Jun 2, 2015

ஆர்.கே.நகர்

அடுத்த முறை தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்று கேட்டால் அதிமுகவைத் தவிர வேறு யாராவது வரட்டும் என்று சொல்லத்தான் ஆசையாக இருக்கிறது. ஆனால் அவர்களேதான் மீண்டும் ஆட்சியமைப்பார்கள் போலிருக்கிறது. ஊரில் எந்தக் கட்சி சார்புமில்லாமல் உதிரியாக இருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். ‘அவியதான் வருவாங்களாட்ட இருக்குது’ என்கிறார்கள். அவிய என்பது அதிமுகவை. ‘ஏன்’ என்று கேட்டால் திமுக ஊழல் நிறைந்த கட்சி என்கிறார்கள். உண்மையில் ஊழலில் திமுகவுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததில்லை அதிமுக. ஆனால் பிரச்சினை என்னவென்றால் மக்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை. கடந்த நான்காண்டுகளில் எந்த அமைச்சரும் பெரிய அளவில் வாலாட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. ‘எவனா இருந்தாலும் தட்டுவேன்’ என்கிற சூழல் இருந்து கொண்டிருப்பதால் கடந்த ஆட்சியில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் செய்த அக்கிரமங்களைப் போல எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. சென்ற திமுக ஆட்சியின் போது எங்கள் மாவட்டச் செயலாளர் இடப்பிரச்சினையொன்றில் ஒரு குடும்பத்தையே கடத்திச் சென்று அடித்து உதைத்ததாகவெல்லாம் பேச்சு உலவியது. இன்னமும் கூட அதைத் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். எங்கள் மாவட்டச் செயலாளர் மட்டுமில்லை தமிழகம் முழுவதுமே நிலைமை அப்படித்தான் இருந்தது.

இந்த ஐந்தாண்டுகளில் குறுநில மன்னர்கள் ஒழிக்கப்பட்டு ஏக்ராட் சாம்ராட் என்கிற நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் வளர்ச்சி என்று பார்த்தால் கடந்த நான்காண்டுகளில் புதிய தொழிற்திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. விவசாயத்திற்கென எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அரசு வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால் கமுக்கமாக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்துத் துறை படு மோசமாகியிருக்கிறது. இப்படி சகலத்தையும் சுட்டிக் காட்டலாம்தான். ஆனால் இது எதுவும் சாமானியனின் காதுகளை எட்டியதாகவே தெரியவில்லை. அம்மா உணவகம், இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர் போன்றவைதான் அவர்களின் கண்களை மறைக்கின்றன. இலவச திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது என்றாலும் ஊடகங்களால் வெளிச்சமாக்கப்பட்ட திமுகவின் குடும்ப கட்சி என்கிற இமேஜ், ஸ்பெக்டரம் ஊழல், மாறன் குடும்பங்களின் சொத்துச் சேகரிப்பு போன்ற எதிர்மறையான விவகாரங்கள் திமுகவின் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கபளீகரம் செய்துவிட்டது. 

அதிமுக ஆட்சி குறித்து ஏன் ஊடகங்கள் வாயைத் திறப்பதேயில்லை என்று கேட்கலாம்தான். பயம்தான் காரணம். ‘அந்தம்மாகிட்ட ஏன் வம்பு?’ என்கிற தயக்கம்தான். 

