ஒரு நாள் கடும் மழை. பிரிகேட் சாலையிலிருந்து பேருந்து பிடித்து கூட்லு கேட்டில் இறங்கினால் நடக்கவே முடியவில்லை. ஆட்டோ பிடித்தால் அரைகிலோமீட்டருக்கு ஐம்பது ரூபாயாவது கேட்பார்கள். மழை நிற்கும் வரைக்கும் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று பிராந்திக் கடையோரமாக நின்றேன். அந்த இடத்தைப் பற்றித் தெரியும். கடையை ஒட்டியபடி சற்றே அகலமான சந்து அது. வாகனப் போக்குவரத்து இருக்காது. சந்தில் நுழைந்தவுடன் இடது பக்கமாக குடிசை மாதிரி இருக்கும். ஏழெட்டு திருநங்கைகளாவது வசிக்கக் கூடும். அந்தி சாய்ந்த பொழுதுகளில் சாலையில் நின்று சைகை செய்வார்கள்.
பொதுவாக ஹைதராபாத்தை போல பெங்களூரில் திருநங்கைகள் மிரட்ட மாட்டார்கள். ஹைதராபாத் கொடுமை. சபரி எக்ஸ்ப்ரஸில் செல்லும் போது செகந்திராபாத்துக்கு முன்பாகவே வண்டியில் ஏறிக் கொள்வார்கள். பணம் கொடுக்கவில்லையென்றால் அவ்வளவுதான். புடவையைத் தூக்கிக் காட்ட யோசிக்கவே மாட்டார்கள். பெங்களூரில் சற்றே மென்மையாக நடந்து கொள்வார்கள். இந்த ஊரில்தான் கிட்டத்தட்ட அத்தனை விளிம்பு நிலை மக்களும் தமிழர்கள்தானே? திருநங்கைகளிலும் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான்.
சிக்னல்களில் வந்து கை தட்டும் போது ‘சில்லரை இல்லைங்க’ என்றால் நகர்ந்துவிடுவார்கள். கொடுத்தால் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துச் செல்வார்கள்.
மழை பெய்து கொண்டிருந்த அன்றைய தினம் அதே பிராந்திக்கடைக்கு முன்பாக இரண்டொரு திருநங்கைகள் நின்றிருந்தார்கள். மழையில் அவர்களது மேக்கப் கலைந்திருந்தது அல்லது வெகு நேரம் ஆகியிருந்தது காரணமாக இருக்கக் கூடும்.
‘வர்றியா?’ என்றார் அதில் ஒருவர். எப்படி மறுப்பது என்று யோசித்திருக்கவில்லை.
‘பொண்டாட்டி பாவம்’ என்றேன். இப்படியேதான் சொன்னேன். சட்டென்று அவருக்கு புரியவில்லை. ஒரு கணம் திடுக்கிட்டவர் ‘ஓ’ என்று சிரித்தார். அதன் பிறகு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்- வாடிக்கையாளன் வரும் வரைக்கும். மறுநாள் அதே இடத்தைக் கடக்கும் போது வேணியிடம் இதைச் சொன்னேன். ‘நீ பாவம்ன்னு சொன்ன உடனே அந்த பொண்ணு கொஞ்சம் மெல்ட் ஆன மாதிரி தெரிஞ்சுது’ என்றேன். அவள் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. எனக்குத்தான் மனதுக்குள் ஏதோ பெரிய இவன் போன்ற நினைப்பு வந்து அமர்ந்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமையன்று திருநங்கைகளுக்கான ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள். பேகூரில் ஒரு திருமண அரங்கில்தான் நிகழ்ச்சி. நாற்பதிலிருந்து ஐம்பது திருநங்கைகள் கலந்து கொண்டார்கள். நண்பர்கள் சிலர்தான் இந்நிகழ்வை முன்னெடுத்தார்கள். திருநங்கைகளுக்காக எந்தத் துரும்பையும் நான் எடுத்துப் போட்டதில்லை. பொதுப்பார்வையிலிருந்து ‘ச்சே பாவம்’ என்றோ கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல பெங்களூரில் தேவலாம்; ஹைதராபாத்தில்தான் மோசம் என்றோ பொதுப்படையாக எழுதியும் பேசுகிற அளவுக்கும்தான் அவர்களுடனான எனது தொடர்பு.
