நேற்றிரவு ஊருக்கு வர வேண்டியிருந்தது. உறவுக்கார பெண்ணுக்கு நாளை திருமணம். வீட்டில் எல்லோரும் முன்பே சென்றுவிட்டார்கள். அன்பின்மிகுதி காரணமாகவோ என்னவோ பிரேசில்காரிகள் என்னை விடுவதாக இல்லை. கெஞ்சிக் கூத்தாடி ‘ரெண்டு நாள் லீவு கொடுங்க சாமீகளா’ என்று வழிக்குக் கொண்டு வந்தேன். மதியம் அலுவலகத்திலிருந்து கிளம்பி ‘கார் எடுத்துட்டு வந்துடுறேன்’ என்றேன். ஊரில் தேவைப்படும். ‘அத்தந்தூரம் தனியா ஓட்டிட்டு வர்றியா?’ என ஒருவர் தடை போட தம்பி வழக்கம்போல ‘ஒருத்தனுக்கு வேண்டி காரா? எத்தன்ரா செலவு ஆகுறது?’ என்றான். இவர்களிடம் சொல்லாமல் எடுத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு கட்டியிருந்தேன். நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது யதேச்சையாக ப்ளா ப்ளா கார் பற்றிச் சொன்னார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த app இருக்கிறதாம். எனக்குத் தெரியாது. ‘இங்க இருந்து அங்க போறேன்.. வண்டியில் இவ்வளவு இடம் இருக்கு’ என்று சொன்னால் அதுவே ஒரு ஆளிடம் இத்தனை ரூபாய் கேட்கலாம் என்று பரிந்துரை செய்கிறது. அது கொள்ளைக்காசு. அவ்வளவு வேண்டியதில்லை. ஆளுக்கு முந்நூறு ரூபாய் என்று மாற்றி பதிவு செய்து வைத்திருந்தேன். நிறையப் பேர் இணைந்து கொள்ள விரும்பினார்கள். கேட்கிறவர்களில் சரிப்பட்டு வருவார்கள் என்று நமக்குத் தோன்றுகிறவர்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
என்னையும் சேர்த்து நான்கு பேர்கள்.
நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்திருக்கிறேன். குழந்தைகள் புத்தகங்கள்தான் திட்டமாக இருந்தது. ஆனால் இந்த விஷயம் சரியாக வரும் எனத் தோன்றியது. ஆரம்பித்தாகிவிட்டது. அதை யோசித்துக் கொண்டு வர வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் தனியாக மாட்டினாலே பூர்விகம் பூகோளத்தையெல்லாம் உருவிவிடுவேன். மூன்று பேர் வசமாகச் சிக்கினால்? ஆனால் அதிலும் ஒரு தில்லாலங்கடி இல்லாமல் இல்லை. அவர் மட்டும் வண்டியில் ஏறியவுடன் செல்போனில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். செமக் கடுப்பு எனக்கு. ‘உனக்கு பணம்தானே? கொண்டு போய் விடு’ என்பதான மனநிலை என்றுதான் புரிந்து கொள்கிறேன். ஓட்டுநர் வேலையா பார்க்கிறோம்? என்ன கேட்க முடியும்? காதில் புஸ் புஸ் என புகை வந்து கொண்டிருந்தது. மீதமிருந்த இருவரும் நல்ல மனிதர்கள். ஒருவர் மெர்ஸிடிஸில் வேலை பார்க்கிறார். இன்னொருவர் கைலாசகுமார். கொடுமுடிப் பக்கம். அவரைப் பற்றிக் கடைசிப் பத்தியில் சொல்கிறேன். நாவலுக்கான ஒரு அத்தியாயத்தை அவர் பேசியதிலிருந்துதான் ஆட்டையைப் போட்டிருக்கிறேன்.
ஆம்னி பேருந்துகளில் யாரும் அடுத்தவர்களுடன் பேசுவதில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு- என்ன பெரிய வேலை- செல்போன்தான்- நோண்டிக் கொண்டேயிருப்பார்கள். அரசுப் பேருந்துகளில் அப்படியில்லை. பேச்சுக் கொடுத்தால் பேசுகிற ஆட்கள் அதிகம். ஆம்னி பேருந்துகளில் வருகிறவர்களும் பேச்சுக் கொடுத்தால் பேசுவார்கள் என்றெல்லாம் நம்ப வேண்டியதில்லை. பெரும்பாலானவர்கள் மனதுக்குள் இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கிற திட்டம் இருக்கும். ‘இவன் யாருடா டிஸ்டர்ப் கேஸூ’ என்று முகத்தைச் சுளிக்கிறவர்கள்தான் அதிகம்.
