Feb 6, 2016

சிறுபூக்கள்

சில மனிதர்கள் சில காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அதில் பெரிய லாபம் எதுவுமிருக்காது. என்றாலும் செய்வார்கள். ஒருவிதமான திருப்தி மட்டும்தான் காரணமாக இருக்கும். சிற்றிதழ் நடத்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். காசு சேரும் போது ஓர் இதழைக் கொண்டு வந்துவிடுவார்கள். காசு இல்லாத போது கடன் வாங்கி இதழ் கொண்டு வருவார்கள். 

பாஷோ இரண்டாவது இதழ் வந்திருக்கிறது. சிற்றிதழ்- சின்ன சைஸ் இதழ். பத்தாம் வகுப்பு கணக்கு ஏட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முடியும். இதழ் முழுவதும் கவிதைகள்தான். குட்டிக் குட்டிக் கவிதைகள். அனைத்தையும் ஹைக்கூ என்று சொல்ல முடியாது. ஹைக்கூவுக்கென சில வரையறைகள் இருக்கின்றன. வரையறைகள் பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். அலட்டலும் புரட்டலும் இல்லாமல் வாசகனுக்கு நல்ல அனுபவத்தைக் கடத்துகிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.

பாஷோ- அது என்ன சிற்றிதழுக்கு பாட்ஷா, மாணிக்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் குழப்பமாகத்தான் இருந்தது. Matsuo Basho. ஜப்பானில் வாழ்ந்தவர். இத்தகைய கவிதைகளைப் பிரபலப்படுத்தியவர். அதனால் அவர் பெயரையே இதழுக்கும் வைத்துவிட்டார்கள். கோயமுத்தூரிலிருந்து வருகிறது. சிற்றிதழ் என்றால் எப்பொழுதும் முந்நூறு பிரதிகள்தான் அச்சடிப்பார்கள். இவர்கள் ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் போய்ச் சேர்ந்துவிடும். எனக்கு மட்டுமே ஏழு பிரதிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள். அவ்வளவு தாராளம். 

இதழிலிருந்து சில கவிதைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

அஸ்தியைக் கரைக்கப் போகிறேன்
இனி கடல்தான் 
என் அம்மா

- அய்யப்ப மாதவன்

இதழில் ராஜ் பிரின்ஸ் எழுதிய இன்னொரு கவிதையும் மிகப் பிடித்திருந்தது.

முட்டைக்கண் ஐயனார்
காலடியில் குதித்தோடும்
குட்டித் தவளை.

ஐயனாரைப் பார்த்தால்- அதுவும் முட்டைக்கண் ஐயனாரைப் பார்த்தால் நமக்குத்தான் பயம். குட்டித் தவளைக்கு என்ன பயம்? வெகு நேரம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

செதுக்கிய பின் புத்தன்
அதற்கு முன் கல்
ஒரே அமைதி

- இதுவும் அய்யப்ப மாதவனின் கவிதைதான்.  இதழ் முழுக்கவும் இத்தகைய கவிதைகள்தான். 

கவிஞர் மனுஷ்ய புத்திரனின் அருந்தப்படாத கோப்பை தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்.

அவ்வளவு பெரிய மைதானத்தில்
யாருமே இல்லை
ஒரே ஒரு பறவை வந்தமர்கிறது
ஒரு மைதானம் முழுக்க 
ஒரே ஒரு பறவையின் நிழல்
விழுந்து கொண்டிருக்கிறது

ஆழ்ந்த வெறுமையொன்றில் பறவையின் நிழல் மட்டும் இருக்கிறது - இதுதுதான் கவிதை. ஒரு காட்சியை மட்டும் சொல்லிவிட்டு கவிதை அமைதியாகிவிடுகிறது. அதன் பிறகு அந்தக் காட்சி உருவாக்கும் கொதிநிலை நம் மனம் முழுவதும் பரவுகிறது. மனம் அலை மோதுகிறது. எதையெல்லாமோ சிந்திக்கிறது. மேற்சொன்ன அத்தனை கவிதைகளுக்கும் இது பொருந்தும்.

