Apr 18, 2017

சின்ன சிவாஜிகள்

சனிக்கிழமையன்று சென்னை ஏ.வி.எம் டப்பிங் தியேட்டரில் இருந்தேன். உலக உருண்டை சுற்றிக் கொண்டிருக்கும் அந்த நுழைவாயிலைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோவொரு படத்தில் ரஜினியை வாயில் காவலர் துரத்திவிடுகிற காட்சிதான் நினைவுக்கு வரும். உள்ளே நுழையும் போது என்னையும் யாராவது ஒரு காவலர் துரத்திவிட்டால் அண்ணாமலை ரஜினி மாதிரி தொடையைத் தட்டி சவால் விடலாம் என்று நினைத்திருந்தேன். காவலர் அறை குப்பை படிந்து கிடந்தது. இப்பொழுதெல்லாம் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் போலிருக்கிறது. எதற்கும் இருக்கட்டும் என்று இருக்கன் குடி மாரியம்மனை ஒரு முறை வேண்டிக் கொண்டு காலை எடுத்து வைத்தேன்.

சினிமாக்காரர்களுடன் இருக்கும் போது கிசுகிசுக்கள் நிறையக் கிடைக்கும். யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்து வாயைப் பிளக்கலாம். ‘அவன் எப்படி சார் ஜெயிச்சான்?’ என்று கேட்டு வாயைப் பிடுங்கலாம். பலவற்றை எழுத முடியாது. எல்லாவற்றையும் காதில் வாங்கி வைத்துக் கொள்வேன். நமக்கு சுவாரஸியம் முக்கியம் அல்லவா?

அப்பொழுதுதான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் அப்படி நடித்தால் அது நயன் தாராவோடு என்று பேசியதாக ஒரு செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அதை ஃபேஸ்புக்கிலும் ஆளாளுக்கு கலாய்த்துக் கொண்டுமிருந்தார்கள். சினிமாவில் உருவம் பெரிய அம்சமே இல்லை. விஜய், தனுஷ் போன்றவர்கள் திரைத்துறைக்குள் நுழைந்த போது ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என்றுதான் பேசினார்கள். இன்றைக்கு அவர்களைத் தவிர்த்துவிட்டு திரைத்துறையின் வரலாறை எழுத முடியுமா? 

திரைத்துறையில் அழகெல்லாம் பொருட்டே இல்லை. வாய்ப்புதான் முக்கியம். பணம் வைத்திருப்பவர்கள், வாரிசுகள் உள்ளிட்டவர்கள் எளிதாக உள்ளே தலையை நீட்டி விடுகிறார்கள். அதில் திறமையும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தம் கட்டி மேலே வந்துவிடுகிறார்கள். இந்தத் துறையில் இருப்பவர்கள் யாரிடம் பேசினாலும் 'attitude முக்கியம்’ என்பார்கள். தலைக்கனம், தெனாவெட்டு என்பதெல்லாம் ஒரு கட்டத்திற்கு பிறகு வர வேண்டியவை. எடுத்தவுடனேயே இதையெல்லாம் கடை பரப்பினால் தூக்கிக் கடாசி விடும். சரவணா ஸ்டோர்ஸ்காரர் பணக்காரர் என்பதால் நமக்குத் தெரிகிறது. எத்தனை பேர் சொத்தை அழித்துக் கொண்டு பணத்தை எடுத்து வந்து காணாமல் போயிருக்கிறார்கள்?

எங்கள் ஊரில் ஒருவர் இருந்தார். பைக்கில், காரில், வீட்டின் முன்புறத்தில் என திரும்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் பெயரை பொறித்து வைத்திருப்பார். கையில் SIVAJI என்று பச்சை குத்தியிருந்தார். அவருக்கு சினிமாதான் ஆசை. அப்பொழுது எங்கள் ஊரில் நிறைய ஷுட்டிங் நடக்கும். ஒவ்வொரு படப்பிடிப்பையும் பார்த்து அங்கேயிருக்கும் எல்லோரிடமும் பேச்சுக் கொடுப்பதுதான் வாடிக்கை. இந்த உலகம்தான் பெரிய தூண்டில் ஆயிற்றே? ஓர் உதவி இயக்குநர் இவரிடம் வந்து ‘சார் ஒரு கதை சொல்லுறேன்’ என்று சொல்லவும் இவர் கேட்டிருக்கிறார். கதையில் இவர்தான் நாயகன். கிட்டத்தட்ட உயரமான ஓமக்குச்சி நரசிம்மன் போலிருப்பார். சற்றே சதை பிடித்தாற்போல இருந்தாலும் அதே சொட்டை அதே முக அமைப்பு. நாயகியாக அந்தச் சமயத்தில் அங்கேயிருந்த ஆம்னியை முடிவு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தார்.