காரைக்காலிலிருந்து சிதம்பரம் வரைக்கும் வந்த பேருந்தில் ஒரு மாவட்ட நூலகர் சிக்கினார். ஒரு மாவட்டத்தில் பணியில் இருக்கிறார். இன்னொரு மாவட்டத்தில் குடும்பம் இருக்கிறது. வார இறுதியில் மட்டும் குடும்பத்தைப் பார்க்கச் செல்கிறார். வார நாட்களில் மாவட்டத் தலைநகரில் ஒரு மேன்சனில் தங்கியிருக்கிறார்.
‘சிதம்பரத்துக்கு அரை மணி நேரத்துல போய்டுங்களா சார்?’ என்றேன்.
சிரித்துவிட்டு ‘ஒண்ணேமுக்கால் மணி நேரத்துக்கு மேலாகும்’ என்றார். அது எனக்கும் தெரியும். ஆனால் இப்படித்தானே எதையாவது ஆரம்பிக்க வேண்டும்? தெரிந்து கொண்டே கேட்க வேண்டியதுதான்.
முதல் கேள்விக்குப் பதில் சொல்லும் பாங்கிலேயே இவர் உரையாடலுக்கு தோதுப்படுவாரா அந்த மனநிலையில் இருக்கிறாரா என்று முடிவுக்கு வந்துவிடலாம்.
‘கவர்ண்மெண்ட் எம்ப்ளாயியா சார்?’ என்று அடுத்த கேள்வி. சில வேலைகளுக்கு என்று சில தோரணைகள் உண்டு. ஆமாம் என்று அவர்கள் சொல்லிவிட்டால் மானசீகமாக சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். நூலகர் என்றவுடன் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார். ‘படிப்பீங்களா?’ ‘என்ன படிப்பீங்க?’ என்றெல்லாம் ராவ ராவ அவரும் உற்சாகமாகிவிட்டார். செங்கோட்டையன், உதயசந்திரனில் ஆரம்பித்து ஒவ்வொருவரைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எவ்வளவு தகவல்கள்? பேசினால்தான் கிடைக்கும்.
‘ரோட்டுல வர்றவன் போறவன்கிட்ட பூரா பேசி என்னடா பண்ணப் போற?’ என்ற கேள்வியை வீட்டில் இருப்பவர்களே கேட்பார்கள். அந்தக் காலத்தில் வீடுகளில் திண்ணை இருக்கும். நான்கு பேர் வந்து அமர்வார்கள். ஊர்க்கதை பூராவும் பேசுவார்கள். அக்கம்பக்கம் என்ன நடக்கிறது என்று தெரியும். தமக்குள் இருக்கும் குப்பைகளையும் பாரங்களையும் சபையில் இறக்கி வைப்பார்கள். மனம் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு எத்தனை பேர் சகல விஷயங்களையும் பேசுகிறோம்?
அழுத்தங்களைச் சேகரித்து சேகரித்து தாம் வெகு சந்தோஷமாக இருப்பதாக நடிப்பவர்கள்தான் அதிகம்.
அலுவலக நண்பர்கள் சிலரிடம் முயற்சித்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்பப் பேசுவார்கள். ‘அவன் அப்படி டார்ச்சர் பண்ணுறான்..இவன் இப்படி டார்ச்சர் பண்ணுறான்’ என்று என்னை டார்ச்சர் செய்வார். ‘அந்த பில்டிங் பாருங்களே..ப்ரெஸ்டீஜ் பில்டர்’ என்று ஆரம்பித்துக் கொடுப்பேன். அப்பொழுதும் அவர் டார்ச்சரைத் தாண்டி வெளியில் வர மாட்டார். எனக்கு ஒரு கதை நினைவுக்கு வரும். கிணற்றுத் தவளைகள் கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்க்கும் போது வட்ட வடிவக் கிணறாக இருந்தால் வானம் வட்டமாகவும், சதுர வடிவக் கிணறாக இருப்பின் வானம் சதுரமாகவும் தெரியும். இவ்வளவுதான் உலகம்; இதுதான் வடிவம் என்று முடிவு செய்து அப்படியே செத்துப் போகுமாம். இன்றைக்கு நம்முடைய நிலைமையும் அப்படித்தான்.
இணையம் இருக்கிறது; செய்தி தெரியும் என்பது மட்டுமே உலகம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஓராயிரம் பிரச்சினைகள். ரத்தமும் சதையுமான அந்தக் கதைகள் நிஜமான உலகம்.
