Mar 12, 2015

எங்கேயிருந்து வந்தது இவ்வளவு வன்மம்?

சுந்தர் என்றொரு மனிதர் இருந்தார். இப்பொழுது இல்லை. புற்று நோய்க்கு இரையாகிவிட்டார். சொந்தக்காரர் வீட்டில் வேலைக்கு இருந்தார். வீட்டு வேலைதான். ஆனால் காலங்காலமாக அதே வேலைதான். சிறு வயதிலேயே சேர்த்துவிட்டார்கள். ஆரம்பத்தில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர் நாளாக நாளாக சமையல் கற்றுக் கொண்டு ஆஸ்தான சமையல்காரர் ஆகிவிட்டார். புகையிலைப்பழக்கம் உண்டு. எந்நேரமும் வாயில் அடக்கி வைத்திருப்பார். குழந்தை, குடும்பம் என்று எதுவுமில்லை.  எந்த நம்பிக்கையில் இப்படியே மொத்த வாழ்க்கையையும் ஓட்டினார் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். அவரிடம் நேரடியாகக் கேட்க முடியாது. எப்படியும் நாற்பது அல்லது ஐம்பது வருடங்கள் மூத்தவராக இருப்பார் என்பதால் சற்று தயக்கமாக இருக்கும்.

அவர் இல்லாமல் அந்த வீட்டில் ஒரு வேலை நடக்காது. எதுவாக இருந்தாலும் சுந்தர் முன்னாடி நிற்பார். மூன்று வேளையும் சோறு போட்டுவிடுகிறார்கள். காய்கறி வாங்குவதிலிருந்து மளிகைச் சாமான் வாங்குவது வரை அவர் பன்னாட்டுத்தான். யாரும் கேள்வி கேட்பதில்லை. கணக்கு வழக்கு பார்ப்பதில்லை. சோப்பு சீப்பிலிருந்து உடுப்பு வரைக்கும் அத்தனையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அப்புறம் என்ன தேவை? காசு வாங்கி சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பு அவருக்கு இருந்திருக்கக் கூடும். வீட்டு வேலை முடிந்தவுடன் ஆசாரத்தில் படுத்து ஒரு தூக்கம் போடுவார். மாலையில் சுற்றுவட்டாரம் முழுவதும் நடந்து ஊர் விவகாரங்கள் பூராவும் தெரிந்து கொள்வார். 

நல்ல வாழ்க்கைதானே?

ஆனால் இப்பொழுதெல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது பெரிய சிரமம். அப்படியே கிடைத்தாலும் நிறையக் காசு கேட்கிறார்கள். மகி பிறந்திருந்த சமயம் பெங்களூரில் நம்பிக்கையான ஆட்களை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. எங்கள் ஊரிலிருந்தே பாப்பாய்யா என்றவரை அழைத்து வந்திருந்தோம். மூன்றே வாரங்கள்தான். ‘என்னைக் கொண்டு போய் விட முடியுமா?’ என்று குறுக்கே திரும்பிவிட்டார். அவரை வைத்துக் கொள்ளத் தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டோம். 

ஒரு சத்திரத்துக்கு இப்படியான ஆள் கிடைப்பது பற்றிய கதைதான் ஞானப்பால்- ந.பிச்சமூர்த்தியின் கதை. அழியாச்சுடர் தளத்தில் கிடைக்கிறது.

தவசிப்பிள்ளை ஒரு சத்திரத்துக்கு மேலாளர். சர்வாதிகாரி. அவன் வைத்ததுதான் சட்டம். அந்த சத்திரத்துக்கு லிங்கங் கட்டி வந்து சேர்கிறான். கழுத்தில் லிங்கத்தை கயிறு கோர்த்துக் கட்டியிருப்பதால் அந்தப் பெயர். லிங்கங் கட்டிக்கு போக்கிடமெல்லாம் இல்லை. ‘சோறு போட்டால் இங்கேயே தங்கிக் கொள்கிறேன்’ என்கிறான். தவசிப்பிள்ளைக்கு மண்டைக்குள் விளக்கு எரிகிறது. ஏற்கனவே பாத்திரம் கழுவுவதற்கு சத்திரத்தில் தங்கியிருக்கும் காத்தான் படு லோலாயக்காரன். சோறு கொடுத்தால் குழம்பு கேட்கிறான். குழம்பு கொடுத்தால் கறி கேட்கிறான். அவனை ஃபயர் செய்துவிட்டு லிங்கங் கட்டியை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துவிடுகிறான் தவசிப்பிள்ளை.

