Apr 21, 2017

இதுக்குத்தான் இத்தனை அலும்பா?

வெள்ளிக்கிழமை மட்டும் எங்கள் அலுவலகத்தில் ஜீன்ஸ், டீசர்ட் எல்லாம் அணிந்து கொள்ளலாம். முக்கியமாக ஷூ அணிய வேண்டியதில்லை. பெரிய சுதந்திரம் அது. என்னிடம் ஜீன்ஸ் இல்லை. அதனால் அன்றைய தினம் சட்டையை பேண்ட்டுக்குள் செருகாமல் சாவகாசமாக வருவது வழக்கம். ‘இவன் என்ன கோமாளி மாதிரி திரியறான்’ என்று பார்ப்பார்கள்தான். பார்த்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த நான்கு நாட்களாக இரவு நேரப் பணி.  மாலை நான்கு மணிக்கு அலுவலகம் வந்து நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் இருக்க வேண்டும். பிரேசில் நாட்டவர்களுடன் வேலை செய்து கொண்டிருப்பதால் இந்த ஏற்பாடு. வந்தவுடன் தொலைபேசியில் இணைத்துக் கொண்டால் ராவு ராவு என்று ராவுவார்கள். முதல் ஐந்து அல்லது பத்து நிமிடம் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அதன்பிறகு போர்த்துகீசுவில் ஆரம்பித்துவிடுகிறார்கள். எவ்வளவு நேரம்தான் சப்டைட்டில் இல்லாமலே வெளிநாட்டு படம் பார்ப்பது? ‘யோவ்..எங்களுக்கு புரியலைய்யா’ என்று கதறினால் மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவ்வளவுதான் அவர்களின் அதிகபட்ச கருணை. 

பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு நான் கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவேன். கடந்த நான்கு நாட்களாக இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கசமுசா மொழியைக் காதுகளில் நிரப்பிக் கொண்டு போய் படுத்தால் காலை பத்து மணி வரைக்கும் அடித்துப் போட்டது மாதிரி உறக்கம் வருகிறது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக ஒரு கல்லூரிப் பேராசிரியை அழைத்திருந்தார். 

‘எம்.சி.ஏவுக்கு ப்ராஜக்ட் வைவா நடக்குது...நீங்க தேர்வாளராக வர முடியுமா?’ என்றார். ஊருக்குள் ஓர் ஆல்வே அண்ணாசாமி இருந்தால் இப்படியெல்லாம் அழைக்கத்தான் செய்வார்கள்.

‘எப்பங்க?’ என்றேன்.

‘வெள்ளிக்கிழமை’ என்றவர் ‘காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும்’ என்றார்.

‘வியாழக்கிழமை வரைக்கும் நைட் ஷிஃப்ட் மேம்...’ என்று தயங்கினேன். அதுவுமில்லாமல் அங்கே போய் அமர்ந்து தத்தகா பித்தக்கா என்று கேள்வி கேட்டு அவமானப்பட்டுவிடக் கூடாதல்லவா? எம்.சி.ஏவுக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி.

‘பதினோரு பொண்ணுங்கதான் சார்....மத்தியானம் வரைக்கும் இருந்தீங்கன்னா போதும்’ - இரண்டாவது சொல்லை கவனியுங்கள். பெண்கள் கல்லூரி. அதைத் தெரிந்த பிறகும் மறுக்கவா முடியும்? யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கூகிளில் தேடினால் பெங்களூரில் வெகு பிரபலமான கல்லூரி அது. வேணியிடம் சொன்னேன். தலையில் அடித்துக் கொண்டாள். பேராசிரியை அழைத்து வேண்டா வெறுப்பாகச் சொல்வது போல ‘கஷ்டம்தான்..ஆனாலும் வர்றேன்’ என்று சொல்லி வைத்திருந்தேன். கேட்கிற கேள்வி கொஞ்சமாவது அர்த்தமாக இருக்கட்டும் என்று க்ளவுட், பிக் டேட்டா என்றெல்லாம் சில தலைப்புகளையும் புரட்டி வைத்திருந்தேன். 

நேற்று போர்த்துக்கீசிய படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்று உறங்கிய போது இரண்டரை மணி. ஆனால் பாருங்கள்- இன்று காலை ஏழு மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. அத்தனை உற்சாகம். நேற்றிரவே நல்ல சட்டையும் பேண்ட்டையும் எடுத்துத் தரச் சொல்லி வேணியிடம் கேட்டிருந்தேன். அவள் எடுத்து வைத்ததைத் தவிர்த்துவிட்டு பிறவற்றிலிருந்து துழாவி ஒரு துணியை எடுத்து அணிந்து கொண்டேன். முழுக்கை சட்டை, பொருத்தமான பேண்ட், பளிச்சென்று துடைத்து வைத்த ஷூ. வெள்ளிக்கிழமையன்று இதையெல்லாம் நினைத்துக் கூட பார்த்தில்லை.

இரண்டு இட்லிகளை விழுங்கிவிட்டு வெகு நாட்களுக்குப் பிறகாக சீப்பு ஒன்றையும் எடுத்துச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். பிரேமம் படத்தில் வருகிற நகைச்சுவை பேராசிரியர் மனதில் வந்து போனார். அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இப்பொழுது நம்மை சூர்யாவாகவோ ஆர்யாவாகவோ நினைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரிக்கு வழி தெரியாது. ஒவ்வொரு ஆட்டோக்காரராக விசாரித்துபடியே கல்லூரிக்கு முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு பேராசிரியையை அழைத்தேன். 

