Mar 27, 2017

எழுத்தாளன் - சமூகம்

வணக்கம்,

கலைஞனை இந்தச் சமூகம் கண்டு கொள்வதில்லையென்றும் வறுமையை பரிசளிக்கிறது என்றும் நடைபெறுகிற விவாதங்களில் உங்களின் நிலைப்பாடு என்ன? பதில் சொல்லியே தீர வேண்டும் என்கிற அவசியமில்லை. கேட்க வேண்டும் என்று தோன்றியது.

செந்தில்.


வணக்கம்.

கருத்துச் சொல்லி என்னவாகப் போகிறது? 

இவையெல்லாம் எந்தவிதமான மாறுதலையும் எந்தக் காலத்திலும் உண்டாக்காத புலம்பல்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எழுத்தாளனை மட்டுமில்லை - இந்தச் சமூகம் யாரையுமே தாங்கிப் பிடிக்காது. கொடி கட்டிய சினிமா நடிகர்களில் எத்தனை பேர் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்? எத்தனை நாட்டுப்புறக் கலைஞர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? இசைக்கலைஞர்கள் எல்லோருமே கோடிகளில் புரள்கிறார்களா? லட்சங்களில் கொழித்த தொழிலதிபர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்? இதுதான் நிதர்சனம். எழுத்தாளன் என்றில்லை- யாரையும் யாரும் தாங்கிப் பிடிக்க மாட்டார்கள். அவனவனின் விவரம்தான் அவனவனைக் காக்கும்.

வாழும் போதே விவரமாகச் சம்பாதித்து குடும்பத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டால் பலவான். இல்லையென்றால் நாய் பிழைப்புதான்.

எல்லாக்காலத்திலும் தம்மை சரியான இடத்தில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்கிறவர்கள் வக்கனையாக பேசிக் கொண்டிருக்கலாம். இதையெல்லாம் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிற இனாவானாக்கள் நாசமாகப் போக வேண்டியதுதான்.

நம்மை, நம் குடும்பத்தை, நம் பிள்ளைகளை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்- அது எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் அடிப்படையான நியதி.

செந்தில்,

இவற்றையெல்லாம் பேசியும் விவாதித்தும் எந்தப் பலனுமில்லை. பேசிவிட்டுச் சென்று இன்னொரு எழுத்தாளனைத் தாங்கிப் பிடிக்கவா போகிறார்கள்? அதெல்லாம் நடக்காது. நாளை இன்னொரு கலைஞன் செத்தாலும் இம்மி பிசகாமல் இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம். இதைப் போன்ற விவாதங்கள் நேரத்தை ஓட்டுவதற்கான நல்ல உபாயம். ஒரு சொல்வழக்கு உண்டு- கை நிறைய வேலையை வைத்துக் கொண்டால் வாய் நிறைய சொற்களை மென்று துப்பிக் கொண்டிருப்பவர்களைக் கண்டுகொள்ள நேரமிருக்காது என்று.

பேசுகிறவர்கள் பேசட்டும். ஒதுங்கிக் கொள்வதில் தவறேதுமில்லையே!

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//கை நிறைய வேலையை வைத்துக் கொண்டால் வாய் நிறைய சொற்களை மென்று துப்பிக் கொண்டிருப்பவர்களைக் கண்டுகொள்ள நேரமிருக்காது//