Apr 20, 2017

புற்று

புற்று ஒரு புதிரான நோய். ‘ஏன் வந்துச்சு?’ என்ற கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடிவதில்லை. சித்த மருத்துவர்களில் நிறையப் பேர் இந்நோய் வைத்தியத்திற்கு மருந்து வாங்கிக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ‘இது கர்ம நோய்’ என்பார்கள். அலோபதி மருத்துவத்திலும் கூட அறுவை சிகிச்சை, கீமோதரபி, கதிரியக்கம் என்று மூன்று வகைமையில் ஏதோவொன்றைத் நோயின் தன்மைக்கு, அதன் வீரியத்துக்கும் ஏற்ப தேர்ந்தெடுத்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்பார்களே தவிர நோய்க்கான காரணம் என்ன என்பதைச் சொல்வதில்லை. சொல்ல முடிவதில்லை.

சமீபமாக புற்றுநோயின் பரவல் வெகு அதிகம். நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியிருக்கிறது. பெரும் மருத்துவமனைகளில் ‘புற்றுநோய் பிரிவு’ என்று தனியொரு கட்டிடத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். சிகிச்சையின் காரணமாக உடல் வலுவிழந்து முடியை இழந்து கறுப்பேறி தளர்ந்த உடலுடன் இருப்பவர்களைப் பார்க்கவே சகிப்பதில்லை. எப்படியாவது உயிரை இழுத்துப் பிடித்துவிட வேண்டும் என்று மருத்துவ சிகிச்சையின் எல்லாவிதமான சித்ரவதைகளுக்கும் தம் உடலைக் கொடுக்கிறார்கள்.

சில புற்றுநோய்களில் முழுமையாக குணமடைகிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக மார்பகப் புற்றுநோய், ஆரம்பகட்ட இரத்தப் புற்று நோய் போன்றவற்றிலிருந்து தப்பி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சில புற்றுநோய்களுக்கு நாள் குறித்துக் கொடுத்துவிடுகிறார்கள். எவ்வளவுதான் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது வீண். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இத்தகைய புற்று நோய்களுக்கு நடைபெறும் ஆராய்ச்சிகள் அளவுக்கு எல்லாவிதமான புற்றுநோய்களுக்கும் ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பதும் ஒரு காரணம்.

தெரிந்தவர் ஒருவரின் குழந்தைக்கு சமீபத்தில் கால் எலும்பில் புற்றுநோய் வந்திருந்தது. வீக்கம் வந்த பிறகுதான் கவனித்திருக்கிறார்கள். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பரிசோதனை செய்து புற்றுதான் என்பதைக் கண்டறிந்த பிறகு அதிகபட்சம் ஒரு மாதம்தான் என்றும் இனி தேவையில்லாமல் சிகிச்சை என்ற பெயரில் குழந்தையை வதைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். குழந்தை நடிகர் விஜய்யின் ரசிகர். ‘ஒரு முறை விஜய்யை சந்திக்க வைக்க முடியுமா?’ என்றார்கள். பலவிதங்களிலும் முயற்சி செய்து பார்த்தேன். மேலாளர் வரைக்கும் தகவல் சென்றது. ஆனால் சந்திக்க வைக்க முடியவில்லை. ‘இந்த மாதிரி குழந்தைகளைச் சந்தித்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மனம் கொந்தளிப்பாகவே இருப்பதாக’ நடிகர் சொல்வதாகச் சொன்னார்கள். அதுவும் சரிதான். அந்தக் குழந்தையின் நிழற்படத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். கனவில் எல்லாம் அந்தப் படம் வந்து போகிறது.

