நேற்று ஆடிட்டரைச் சந்திக்கச் செல்ல வேண்டியிருந்தது. பெரும் நிறுவனங்களுக்கு கணக்கு வழக்குகளை முடித்துத் தரும் ஆடிட்டர் அவர். வரவேற்பறையில் காத்திருக்க வேண்டும். அவருக்கும் நேரம் இருக்கும் போது அனுமதிப்பார்கள். சில வினாடிகளில் எழுந்து வந்துவிடுவேன். அவரைப் போன்ற பெருந்தலைகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது முறையில்லை என்று தோன்றும். அவ்வளவு பிஸியான மனிதர். நிசப்தம் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளையும் அவர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். வருமான வரித்துறையின் ஆணையர் ஒருவர் நிசப்தம் வாசிக்கிறார். அவர் ஆடிட்டரை அழைத்து நிசப்தம் அறக்கட்டளை குறித்துச் சொன்ன பிறகு ‘கணக்கையெல்லாம் கொண்டு வாங்க’ என்று சொல்லி கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள்தான் சமர்ப்பிக்கிறார்கள்.
இதுவரைக்கும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த வருடம் ஏதேனும் தொகையை வாங்கிக் கொள்ளச் சொன்ன போது ‘நீங்களாகவே குறைந்தபட்சத் தொகையாக ஏதாவது கொடுங்கள்’ என்றார். இரண்டாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆடிட்டரே நேரடியாகக் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதில்லை. சி.ஏ தேர்வு எழுதுகிற இடைவெளியில் பயிற்சி மாணவர்களாக நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அழைத்து செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லிவிடுவார். அவர்கள்தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் கேட்கிற விவரங்களைக் கொடுக்க வேண்டும். அத்தனை வேலையும் முடிந்த பிறகு இறுதியாக ஆடிட்டரிடம் அழைத்துச் செல்வார்கள். தேவையான இடங்களில் கையொப்பம் வாங்குவார். எல்லாவற்றையும் கோப்பில் அடுக்கி கையளிப்பார்கள்.
நேற்று அதற்காக அழைத்திருந்தார்கள். கையொப்பமிட்ட பிறகு ஆடிட்டர் ‘எப்படி இவ்வளவு பேர் பணம் தர்றாங்க?’என்றார்.
‘எனக்கும் சரியான பதில் தெரியாது சார். ட்ரஸ்ட் பத்தி எல்லாத்தையுமே ப்லாக்ல எழுதிடுறேன்..பணம் அனுப்பறாங்க’என்றேன். ஆடிட்டருக்கு தமிழ் பேசத் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது.
‘நம்பிக்கை வரணும்ல..’ என்றார். இவனை எப்படி நம்புகிறார்கள் என்பது அவருடைய சந்தேகம்.
‘ஒவ்வொரு மாசமும் ஒண்ணாம் தேதியிலிருந்து கடைசி நாள் வரைக்கும் எவ்வளவு நன்கொடை வந்திருக்கு அதில் எவ்வளவு தொகையைக் கொடுத்திருக்கோம்ன்னு பேங்க் ஸ்டேட்மெண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போட்டுடுவேன்...ஒவ்வொரு பைசாவுக்கும் பப்ளிக்கா கணக்கு இருக்கு’ என்றதற்கு ‘இது என்ன பைத்தியகாரத்தனமா இருக்கு?’ என்றார்.
அவர் அப்படிக் கேட்ட போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
‘உங்களுக்கு பணம் கொடுக்கிறவங்களுக்கு மட்டும் கணக்குக் கொடுங்க...எல்லோருக்கும் உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு தெரிஞ்சுதுன்னா ப்ரஷர் வரும்ல?’ என்றார். அவர் கேட்பதும் சரிதான். அழுத்தம் இல்லாமல் இல்லை. அழுத்தம் என்றால் மிரட்டல் என்று அர்த்தமில்லை. அன்பாகக் கேட்பதும் கூட அழுத்தம்தான். நம்மிடம் நன்கு பழகியவர்கள் யாரையாவது ஒருவரை பரிந்துரை செய்யும் போது தட்டிக் கழிப்பது பெரும் சிரமம். No என்று சொல்வது பெரும் கலை. இப்பொழுதுதான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இதிலிருந்து தப்பிப்பதற்காகவே சமூகத்தில் முக்கியமான இடத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம் அவசியமில்லாமல் பேசுவதில்லை. எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சினிமாக்காரர்கள், காவல்துறையினர் என்று பல தரப்பிலிருந்தும் உறவை மெல்ல மெல்லத் துண்டித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் இதை வேண்டுமென்று செய்யவில்லை. ஆனால் தன்னியல்பாக நிகழ்ந்திருக்கிறது. ‘தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு..’ என்று பரிந்துரைகள் வருவதுண்டு. பரிந்துரை செய்கிறவர்களுக்கு அது முக்கியமான உதவியாக இருக்கலாம். நாம் விசாரித்துப் பார்த்தால் அதைவிடவும் தகுதியான நபர்கள் இருப்பதாகத் தெரியும். இல்லையென்று சொன்னாலும் சங்கடம். கொடுப்பதற்கும் தயக்கம். சிலர் புரிந்து கொள்வார்கள். பலர் புரிந்து கொள்வதில்லை. இதைத்தான் ஆடிட்டரிடமும் சொன்னேன்.
‘காண்டாக்ட்ஸ் முக்கியம்...உங்க வளர்ச்சி பாதிக்காதா?’ என்று கேட்டார்.
