Sep 28, 2016

ஜெயமோகனும் போலீஸ் கேசும்

ஊட்டியில் நித்யா கவிதை அரங்கை எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் கலந்து கொள்ளும் அழைப்பு எனக்கு வந்தது. ஆச்சரியமான அழைப்பு அது. தமிழிலிருந்து சில கவிஞர்களின் கவிதைகளை மலையாளத்திலும், சில மலையாளக் கவிஞர்களின் கவிதைகளை தமிழிலும் மொழிபெயர்த்து குறிப்பிட்ட கவிஞர்களையும் அழைத்து இரண்டு மூன்று நாட்கள் நடைபெறும் விவாதம் அது. போக்குவரத்து செலவு மட்டும் கவிஞர்களுடையது. ஊட்டியில் ஆசிரமத்திலேயே தங்கிக் கொள்ளலாம். உணவு ஏற்பாடும் அவர்களுடையது. எனது கவிதைகளையும் தேர்ந்தெடுப்பதாகவும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டு ஜெமோ மின்னஞ்சல் அனுப்பிய போது மிகப்பெரிய அங்கீகாரமாகத் தெரிந்தது. குதி போட்டுக் கலந்து கொண்டேன். 

கவிதை எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் கூட முழுமையாகப் பூர்த்தியடைந்திருக்கவில்லை. அந்த அரங்கு எனக்கு பள்ளிக்கூடம் மாதிரி. ஒரு புத்தம் புதிய நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து கிளம்பியிருந்தேன். நாஞ்சில்நாடனும், ஜெயமோகனும், தேவதச்சனும், சுகுமாரனும், மோகனரங்கனும், யுவனும் எதைச் சொன்னாலும் குறித்து வைத்துக் கொண்டிருந்தேன். கவிதையின் விதவிதமான பக்கங்களையெல்லாம் திறந்து திறந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேரும் குருநாதர்கள். அரங்கில் நடக்கும் விவாதம் ஒரு புறம் என்றால் மாலையிலும் காலையிலும் நடைப்பயிற்சியின் போதான உரையாடல்கள் வெவ்வேறு புரிதல்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. மலைகளின் அரசியின் குளிரில் ஆங்காங்கே அமர்ந்து எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். போதையில்லாமல், உளறல் இல்லாமல், உள்ளரசியல் இல்லாமல் அத்தனை ஆளுமைகள் ஒரு சேரத் தங்கியிருந்து பேசுவதை அருகாமையில் இருந்து கேட்டு ரசிக்கும் அனுபவம் வேறு எங்கும் வாய்க்கவேயில்லை. 

எனக்கு என்னவோ வகுப்பறையில் இருந்த அனுபவம்தான். மற்றவர்கள் எழுவதற்கும் முன்பாகவே அதிகாலையில் எழுந்து குளித்துத் தயாராகி ஆசிரமத்தில் கொடுத்த கம்பளியை மடித்து அடுக்கி வைத்துவிடுவேன். அது ஜெயமோகனுக்கு பிடித்திருந்தது. என்னிடம் வாஞ்சையோடு பேசுவார். ஆனால் ஆர்வக் கோளாறாகவும் இருந்தேன். கவிதையரங்கில் அதிகமாகப் பேசவில்லை என்றாலும் நடைப்பயிற்சியின் போது, உணவு உண்ணும் போதெல்லாம் யாராவது கவிதை குறித்து ஏதாவது பேசினால் எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பெண் கவிஞர்களின் பெயராகச் சொல்லிக் கொண்டிருந்தேன். நல்ல கடலை வியாபாரம் நடந்து கொண்டிருந்தன் விளைவு அது. இப்படி பெண் கவிஞர்களின் பெயர்களைச் சொல்வதை ஜெமோ கவனித்துவிட்டு ‘அவங்க கவிதைகளைச் சொல்லுங்க’ என்றார். சில கவிதைகளை அச்சுப்பிரதியாக வைத்திருந்தேன். ஒன்றிரண்டை வாசித்துக் காட்டிய போது ‘அவையெல்லாம் ஏன் கவிதை இல்லை’ என்று பேசினார். ஒரு மாதிரி வெட்கமாகப் போய்விட்டது. ஆனால் அதை அவர் குத்திக்காட்டவெல்லாம் இல்லை.

‘இந்த வயசு அப்படித்தான்’ என்று சிரித்தவர் ‘பொண்ணுங்க கூட பேசறது தப்பில்லை..ஆனால் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு நம்மோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் மீதான பிரியத்தில் ஒன்றுமேயில்லாத குப்பையைக் கூட அற்புதமான எழுத்துன்னு மனசு சொல்லும். மனசு சொல்வதை நீங்கள் வெளியில் சொன்னால் உங்க மேல இருக்கிற மரியாதை போய்டும்...பார்த்துக்குங்க’ என்றார். அவர் சொன்னது அப்பட்டமான உண்மை. நல்ல எழுத்தை பாராட்டுவது வேறு. எதுவுமே இல்லாத எழுத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடுவது வேறு. அன்றைய தினம் வரையிலும் அப்படியானதொரு மனநிலையில்தான் இருந்தேன்- எனக்குத் தெரிந்த பெண்கள் எல்லோரும் நல்ல கவிஞர்கள். 