உலகத்தையே பார்த்திராத அந்தக் குழந்தைக்கு ஏன் எலும்பில் புற்று நோய் வந்தது? மூளையில், தண்டுவடத்தில் என ஏன் கட்டிகள் வந்து ஆளை முடிக்கின்றன? நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் இவ்வளவு புற்று நோயாளிகள் இல்லையே. இப்பொழுது பெருக என்ன காரணம்? சூழல், உணவு, வாழ்க்கை முறை என்று ஏதோவொரு காரணம் நிச்சயமாக பின்னணியில் இருக்கிறது. ஏன் அது குறித்து விரிவான விவாதங்கள் இல்லை? எந்த அரசியல் இத்தகைய விவாதங்களைத் தடுக்கிறது? பல கோடி ரூபாய்க்கு நடைபெறும் மருந்து வணிகம், ஆனாலும் பெரிய விழிப்புணர்வு இல்லை என நாம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது.

Backyard burning என்று சொல்கிறார்கள் அல்லவா? குப்பைகளை எரிப்பது. டயர், ப்ளாஸ்டிக், பாலித்தீன் என எல்லாவற்றையும் போட்டு எரிப்பது கூட புற்று நோய்க்கான முக்கியக் காரணம் என்கிறார்கள். பெங்களூர் மாதிரியான பெருநகரங்களில் பத்து கிலோமீட்டரைக் கடப்பதற்குள் நான்கைந்து முறையாவது இந்தப் புகையை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு பெரிய ஆபத்து இது? இதைப் பற்றிய விழிப்புணர்வு எதுவும் நம்மிடம் இல்லை.

கண்ணுக்குத் தெரிந்த அல்லது தெரியாத பல விஷயங்கள் குறித்தும் ஒரு புரிதல் உண்டாக வேண்டும். புற்றுநோய் என்றால் என்ன? நோய்க்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கக் கூடும்? சிகிச்சை முறைகள் என்ன? என்றெல்லாம் இந்த நோய் குறித்து விரிவாக எழுதுகிற எண்ணம் இருந்தது. ஆனால் இரண்டு காரணங்களினால் தயக்கமும் இருந்தது. முதல் தயக்கம்- இது மருத்துவம், உடலியல் சார்ந்தது. தெரியாத துறை. தவறாக எதையாவது உளறிவிடக் கூடாது என்கிற தயக்கம். இரண்டாவது தயக்கம்- இதில் வெகு ஆழமாக இறங்கிவிடக் கூடாது என்கிற தயக்கம். சில நாட்களுக்கு முன்பாக புற்றுநோய் பற்றி எழுதியிருந்த போது முனைவர் வெங்கடேஷ் தொடர்பு கொண்டார். அப்பாவுக்கு பிரச்சினை என்று எழுதியவுடன் முதலில் தொடர்பு கொண்டு பேசியவர் வெங்கடேஷ்தான். ஹெபாட்டிட்டிஸ், புற்றுநோய் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர். ஜெர்மனியில் ‘யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்ட்டரில்’ ஆராய்ச்சியாளர்.

அவருடன் பேசி, சில மின்னஞ்சல்கள் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். முனைவர் வெங்கடேஷ் கட்டுரைகளுக்கான உள்ளடக்கத்தை ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைத்துவிடுவார். அதை உள்வாங்கி சந்தேகங்கள் இருப்பின் தெளிவடைந்து பிறகு கட்டுரையாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு.