வளர்ச்சி என்று எதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிறைய விஐபிக்களுடன் தொடர்பில் இருப்பதும், ஊடகங்களில் தலை காட்டுவதும், அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதுவதும் வெகு விரைவாக பரவலான கவனம் பெறச் செய்யக் கூடும். ஆனால் அது அவசியமில்லை என்று தோன்றுகிறது. எறும்பு ஊர்கிற வேகம் போதுமானது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு எவ்வளவு மாறியிருக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. விளம்பரமும், கவனமும் போதுமான அளவில் இருந்தால் போதும் என்பதைப் புரிந்து கொள்கிற பக்குவம் வந்து சேர்ந்திருக்கிறது.
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் அதே சமயம் அதீத வெளிச்சத்தையும் கவனத்தையும் தவிர்த்துவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அனுபவங்கள் சேரச் சேர, பக்குவம் கூடக் கூட அதற்கேற்ற வளர்ச்சி தானாக வந்து சேரும். வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசமிருக்கிறது. வளர்ச்சி மெல்ல மெல்ல வளர்வது. வீக்கம் என்பது தடாலென உச்சத்திற்குச் செல்வது. வீக்கமடைவது மிகச் சுலபம். ஆனால் வெடித்தால் அதோடு சரி. திரும்பவும் மேலே வரவே முடியாது.
ஆடிட்டரிடம் இதைச் சொன்ன போது அதற்கும் அவரிடம் பதில் இருந்தது.
‘ஒரு க்ளர்க் வேலைக்கான தகுதி இருக்கிறவன் க்ளர்க்காவே இருக்கலாம்..ஆனால் மேனேஜர் ஆகக் கூடிய தகுதியிருக்கிறவன் க்ளர்க்கா இருக்கக் கூடாது’ என்றார். இப்படி யாராவது உசுப்பேற்றத்தான் செய்வார்கள். தெளிவாகவே இருக்கிறேன். படிப்படியான பதவி உயர்வின் வழியாகவே மேலாளர் ஆனால் போதும். அப்பன் சம்பாதித்து வைத்த சொத்தாக இருந்தால் எடுத்த உடனே சி.ஈ.ஓ ஆகிவிடலாம். கையூன்றிக் கர்ணம் அடித்து நாமாகவே உயர்கிற வாழ்க்கையில் மெல்ல மெல்ல மேடு ஏறினால் போதும் என்று சிரித்துவிட்டு வந்திருக்கிறேன்.
2015-16க்கான நிசப்தம் அறக்கட்டளையின் கணக்கு வழக்கு விவரங்களை வருமான வரித்துறையில் சமர்ப்பித்தாகிவிட்டது. அறுபத்தொன்பது லட்ச ரூபாய், பல நூறு நன்கொடையாளர்கள். பணம் கொடுத்தவர்களின் விவரங்களைச் சேகரிப்பதே சிரமமான காரியமாகத்தான் இருந்தது. இரவு பகலாக மண்டை காய்ந்தது. அலுவலகம் முடிந்து வந்தவுடன் பட்டியலைத் திறந்து வைத்துக் கொள்வேன். பல நாட்களில் அதிகாலை இரண்டு மணி வரைக்கும் கூட இதையே உருப்போட்டுக் கொண்டிருந்தேன். ‘உடம்பைக் கெடுத்துக்காதீங்க’ என்ற அறிவுரைகளையெல்லாம் தாண்டி வர வேண்டியிருந்தது. சொல்லத்தான் செய்வார்கள். ஆனால் ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம்; அதை முழுமையாகவும் உருப்படியாகவும் செய்வோம்.
ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து கோப்பைக் வாங்கிய போது பெருஞ்சுமையை இறக்கி வைத்தது போல இருந்தது. இனி வரும் ஆண்டுகளில் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. ஓரளவுக்கு நேக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வப்போது நன்கொடையாளர்களின் விவரங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
ஆடிட்டர் நல்ல மனிதர். அவர் நல்ல நோக்கத்தில்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். ஒவ்வொரு மாதமும் கணக்கு வழக்கை வெளியிடுவது என்ற வெளிப்படைத் தன்மையில் எந்த மாறுதலும் இருக்காது. வருட இறுதியில் ஒட்டு மொத்தக் கணக்கையும் பைசா பாக்கியில்லாமல் வருமான வரித்துறையில் ஒப்படைப்பதிலும் எந்தக் காலத்திலும் மாறுதல் இருக்காது. இந்த வெளிப்படைத்தன்மைதான் நிசப்தம் அறக்கட்டளையின் பெரும்பலம். அதை அசைத்துப் பார்க்க வேண்டியதில்லை.
ஒத்துழைக்கும், ஆதரவளிக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.
கணக்கு வழக்கில் நூறு ரூபாய் அளவில் சந்தேகமிருந்தாலும் சந்தேகமிருப்பின் தயங்காமல் கேட்கவும்.
vaamanikandan@gmail.com
4 எதிர் சப்தங்கள்:
I 100% agree with your words. Keep it up!!
Super Ji
நல்லது.தொடரட்டும் உங்களது சேவை.
கட்டுரையின் ஒவ்வொரு பத்தியிலும் ஒரு கேள்வி இருக்கிறது.அத்தோடு அதற்கான பதில்களையும் தொகுத்தால் அதுவே இன்னொரு கட்டுரை ஆகி விடும்.
இந்த கட்டுரையை வெற்றி பெற்றிருக்கிறேன் என்ற சந்தோசத்தோடு, அதே நேரம் அந்த வெற்றிக்கான எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியான மனநிலையில் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் மணி.
//வளர்ச்சி என்று எதை எடுத்துக் கொள்வது//
இதற்கான பதிலை ஒரு போட்டியாக அறிவியுங்களேன்.
Post a Comment