Sep 27, 2016

நோய் நாடி

சமீபமாக மாற்று மருத்துவம் குறித்தான தகவல்களைக் கோரி நிறையப் பேர் அழைக்கிறார்கள். மின்னஞ்சல்கள் வருகின்றன. எனக்கு பெரிய அளவில் தெரியாது. பேராசியரின் எண்ணைக் கொடுத்துவிடுகிறேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும் போது ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ அதன் பிறகுதான் அது தணிக்கும் மருந்தை நாட வேண்டும். நோய் என்னவென்று கண்டறிவதற்கும் அதன் அடிநாதத்தைப் பற்றுவதற்கும் அலோபதி மருத்துவத்தைவிட்டால் வேறு வழியில்லை. அவர்கள் சொல்லுகிற பரிசோதனைகளை மேற்கொண்டு ‘இதுதான் பிரச்சினை’ என்று கண்டுபிடித்துவிடுவது முக்கியமான வேலை. அதன் பிறகு மருத்துவம் முறை பற்றி யோசிக்கலாம்.

சமீபத்தில் ஒரு குடும்பத்தினர் அழைத்திருந்தார்கள். பத்து வயதுக் குழந்தைக்கு மூளையில் பிரச்சினை. அதை விரிவாக எழுத முடியாது. கேள்விப்பட்ட எனக்கு இரண்டு நாட்களாகத் தூக்கமில்லை. கண்டபடி கனவு வருகிறது. இரண்டு மூன்று முறை உறக்கத்திலிருந்து விழித்து எழுந்ததெல்லாம் நடந்தது. அதனால் விரிவாக எழுதுகிற மனநிலை இல்லை. பிரச்சினை என்னவென்றால் குழந்தை உண்ணும் சாப்பாட்டு அளவு குறைகிறது என்று ஒவ்வொரு மருத்துவராக அலைந்திருக்கிறார்கள். கடைசியில் யாரோ ஒரு ஜூனியர் மருத்துவர் சொன்னாரென்று தலையில் ஸ்கேன் செய்த போது பிரச்சினையைக் கண்டறிந்திருக்கிறார்கள். பிரச்சினை என்று மட்டும்தான் சொல்கிறார்கள்.  என்ன ஏது என்கிற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ‘மருந்து வேண்டும்’ என்றார்கள். ‘தயவு செய்து நியூரலாஜிஸ்ட் ஒருவரைப் பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. பார்க்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மாற்று மருத்துவம் மீது நம்பிக்கையில்லாமல் இதைச் சொல்லவில்லை. எங்கள் அப்பாவை அலோபதி மருத்துவம் முற்றாகக் கைவிட்ட பிறகுதான் சித்தாவை நாடினோம். அலோபதி மருத்துவர் சிவசங்கரோடு சேர்த்து நான்கு சித்த மருத்துவர்கள் உதவினார்கள். அப்பாவுக்கு இப்பொழுது பெரிய பிரச்சினை எதுவுமில்லை. வயிறு வீக்கம் மட்டும் இருக்கிறது. ஆனால் நன்றாக இருக்கிறார். வழக்கம் போல பசியாகிறது. உணவருந்துகிறார். தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்கிறார். வெகு  தெளிவாக இருக்கிறார். உள்ளூரில் இடம் ஒன்று விற்பனைக்கு வந்த போது விசாரித்து விலை முடித்து முன்பணம் கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கான தெளிவு. எல்லோருக்குமே ஆச்சரியம்தான். ஆனால் இதே வைத்திய முறை அப்படியே அத்தனை பேருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. தீவிரமான நோய்மை எனில் வாய்ப்பிருக்கும் மருத்துவங்களையெல்லாம் ஒரு முறையாவது அலசி ஆய்ந்துவிடுவதுதான் சாலச் சிறந்தது. ஆனால் Analysis என்பதைப் பொறுத்தவரையில் வேறு எந்த மருத்துவரையும் விடவும் அலோபதி மருத்துவரைத்தான் நம்ப வேண்டும்.