சின்ன சிவாஜி தனது அப்பன் சம்பாதித்து வைத்திருந்த தோட்டங்காட்டையெல்லாம் விற்று பணம் சேர்த்து சென்னைக்குச் சென்றார். அப்பொழுது அரசுத்துறையில் வேலையிலும் இருந்தார். பணம் இருக்கும் வரைக்கும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. டிஜிட்டல் வராத காலம். எடுத்து முடித்த வரைக்கும் படத்தை பெட்டியில் மூடி வைத்திருந்தார். எப்பொழுது பேசினாலும் ‘கொஞ்சம் பணம் தேவை..இருந்தா ரிலீஸ் செஞ்சுடலாம்’ என்பார். காரை விற்று, வீட்டை விற்று என எல்லாவற்றையும் விற்றும் எதுவும் செய்ய இயலவில்லை. இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் இருக்கும். இடையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வழக்கைச் சந்தித்து என காலம் ஓடிக் கொண்டேயிருந்தது. 

பல வருடங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போதுதான் அவரைத் தெரியும். ஒரு சீட்டு நடத்துவதாகவும் அப்பா அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரினார். அப்பொழுதுதான் இந்த விவரங்களை எல்லாம் பேசினார். ‘டோப்பா வெச்சுட்டேன்...கேமிரா மேன் நம்ம பையன்தான்..அழகா காமிச்சுடுவான்’ அப்பாவுக்கு அதெல்லாம் புரியவில்லை. சிரித்தார். ஆனால் சீட்டில் இணைய முடியாது என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகு இந்த சின்ன சிவாஜியை அடிக்கடி சாலைகளில் பார்ப்பதுண்டு. சமீபத்தில் பார்த்த போது ‘இப்போ எல்லாம் டிஜிட்டல் வந்துடுச்சு...ஈஸி..கொஞ்சம் பணம் சேர்த்துட்டு டிஜிட்டலா மாத்தி ரிலீஸ் செஞ்சுடலாம்ன்னு இருக்கேன்’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது; ஆம்னி என்ன ஆனார் என்பதும் தெரியாது. கிட்டத்தட்ட இவரது வாழ்க்கையே முடிந்துவிட்டது. இன்னமும் அந்த ஒற்றைப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். 

சினிமா பற்றித் தெரியாமல், அதன் ஆழ அகலத்தைப் புரிந்து கொள்ளாமல், தன் திறமையைத் துல்லியமாக எடை போடாமல் மூழ்கிப் போன பல்லாயிரம் பேர்களில் அவரும் ஒருவர். பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

டப்பிங் தியேட்டரில் உருவம் பற்றிய பேச்சு வந்தது. டப்பிங் தியேட்டர் பணியாளர் ஒருவர் யோகிபாபு பற்றி பேசத் தொடங்கினார். நடிக்க வந்த புதிதில் மிதிவண்டியில் டப்பிங்குக்கு வருவாராம். பிறகு பைக்கில் வந்திருக்கிறார். அதன் பிறகு ஸ்விஃப்ட். இன்றைக்கு இன்னோவா காரில் வருகிறார் என்றார். அவர் திரைத்துறைக்கு வந்து அதிகபட்சமாக பத்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். கடகடவென உயரத்திற்குச் சென்றுவிட்டார். ஆளைப் பிடிப்பதே சிரமம் என்கிறார்கள். நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். நன்றாக இருக்கட்டும். வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து எழுந்து வரும் அத்தகைய மனிதர்கள் உச்சத்தை தொடுவதில் தவறேதுமில்லை. எதற்காக யோகிபாபு பற்றிச் சொல்கிறேன் என்றால் எந்த உருவத்தை பழிக்கிறோமோ, எந்த நிறத்தை மட்டமாகப் பார்க்கிறோமோ அதே உருவமும் நிறமும்தான் அவருக்கு மூலதனம். 

சினிமா என்றில்லை- பொதுவாகவே மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் நம்மிடம் இருக்கும். அதைக் கண்டறிவதில்தான் வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரமே அடங்கியிருக்கிறது. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் தனித்துவத்தைக் கண்டறிகிறவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகிறார்கள். அப்படி கண்டடைய முயலாதவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

4 எதிர் சப்தங்கள்:

Ponchandar said...

"தனித்துவத்தைக் கண்டறிகிறவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகிறார்கள். அப்படி கண்டடைய முயலாதவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார்கள்." ---- முற்றிலும் உண்மை....

சேக்காளி said...

//பொதுவாகவே மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்துவம் நம்மிடம் இருக்கும்.//
சேக்காளியின் மனக்குரல்:
வேண்டாம்டா சேக்காளி.நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.அமைதியாவே இருந்துரு.உன் நல்லதுக்குத்தான் சொல்லுதேன்.

ADMIN said...

தனித்தன்மை - ம்ம்.. சரிதான்.

Prakash said...

‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ - என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். முகம் பார்த்து ஒருவரை அழகில்லை என்று பொது வெளியில் எப்படி நம்மால் இவ்வளவு எளிதாக பேசி விட முடிகிறது. அப்படிப் பேசும் நம்மில் எத்துனை பேர் அதே அழகுடன் இருக்கிறோம்?