ஜெமோ ஒருவகையில் கண்டிப்பான தலைமையாசிரியர். பெண் எழுத்தாளர், கவிஞர் என்பதற்காகவெல்லாம் தூக்கி வைத்துக் கொள்ளமாட்டார். அந்த வகையில் எனக்கு அவரை மிகப் பிடிக்கும். ஃபேஸ்புக்கிலும் மதிப்புரைகளிலும் சம்பந்தமேயில்லாமல் ‘இதுவரை நான் வாசித்த நாவல்களிலேயே இதுதான் பெஸ்ட்’ என்றெல்லாம் தான் கடலை போடும் பெண்களின் புத்தகங்களைக் தூக்கி வைத்துப் புளுகும் எழுத்தாளர்களிடையே ‘இது கேவலமான எழுத்து’ என்று உரக்கச் சொல்வதற்கு தனி தைரியம் வேண்டும். ஜெயமோகனிடம் அந்த தைரியம் இருக்கிறது. முரட்டுத் தனமான நேர்மை.

முதிர் எழுத்தாளர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய தொகுப்புகளையும் நாவல்களையும் வாசித்து நொந்து போயிருக்கிறேன். இதை ஏன் பாராட்டினார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறேன். வழிவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக ‘அருமை, ஆசம், தூள்டக்கர்’ என்றெல்லாம் பாராட்ட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் தர்மசங்கடத்தையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அப்படி பாராட்டவிட்டால் இந்த முதிர்கண்ணன்களிடம் யார் வழிவார்கள்?

‘அப்படி யாரெல்லாம் புளுகுகிறார்கள்? பெயரைச் சொல்’ என்று தயவு செய்து கேட்டுவிட வேண்டாம். நீங்கள் விமர்சனங்களைப் பின் தொடர்வதில்லை என்று அர்த்தம். பெரும்பட்டியல் அது. பெயரைச் சொன்னால் ஏகப்பட்ட பேரை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். சமீபகால விமர்சனங்களைத் தேடிப் பார்த்து யார் வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

பெண் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. ஆனால் கசகசத்துக் கிடக்கிறது. நிறையக் குப்பைகள் முன் வைக்கப்படுகின்றன. விமர்சனக் கூட்டங்கள் என்ற பெயரில் சொறிந்துவிடுகிறார்கள். மதிப்புரைகளும் அப்படித்தான். சலிப்பாக இருக்கிறது. பெரும் ஆளுமைகள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களின் பிம்பங்கள் கூட அப்படியே சரிகின்றன. இப்படியான சூழலில் ‘குப்பை’ என்று ஒரு மனிதர் உரக்கச் சொல்லும் போது அலறத்தான் செய்யும். காவல் நிலையத்தில் புகார் அளிக்கத்தான் தோன்றும். தன்னைச் சுற்றித் திரிகிறவர்கள் அத்தனை பேரும் தன்னை உச்சாணியில் வைக்கும் போது ஜெமோ மாதிரியான ஆட்கள் தூக்கி சாணத்தில் வீசும் போது கடுப்பாகத்தான் செய்யும். ஜெயமோகன் மீதான எரிச்சலும் பொறாமையும் கொண்டவர்கள் கொதிக்கிற கொள்ளியில் எண்ணையை ஊற்றத்தான் செய்வார்கள்.


ஜெயமோகன் இதற்கெல்லாம் அசரக் கூடிய ஆள் இல்லை. அடங்கியும் விடமாட்டார். விமர்சனம் எழுதும் போது எழுத்தாளரின் நிழற்படத்தை பயன்படுத்தாமல் எழுதியிருக்கலாம். இப்பொழுது அதுதான் வம்பாகப் போய்விட்டது. போலீஸை கூப்பிடுவேன், ஃபோட்டோ போட்டதற்காக சிறையில் தள்ளுவேன் என்றெல்லாம் நகைப்பு வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் போலீஸ்காரனுக்கு இதெல்லாம் புரியுமா என்று தெரியவில்லை. உள்ளே தூக்கி வைக்காமல் இருக்கக் கடவது. அப்படியே தூக்கிச் சென்றாலும் தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி அடிக்கமாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். அந்தவிதத்தில் ஆசுவாசம்தான். கர்நாடக போலீஸாக இருந்தால் கூட KA வண்டிகளை எரித்து எதிர்ப்பைக் காட்டலாம். இங்கே சிங்கப்பூர் வண்டிகளுக்கு எங்கே போவது? சிங்கப்பூர் நண்பர்கள் யாராவது ஜெமோவைப் பார்த்தால் கமுக்கமாக இந்தியா வந்து சேரச் சொல்லுங்கள். நாகர்கோவில் வந்து மற்றவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ளலாம்.

2 எதிர் சப்தங்கள்:

பாலு said...

அந்த ஆல் பர்பஸ் அங்கிள்கள் பட்டியலை எனக்கு வாட்சப்பில் அனுப்புங்கள் அண்ணாச்சி! இந்த நூற்றாண்டின் சிறந்த உலக எழுத்தாளர் என் தலைவன் சாருவுக்கு அதில் முதலிடம் தரவும்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ஜெமோ மிக எளிதாக பழகக்கூடிய மனிதர்.அவரின் ரப்பர் நாவலத்தான் முதலில் 2011 ல் வாசித்தேன்.அதற்கு பிறகு உங்கள் நாவலை படிக்கும் வரிசை அனுப்புங்கள் என்று மின்னஞ்சலில் கேட்ட உடனே " ஆரம்ப வாசகர்களுக்கு கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசை சரியானதாக இருக்குமென நினைக்கிறேன்." என்று அனுப்பியிருந்தார்.பழகுவதற்கு மிகவும் எளியவராக இருக்கிறார் .அவருக்கு நீங்கள் சொன்னது போல விமர்சனம் என்பது பழகிப்போன கசப்பாக இருக்கலாம் .