இத்தகைய கவிதைகளை வாசிக்கும் போது அமைதியான சூழல் முக்கியம். டிவி, அடுத்தவர்களின் பேச்சு என எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஓரிடத்தில் தனித்து அமர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழலில் ஒரேயொரு கவிதையை மட்டும் வாசித்துவிட்டு இதழை மூடிவிட்டு மனதை யோசிக்க அனுமதிக்க வேண்டும். மணிக்கணக்கில் மனம் யோசிக்கும். உதாரணமாக அம்மாவின் அஸ்தி கரைக்கப்பட்ட கடல் என்ற ஒரு கவிதையை எடுத்துக் கொள்ளலாம். நம்மை வெகுவாக யோசிக்கச் செய்துவிடும். 

வீட்டிற்கு பக்கத்தில் அபார்ட்மெண்ட் ஒன்றின் கழிவு நீர் கலந்து செத்துக் கொண்டிருக்கும் ஏரி ஒன்றிருக்கிறது. அதன் கரையில் அமர்ந்து இந்த இதழை வாசித்த இன்றைய தினத்தை முழுமையாக உணர்கிறேன். 

சிற்றிதழ்களில் சமரசம் என்பது இருக்கவே கூடாது. இந்த இதழில் சில இடங்களில் சமரசம் செய்து கொண்டது போலத் தெரிகிறது. சில கவிதைகளின் தேர்வு சரியானதாகப்படவில்லை. பக்கங்களை நிரப்புவதற்காகவோ அல்லது கொடுத்துவிட்டார்கள். எப்படி பிரசுரிக்காமல் விட முடியும் என்பதற்காகவோ சில கவிதைகளைப் பிரசுரித்திருப்பது போலத் தோன்றியது. தமிழில் முழுமையாக கவிதைக்கென இதழ்கள் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது எவ்வளவுக்கு எவ்வளவு கனம் மிகுந்ததாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. நல்ல கவிதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பக்கங்களின் எண்ணிக்கையைத் தயக்கமேயில்லாமல் குறைத்துக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இந்த ஒரு குறையை மட்டும் அடுத்த இதழில் சரி செய்துவிடுவார்கள் என நம்பலாம்.

இதழின் வடிவமைப்பு, காகிதத்தின் தரம், ஓவியங்கள் என எதையும் குறை சொல்ல முடியாது. தூள் கிளப்பியிருக்கிறார்கள். எனக்கு வந்திருக்கும் ‘பாஷோ’ இதழின் ஏழு பிரதிகளில் ஒரு பிரதியைத் தவிர மீதமிருக்கும் ஆறு பிரதிகளை பெங்களூர் நண்பர்களுக்குக் கொடுத்துவிட முடியும். தேவைப்படுகிறவர்கள் பெங்களூரில் ஏதாவதொரு இடத்தில் சந்தித்து வாங்கிக் கொள்ளலாம். கூட்லு கேட் வீட்டிற்கு வந்தாலும் சரி; எம்.ஜி.சாலையின் கும்பகோணம் டிகிரி காபி கடைக்கு வந்தாலும் சரி. அரை மணி நேரமாவது பேசிவிட்டுச் செல்கிற மாதிரி திட்டமிட்டு வரவும்.

வெளியூர்க்காரர்கள் tamilhaiku@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதிக் கேட்டால் அனுப்பி வைப்பார்கள் என நினைக்கிறேன். 

கடைசிப் பக்கத்தில் ஒரு ஜென் கவிதை இருந்தது. 

வரும் வழியில் புத்தரைக் கண்டால் கொன்றுவிடு;
ஏனெனில் நீயே புத்தர்.

மனதுக்குள் அரித்துக் கொண்டேயிருக்கிறது. 

2 எதிர் சப்தங்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இதழ்பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்துத்துள்ளீர்கள் நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.தகவலுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

அருமை அருமை கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். கமல் பாராட்டிய மகுடேசுவரனின் அபத்தக் கவிதை போல் இல்லாமல்.. வாசிப்பவனை சிந்திக்க வைக்க வேண்டும். அவனது உணர்வு நிலையை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். ஒஅரு கணமேனும் அவன் தன்னை மறந்து அந்த கவிதைக்குள், அது காட்டும் உலகுக்குள் சொல்ல வேண்டும்.

ஒரு பானை இட்லிக்கு ஒரு இட்லி பதமாக இந்தக் கவிதைகள் உள்ளன.

இந்த இதழில் கவிதைகள் எழுதிய கவிஞர்களுக்கும், இதழின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கும் என் நன்றிகள்!