நிகழ்வில் அரை மணி நேரம் பேசச் சொன்னார்கள். என்ன பேசினேன் என்பது இரண்டாம்பட்சம். கருத்தரங்குக்கு கூட்லுகேட் திருநங்கைகளும் வந்திருந்தார்கள்.
பார்வையாளர்களில் சிலர் எழுந்து தமது கதைகளைச் சொன்னார்கள். கிட்டத்தட்ட அத்தனை பேருமே வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். பாலியல் அறுவை சிகிச்சையைச் செய்திருக்கிறார்கள். பகலில் பிச்சையெடுக்கிறார்கள். மாலையில் பாலியல் வணிகத்தில் ஈடுபடுகிறார்கள். வரிசைக்கிரமமாகச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் சலிக்கத் தொடங்கியிருந்தது. அவர்கள் தமது துன்பங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நம்மைச் சலிப்புறச் செய்கிறதென்றால் மனம் மரத்துப் போயிருக்க வேண்டும். இல்லையா? அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.
ஒன்றிரண்டு அலைபேசி அழைப்புகள் வந்தன. துண்டித்துக் கொண்டிருந்தேன்.
எல்லோரும் பேசி முடித்த பிறகு நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி பேசுவார் என்று என்னை அழைத்தார்கள். கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதைப் பற்றிப் பேசினேன். யாராவது உதவி கேட்கக் கூடும் என்று எண்ணமில்லாமல் இல்லை. ஏற்பாட்டாளர்களின் நோக்கமும் கூட அதுதான். ஆனால் கூட்டத்தில் யாருமே வாயே திறக்கவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இருபது நிமிடங்கள் வரைக்கும் பேசியிருப்பேன். பேசி முடித்த பிறகு கை தட்டியபடியே எழுந்து வந்த ஒரு திருநங்கை ஐநூறு ரூபாயைக் கொடுத்தார். அதோடு நில்லாமல் ‘நாம இவங்களுக்குக் கொடுத்து உதவணும்’ என்று கன்னடத்திலும் தமிழிலும் பேசினார். கூட்டத்திலிருந்து நிறையப் பேர் எழுந்தார்கள்.
‘ஒரு நிமிஷம் உட்காருங்க’ என்றேன். அமர்ந்தார்கள்.
‘நன்கொடை கொடுக்கிறவர்கள் எல்லோருமே கஷ்டப்பட்டுத்தான் கொடுக்கிறார்கள். நீங்க மட்டும் கஷ்டப்படுறீங்க என்று சொல்லி மறுக்கவில்லை. உங்களிடம் என்றில்லை யாரிடமும் வேண்டாம் என்று சொல்வது சரியாக இருக்காது. உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்..ஆனால் இப்பொழுது வேண்டாம்’ என்றேன். அவர்களுக்கு புரிந்திருக்கக் கூடும். பதில் எதுவும் சொல்லவில்லை.
‘உங்களில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைப்படும் அல்லவா? நீங்கள் இப்பொழுது தர விரும்பும் தொகையை அவருக்குக் கொடுத்துவிடலாம்’ என்றேன். அவர்களில் ஒரு திருநங்கைக்கு புற்றுநோய். ஏற்கனவே மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டத்திலிருந்தவர்களில் ஒருவர்தான் விவரத்தைச் சொன்னார். நோய்மையுடையவரும் கூட்டத்தில்தான் இருந்தார். அவருக்கு நாற்பதைத் தாண்டிய வயதிருக்கும். எழுந்து வந்தார்.
மைக்கை பிடித்தவர் ‘என்ன சொல்லுறதுன்னு தெரியல...கஷ்டப்பட்டு வாழ்ந்து துன்பத்தை அனுபவிக்கிறதுக்கு பதிலா நானெல்லாம் சீக்கிரம் செத்துடறதுதான் நல்லது..செத்துட்டா ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். தனக்கென்று யாருமே இல்லாதது குறித்தும் அவர் பேசினார். அவர் பேசப் பேச அங்கே சிலர் அழத் தொடங்கிவிட்டார்கள்.
நிகழ்வை நடத்தியவர் ‘உங்களுக்கு நாங்க எல்லாம் இருக்கோம்..அப்படியெல்லாம் சொல்லாதீங்க’ என்றார். அந்தத் திருநங்கை சிரித்தார்.
