Mar 13, 2015

நியுட்ரினோ- விவாதங்கள்

சாக்லேட் வேண்டுமா எனும் பதிவில், அறிவியல் ஆராய்ச்சிகளும் சூழல் விழிப்புணர்வும் பொதுமக்களின் பயன்களும் மோதிக்கொள்ளும் புள்ளியை கோடி காட்டியிருக்கிறீர்கள்.

இந்த ஆராய்ச்சிகள் மூலமாக காடுகள் அழியும், மண்ணை கண்ட இடத்தில் கொட்டுவார்கள், பயன்படுத்தும் வாயு கசியலாம் எனும் சூழல் பிரச்சனைகள் குறிப்பாக பல சட்ட ஓட்டைகள் உள்ள இந்தியாவில் ஏற்படும் வாய்ப்புக்கள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், இதே பிரச்சனைகள் கார்பொரேட் கம்பனிகளாலும், சாதாரண மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் இதைவிட பலமடங்கு விஸ்தீரணத்தில் தினமும் நிகழ்ந்து வருவதைப்பற்றி நீங்களே நிறைய எழுதியிருக்கிறீர்கள். 

 சூழல் மாசடைவதற்கான கார்பொரேட் மற்றும் மக்களின் பொறுப்பற்றதனம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி எனும் இரண்டு காரணங்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். கார்பொரேட்டும் பொதுமக்களும் பொருளாதார காரணங்களுக்காக சரியான பல மாற்று வழிகளை தவிர்த்துவிட்டு குறுகிய நோக்குடன், சுயநலமாக சிந்தித்து மாபெரும் அளவில் சூழலை அழித்துவரும் வேளையில் அறிவியல், வேறு வழியின்றி ஆகக் குறைந்தளவு மாசுபாட்டுடன் தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முனைகின்றது. எனவே, சூழலை காப்பாற்ற வேண்டுமானால், அரசாங்கம் முதலில் மக்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் விழிப்புணர்வை ஆரம்பிக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பொய்யான வதந்திகள் மூலம் மக்களை பயப்படுத்தி அறிவியலை தடை செய்வது சரியான வழியாகாது.

அடுத்து, தமக்கு புரியாத அறிவியல் ஆராய்ச்சிகள் மீது பொதுமக்களுக்கு இயல்பாகவே ஒருவித பயமும் சந்தேகமும் இருந்து வருகின்றது. இதற்கு மேலும் தூபம் போடும் வகையில் மீடியாவும் பரபரப்புக்காக விஷயங்களை ஊதிப்பெருக்கி வருகிறார்கள். அறிவியல் படிக்காத மக்களுக்கு, "விஞ்ஞானிகள் " என்றதும் காமிக்ஸ்களில் பயங்கர மிருகங்களை ரகசியமாக உருவாக்கும் விஞ்ஞானி வில்லன்கள் தான் நினைவுக்கு வருவார்கள். