இரண்டு அதிமுகக்காரர்கள் ஒரு சிக்கலில் மாட்டியிருந்த போது பெங்களூரில் அடைக்கலம் ஆகியிருந்தார்கள் என்று எழுதியிருந்தேன் அல்லவா?. அது சில வருடங்களுக்கு முன்பு நடந்தது. அதில் ஒருவர் எம்.எல்.ஏ கூட ஆகிவிட்டார். இந்த முறையும் அப்படியொரு சம்பவம். ஆனால் கட்சிதான் மாறிவிட்டது. திமுக. இரண்டு பேர் வந்திருந்தார்கள். சமீபத்தில் சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிந்த போது பல ஊர்களிலும் சாலை மறியல் நடைபெற்றதல்லவா? அப்படியொரு போராட்டம். அதோடு நில்லாமல் அந்தத் தொகுதியில் இருக்கும் அதிமுகவின் முக்கியப் பிரமுகரின் அலுவலகத்தில் யாரோ சிலர் கல்லால் அடித்து கண்ணாடியை உடைத்துவிட்டார்கள். காவலர்களுக்கு குழப்பம்- அடித்தது ஓபிஎஸ் அணியா அல்லது திமுகவா என்று.
முக்கியப் பிரமுகர் சென்னையிலிருந்து அழைத்திருக்கிறார். ‘என் ஆபிஸ்லேயே அடிக்கிறானுகளா?’ என்று வழக்கை இரண்டு திமுகக்காரர்கள் மீது பதியச் சொல்லிவிட்டார். காவலர்கள் எப்.ஐ.ஆர் எழுதும் போது ‘யாரென்று தெரியாத ஆனால் பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய இரண்டு பேர்’ என்று எழுதிவிட்டார்கள். போச்சா? இப்படி எழுதினால் யாரை வேண்டுமானாலும் சிக்க வைத்துக் கொள்ளலாம் அல்லவா? உள்ளூர் பொறுப்பில் இருக்கும் இரண்டு திமுகவினரை அழைத்து ‘உங்க ரெண்டு பேரையும்தான் கோர்த்துவிடப் போகிறார்கள்’ என்று சொல்லவும் இருவரும் பெங்களூரு வந்து இறங்கிவிட்டார்கள்.
‘ரெண்டு நாள் தலைமறைவா இருங்க...ஹைகோர்ட்டில் பெயில் வாங்கிடலாம்’ என்று சொல்லித்தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவர்களும் புதன்கிழமையன்று ஊருக்குச் சென்றுவிடலாம் என்ற கனவில் இருந்தார்கள். பெயில் ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கக் கூடிய வஸ்து இல்லை. ஞாயிற்றுக்கிழமையன்று ஓடி வருகிறார்கள். திங்கட்கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். ஐந்து நாட்கள் கழித்துத்தான் விசாரணைக்கே வருகிறது. இடையில் சனி, ஞாயிறு என்பதால் அடுத்த திங்கட்கிழமைதான் விசாரணை. காவல்துறையினர் இரண்டு முறை வாய்தா கேட்டால் சோலி சுத்தம். புதன்கிழமை பிறகு வியாழக்கிழமை என்று நகர்ந்து வெள்ளிக்கிழமையன்றுதான் பெயில் கிடைக்கிறது. இதிலேயே பதினைந்து நாட்கள் கழிந்ததா? இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று பெயில் கிடைத்தாலும் கையில் உத்தரவு கிடைக்க அடுத்த திங்கட்கிழமையாகிவிடுகிறது. இத்தனை நாட்களும் ஒளிந்துதான் வாழ வேண்டும்.
திமுகவின் வழக்கறிஞர் அணிதான் பெயில் வாங்குகிற ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வழக்கறிஞர் சிவ ஜெயராஜனை அழைத்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் தினசரி அழைத்துக் கொண்டிருந்தார். ‘அவங்களை தைரியமா இருக்கச் சொல்லுங்க..தேடிட்டு எல்லாம் வர மாட்டாங்க’ என்று தைரியமூட்டுவார். அவர் சொன்னாலும் பயமில்லாமல் இருக்குமா?
பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் எங்கே சென்று பதுங்கினாலும் காவல்துறையினர் வளைத்துவிடுவார்கள் என்பது தெரியாதா என்ன? இது ஒரு ஜுஜூபி வழக்கு என்பதால் தேட மாட்டார்கள் என்ற நம்பிக்கை. அவ்வளவுதான். ஆனால் தலைமறைவு வாழ்க்கை என்பது மிகப்பெரிய மன உளைச்சலை உண்டாக்கக் கூடியது. பதினைந்து நாட்களுக்கும் குடும்பத்துடன் தொடர்பு இருப்பதில்லை. தொழில் முடங்கிக் கிடக்கும். ஏ.டி.எம் கார்டு, செல்போன் என்று எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி அனுப்புகிறார்கள். கைக்காசுக்குக் கூட அடுத்தவர்களை எதிர்பார்க்க வேண்டும். தேடி வந்துவிடுவார்களோ என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். எதிரில் யார் வந்தாலும் நம்மையே முறைப்பது போலத் தெரியும். முதல் ஒன்றிரண்டு நாட்களுக்கு என்னவோ ஜாலி ட்ரிப் அடிப்பது போலத்தான் இருக்கும். போகப் போகத்தான் அலறும்.