இந்த இடத்தில் எழுத்தாளர் வாஸந்தியின் விவகாரம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயலலிதா குறித்தான புத்தகம் ஒன்றை பெங்குவின் பதிப்பகத்திற்காக எழுதியிருந்தார். நிறைய தரவுகளைச் சேகரித்து எழுதி முடிக்கப்பட்ட புத்தகம் அது. அச்சு வேலை கூட முடிந்துவிட்டது. புத்தகம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக புத்தகம் பத்திரிக்கையொன்றில் பற்றிய முன்னோட்டம் வெளிவரவும் அதையே காட்டி நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கிவிட்டார்கள். செலவு செய்து, நாட்களை விரயமாக்கி கோர்ட் படியேறுவதற்கு பதிப்பகமோ, எழுத்தாளரோ தயாரில்லை. அந்தப் புத்தகம் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டது. இனி எந்தக் காலத்திலும் அந்தப் புத்தகம் வெளி வரப் போவதில்லை. பிரச்சினை அதுவன்று. அதோடு வாஸந்தியின் எழுத்து முற்றாக நின்று போய்விட்டது. எந்தப் பத்திரிக்கையும் அவருடைய எழுத்துக்களிளுக்கு இடமளிப்பதில்லை. ‘வாஸந்தியின் எழுத்தை பிரசுரம் செய்யக் கூடாது’ என்று யாரும் சொல்லியிருப்பார்கள் என்றெல்லாம் நம்பவில்லை. மேலிடத்துக்கு ஆகாதவர்களின் எழுத்தை பிரசுரித்து எதுக்கு தேவையில்லாத வம்பை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலைதான் காரணம். நடிகர் வடிவேலுக்கு ஏன் படங்களே கிடைக்கவில்லை? வடிவேலாவது பிரச்சாரங்களின் போது நாக்கை அளவுக்கு மிஞ்சி நீட்டினார். ஆனால் வாஸந்தி எழுதிய புத்தகத்தில் எதிர்மறையான விஷயங்கள் எதுவும் இல்லை போலிருக்கிறது. வாஸந்தியும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். என்றாலும், அவரது விளக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்குதான். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் நிலவும் இந்த பயம்தான் அதிமுக ஆட்சி பற்றிய எந்த எதிர்மறையான தகவலும் மக்களிடம் சென்றுவிடாமல் பாதுகாத்துவிடுகிறது. சன் டிவியே கூட அடக்கித்தான் வாசிக்கிறது என்னும் நிலையில் தினத்தந்தி பற்றியெல்லாம் கேட்க வேண்டுமா என்ன?

தேர்தலுக்கு ஒரு வருடம்தான் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே விதவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அம்மா உணவகங்கள், அரசுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் என்று வருடம் பூராவும் திறந்து வைக்க ஏதாவது இருந்து கொண்டேயிருக்கிறது. இன்று கூட தமிழகத்தின் மின்வெட்டு முற்றாக நீக்கப்படுகிறது என்றும் நிலைமை முற்றாகச் சீரடைந்துவிட்டது என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மக்களுக்கு இத்தகைய செய்திகள் மிகப் பிடிக்கும். கடந்த ஏழெட்டு மாதங்களாக இருந்த அனாதரவான ஆட்சியை மறந்துவிடுவார்கள். ‘அம்மா ஆட்சிக்கு வந்தா எல்லாம் மாறிவிடும்’ என்கிற பாஸிடிவ்வான எண்ணத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது. 

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக திமுக மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ் ஆட்சி உருவாக்கியிருந்த மங்கலான சூழலின் காரணமாகத் திமுகவின் தொண்டர்களும் சற்று நம்பிக்கையோடு இருந்தார்கள். இந்தத் தருணத்தி ஆர்.கே.நகர் தேர்தலை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போது முதல் ஆளாக போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு கலைஞர் படுத்துவிட்டார். பிற அரசியல் கட்சிகளும் வரிசையாக புறக்கணிக்கிறோம் என்று குப்புற படுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொது வேட்பாளர் என்கிற நிலைமை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காணவில்லை. எப்படியும் புரட்சித் தலைவி வரலாறு காணாத வெற்றியடைவார் என்கிற மாதிரிதான் தெரிகிறது. இப்பொழுதே அமைச்சர்கள் கும்பிடு போட்டபடி தெருக்களில் இறங்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்களின் அசுரபலத்துக்கு முன்பாக ட்ராபிக் ராமசாமியால் ஈடு கொடுக்க முடியாது. மற்ற கட்சிகள் எப்படியோ போகட்டும் திமுக களத்தில் இறங்கி தனது பலத்தைக் காட்டியிருக்க வேண்டாமா? ஆளுங்கட்சி என்பதைத் தாண்டி அதிமுக எந்தவிதத்தில் பலம் வாய்ந்த கட்சி? ஜெயலலிதா தன்னை வேட்பாளாராக அறிவித்துக் கொள்வதற்கு முன்பாகவே திமுக சார்பில் ஸ்டாலின் வேட்பாளாராகக் களமிறங்குவார் என்று அறிவித்திருந்தால் நிலைமை எப்படி மாறியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே உற்சாகமாக இருக்கிறது. 

ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலில்- அதுவும் முதலமைச்சரே வேட்பாளராக நிற்கும் தேர்தலில் கூட அத்தனை அமைச்சர்களையும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக்கி சென்னை மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏக்கள் என கிட்டத்தட்ட ஐம்பது பேரை ஆர்.கே.நகர் போன்ற சிறிய தொகுதியில் இறக்கியிருக்கிறார்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு உள்ளூர பயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? எதிரி பயப்படும் போது தனது மொத்த பலத்தையும் திரட்டி அடிப்பவன்தான் உண்மையான வீரனாக இருக்க முடியும். ஆளுங்கட்சி காட்டும் அதே பலத்தை திமுகவினால் காட்டியிருக்க முடியாதா என்ன? திமுகவில் மொத்தம் அறுபத்தைந்து மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் திரட்டியிருக்க வேண்டும். ஸ்டாலினின் மதுரைக் கூட்டத்துக்கு ஐந்து லட்சம் பேர்கள் திரண்டிருக்கிறார்கள். அந்த இளைஞர் குழாமில் ஒரு சதவீதத்தை இந்தத் தேர்தல் பணிக்கு மடை மாற்றியிருந்தால் கூட ஆர்.கே,நகர் கதிகலங்கியிருக்கும். ஏன் செய்யவில்லை என்று புரியவில்லை. அழகிரியின் கோட்டையில் தனக்கு பலம் இருக்கிறது என்பதைக் காட்டுவதைவிடவும் தமிழகத்தில் எந்த இடத்திலும் தனக்கு பலமிருக்கிறது என்று காட்ட வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உருவாகியிருக்கிறது. ஆனால் அவர் கூட்டம் சேர்ப்பது மட்டும்தான் களப்பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆளுங்கட்சியிடம் பணபலம் இருக்கிறது என்பதெல்லாம் சொத்தை வாதம். திமுகவிடம் பணம் இல்லையென்று சொன்னால் யார் நம்புவார்கள்? ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒரு கோடி ரூபாயாவது புரட்ட முடியும். மீதிப் பணத்தை தலைமை கொடுத்திருக்கலாம். அதிமுகவால் என்ன செய்திருக்க முடியும்? சரி அதெல்லாம் வேண்டாம். ஸ்டாலின் நிற்கவே வேண்டாம். தனது நெஞ்சில் ஸ்டாலின் படத்தை பின்னூசியால் குத்திக் கொண்டு அலையும் ஒரு தொண்டனின் படத்தை பகிர்ந்து ‘இதுதான் திமுக’ என்று ஜெ.அன்பழகன் பெருமை பேசினார் அல்லவா? அப்படியொரு தொண்டனை நிறுத்த வைத்திருக்கலாம். பஞ்சர் கடைகளிலும் சலூன்களிலும் டீக்கடைகளிலும்தானே திமுக வளர்ந்தது? அப்படியொரு அடிமட்டத் தொண்டனை நிறுத்தச் செய்து  ‘யானையின் காதில் புகப் போகும் இரண்டாவது எறும்பு’ என்று அறிமுகப்படுத்தில் தெருத்தெருவாக இறங்கியிருந்தால் போதும். ஒரு காலத்தில் காங்கிரஸின் மிட்டா மிராசுகளையும் பண்ணையார்களையும் ஜமீன்களையும் எதிர்த்து நின்ற திமுக கரைவேட்டிகள் எல்லோரும் அடிமட்டத் தொண்டர்கள்தானே? இப்பொழுது ஏன் தயங்குகிறார்கள்? அண்ணாவிடமும் ஆரம்பகட்ட கருணாநிதியிடமும் இருந்த போர்க்குணம் வீரமும் ஸ்டாலினிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? தேர்தலில் வெல்வது அல்லது தோற்பது என்பது இரண்டாம்பட்சம். அதிமுக வென்றாலும் கூட ‘வோட்டுக்கு பணம் கொடுத்தாங்க’ என்று மக்கள் பேசுவார்கள். ஆனால் இப்படியொரு அடிமட்டத் தொண்டனை இறக்கி வாக்கு வித்தியாசத்தை பெருமளவு குறைத்து ஒரு கிலியைக் காட்டியிருக்கலாம். ஆனால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதில் அரசியல் சாணக்கியத்தனம் என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை. மற்றக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்து காசை செலவு செய்யாமல் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் திமுக போன்ற புஷ்டியான கட்சி தேர்தலை புறக்கணிக்கிறேன் என்ற பெயரில் வாய்ப்பைத் தவறவிடுவது மாபெரும் தவறு. அடுத்த ஐந்தாண்டுகளின் வரலாற்றை மாற்றி எழுதப் போகும் வரலாற்றுத் தவறாக இது இருக்கப் போகிறது.