‘லைப்ரரிக்கு படிக்க வர்றாங்களா சார்?’ என்ற போதுதான் அந்தச் சொல்லைச் சொன்னார். தனது சட்டைப்பையிலிருந்த செல்போனை எடுத்துக் காட்டி ‘கருமாந்ந்ந்ந்ந்ந்திரம்’ என்றார். பேச்சை மாற்றிவிட்டேன். முகம் தெரியாத மனிதர்களிடம் தமது குடும்பப் பிரச்சினைகள் வரை சொல்லக் கூடியவர்கள் இங்கே அதிகம். கொட்டிவிடுவார்கள். ‘எல்லா வீட்டுலேயும் அப்படித்தாங்க’ என்று ஆறுதல்படுத்திவிட்டு நம்முடைய பிரச்சினைகளையும் அவர்களிடம் பகிர்ந்துவிட்டு இறங்கும் போதெல்லாம் நம் மனதிலும் பெரும் பாரம் இறங்கியது போலிருக்கும்.
ப்ளா ப்ளா அட்டகாசமான ஆப். இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எந்த ஊருக்குப் போவதாக இருந்தாலும் முயற்சித்துப் பார்த்துவிட்டு ஒத்து வராவிட்டால் பேருந்து பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். சரியான ஆட்கள் கிடைத்தால் பேருந்தைவிடவும் அதிகமாகப் பேச முடிகிறது. கொங்குநாட்டு வரலாறு, திப்புசுல்தான், குடகுநாடு, திருச்செங்கோடு என்று ஏகப்பட்டதைப் பேசித் தள்ளிவிட்டேன். அப்பாடா!
நான்கு பேர்களில் ஒருவர் கைலாசகுமார்- கைலாஷ்குமார்தான். கருணாநிதியின் ஆட்சியின் போது அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்தினார்கள். ஷ்ஷை நீக்கிவிட்டு ‘ச’வாக்கிவிட்டார்கள். கொடுமுடிக்காரர். வண்டி ஏறும் போதே ‘சாயந்திரம் பஸ்ல போலாம்ன்னுதான் நினைச்சேன்..நீங்கன்னு தெரிஞ்ச உடனே லீவ் போட்டுட்டு வந்துட்டேன்’ என்றார். நிசப்தம் படிக்கிறவராம். ‘என்னை ரொம்ப நல்லவன்ன்னு சொல்லிட்டான்’ என்கிற வடிவேலு மனநிலைக்கு வந்துவிட்டேன். மற்றவர்களிடம் ஆளுக்கு முந்நூறு ரூபாய். அவரிடம் கேட்டிருக்கவே கூடாது. தம்பியின் குரூர முகம் நினைவுக்கு வந்தது. இருநூறு ரூபாய் கொடுங்க போதும் என்று வாங்கிக் கொண்டேன்.
10 எதிர் சப்தங்கள்:
அந்த மீதி ரெண்டு பேர் இந்த போஸ்ட்ட படிச்சா.....??!!??🤔🤔
அப்றம் யார்கிட்டயும் பூர்விகம் பூகோளம் உருவி திட்டு ...டு......டு...டூ.......😬😬😬
Asathal.
//என்னையும் சேர்த்து நான்கு பேர்கள்//
வாரத்துக்கு ஆறு பேரு ரெத்தம் கக்கப் போகிறார்கள்.
//அன்பின்மிகுதி காரணமாகவோ என்னவோ பிரேசில்காரிகள் என்னை விடுவதாக இல்லை.//
ப்ளா ப்ளா வுல ஏமாந்துட்டியே தல. வாங்கடி வந்து எங்கூரு கல்யாணத்த பாருங்கடி ன்னு மூணு பிரேசில் காரிகளை காருல கூட்டிட்டு போயிருந்தா கல்யாண ஊடே கள கட்டியிருந்துருக்கும்.
Is it legal to use personal car for paid travel? Please don't get into unnecessary complications in case some bad situation happens.
ஒவ்வொரு வரியும்
வெசம்
வெசம் அம்பூட்டும்
வெசம்.
இப்டியே போய்கிட்டி எங்க நெலெம
என்னாவுறது.
"ப்ளா ப்ளா வுல ஏமாந்துட்டியே தல. வாங்கடி வந்து எங்கூரு கல்யாணத்த பாருங்கடி ன்னு மூணு பிரேசில் காரிகளை காருல கூட்டிட்டு போயிருந்தா கல்யாண ஊடே கள கட்டியிருந்துருக்கும். "
"கரட்டடிபாளையத்தில் கல்யாணம்" னு ஒரு புதிய நாவல் எழுதிடலாம் மிஸ்/மிஸஸ் பிரேசில் அம்மணிகள் உடன்.
நான் உட்பட நேற்று உங்களை சுற்றி மற்றும் சூழ்ந்து கொண்டு பலர் மொய்த்த நிலையில் கூட-கிட்டத்தட்ட உங்கள் சொந்த விருப்பம் போல செயல் பட இயலாத நிலை-இறுக்கமான நாளில் கூட உங்கள் பதிவு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
மணமக்கள்
வாழ்க வளமுடன்
It was wonderful meeting you Mr. Mani. I started following Nisaptham from last Tuesday.
Gruß,
Gopal.
Funny and informative...
Post a Comment