Sep 27, 2016

உள்ளாட்சி கூத்துக்கள்

கடந்த வாரம் பக்கத்து ஊரில் ஒன்பது பேருந்துகளை ஏற்பாடு செய்து கிட்டத்தட்ட அறுநூறு பேர் திருப்பதி சென்று வந்திருக்கிறார்கள். என்ன காரணம் என்று விசாரித்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒருவித பிரச்சாரம் இது என்றார்கள். காசு படைத்த மகராசன் அறுநூறு வாக்குகளுக்கு அடி போட்டுவிட்டார். போக்குவரத்து, தங்குமிடம், வழியில் சாப்பாடு என அத்தனையும் அந்த மகராசனின் செலவு. இவர்கள் நன்றிக்கடனாக வாக்களித்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

சட்டமன்றத் தேர்தலைப் போல நேரடியான பண விநியோகம் இந்தத் தேர்தலில் மிகக் குறைவாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் வாக்காளர் மாமன், மச்சானாகவோ அல்லது தெரிந்தவனாகவோ இருப்பான் என்பதால் நேரடியாகப் பணம் தருவதைக் காட்டிலும் இப்படியெல்லாம் ஏதாவதொரு ‘கவர்-அப்’ வேலைகளைச் செய்கிறார்கள். இது ஒரு சாம்பிள் நிகழ்வு. உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டாலே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடுகின்றன. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல் என்ற பெயரில் பல இடங்களில் அப்பட்டமான அராஜகமும் அயோக்கியத்தனமும் அரங்கேறுகின்றன.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக உள்ளூரிலேயே பிரதிநிதிகளை உருவாக்குகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதெல்லாம் லுலுலாயிக்கு. உள்ளாட்சி நிர்வாகங்களில் கமிஷன் அடிக்கிறார்கள். வசூல் நடத்துகிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் புதியதாக அமைக்கப்படும் லே-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட்டில் கொழித்துச் செழிக்கிறார்கள். தங்களது அதிகார எல்லைகளுக்குள் வரக் கூடிய நிறுவனங்கள், அமைப்புகள், பார்களில் மாமூல் வாங்குகிறார்கள். இப்படி பல கசமுசாக்கள்.

கொழுத்த வருமானம்.

அதற்காகத்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் வெல்வதற்காக கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பேருந்தில் திருப்பதிக்கும் திருத்தணிக்கும் அழைத்துச் செல்வது ஒரு பக்கம் என்றால் எத்தனை கிராமங்களில் அண்டா வைத்து பிரியாணி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்கலாம். புடவைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதுபாட்டில்களின் விநியோகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ‘அண்ணன் நடத்தும் பிரம்மாண்டமான கபடி போட்டிகள்’ குறித்தான விளம்பரங்கள் மின்னுகின்றன. வாக்குகளைக் கவர்வதற்காக எல்லாவிதமான சாத்தியக் கூறுகளையும் உள்ளாட்சித் தேர்தல்களில் நிற்பவர்கள் அலசி ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏழெட்டு ஊர்களைக் கொண்ட பஞ்சாயத்தில் இரண்டு சாதிகள் பெரும்பான்மையாக இருக்கும் போது இரு சாதிக் குழுக்களும் தனித்தனியாக கூட்டம் நடத்தி எப்படி எதிர் சாதிக்காரனைத் தோற்கடிப்பது என்று ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் தமக்கு அடிமையாக இருக்கும் சரியான தலித் வேட்பாளர்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள்.

பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டவை இன்னமும் மோசம். ஐம்பது சதவீதம் பெண் வேட்பாளர்கள்தான். கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர்கள், உள்ளூர் கட்சிப்பிரமுகர்கள் போன்றவர்கள் தத்தம் மனைவியரை வேட்பாளராக்கி வெற்றி பெறச் செய்துவிட்டு அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் என்ன பெண்களுக்கான உரிமை, வெங்காயம் எல்லாம்? ஒரு மண்ணும் கிடையாது. தொண்ணூற்றைந்து சதவீத பெண் வேட்பாளர்கள் இப்படித்தான். நம்பிக்கையில்லையென்றால் எந்தக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வேண்டுமானாலும் எடுத்துப் புரட்டிப் பார்க்கலாம். ஆண் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு கட்சியில் ஏதேனுமொரு பொறுப்பு இருக்கும். கட்சிக்காரனின் மனைவி என்பதைத் தவிர முக்கால்வாசிப் பெண் வேட்பாளர்களுக்கு எந்தப் பொறுப்பும் இருக்காது. தேர்தல் வெற்றிக்கு பிறகு தமது அதிகாரம் சார்ந்த வேலைகளை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக எந்த வேலைகளைச் செய்தார்களோ அதே வேலைகளைச் செய்வார்கள். 