இதற்கிடையில் தலைமறைவாக இருப்பவர்களின் வீட்டிற்கு காவலர்கள் விசாரணைக்குச் செல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் என்னதான் தைரியமானவர்கள் என்றாலும் காவலர்களின் கேள்விகள் பதறச் செய்யும். அக்கம்பக்கத்திலும் விசாரிப்பார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்டால் தலை மறைவாக இருப்பவர்களுக்கு கிட்டத்தட்ட உயிரே போய்விடும்.
காவலர்களுக்கு சென்னை முக்கியப் பிரமுகரிடமிருந்து அழுத்தம் அதிகமாகிக் கொண்டேயிருக்கவும் தலைமறைவதற்காக வந்தவர்களில் ஒருவரின் பணிமனைக்குச் சென்று இரண்டு பேரை அமுக்கிவிட்டார்கள். அவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய போது ‘நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்கில் வந்தோம் சார்...அவங்க ரெண்டு பேரும் இன்னொரு பைக்கில் வந்து கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டாங்க சார்..பொறுக்கிப்பசங்க’ என்று வாங்கிவிட்டார்கள். அதன்பிறகு செய்தித்தாள், தொலைக்காட்சியில் எல்லாம் ‘தலைமறைவாக இருக்கும் இருவரைத் தேடிக் கொண்டிருப்பதாக’ இவர்களின் பெயரோடு சேர்த்து செய்தி வெளி வந்துவிட்டது.
காவலர்களுக்கு சென்னை முக்கியப் பிரமுகரிடமிருந்து அழுத்தம் அதிகமாகிக் கொண்டேயிருக்கவும் தலைமறைவதற்காக வந்தவர்களில் ஒருவரின் பணிமனைக்குச் சென்று இரண்டு பேரை அமுக்கிவிட்டார்கள். அவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய போது ‘நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்கில் வந்தோம் சார்...அவங்க ரெண்டு பேரும் இன்னொரு பைக்கில் வந்து கல்லெடுத்து அடிச்சுட்டு ஓடிட்டாங்க சார்..பொறுக்கிப்பசங்க’ என்று வாங்கிவிட்டார்கள். அதன்பிறகு செய்தித்தாள், தொலைக்காட்சியில் எல்லாம் ‘தலைமறைவாக இருக்கும் இருவரைத் தேடிக் கொண்டிருப்பதாக’ இவர்களின் பெயரோடு சேர்த்து செய்தி வெளி வந்துவிட்டது.
ஒளிந்து கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம். ஆளும் கூடுதல் எடையுடன் இருந்தார். இரவில் தூக்கம் கெட்டு கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. உடனடியாக இருதய மருத்துவ நிபுணரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். விடுதியிலிருந்து அழைத்தார்கள். ‘ஏதாச்சும் வம்புதும்பு ஆகிவிடுமோ’ என்று நான் நடுங்கத் தொடங்கிவிட்டேன். நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்றோம். ‘ஒண்ணும் பிரச்சினையில்லை..ரெஸ்ட் எடுங்க’ என்றார்கள். ஆனால் ஓய்வு எடுக்கிற மனநிலை இருந்தால்தான் பிரச்சினையே இல்லையே.
வெகுவாக பயப்படுகிறார்கள் என்பதால் கட்சியின் தலைமையிடம் தகவலைச் சொல்லி அங்கிருந்து இருவரையும் அழைத்துப் பேசினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். சொந்த விவகாரத்தில் வழக்கு பதிவாகி காவலர்கள் துரத்தினால் அது வேறு. இந்த துரத்தலானது அரசியல் காரணத்துக்கானது. யாரோ கண்ணாடியை உடைத்துவிட உள்ளூரில் கட்சிப் பொறுப்பில் இருக்கிற காரணத்திற்காக இருவரும் மண்டை காய்கிறார்கள். அவர்களுக்கு கட்சித்தலைமைதானே ஆதரவாக இருக்க வேண்டும்?
பெயரைச் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன் - தலைமைக்கு மிக நெருக்கமாக இருக்கிற ஒரு எம்.எல்.ஏவை அழைத்தேன். காலை எட்டரை மணி இருக்கும். அவரும் இளைஞர்தான்.