‘எத்தனை மணிக்கு ஆரம்பம்ன்னு சொன்னீங்க?’என்றேன். 

‘அய்யோ சார்..நான் சொன்னது அடுத்த வாரம்’- பொடனி அடியாக அடித்தது போலிருந்தது. மணி எட்டரை கூட ஆகியிருக்கவில்லை.

‘நேத்து கூட உங்களுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தேனே’

‘சாரி சார்...நான் பார்க்கவே இல்லை’என்றார். 

இதையெல்லாம் புலம்புவதற்கு எனக்கு ஒரு ஜீவன் உண்டு. ‘இதுக்குத்தான் இத்தனை அலும்பு பண்ணிட்டுத் திரிஞ்சீங்களா?’ என்றாள். வீட்டில் அம்மா, மகி என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் பீலா விட்டிருந்தேன். ‘நீங்க இண்டர்வியூ நடத்துவீங்களாப்பா?’ என்று மகி கிளம்பும் போது கேட்டான். வாயைத் திறக்காமல் புன்னகைத்தபடியே பந்தாவாகத் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வண்டியை எடுத்திருந்தேன். போதாக்குறைக்கு ஜீவ கரிகாலனிடம் கூட அழைத்துச் சொல்லியிருந்தேன். இனி வீட்டுக்கும் போக முடியாது. நேராக வண்டியை அலுவலகத்துக்கு விட்டுவிட்டேன். எட்டரை மணி. அலுவலகத்தில் ஒருவரும் இல்லை. எல்லோரும் நம்மை மாதிரியா பொழப்புக் கெட்டுத் திரிவார்கள்?

அதன்பிறகுதான் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். ‘ஓ வாவ்..நேத்து நைட் ஷிஃப்ட் முடிச்சுட்டு இப்பவே வந்துட்டீங்க’ என்றார்கள். 

சின்சியர் சிகாமணியாக முகத்தை வைத்துக் கொண்டு ‘பிரேசில் டிஸ்கஷன்ல பேசினதெல்லாம் ரிவைஸ் பண்ணலாம்ன்னு’ என்றேன். இதையேதான் மேலாளரிடமும் சொல்லி வைத்திருக்கிறேன். கருப்பராயனோ காளியாத்தாவோதான் அவரை நம்ப வைக்க வேண்டும்.

அது பரவாயில்லை. நான்கைந்து பேர் ‘வெள்ளிக்கிழமையதுவுமா என்ன ஃபார்மல்’ என்று கேட்டுவிட்டார்கள். என்ன பதில் சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்று தெரியும். வெறும் புன்னகைதான் பதில். அதே சூர்யாவையும் ஆர்யாவையும் மனதில் வைத்துக் கொண்டு.

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்கும். அதையும் பதிவாக எழுதுகிற வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் நானொரு கஜினி முகம்மது. அடுத்த வாரமும் செல்வேன். ஆனால் கல்லூரியின் பெயரை இப்பொழுதே சொல்லமாட்டேன். ‘இவன் பாருங்க உங்க காலேஜூக்கு எதுக்கு வர்றான்னு’ என்று யாராவது போட்டுக் கொடுத்துவிடுவார்கள். உள்ளே விடாமல் திருப்பி அனுப்பிவிடக் கூடும். அடுத்த வெள்ளிக்கிழமை போய்விட்டு வந்து சொல்கிறேன்.

10 எதிர் சப்தங்கள்:

vv9994013539@gmail.com said...

arumai.

சேக்காளி said...

//அய்யோ சார்..நான் சொன்னது அடுத்த வாரம்’//
சிரிச்சு முடியல மணி.
அப்போ அடுத்த வெள்ளிக்கெழம பதிவுக்கு இதுதான் தலைப்பா?

இரா.கதிர்வேல் said...

சார் மறக்காமல், VIVA ல என்னென்ன கேள்விகள் கேட்டீங்க என்பதையும் சேர்த்து எழுதுங்க. நாலு பேரு தெரிஞ்சு வச்சுக்குவாங்க.

நாடோடிப் பையன் said...

Hilarious entry.

I once booked a nice hotel in Las Vegas and took my wife there. Only to realize that I booked for the following year. We ended up staying in a nasty hotel since there were no rooms available anywhere else.

Unknown said...

உங்க மேல் "ஆளரின்' மெயில் ஐடி கிடைக்குமா!?. அப்புறம் இன்னொரு முக்கியமான கேள்வி அவருக்கு தமிழ் படிக்க தெரியுமா! :-))

Unknown said...

Sema comedy bro😬

Jai said...

அலுவலகத்துல யாரும் எந்த கும்பணி நேர்காணலுக்கு போய்ட்டு வறீங்கனு கேக்கலயா?

Gopinath Jambulingam said...

இண்டர்வ்யூ நல்லவிதமாக முடிஞ்சிருக்கும்னு நம்புறோம், போன வெள்ளிக்கிழமையாவது!

Paramasivam said...

சார், நல்ல நகைச்சுவை ! அடுத்த வாரம் சரியான நேரத்துக்கு, சரியான கல்லூரிக்கு சென்று, எளிதான கேள்விகளுடன் வைவாயை முடித்துக் கொள்ளுங்கள்.

Aravind said...

super sir. சுரா வடிவேலு காமெடிக்கு direct opposit காமெடி.