அரசுக்கும் இதெல்லாம் தெரியும்தான். அவர்களுக்கு அது பிரச்சினையே இல்லை. கட்சிக்காரனுக்கு ஏதாவதொரு பதவி வழங்க வேண்டும். அவன் சம்பாதிக்க வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் என்பதற்கான அர்த்தம், நோக்கமெல்லாம் வெகுவாகச் சிதைந்து கொண்டிருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ வை விடவும் மாநகராட்சி கவுன்சிலருக்கு வருமானமும் அதிகம் கெத்தும் அதிகம். பெரிய கிராமப்புற பஞ்சாயத்து ஒன்றின் தலைவருக்கும் இருக்கும் வருமானத்தில் பாதி கூட நகர்ப்புற எம்.எல்.ஏவுக்கு இருப்பதில்லை. மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கூட வருமானம் இல்லாமல் இருந்த ஒரு மனிதர் பஞ்சாயத்து தலைவர் ஆகி இப்பொழுது ஸ்கார்ப்பியோவில் சுற்றுவதைப் பார்க்க முடிகிறது. ஆதரவற்றோருக்கான உதவித் தொகை வாங்கிக் கொடுப்பதற்குக் கூட பஞ்சாயத்து தலைவருக்கு ஆயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். குடிநீர்க் குழாய் அமைத்துக் கொடுப்பதிலிருந்து சிமெண்ட் சாலை அமைப்பது, பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் கை வைக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அதிகாரப் பகிர்வுகள் நிகழும். வேலைகள் பகிரப்படும் என்பதெல்லாம் கூட அதீதமான கற்பனை என்று தோன்றுகிறது. கீழ்மட்டம் வரைக்கும் அரசியல் அமைப்பைச் சிதைப்பதற்குத்தான் உள்ளாட்சி பதவிகள் பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. எங்கள் ஊரில் செல்வாக்கான மனிதரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘கட்சியெல்லாம் தாண்டி நல்ல பசங்களா பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து நிக்க வைக்கலாம்ங்கண்ணா’ என்றேன். ‘நிக்க வைக்கலாம்...ஆனா ஜெயிச்சு வந்த பிறகு மத்தவங்க கெடுத்துடுவாங்க.. நல்ல பத்துப் பேரை ஜெயிக்க வெச்சு நாமளே கெடுத்த மாதிரி ஆகிடும்’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். தனது பதவியின் வழியாக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த அமைப்பை புரிந்து தேர்தலில் நிற்பவரை வெல்ல வைக்க வேண்டுமே தவிர நாமாக ஒரு ஆளை நிறுத்தி வெல்ல வைப்பது என்பது பெரும்பாலும் கெடுதியில்தான் முடியும்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கிற தேர்தலில் ஆளுங்கட்சிதான் அள்ளியெடுப்பார்கள். அவசர அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் தேதியிலேயே அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. அன்றைய தினமே வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. அடுத்த வாரத்திற்குள் வேட்புமனுவுக்கான தேதி முடிவடைகிறது. எவ்வளவு அவசரம்? எதிர்கட்சிகள் தயாராவதற்கு அவகாசமேயில்லாமல் செயல்படுகிறார்கள். அப்படித்தான் செயல்படுவார்கள். தேர்தல் வரைக்கும் இனி இப்படித்தான் இருக்கும். பெரும்பாலான வார்டுகளையும் பஞ்சாயத்துக்களையும் கறுப்பு வெள்ளை சிவப்பு கரைவேட்டிகள்தான் ஆக்கிரமிப்பார்கள். அப்படியும் பதவி கிடைக்காத ஆட்களுக்கு கூட்டுறவு சங்கத் தேர்தல், பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தேர்தல் என்று நிறைய இருக்கின்றன. விதவிதமான பெயர்களில் வசதி பார்ப்பதற்கு தோதான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க இந்தத் தேர்தல்கள் அட்டகாசமாகப் பயன்படுகின்றன. 

உள்ளூரில் சில கட்சிக்காரர்களிடம் பேசினால் இப்பொழுதே கவுன்சிலர்களுக்கான பேரங்கள் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் கவுன்சிலர்கள்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். எந்தக் கட்சியில் நின்று ஜெயித்திருந்தாலும் சரி; காசை வாங்கிக் கொண்டு யாரை வேண்டுமானாலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம். ‘நீங்க நில்லுங்க....எலெக்‌ஷன் செலவை மொத்தமா நான் பார்த்துக்கிறேன்’ என்றும் சில தலைவர் வேட்பாளர்கள் பேசி வைத்திருப்பதாகச் சொன்ன போது எரிச்சலாக இருந்தது. செலவேயில்லாமல் வென்ற பிறகு அடுத்த ஐந்து வருடங்களுக்கு கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கலாம் என்பதுதான் கவுன்சிலர் கனவுகள்.

மாநிலம் முழுவதும் மாற்றங்களை உருவாக்கிவிட முடியாது. ஆனால் நம் வார்டுகளிலாவது சலனங்களை உருவாக்க முடியும். தேர்தல் வரும் வரைக்குமாவது விவாதிக்கலாம். கட்சி, அரசியல் என்பதையெல்லாம் தாண்டி வேட்பாளரை மட்டும் பார்க்கச் சொல்லி தெரிந்தவர்கள்டமெல்லாம் பேசலாம். வாட்ஸப்பில் எழுதலாம். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் உரையாடலாம். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து பத்தொன்பதாயிரம் பேர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். அதில் பத்து சதவீதம் பேராவது நல்லவர்களாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். இன்னுமொரு ஐந்து சதவீதத்தையாவது உரையாடல் வழியாகவும் விவாதங்களின் மூலமாகவும் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்போம். அவ்வளவுதான். வேறு என்ன?!

4 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அப்பட்டமான உண்மைகள்.

Siva said...

Namaku vidiyalae kidaiyaadha???

சேக்காளி said...

விடுங்க பாஸ். சட்டமன்ற தேர்தல்ல பேசி எழுதி கிழிச்சது போதும். அதெல்லாம் அரசியல் வாதிங்க பா(ர்)த்துக்குவாங்க.
நமக்கு கரண்டு கம்பி, பிரியாணி அண்டா ன்னு எதாவது மேட்டரு சிக்கும்.

Avargal Unmaigal said...

உங்களை ஒரு கவுன்சிலராக அல்லது எம் எல் ஏ களாக ஆக்கிடலாம் என நினைக்க தோன்றுகிறது ஆனால் ஒரு நல்லவரை கெடுத்த பாவம் நம்மை சும்மா விடாது என்று ஒரு பயம் வருகிறது