நிசப்தம் வலைப்பதிவு தொடங்கி பதினோரு வருடங்கள் முடிந்து பனிரெண்டாம் வருடம் தொடங்குகிறது. பேசலாம் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு இதே நாளில் எழுதத் தொடங்கியது. இதுவொன்றும் பெரிய சாதனை இல்லைதான். ஆனால் சந்தோஷமாக இருக்கிறது. பேசலாம் என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று ஞாபகமில்லை. ஆனால் இணையதளமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்த போது பேசலாம் என்பதற்கு எதிர்ப்பதமான சொல்லாக இருக்கட்டுமென்றுதான் நிசப்தம் என்ற பெயரைத் தேர்வு செய்தேன். பேசலாம் என்றிருந்த போது அதிகமாக எழுதவில்லை. நிசப்தம் என்ற பெயரைத் தேர்வு செய்தபின் அமைதியாக இருக்கவில்லை. நியூமராலஜி உண்மைதான் போலிருக்கிறது.
வழக்கம் போலவே முதல் வாழ்த்து திருப்பது மகேஷிடமிருந்து. ஒவ்வொரு வருடமும் ஞாபகம் வைத்து வாழ்த்திவிடுகிறார்.
எழுதுகிற காலம் முழுவதும் நாம் வாழ்கிற சமூகத்தில் நம் எழுத்து மூலமாக சிறு துரும்பை எடுத்துப் போட முடியுமென்றால் அது போதும். வெறுப்பரசியல், அடுத்தவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் அவலப் புத்தி, மேலே செல்கிறவர்களின் மீது எழக் கூடிய பொறாமை என்பவையெல்லாம் எனக்குள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நிசப்தம் ஒவ்வொரு கட்டமாக மாறிக் கொண்டேயிருந்திருக்கிறது. இந்த ஒவ்வொரு கட்டமும் தனியொருவனின் செயல்பாடு மட்டுமில்லை. எழுதுவது மட்டும்தான் நான். இப்பொழுது எதைச் செய்தாலும் அதைச் செய்துக் கொடுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் எந்த ஊரிலும் எதைப் பற்றியும் விசாரித்துக் காரியத்தையும் செய்து தருகிறார்கள். இவர்கள் எல்லாம் இல்லையென்றால் நிசப்தம் என்பது வெறும் வலைப்பதிவாக மட்டும்தான் இருந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும்.
நேற்றுக் கூட கடலூரில் முதற்கட்டமாக இருபத்தைந்து குடும்பங்களுக்கு வெள்ளாடுக்குட்டிகளை வழங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஓர் இணை ஆடுகள். ஒரு முறை கடலூர் சென்று சரிபார்த்துவிட்டு வந்து காசோலைகளை அனுப்பி வைத்திருந்தேன். பண்ணையைத் தேர்ந்தெடுத்து, பேரம் பேசி, பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கி, அவர்களை அழைத்து ஆட்டுக் குட்டிகளை வழங்கி ஒரு வாகனமும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். திருப்தியாக இருக்கிறது. இப்படியான பெரும் வேலைகளைச் சர்வசாதாரணமாக முடித்துத் தருகிற நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள்.
யாராவது எங்கேயாவது குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். விமர்சனம் செய்வார்கள். நேர்மையான விமர்சனம் என்றால் நம்மிடமே நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். பொருட்படுத்தலாம். மற்ற எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பாதையில் பயணித்துக் கொண்டேயிருப்போம். ஒத்து வரக் கூடியவர்கள் இணைந்திருப்பார்கள். இன்னமும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இப்போதைக்கு சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம். இப்படியே தொடரலாம்.
அடுத்த வருடம் என்ன செய்வதாகத் திட்டம் என்று கேட்டால் திட்டவட்டமான பதில் எதுவுமில்லை. தேங்கிவிடக் கூடாது. அவ்வளவுதான். தேங்குகிற நீரில்தான் நாற்றம் எழும். ஓடுகிற தண்ணீர் தனக்கான பாதையைத் தானாகத் தேடிக் கொள்ளும். ஓடிக் கொண்டே இருப்போம். ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ நமக்கான வேலை நம்மிடம் வந்து சேரும். வந்து சேர்கிற வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருப்போம்.
நம்பிக்கையுடன் உடனிருக்கிற, ஊக்குவிக்கிற, நன்மதிப்பு கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும் நன்றி. நன்றியைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
11 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள் மணி!
Congratulations. You are doing wonderful. Wish you peace and prosperity ever
MANY HAPPY RETURNS
உண்மையாக இருக்கும் பட்சத்தில் உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்திருந்தாலும் உங்கள் வலைப்பதிவின் மூலம் இன்னும் அழுத்தமாக உணர்கிறேன்.
அப்புறம் கொஞ்சம் குசும்பு
இதுக்கெல்லாம் பின்னால அந்த பன்னாட்டு கம்பெனி இருக்காமே!!!!!!!!!
எல்லோருக்கும் நல்லவனாக ஒருபோதும் இருக்க முடியாது. குறை காண்பவர்களை மாற்றவும் முடியாது. நல்ல காரியங்களை தொடந்து செய்யுங்கள், தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..!
தங்களின் தொடர்ந்த சேவைகளுக்காக,
வாழ்த்துகள்...!
Best wishes
இந்த கருத்து "வேர்ப்புள்ள'' பதிவுக்கானது. அனுஷ்கா வீட்டை தாண்டியும் தேடிட்டேன். எப்புடி உட்டேன்னே தெரில. எம்ப்புட்டு நல்ல மனுசங்க அந்த காலத்துகாரங்க. படுச்சுட்டு சிரிப்பு சிரிப்பா வந்துதுங்க.
என் அப்பாவை பத்தி சின்ன வயசுல கேட்டது.பக்கத்தூட்டுல ஒரு ஐயன் வெளில கைத்து கட்டில படுத்து தூங்குவாராமா. வில்லங்கம் புடுச்சவரு போல. ராத்திரி நடுசாமத்தில நாலுபேரு சேந்து தூக்கிட்டு போயி பக்கத்துல வெளையாடறதுக்கிருந்த கிரவுண்டுல கொண்டுபோய் வச்சுட்டு வந்துட்டாங்கலாம். காலை தூக்கம் கலைஞ்சு எந்திரிச்ச ஐயன் ...இன்னாருதா கொண்டுபோய் வச்சதுன்னு தெரியும்போல ஆனா கேட்கமுடியாம சாடை பேசிட்டே இருதாங்களாம். இப்பல்லாம் நெனைச்சு பாக்கவே பயமா இருக்கு. மனுசனுக்கு வர்ற கோவம் ஒரு விசயத்த பார்க்கற கோணம் எல்லாம், வெளையாட்டுத்தனம் எதார்த்தம் எல்லாத்தையுமே கொண்ருச்சு.
அட ங்கொப்புராணே இத எழுதறதுக்குல்லயே தாவு தீந்துருச்சு.
வாழ்த்துகள்.
அருமையான கவிதைகள்! மகுடேஸ்வரனின் கவிதையை மிகவும் ரசித்தேன்!
- http://mugilankavithaigal.blogspot.com/
வாழ்த்துகள்.....
Post a Comment