Jun 1, 2015

ஃபெட்னா- ஒரு கோரிக்கை

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஃபெட்னா அமைப்பினர் ஒரு விழாவை நடத்துகிறார்கள். இந்த வருடம்  ஜூலை மாதம் 2,3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடக்கிறது.. அமெரிக்க மற்றும் கனடா வாழ் தமிழர்கள் நிறையப் பேர் கலந்து கொள்வார்களாம். சமீபத்தில் பழனிசாமி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் காங்கேயத்துக்காரர்தான். இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார். ‘நிசப்தம் அறக்கட்டளை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை ஃபெட்னாவில் செய்யலாம்’ என்றார். இது குறித்து ஃபெட்னா அமைப்பாளர்களிடம் தான் பேசுவதாகவும் இதில் உங்களுக்கு ஏதாவது மனத்தடை இருக்கிறதா என்று கேட்டிருந்தார். 

எனக்கு என்ன மனத்தடை இருக்கப் போகிறது? இந்தத் தகவல்கள் நிறையப்பேரிடம் போய்ச் சேர்ந்தால் நல்லதுதான். ‘இப்படியெல்லாம் யாராவது கேட்பதே சந்தோஷமாக இருக்கிறது...என் பக்கத்திலிருந்து என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்’ என்று கேட்டு அனுப்பியிருந்தேன். அவர் தன்னுடைய கருத்துக்களாக சிலவற்றைச் சொல்லியிருக்கிறார்.

நிசப்தம் அறக்கட்டளை குறித்தான தகவல்களை அச்சிட்டு அதை பார்வையாளர்களிடம் விநியோகிக்கலாம் என்பதுதான் முக்கியமானது. ஆனால் இதைச் செய்வதற்கு ஆள்பலம் வேண்டும். பெங்களூர், சென்னையாக இருந்தால் பிரச்சினையில்லை. அமெரிக்காவில்- Bay Areaவில்- அதுவும் ஃபெட்னாவில் கலந்து கொள்ளும் ஆர்வலர்கள் கிடைப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை யாராவது கலந்து கொள்வதாக இருந்தால்- அதே சமயம் இந்த உதவியைச் செய்வது சரியான காரியம் என்று நினைத்தால் தெரியப்படுத்தவும். எந்தத் தகவல்களை அச்சிடுவது என்பது குறித்தெல்லாம் பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மேலே இருக்கும் காரியத்தைச் செய்வதற்கு ஃபெட்னா அமைப்பாளர்களிடம் அனுமதி தேவையில்லை போலிருக்கிறது. ஒருவேளை அவர்கள் அனுமதி கொடுத்தால் நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரைக்கும் யாராவது மேடையில் பேசலாமாம். அப்படி மேடையில் பேசுவதற்கு  யாரும் இல்லையென்றால் ஒரு வீடியோ படத்தை ஓட்டலாம். அதிர்ஷ்டவசமாக அனுமதி கிடைத்தாலும் கூட இந்த இரண்டுமே கஷ்டமான காரியம்தான் என்று நினைக்கிறேன். ஒரு மாத கால அவகாசத்தில் ஆறேழு நிமிடங்கள் ஓடக் கூடிய படம் ஒன்றைத் தயாரித்துத் தருவதற்கு யாராவது முன்வருவார்களா என்று தெரியவில்லை. அப்படி முன்வரும் பட்சத்தில் உதவி பெற்றவர்களைச் சந்திக்க கோயமுத்தூர், மதுரை, சென்னை போன்ற சில இடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும். அனைத்தும் ஒத்து வருமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

இது போன்ற செயல்கள் விளம்பரமாகக் கூடத் தெரியலாம். ஆமாம். இது விளம்பரம்தான். இல்லையென்றெல்லாம் மறுக்கவில்லை. ஆனால் வருகின்ற கோரிக்கைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் நிறையப் பேரிடம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தான தகவல்களை எடுத்துச் சென்றாக வேண்டியதன் அவசியம் புரிகிறது. இல்லையென்றால் பாதிப்பேருக்குக் கூட உதவ முடியாது.

நேற்றிலிருந்து ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ரவிச்சந்திரன் என்று பெயர். அவருடைய மனைவி மலர்விழிக்கு ஏழு மாத கர்ப்பம். கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் மஞ்சட்காமாலை நோய் தாக்கியிருக்கிறது. வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துவிட்டார்கள். இப்பொழுது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. அதோடு நின்றிருந்தால் பிரச்சினையில்லை. சமாளித்திருப்பார்கள். ஆனால் அந்தப் பெண்மணிக்கு ஈரலில் புற்று. அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுத்தாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவரால் பிரச்சினையை விவரமாகக் கூடச் சொல்லத் தெரியவில்லை. கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருக்கிறார்கள். குடும்பம், அவர்களின் நிதி ஆதாரம் போன்ற விவரங்களை தலைமையாசிரியர் தாமஸ் விசாரித்துச் சொல்லியிருக்கிறார். மிகுந்த சிரமப்படும் குடும்பதான். ரவிச்சந்திரனுக்கு எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. ஆனாலும் விதி விளையாடியிருக்கிறது. இந்தக் குடும்பத்தைச் சந்திப்பதற்காக சபரி என்கிற நண்பர் இப்பொழுது மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவர் தகவல் தெரிவித்தவுடன் காசோலை அனுப்ப வேண்டும். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழல். அந்தக் குழந்தையை நினைத்தால் நெஞ்சுக்குழி அடைக்கிறது. அம்மாவுக்கு ஏதாவதென்றால் என்ன செய்யும் அந்தக் குழந்தை? 

எதிர்பாராத அவசர சிகிச்சை. உதவச் சொல்கிறார்கள். எப்படி மறுக்க முடியும்? முன்பே சொன்னது போல இத்தகையை அவசரத் தேவைகள் எல்லாம் சில உதாரணங்கள்தான். இன்னமும் எவ்வளவு தொகை வந்தாலும் தேவை இருந்து கொண்டேயிருக்கும். நம்மால் முடிந்தளவுக்குச் செய்யலாம்தான். ஆனால் இன்னமும் சற்று விரிவாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதனால்தான் ஃபெட்னா போன்ற நிகழ்வுகளில் அறக்கட்டளை குறித்தான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென பழனிசாமி சொன்ன போது எதையும் மறுக்கவில்லை. கொஞ்சம் சிரமம் அதிகரிக்கும்தான். ஆனால் வாய்ப்பும் வசதியும் வாய்த்திருக்கும் போது அடுத்தவர்களுக்காகச் சிரமப்படுவதில் தவறேதுமில்லை. தம் கட்டி இழுத்துவிடலாம். 

நன்றி.

vaamanikandan@gmail.com

5 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

மணிகண்டன் அண்ணா, அந்த விழாவின் பெயரை ஆங்கிலத்திலும் குறிப்பிடவும், நண்பர்களுக்கு தெரியபடுத்த உதவும், தமிழில் கூகுளில் தேடி எடுத்து விவரம் அனுப்ப முடியவில்லை. மன்னிக்கவும்.

Anonymous said...

http://www.fetna2015.org/#tamilvizha

Vaa.Manikandan said...

நன்றி சரவணன். ஃபெட்னாவின் இணையத்தளத்துக்கான இணைப்பை இப்பொழுது சேர்த்திருக்கிறேன்.

Saravanan Sekar said...

துரிதமான பதிலுக்கு நன்றி, அண்ணா ...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நிச்சயம் சாதிக்கலாம் .