Oct 29, 2017

மூன்றாம் நதி - விமர்சனங்கள்


சிலருக்குத்தான் புத்தகமும் சினிமாவும் ஒன்றாகப் படும். இரண்டுமே கலைதான். படைப்பாளிகளால் உருவாக்கப்படுபவை. அப்படி தங்கள் கற்பனைகளை படைக்கையில் தங்களது அடையாளத்தை ஏதேனும் ஓர் இடத்தில் படைக்க தவறுவதில்லை. அதிலும் சினிமா என்றால் கேட்கவே வேண்டாம். சில இயக்குனர்களின் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஆளுக்கு 10 அடையாளங்களை கூறிவிட முடியும். அதெல்லாம் இப்போதுதான். சினிமாவை பலர் அதிகம் கவனத்துடன் பார்க்க ஆரம்பித்த பிறகுதான். அதற்கு முன்பெல்லாம் சினிமாக்களின் அடையாளம் அதன் நாயகன் மட்டும்தான். "கொட்டாய்ல என்ன படம் ஓடுது?" என்ற கேள்விக்கு " கமல்/இரஜினி படம்" என்றுதான் பதில் கிடைக்கும்.

அந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் தோன்றி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். கே.எஸ்.ரவிக்குமார் (அ) ஃபினிசிங் குமார்தான் இதில் குறிப்பிட வேண்டியவர். இதை ஆரம்பித்தது எனக்கு தெரிந்து ஏ.பி.நாகராஜனாகத்தான் இருக்கும்.திருவிளையாடல்-நக்கீரன், தில்லானா மோகனாம்பாள்-சாமியார் பாத்திரங்கள். கையெடுத்து கும்பிட்டு "என் இனிய தமிழ் மக்களே" என ஆரம்பிப்பது, வள்ளுவர் அமர்ந்த உலகம் சுற்றுகையில் "அகர முதல" வருவது என ஆளுக்கொரு அடையாளங்கள்.

புத்தகங்களில் எடுத்துக் கொண்டால் எழுத்தாளர்களும் தங்களை கதையினூடே எங்கேனும் சொருகி வைத்திருப்பார்கள். சத்தியமாக இது தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து பாத்திரங்களும் எழுத்தாளரின் குரலை பேசுவதற்கு பதில் ஏதேனும் ஓரிடத்தில் வந்து போவது சால சிறந்தது. அதிலும் பல கதைகள் சொந்த அனுபவங்களாக இருக்கையில் தன்னை இணைக்காமல் எழுதுவது அசாத்தியம்தான். அதை முழுமையாக சாத்தியமாக்கும் போதுதான் முழுமையான கதைசொல்லியாக முடியும்.

சில எழுத்தாளர்கள் குறும்புக்காக கூட தங்களை படைப்புகளில் நுழைத்துக் கொள்வதுண்டு. சுஜாதாவின் "காயத்ரி"யில் ஒரு ஒல்லியான உயரமான எழுத்தாளன் என்று தன்னை நுழைத்தது சுஜாதாவின் குறும்புதான். ஏனென்றால் வெறுமனே கனேஷ்-வசந்தை வைத்து கூட இக்கதையை முடித்திருக்க முடியும். அதிலென்ன சுவாரசியம்? அவரது பல கதைகளில் பல இடங்களில் தன் அடையாளத்தை காட்டியிருப்பார். அதிகம் எதிர்மறை பாத்திரங்களில்.

பாலகுமாரன் பற்றி சொல்லவே வேண்டாம். வாழ்க்கையை மனிதர்களை புரிந்து கொண்ட வயதான பாத்திரம் அவரது பல கதைகளில் வந்து அழகாக பேசும். அது பாலகுமாரன்தான். இல்லையென்றால் அவரது அனுபவங்களை நாயகனின் வாழ்க்கையோடு இரசிக்கும்படி இணைத்து விடுவார்.

வா.மணிகண்டனின் "மூன்றாம் நதி" படித்தேன். நிசப்தம் தொடர்ந்து வாசிப்பதால் அந்நியமாக தெரியாத மனிதர். சோனா காலேஜ் சீனியர் என்பதாலே அண்ணன் என்றுதான் மனதில் பதிவானவர். கதையில் ஏதேனும் ஒரு இடத்தில் அவர் வெளிப்பட வேண்டும் என மிகவும் எதிர்பார்த்துக் கொண்டே படித்தேன். போலிஸ் ஸ்டேசனில் சிலிண்டர் திருட்டை புகார் கொடுக்க வரும் இடத்தை மிக இரசித்தேன்.

