். ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு அவை எங்கே போகின்றன? சில பேனர்களை குடிசைகளின் கூரைகளின் மீது போர்த்தியிருக்கிறார்கள். மழைக்கும் வெயிலுக்கும் தாங்கும். அவற்றைத் தவிர எந்தப் பலனுமில்லாத வெட்டி பந்தாக்களுக்கான அடையாளங்களாக மட்டுமே இருக்கின்றன. 

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிக முக்கியமானது. தீர்ப்புக்குத் தடை கோரிய மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போது பேனர்களுக்குக் எதிராகத்தான் டிராபிக் ராமசாமி போராடினார். இன்னும் சில அமைப்புகளும் போரடின. அப்பொழுதே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். better late than never. இப்பொழுதாவது வழங்கினார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வலுவில்லாத அரசாங்கம் அமைவது இந்த வகையில் நல்லதுதான். ஒருவேளை நாளை வலுவான அரசாங்கம் அமைந்தாலும் இந்த நீதிமன்றத் தீர்ப்பு கடைபிடிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஹெல்மெட் தீர்ப்பு மாதிரி காற்றில் கரையாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டிக் கொள்ளலாம்.  

நீதிமன்றத்துக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஒரு கோரிக்கை. இதே தீர்ப்பு நடிகர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட்டால் பெரும் புண்ணியமாகப் போகும். நண்டுகளும் சிண்டுகளும் அணில்களும் ஆமைகளுமாக ஊரை நாறடிப்பது கொஞ்சம் கட்டுக்குள் வரும். அரசியல்வாதிகளுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அவர்தம் அடிப்பொடிகளுக்கும் தாமாகவே சூழலியல் சார்ந்த சுரணை வரும் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போட வேண்டியதில்லை. இப்படியான தீர்ப்புகள்தான் ஒழுங்கமைக்கும். அந்தவகையில் பேனர்களால் நமக்கு ஏற்பட்டிருக்கும் மூச்சுத் திணறலுக்கு இத்தீர்ப்பு சிறு நிவாரணம்,

நீதிபதிக்கு நன்றி. திரிலோச்சன சுந்தரிக்கு வாழ்த்துக்கள்.

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Apdiye konjam madurai la kalyanam kaathu kuthuku adika venam nu sollitangana, romba nallarukkum.

கண்ணன் கரிகாலன் said...

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு. திரையரங்குகளில்​ தலைவனைத் தேடுவது விளம்பர கட்அவுட் க்கு அபிஷேகம் செய்வது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்ததால் சினிமா பாணியில் கட்அவுட் கலாசாரம் நம் அரசியலில் உள்ளது. ஆக சினிமா பிண்ணனி இல்லாத தலைவர் கட்அவுட் வைத்து விளம்பரப்படுத்த வேண்டியுள்ளது. என் செய்ய.
காமராசர் காலம் வரை நம் அரசியலும் எளிமையாகத் தான் இருந்தது. சினிமா வேறு அரசியல் வேறு என்ற நிலை உள்ள மற்ற மாநிலங்களில் இவ்வளவு விளம்பர கட்அவுட் கலாசாரம் இல்லை.

Anonymous said...

பேனர் தடை இனிதென்பர் சிறப்பென்பர்
பறக்கும் பலூன் காணாதவர்

கொமுரு said...

இந்த உத்தரவு தவறு மணிகண்டன் , இன்று தமிழ் நாட்டைப் பார்த்து இது சரி என நினைத்தால் வருங்காலத்தில் உங்களைப் போன்ற தலைவர்கள் எப்படி மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவார்கள் ? தினசரிப் பத்திரிகை , டிவி , இவை எல்லாம் சாதாரண மக்கள் அணுகமுடியாது .
வழக்கு தொடுத்த பெண்மணி பக்கம் நியாயம் உள்ளது. அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தது நியாயம் . யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கட் அவுட் வைப்பது தவறில்லை . வைத்தால் குடுமி செறைசால் மொட்டை என்று தீர்ப்பு அழிப்பது தவறு . ஆனால் தீர்ப்பு நிலைக்காது என்பதில் எனக்கு மாறுபாடில்லை இது மாறும் கண்டிப்பாக மாறவேண்டும்

சேக்காளி said...

// இதே தீர்ப்பு நடிகர்களுக்கும் பொருந்தும்//
ஏன் இந்த குழப்பம்?

அன்பே சிவம் said...

உங்களைப் போன்ற! தலைவர்கள்???

தலைவராமாம் 😆.

மொதுல்ல 'தலைய' வார 'முடி'யுமா?

STEP Cutting பண்ண 'முடி'யாட்டி போவுது

at least Latest தலைகள் மாதிரி தப்புந்

தவறுமா! உளற 'முடி' யுமா? என்ன பங்கு

சேக்கு! ஏம் பங்குக்கு செஞ்சாச்சி உங்க பங்க

வச்சி செய்யும். 200 ஓவா ஓட மேல போட்டு

குடுக்கேன்.

சேக்காளி said...

//உங்களைப் போன்ற தலைவர்கள் எப்படி மக்கள் மத்தியில் அறிமுகம் ஆவார்கள்//
அடிப்படை உறுப்பினர்கள் கண்டிப்பாக 7 நாட்களுக்கு ஒரு முறை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.இது "தலை"க்கு முடியில்லை யே என்ற தாழ்வுணர்ச்சி வராமலிருக்க.
அடுத்து அடித்த மொட்டையில் தலை முகம் அழகாக டாட்டூ செய்யப் படும்.இது மக்கள் மத்தியில் "தலை" யின் முகத்தை அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடு.அடுத்து தமிழ் குமரிகளின் உடையான தாவணி கலாச்சாரம் மறையாமல் இருக்க வெளிநாட்டு வெண்குமரிகளை சுற்றுலா துறையின் சார்பாக அழைத்து வந்து அவர்களுக்கு தாவணி அணிவித்து வலம் வர செய்ய வேண்டும்.ரவிக்கையின் முதுகுப் பக்கம் கண்ணாடி சன்னல் வைத்து தைக்கப் படும்.சுற்றுப்பயணம் "முடி" யும் வரை வெண்கிளிகளின் முதுகில் "தலை" யின் சிரித்த முகம் டாட்டூ செய்யப்படும்.
சுற்றுலா முடிந்து திரும்பும் வரை வெண்கிளிகளுடன் யாரும் புழங்காமல் சுத்தபத்தமாக பாதுக்கும் பொறுப்பு புதுவைக் காரரிடம் ஒப்படைக்கபடும்.இவை அனைத்தும் சுழற்சி முறையில் நடை பெற்றுக் கொண்டே இருக்கும்.

கொமுரு said...

ரசினி காந்துக்கு ஸ்டேப் கட்டிங் வைப்பீரோ, உள்ளே இருப்பது என்ன என்று தெரியாமல் மேலே பார்த்து தான் பொழப்பு சிரிப்பா சிரிக்குது