சமீபத்தில் நாட்டு மருத்துவங்கள் குறித்த புத்தகங்கள், கிடைக்கும் குறிப்புகளை எல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூலிகைகள் குறித்தான குறிப்புகளையும் தேடி எடுத்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இதையெல்லாம் வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் நமது வாழ்க்கை முறையிலேயே நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது ஓரளவுக்கு விழிப்புணர்வு அடைந்திருக்கிறோம்தான். முடிந்த அளவுக்கு வேதிப் பொருட்களைத் தவிர்க்கலாம் என்று நாம் விரும்பினாலும் அது முற்றாகச் சாத்தியமில்லை. விளைபொருட்களிலிருந்து பிராய்லர் கோழி வரைக்கும் எல்லாவற்றிலும் வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன. ஆர்கானிக் பொருள் என்று விற்கப்படுகிற சோப், ஷாம்பூ என எல்லாவற்றிலும் Ingredients என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஏதேனும் வேதிப் பொருள் கலந்திருக்கிறது. ஆர்கானிக், இயற்கை, நேச்சுரல் என்கிற சொற்களுக்கெல்லாம் இப்போது விலை அதிகம். அதைப் பயன்படுத்தி பலர் திருட்டுத்தனமாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

மருத்துவம் என்பது இரண்டாம் கட்டம். உடல் நலத்தோடு இருக்கும் போதே வாழ்க்கை முறையின் வழியாகவே நிறைய காரியங்களை நம் உடலுக்காக நம்மால் செய்ய முடியும். நீலக் கொளுஞ்சி என்றொரு செடி இருக்கிறது. அதன் வேரை தட்டி கொதிக்க வைத்து வருடம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்தால் நம் உடலில் சேகரமாகும் பெரும்பாலான விஷங்களை முறித்துவிடுகிறது என்று சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது குறித்த நிறையைக் குறிப்புகளும் இருக்கின்றன. சாதாரணக் கொளுஞ்சி வேறு. நீலக் கொளுஞ்சி வேறு. இதைத்தான் நீலி என்கிறார்கள். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முந்தின நாள் செய்துவிடலாம்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நிலாவரை இலைப் பொடி மூன்று தேக்கரண்டிகளை தேனில் குழைத்து இரவு தின்றால் வயிறு சுத்தமாக உதவுகிறது. இப்படி நிறையக் குறிப்புகள் கிடைக்கின்றன. எல்லோராலும் பின்பற்ற முடியக் கூடிய சிறு சிறு குறிப்புகள். பெரும்பாலான நாட்டு மருந்துக் கடைகளில் இத்தகைய பொடிகள் கிடைக்கின்றன. இவை எதுவும் எதிர்மறை விளைவை உண்டாக்குவதில்லை என்றாலும் சித்த மருத்துவர்களின் ஆலோசனகளுடன் இவற்றையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம். 

மருத்துவம், மருந்து என்பதற்கெல்லாம் முன்னதாக நம் உடலைப் புரிந்து கொள்ளுதல் வெகு அவசியமாகிறது. நன்றாக இருக்கும் போது நம் உடலைப் பற்றி எதுவுமே கண்டுகொள்வதில்லை. இயந்திரம் போல அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டேயிருக்கிறது. இயந்திரத்தைக் கூட வருடம் ஒரு முறையாவது நிறுத்தி சர்வீஸ் செய்து திரும்ப ஓட விடுகிறோம். உடலுக்கு எதுவுமில்லை. முப்பது அல்லது நாற்பது வருடங்கள் ஓடிக் கொண்டேயிருந்து அதன் பிறகு மெல்ல மெல்ல பிரச்சினைகளைச் சந்திக்கிறது. பிரச்சினைகள் தொடங்கிய பிறகு மருத்துவம்தான் ஒரே வழி. உடலைப் புரிந்து கொள்வதெல்லாம் சாத்தியமேயில்லை. சர்வீஸ் என்பதற்கும் வாய்ப்பில்லை. 

குருதியில் ப்ளேட்லெட் எண்ணிக்கை குறையும் போது பப்பாளி இலைச் சாறு. ரத்த சிவப்பணுக்கள் குறையும் போது கறிவேப்பிலை பொடியும் பேரீச்சம் பழமும் என்று சாதாரணக் குறிப்புகள் நிறையக் கிடைக்கின்றன. வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை செய்து அலோபதி மருத்துவர்களின் உதவியுடன் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு ஆரம்பகட்டமெனில் இத்தகைய சிறு சிறு நாட்டு மருத்துவத்தின் வழியாகவே பெரும்பாலும் தப்பித்துவிட முடியும் என்று வெகு நம்பிக்கையாகச் சொல்லலாம். 