மேட்டூர் பேருந்து நிலையத்தில் வாசிக்க துவங்கிய புத்தகத்தை பவானிக்கு முன்பே முடித்து விட முடிந்தது. அவ்வளவு வேகமான எழுத்து நடை. ஆற்றுநீர் போல என்பதை விட மாடியிலிருந்து பைப்பில் இறங்கும் நீரை சொல்லலாம். மிக வேகமாக போகிறது. 100 பக்கம் குறைவாக தெரிகிறது. "நகரமயமாக்கல்" அதற்குள் அடங்க கூடிய சமாச்சாரமா?

நானே புத்தகம் வாங்கி தாமதமாகத்தான் படிக்கிறேன். எப்படியும் இப்புத்தகத்தின் அறிமுகம் பலரை ஏற்கனவே சென்று சேர்ந்திருக்கும். யாரெனும் தவறவிட்டிருந்தால் தவறாமல் வாங்கி படியுங்கள். 100₹ தான். எழுத்தாளருக்கு என் வேண்டுகோள் என்னவென்றால் இந்த கதையை இதோடு முடிக்க வேண்டாம். பவானியில் துவங்கி பவித்ராவையும் தாண்டி பயணிக்க வேண்டிய களமிது. அடுத்த உலகப்போர் என்ற ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அந்த உலகப்போர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதை அறியாதவர்கள்...

- கார்ட்டூனிஸ்ட் கதிர்

                                                                                           ****

இந்த உலகம் எளிய மனிதர்களால்தான் சூழ்ந்திருக்கிறது. புழுக்களைப் போட்டு மீன்களைப் பிடிக்கும் தந்திரம் தெரிந்தவனின் கையில் புழுக்களாய் சிக்கிக் கொள்ளும் எளிய மனிதர்கள் இந்த உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். ஒரு கிராமம் நகரமாகவும், ஒரு நகரம் மாநகரமாகவும் மாறிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு இருக்கும் எளிய மனிதர்கள் அல்லது அங்கு வரும் எளிய மனிதர்களின் மனநிலை என்னவாக இருக்கும். அதுவும் பெண்ணாக இருந்தால். அதுதான் பவானி. நாவலின் நாயகி பவானி.

எப்போதோ படித்திருக்கவேண்டிய நாவல். நண்பரின் மூலமாக வாங்கிவரச் சொல்லி அமெரிக்காவின் ஏதொரு மூலையில் ஒரே மூச்சாய் படித்து கண் கலங்கிய நாவல். கிராமத்துப் பெண்களைவிட நகரத்துப் பெண்கள் மிகவும் அழுத்தமான சூழலில் வாழ்கிறார்கள். அதுவும் அன்றாட வாழ்வுக்காகப் போராடும் மனிதர்களின் மனநிலை எத்தனைக் கலங்கியதாக இருக்கும்.. எத்தனை வலிகள் நிறைந்திருக்கும்.. கண்ணீர் படிந்த தலையணைகள் அடுத்த இரவிலும் அவளின் கண்ணீருக்காகவே காத்திருக்கும் போல.. ஒவ்வொரு விடியலும் குழப்பமானதாகவே இருக்கிறது.

பெங்களூர் சாலைகளில் இருந்து எடுத்தெழுத அத்தனை கதைகள் இருக்கிறது. எளிய மனிதர்கள் ஒரு புறம், வளர்ந்துவரும் மென்பொருள் நிறுவனங்கள், நகரத்தை மாற்றும் மேலைநாட்டு மோகம், இதற்கிடையில் எதுவுமே அறியாது குப்பைகளை பொறுக்கிக்கொண்டு இருக்கும் மனிதர்கள். நகரத்தின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் ஒரு நதியாக தொட்டுவிட்டுச் செல்கிறாள் பவானி..

எளிய மனிதர்களைப் பற்றி வெறுமனே எழுதி மட்டும் விட்டுப்போகாமல், கனிந்த நெஞ்சம், திடமான பார்வை, சரியான திட்டமிடல் என்று  நிசப்தம் அறக்கட்டளை வைத்து தன்னால் முடிந்த உதவிகளை முறையாக செய்துவரும் மணிகண்டனை எப்படி பாராட்டாமல் இருப்பது..

லவ் யூ மணிகண்டன்..!

- காளிதாஸ் நடராஜன்

2 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

மூன்றாம் நதி ஆன்லைனில் எப்படிங்க வாங்குவது? ஏற்கனவே சொல்லியிருந்தாலும் சினவயப்படாம இங்கே இன்னொருமுறை சொல்லுங்களேன். நான் கனடா வாசி.

சேக்காளி said...

//கண்ணீர் படிந்த தலையணைகள் அடுத்த இரவிலும் அவளின் கண்ணீருக்காகவே காத்திருக்கும் போல//