‘இதையெல்லாம் வழக்கறிஞர் அணி பார்த்துக்குவாங்க..மாவட்டச் செயலாளருக்கு இதுதான் வேலை..புதுசா ஃபோன் பண்ணியெல்லாம் சொல்ல வேண்டியதில்லை’ என்றார். முகத்தில் அறைந்தது போல இருந்தது. அவரிடம் பேசியிருக்கவே வேண்டியதில்லை எனத் தோன்றியது. அடிமட்டத்திலிருந்து மேலே வருகிற கட்சிக்காரனுக்கு இத்தகைய வலிகள் தெரியும் தெரியும். ஒருத்தன் சிரமப்படும் போது ‘நாமும் இப்படித்தானே சிரமப்பட்டோம்’ என்றாவது நினைப்பான். திடீரென்று வாரிசு அரசியலில் மேலே வருகிறவர்களின் மனநிலையே வேறு மாதிரிதான். ‘பொறுப்பு மட்டும் வேணும்; கட்சிக்கு வேண்டி பதினைஞ்சு நாள் கஷ்டப்பட முடியாதா?’ என்கிற மனநிலை அது. அவர்களைச் சொல்லித் தவறில்லை- அவரெல்லாம் எப்.ஐ.ஆர் என்பதையே எதிர்கொண்டிருக்க மாட்டார்.
அதன் பிறகு அவரிடம் என்ன பேசுவது? அழைப்பைத் துண்டித்துவிட்டேன்.
வேறு உபாயத்தைத் தேடலாம் என்று தெரிந்த நண்பர் மூலமாக ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசினேன். ‘சார் இது சாதாரணக் கேசுதான்...ஆனா பயந்துட்டு இருக்காங்க....ஸ்டேஷன்ல தேடிட்டு இருக்காங்களான்னு மட்டும் விசாரிச்சு சொல்லுறீங்களா சார்?’என்றேன்.
காவல்துறையினர் எப்பொழுதுமே காவல்துறையினர்தான். ‘வந்து சரண்டர் ஆகச் சொல்லுங்க...அடிக்க வேண்டாம்ன்னு நான் சொல்லுறேன்’ என்றார். இந்த வழக்குக்குக்கெல்லாம் அடிப்பார்களா என்று குழப்பமாக இருந்தது.
‘அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கும் தெரியல சார்...பேசினாங்கன்னா கண்டிப்பா வந்து சரண்டர் ஆகச் சொல்லிடுறேன்’ என்றேன்.
‘ஆமா நீங்க எங்க இருக்கீங்க மணிகண்டன்?’ என்றார். விசாரித்துவிட்டு நம் வீட்டுக்கு இரண்டு ஆட்களை அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து ‘இப்போ சென்னையில் இருக்கேன் சார்...ஒரு படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருக்கேன்’ என்று அவரிடம் ஒரு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டியதாகிவிட்டது.
இடையில் இருவரது வீட்டுக்கும் அலைபேசியில் அழைத்தால் அவர்கள் அழுவார்கள். ‘எங்க இருக்காங்கன்னு தெரியலைங்க..ஆனா நல்லா இருக்காங்க’ என்று ஆறுதல் சொல்ல வேண்டும். ஒரு வழியாக பதினைந்து நாட்களுக்குப் பிறகு பெயில் உத்தரவை வாங்கிச் சேர்த்தார்கள். பேயறைந்தது போலக் கிடந்தவர்கள் தெளிவானார்கள். ஊருக்குக் கிளம்பினார்கள். எனக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. ‘குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது’ என்று முகத்தில் கர்சீப்பைப் போட்டு அழைத்துச் செல்கிற வீடியோ டிவியில் வந்தால் ஃபேஸ்புக்கில் அதை வைத்தே மீம்ஸ் போடுவார்களே என்று பதறிக் கிடந்தேன். நல்லவேளையாகத் தப்பித்துவிட்டேன்.
எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து பதினைந்து அல்லது இருபதாயிரமாவது செலவாகியிருக்கும். அவர்களுடைய பணம்தான். சொல்ல மறந்துவிட்டேனே- உடைக்கப்பட்ட கண்ணாடியின் மதிப்பை முநூறு ரூபாய் என்று எப்.ஐ.ஆரில் எழுதியிருந்தார்கள்.
5 எதிர் சப்தங்கள்:
கட்சி மாறிட்டாய்ங்களா? இல்ல இன்னும் மானங்கெட்டுதான் இருக்காய்ங்களா தல?
இதையும் எழுதியாச்சு. எழுத்தாளனின் கை குறுகுறுக்கும்னு ஆயிடுச்சு. இனி யார் தலை மறைவுனாலும் நேரே உங்களை பிடித்து,அடிக்க கூட வேண்டாம்....ஐயோ என்னால் கற்பனை கூட செய்யமுடிலை. அப்பறம் நீங்க தலைமறைவாக ஓடும் சூழ்நிலை வந்துட போகுது.
தலைமறைவாக இருந்தவர்களின் இதயத்துடிப்பு எப்படி இருந்திருக்குமோ, அப்படியே வாசகர்களின் இதயத்துடிப்பும் இருக்கின்ற வகையில் இருந்தது உங்கள் எழுத்து நடை.
மகேஷ் பொய்யாமொழியா?
அது சரி தலைமறை ஆகுற எல்லாரும் உங்ககிட்ட ஏன் வராங்க?
மகேஷ் பொய்யாமொழி மகேஷ் பொய்யாமொழி மகேஷ் பொய்யாமொழி
Post a Comment