ஜலதோஷத்தின் போது கற்பூரவள்ளி இலையை நன்கு மென்றால் போதும். சிறுநீர் கடுப்பு என்றால் பச்சை வெங்காயத்தை மென்று தின்னலாம். வாய்ப்புண் என்றால் அதிமதுரப் பொடி ஒரு வேளைக்கு. பெரும்பாலான காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம். இப்படியே ஒற்றைத் தலைவலியில் ஆரம்பித்து நிறைய சிறு சிறு பிரச்சினைகளுக்கு நம்மிடமே வைத்தியமிருக்கிறது. ஆனால் ஒன்று- ஏற்கனவே சொன்னது போல எல்லோருக்கும் எல்லா வைத்தியமும் பொதுவானதாக இருப்பதில்லை. அதற்குத்தான் நம் உடலை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எது நம் உடலின் பிரச்சினை ஒத்து வரும் என்பதை ஒரு பொழுது போக்காகவே செய்யலாம். எதுவும் குடி மூழ்கிப் போகாது. எல்லாவற்றுக்கும் பாரா சிட்டமாலும், வேதிப் பொருட்களும்தான் மருந்தாக இருக்க வேண்டும் என்றில்லை. நம்மிடமே நிறைய மருந்துகள் இருக்கின்றன. நாம்தான் மறந்து கொண்டிருக்கிறோம்.

நாட்டு மருந்துக்கான முக்கியமான(நம்பகமான) புத்தகங்கள் இருப்பின் தெரியப்படுத்தவும். விவாதிக்கலாம். இதில் நாம் விவாதிக்க நிறைய இருக்கின்றன.

8 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// தீவிரமான நோய்மை எனில் வாய்ப்பிருக்கும் மருத்துவங்களையெல்லாம் ஒரு முறையாவது அலசி ஆய்ந்துவிடுவதுதான் சாலச் சிறந்தது//
எங்கூரு ல "நோய் க்கும் பாரு பேய் க்கும் பாரு" ன்னு சொல்லுவாங்க.

Anonymous said...

தோழர், ஆங்கில மருத்துவர்களுக்கே சில நேரம் என்ன பிரச்சினை என்று தெரிவதில்லை. தீராத வயிற்றுவலி...துளசி இலையை தண்ணீரில் முக்கி சாப்பிடுங்கள் என்றால் நீங்களும் செய்து பார்ப்பீர்கள் இல்லையா? நோய் நாடி என்பதுதான் சரி, ஆனால் நோய் என்ன? அதன் நாடி என்ன என்று தீர்மானிப்பவர்கள் யார்?

Paramasivam said...

உண்மை. அலோபதி தேவைப்பட்ட இடத்தில் அலோபதி மருத்துவமும், மாற்று மருத்துவம் தேவைப்படும் சமயம் சித்தா/நாட்டு மருத்துவமும் நல்லது தான். உண்மையான நாட்டு மருந்துக் கடை கிடைக்க வேண்டும் என்பதும் உண்மை.

Vaa.Manikandan said...

பெரும்பாலான நோய்களை அலோபதி மருத்துவர்களால் கண்டறிந்துவிட முடியும். அவர்களிடம் ஏகப்பட்ட பரிசோதனைகள் இருக்கின்றன. ஒருவேளை அவர்களால் கண்டறிய முடியவில்லையெனில் அந்த மருத்துவரிடம் அனுபவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

KANNAN said...

Please watch Proff.BMHEGDE'S speach

The Unprejudiced Observer said...

அன்பு மணி,

நீங்கள் மாற்று மருத்துவத்தை பற்றி பேசும் போது ஹோமியோபதி மருத்துவத்தை விட்டுவிடுகிறீர்களே..இது எதேச்சையாகவா? அல்லது அதன் பின்னணியில் ஏதெனும் காரணமிருக்கா??

Vaa.Manikandan said...

ஹோமியோபதி மருத்துவர்கள் அல்லது அதை உட்கொள்ளும் நோயாளிகளுடன் எனக்கு நேரடி பரிச்சயம் இல்லை. தெரியாததைப் பற்றி பேசாமல் இருப்பதுதான் சரி. அதனால் தவிர்த்துவிடுகிறேன்.

Paramasivam said...

நாட்டு மருந்துக்கான முக்கியமான (நம்பகமான) புத்தகங்கள் பற்றி எழுதி இருந்தீர்கள். அவ்வாறு, கிடைத்தால், தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.