 • கேன்சர் என்றல் என்ன? வகைகள், எப்படி வருகின்றன?
 • மனிதர்களின் மரபுப்பொருள்களின் மாற்றங்களுக்கு காரணம் என்ன?
 • நோய்க்கிருமிகள் மற்றும் சூழல் மாசுக்கள் எப்படி ஜீன்களை பாதிக்கின்றன?
 • புறமரபியல் காரணிகள் எப்படி ஜீன்களை பாதிக்கின்றன?
 • ஏன் பல புற்றுநோய்களுக்கு நிரந்தரத் தீர்வு இல்லை?
 • கேன்சருக்கு நோய் எதிர்ப்பு வேக்சின் மருந்துகள் உண்டா?
 • எத்தகைய கேன்சர்களை குணப்படுத்த இயலும்?
 • மருத்துவ சிகிச்சை உட்கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனைகள்
 • மாற்று மருத்துவ முறைகள் எந்த அளவுக்கு நம்பகமானவை?
 • குருத்து செல்(Stem cell) மாற்று சிகிச்சை முறைகள்
 • ஜீன் தெரப்பி, இம்முன்னோ தெரபி சாத்தியங்கள்
 • அரிதான கேன்சர் வகைகள்
 • புற்றுநோய் எப்படி பரவுகிறது?
 • சிகிச்சையின் பக்கவிளைவுகள்
 • ஜீன்களின் ஆரோக்கியத்தை எப்படி காப்பது, மேம்படுத்துவது?
 • கேன்சருக்கு எதிராக சமுதாயத்தில் நமது பங்களிப்பு
இப்போதைக்கு மேற்சொன்னவற்றை உள்ளடக்கத்தில் கட்டுரைகள் இருக்கும். விரிவாக எழுதும் போதும், கேள்விகள் வரும் போதும் இதன் போக்கும் உள்ளடக்கமும் மாறக் கூடும். அவசரம் எதுவுமில்லாமல், அழுத்தம் எதுவுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அனுப்பி வைக்கட்டும். வெங்கடேஷ் அனுப்பி வைத்த பிறகு அதைக் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எனக்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகக் கூடும். ஆனால் ஒரு சில மாதங்களில் மேற்சொன்ன தலைப்புகளில் விரிவாக எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெங்கடேஷ் முதல் ஒலிப்பதிவை அனுப்பி வைத்துவிட்டார். அதிலிருந்து சில தகவல்களை இந்தக் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன். இனி தொடர்ந்து பேசுவோம்.

9 எதிர் சப்தங்கள்:

Shankari said...

Wonderful initiative. Take your time and post the articles. It will be useful and eye opener for many of us.

Dr Venkatesh hats off to you. In your busy schedule you are planning to send the articles in audio format!

All the best!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முயற்சி.சிறப்பான தொகுப்பாக அமையட்டும்

Ravi said...

Dear Mani, great effort! Actually there are many superb websites with wealth of information and patient experiences present. These are from authoritative sources. You may take a look at them and translate so that many can benefit.

One request - please don't write anything negative. Positive thought is the main requirement to win against cancer. Thanks.

goldenking said...

நல்ல முயற்சி.சிறப்பான தொகுப்பாக அமையட்டும்-வாழ்த்துகள்

Sundar Kannan said...


All the best Mani.

sheik said...

http://m.dinamalar.com/detail.php?id=1753968

ஒரே கிராமத்தில் புற்றுநோய்க்கு 40 பேர் பலி

Saravanan Sekar said...

நல்ல முயற்சி.. புற்று நோயின் விளைவுகள் குறித்து ஓரளவு தெரியும்.. நெருங்கிய உறவினர்களில் இருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டு , ஒருவர் குணமாகி இப்போது நலமாக உள்ளார். ஒருவரை இழந்து விட்டோம்.
இதன் பாதிப்பு, பரவலாக அதிகரித்துள்ளது , குறிப்பாக கொங்கு மண்டலத்தில் - ஈரோடு மாவட்டம் தமிழகத்தின் புற்றுநோய் தலைநகரமாக அறியப்படுமளவுக்கு ஆகிபோனது, நெஞ்சைப் பதற வைக்கிறது
.

உங்களது இந்த புதிய முயற்சி , இந்த பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தின் ஆரம்ப புள்ளியாக அமையும் என்று நம்புகிறேன். பொதுவாக இது போன்ற கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் வெகுஜன மக்களை சென்றடைவதில்லை. தமிழில் இதை தர துணிந்தமைக்கு நன்றிகள் பல. மருத்துவ தகவல்களை தங்களுக்கு கொடுக்கிற ஆராய்ச்சியாள நண்பருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இறையருள் நமக்கு கிடைக்கட்டும்

சேக்காளி said...

Unknown said...

Good effort