6 எதிர் சப்தங்கள்:

Vinoth Subramanian said...

By election la ennellam nadakkumnu dmk team kum athoda leader kum therinjirukkum nu nenaikkiren sir. Because avangalum avanga aatchi la irunthappa ullatchi therthal, by election la eppadi seyalpattiruppanganu avangalukkum theriyumthan nenaikkiren. athayethan ivangalum seyvanga nu dmk opinion ah irukkalamungaruthu en purithal. eppadi pathalum, rendu perukkum konjam bayam irukku enpathuthan unmai. dmk ku konjam athigama irukkunu sollalam. admk contestant ku ethira oruthangala nikka vechi irukkalamthan. romba strong ah oruthara nikkavechi irukkalam. stalinaye kooda nikkavechi irukkalam. thothutta? antha bayamakooda irukkalam. athu next year varapora mla election ah baathikkumnu nenaikkirangalo ennavo. admk va jeykkanumna ippo irukka nelamaila strong ah oru katchi venum. illati dmk strong ah aaganum. engayachum ethachum athisiyam nadanthu, supreme court high court verdict ah cancel panna... antha vaasanthi ma'am nenachathan romba kashtama irukku.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அந்த ஊரில் நான் திமுக என்று சொல்லிக் கொள்பனைப் பார்த்து மக்கள் கேட்பார்கள் பயந்துட்டீங்களான்னு என்ன பதில் அவனுக்கு கட்சி சொல்லும் ?

Anonymous said...

ஹை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட பின் எழுதிய கட்டுரை போல் தெரியைல்லை. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் என்கிற கர்நாடக அரசின் முடிவு, அ தி மு க விற்கு அப்படி ஒன்றும் அடுத்த ஆண்டு பொது தேர்தல் சுலபமாக அமையும் என்று தோன்றவில்லை. இரண்டு திராவிட கட்சிகளில் எது வந்தாலும், என்ன பெரிய வித்தியாசம் ? அம்மா இலவசத்திற்கு பதில் ஐயா இலவசம், அவ்வளவுதானே ? இவை இரண்டும் இல்லாமல், மூன்றாவதாக ஒரு சக்தி பெரிய அளவில் வளரும் சூழ்நிலை இல்லாதவரை, தமிழக அரசியல் இவர்களின் ஆட்டத்தை தான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். கிடைத்த ஒரு வாய்ப்பை விஜயகாந்த் முதிர்ச்சியில்லாமல் தொலைத்து விட்டார். இங்கே தேறுவது கஷ்டம் தான் என்று பி ஜே பி முடிவு செய்து விட்டதாக தோன்றுகிறது. எந்த காலத்திலுமே ஒரு உருப்படியான கட்சியாக ஆகும் நிலையே இல்லாத காங்கிரஸ் (தமிழகத்தில்).

ஆரம்ப கால துடிப்பின், உத்வேகத்தின் காரணம் சூறாவளியாக வளர்ந்த தி மு க மறைந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஆட்சியில் அமர்ந்து, ஊழலில் கொழுத்த, நம்ப முடியாத அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் தலைவர்கள் தான் இன்று அந்த கட்சியில். போர்குணமாவது, வீரமாவது... சுயநலம் மட்டுமே இன்று குறிக்கோள். நிலைமை சாதகமாக, தானாக மாறாதா என்று காத்திருப்பது தான் ஒரே திட்டம்.

சேக்காளி said...

இருக்கறத ஏன் இழக்கணும்? ங்கற மனநிலை.பணம் சொகுசான வாழ்க்கை என்ற இலக்கை அடைந்த பின் எதை இலக்காக கொள்வது?.

சேக்காளி said...

//அதிமுக ஆட்சி குறித்து ஏன் ஊடகங்கள் வாயைத் திறப்பதேயில்லை என்று கேட்கலாம்தான். பயம்தான் காரணம். ‘அந்தம்மாகிட்ட ஏன் வம்பு?’ என்கிற தயக்கம்தான்.//
பெறவு எதுக்கு?

Shankar said...

Dear Mani,
Very well analysed and written article.
I dont know why people are so scared about the ADMK supremo. I think they have themselves overrated the adversary.
The political scenario is very confused in Tamilnadu. Unless some major realignment takes place, nothing is going to change.
The only hope DMK harbours now is that the supreme court verdict may go their way. The High court verdict favoring JJ has deeply upset the DMK leadership.