லிங்கங் கட்டிக்கும் இந்த வேலை பிடித்திருக்கிறது. படு நேர்த்தியாக வேலையைச் செய்து முடிக்கிறான். கவளம் கவளமாக சோறும் கிடைத்துவிடுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் புயலடிக்கிறது. சத்திரத்துக்கு வந்து போகிறவர்களின் வழியாக லிங்கங்கட்டிக்கு சொற்பக் காசு கிடைக்கிறது என்பது பிள்ளையை உறுத்துகிறது. எப்படியாவது அவனது வரும்படியை கரைக்க வேண்டும் என்று சோறு போடுவதை குறைக்கிறான். ஆனால் லிங்கங் கட்டி அதைத் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. மனம் பொறுத்துக் கொள்ளும்தான் ஆனால் வயிறு பொறுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? வெளியிடங்களில் சோறு போடுவது தெரிந்தால் போய் வருகிறான். அப்படிப் போய் வந்தாலும் கொஞ்சம் சில்லரை சேர்ந்துவிடுகிறது.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து சுத்தபத்தமாகிவிடும் லிங்கங் கட்டி குறித்து எல்லோரிடத்திலும் நல்ல பேர் இருக்கிறது. வருகிற காசை ஒரு ஆயாவிடம் கொடுத்து வைத்திருக்கிறான். அதுவும் தவசிப்பிள்ளைக்கு கடுப்பேற்றுகிறது. அவனை அழைத்து கழுத்தில் தங்கச் சங்கிலி செய்து போட்டுக் கொள்ளச் சொல்கிறான். அப்படியாவது காசை கரைக்க வைக்கும் முயற்சி. லிங்கங் கட்டியும் அப்படியே தங்கச் சங்கிலி செய்து அதில் லிங்கத்தை கோர்த்து கழுத்தில் மாட்டிக் கொள்கிறான்.

சீர்காழியில் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவத்துக்குக் செல்ல வேண்டும் என லிங்கங் கட்டிக்கு விருப்பம். திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது அவரது அப்பா அவரை குளக்கரையில் விளையாட விட்டு குளத்தில் குளிக்கச் சென்றிருந்தாராம். அப்பொழுது அப்பாவைக் காணவில்லை என்று சம்பந்தர் அழுத போது தேவியே கீழிறங்கி வந்து ஞானப்பால் கொடுத்தாராம். அந்த நிகழ்வுதான் திரு+முலை+பால் உற்சவம்.

கிளம்பிச் சென்ற லிங்கங் கட்டி சீர்காழியில் மற்ற பண்டாரங்களோடு படுத்திருக்கிறார். அப்பொழுது யாரோ சங்கிலியை அடித்துவிடுகிறார்கள். லிங்கங் கட்டிக்கு ஞானம் பிறக்கிறது.

மிக எளிமையாக வாசகர்களோடு நேரடியாக பேசும் கதை இது. பிச்சமூர்த்தியின் கதைகள் அப்படியானவைதான். சிக்கலில்லாத கதைகள். தவசிப்பிள்ளையும் மோசமானவர் இல்லை. நல்ல மனிதர்தான். லிங்கங்கட்டியிடம் அவருக்கு கழிவிரக்கம் உண்டு. ஆனால் சாமானிய மனிதர்களுக்கேயுரிய பொறாமைதான் அவரை குயுக்தியுடன் யோசிக்கச் செய்கிறது. லிங்கங் கட்டி வெகுளியான மனிதர். எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளாத மனிதர் அல்லது எடுத்துக் கொள்ளத் தெரியாதவர். இவர்கள் இருவரை மட்டுமே பாத்திரங்களாகக் கொண்டு கதை நகர்கிறது.

இந்தக் கதை ஆன்மிகத்தைப் பேசுகிறதா அல்லது இரு மனிதர்களுடைய எண்ணப்போக்கை சித்திரப்படுத்துகிறதா என்றால் இரண்டையும்தான் செய்வதாகத் தெரிகிறது. 

ஆனால் ஒன்று - இத்தகையை கதைகளைப் படிக்கும் போது சென்ற தலைமுறை ஆட்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்தக் காலகட்ட மனிதர்கள் அளவுக்கு வன்மமும் குரூரமும் இல்லாத மனிதர்கள் அவர்கள். அந்தக் காலத்திலும் திருட்டுக்கள் இருந்தன. அங்குமிங்குமாக சில கொலைகள் இருந்தன. சாதிய வீச்சம் இருந்தன. ஆனால் இப்பொழுது இருப்பது போல மனிதர்கள் வெறியெடுத்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வன்முறை தனிமனிதர்களிடமிருந்ததில்லை. இப்பொழுதெல்லாம் எவ்வளவு பொறாமை? எவ்வளவு எரிச்சல்? ஒருவனை வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் இறங்கிவிடுகிறார்கள். வாழைப்பழத்துக்குள் விஷ உருண்டையை வைத்து சிரித்துக் கொண்டே தருகிறார்கள். உலகம் இவ்வளவு ஆபத்தானதாக எந்தக் காலத்திலும் இருந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

                                                              ***

பெங்களூரில் நடைபெறும் கூட்டங்கள் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி. எந்தவிதத்திலும் தனிமனிதர்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து கூட்டங்கள் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒருங்கிணைப்பை மட்டும் செய்கிறேன். நண்பர்களின் பங்கேற்பிலும் பங்களிப்பிலும்தான் வெற்றி இருக்கிறது.