ஒழலக்கோயில் பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி பசுமை மீட்பு பணியைத் தொடங்கியிருக்கிறோம். உள்ளூரில் நேர்த்தியாக ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்கள். கோவில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வரிசையாக நாற்காலிகள் போட்டு, கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் தயார் செய்து, ஒலி பெருக்கி அமைத்து, மிட்டாய்களும் வாங்கி வைத்திருந்தார்கள். திருவிழா போலிருந்தது.
நீதிபதி பழனிவேல் அவர்கள் எந்திரத்தைத் தொடங்கி வைத்தார். உறுமியபடி அது ஓடத் துவங்கியிருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் திரளாக வந்திருந்தார்கள்.
இந்த வாரம் எனக்கு ஓய்வே இல்லை. வியாழக்கிழமை இரவு பெங்களூரிலிருந்து வேமாண்டம்பாளையம், வெள்ளிக்கிழமை இரவு அங்கிருந்து சென்னை, சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து ஒழலக்கோயில் என்று நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக மூன்று இரவுப் பயணம். கண்கள் களைத்திருக்கின்றனதான். ஆனால் இப்படியான பணிகளுக்கு எவ்வளவு அலைந்தாலும் சலிக்கவே சலிக்காது. ஞாயிறு மதியம் ஊரிலிருந்து கிளம்பி வந்து பெங்களூரில் இதை உற்சாகமாகத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.
செய்கிற வேலையில் திருப்தியிருந்தால் களைப்பு எதுவும் செய்துவிடாது. அவ்வளவு திருப்தி இன்று.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஓர் ஆசிரியை ஜூஸ் கொடுத்தார். ஒரு சிறுமி இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார். சிலர் குப்பைகளை அள்ளி ஓரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் தம் வீட்டு வேலையைப் போல இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். பிறகு ஏன் திருப்தி உண்டாகாது? உள்ளூரில் இதே உற்சாகமும் வேகமும் குன்றாமல் இருக்குமாயின் இந்தப் பஞ்சாயத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணி அற்புதமான விளைவுகளை உண்டாக்கும்.
ஏற்கனவே எழுதியிருந்தது போல இது வெறும் ஒரு நாள் விளம்பரச் செயல்பாடு இல்லை. புதர்களை நீக்கி, நீர் நிலைகளை மேம்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு என நீண்டகாலத் திட்டமிருக்கிறது. ஆயிரமாண்டு வரலாறு கொண்ட ஊர் ஒழலக்கோயிலும் அக்கம்பக்கத்து ஊர்களும். நாற்பதாண்டுகளுக்கு முன்பு வரை கூட சிறப்பாக விவசாயம் நடைபெற்றிருக்கிறது. இப்பொழுதுதான் வறண்டு மருதமும் முல்லையும் திரிந்து வெறும் பாலையாகிக் கிடக்கிறது. இழந்த பசுமையை மீட்டெடுக்க இருபதாண்டு காலம் கூட பிடிக்கலாம். ஆனால் மீட்கவே முடியாது என்றில்லை என்றுதான் தோன்றுகிறது. இன்று அதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். தொடர்ந்து செயல்பட வேண்டியதுதான்.
அரசு அதிகாரிகள், உள்ளூர் பெரியவர்கள், இளைஞர்கள் என்று ஆதரவிருக்கிறது. அதனால் நம்பிக்கையும் இருக்கிறது.
வேமாண்டம்பாளையத்தில் நிறையக் கற்றுக் கொண்டோம். அங்கேயிருந்த குறைகள் பெரும்பாலானவற்றை இங்கே களைந்திருக்கிறோம். இங்கே கற்றுக் கொள்ளும் குறைகளை அடுத்த பணியின் போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.
பேச வாய்ப்புக் கிடைத்தது. அதன் காணொளி இது. (Google Chrome இல் திறக்கும்)
எழுதவும் நிறைய இருக்கிறது. எழுதுகிறேன்.
2 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள் மணி அண்ணா,
செய்யும் பணி இனிதாய் நிறைவேறட்டும்.
இந்த பணிக்கு எதாவது உதவி தேவைப்பட்டால் செய்ய காத்துஇருக்கிறோம்.
வெற்றி தான்.
Post a Comment