என்னைப் பார்த்து ‘நீங்க சொன்னீங்க இல்ல தம்பி...குழந்தைகள், குழந்தைகளைப் பெத்தவங்க...அவங்களைக் காப்பாத்துங்க...எனக்கு சத்ய சாயி ஆஸ்பத்திரி மாதிரி எங்கேயாச்சும் இலவச சிகிச்சை செய்வாங்க...தப்பிச்சா பார்க்கலாம்..தப்பிச்சா மட்டும் போதுமா தம்பி? கடைசி வரைக்கும் சாப்பிடறதுக்கு வழி வேணும்ல..இல்லன்னா இவங்களையெல்லாம்தான் கஷ்டப்படுத்தணும்’ என்று மற்றவர்களைக் கைகாட்டினார்.
பணத்தை யாரும் வசூலிக்கவேயில்லை. அவரவருக்கும் தங்களைப் பற்றிய கவலை வந்தது போல அமைதியாக இருந்தார்கள். பொதுவாகவே நாம் அத்தனை பேரும் வலி இல்லாதது போல நடித்துக் கொண்டிருக்கிறோம். ‘நம்ம கவலை நம்மோடு இருக்கட்டும்’ என்றோ ‘துன்பப்படுகிறேன்’ என்று சொல்வது அவமானம் என்றோ கருதிக் கொள்கிறோம். அருகாமையில் இருக்கும் ஒருவர் உடையத் தொடங்கும் போதுதான் நம்மையுமறியாமல் உடைந்து நொறுங்கத் தொடங்குகிறோம். பயம் கவ்வத் தொடங்குகிறது. உலகின் இருண்ட பக்கங்கள் நம்மை மிரட்டத் தொடங்குகின்றன.
பேசியவர் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து அழத் தொடங்கியிருந்தார். அருகில் சென்று அமர்ந்து எனது அலைபேசி எண்ணைக் கொடுத்தேன். ‘எப்பவாச்சும் உதவி வேணும்ன்னா கூப்பிடுங்க’ என்றேன். தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். கட்டைக்குரலில் ‘இல்ல தம்பி...எப்பவுமே கேட்க மாட்டேன்..வாழ்ந்தா அர்த்தமிருக்குதுன்னு நினைக்கறவங்களுக்கு கொடுங்க..எனக்கு எதுக்கு?’ என்றார். அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய அருகில் வந்த இன்னொரு திருநங்கை அவரை அழைத்தார். எழுந்தார். மீண்டுமொருமுறை தலை மீது கை வைத்து ‘நல்லா இரு’ என்றார். இப்பொழுது எனக்கு அழுகை வந்திருந்தது. காட்டிக் கொள்ளவில்லை.
6 எதிர் சப்தங்கள்:
உமத ன்பால், 'எல்லாமே நல்லா யிரும். நீரும் மக்க ளோடு
'நல்லா இரும்'
வலி...வேறொரு சொல் புலப்படவில்லைங்க மணி சார் !!
இவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் படி, படித்த படிப்புக்கு ஏற்ற, வேலை கிடைக்க யாருமே முன் வராத நிலை வருத்தமாக உள்ளது.
நான் திருநங்கையைப் பற்றி எழுதிய கவிதையை படித்து விட்டு திருநெல்வேலியில் இருந்து தொலைபேசினார் ஒருவர். தான் எம்.பி.ஏ.படித்து வருவதாகவும் தான் ஒரு திருநங்கை என்று உணர்வாதாகவும் வீட்டுக்கு இன்னும் தெரியாது என்றும் படிப்பை முடித்து விட்டு ஆபரேஷன் செய்து கொள்ளப் போகிறேன் என்றும் கூறினார்.சென்னைக்கு வரப் போகிறேன். எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா கேட்டார். எனக்கு அப்போது உங்கள் நினைவுதான் வந்தது உதவி கேட்பதற்கு. அதன்பின் அவர் தொடர்பு கொள்ளவில்லை. நானும் மறந்து விட்டேன்.திருநங்கைகள் பற்றிய கட்டுரைகள் செய்திகளை தேடிப் படிப்பது தனது வழக்கம் என்று கூறினார். அவரது நோக்கம் புரிந்தது.
// தனக்கென்று யாருமே இல்லாதது குறித்தும் அவர் பேசினார்//
ஆனால் அவர்களை உங்களுக்கானவர்களாக மாற்றி விட்டீர்கள் என்பதை தலை மீது கை வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
//இல்லன்னா இவங்களையெல்லாம்தான் கஷ்டப்படுத்தணும்’//
இவற்றையெல்லாம் எவ்வளவு எளிதாக கடந்து வந்திருக்கிறோம் இல்ல??
Post a Comment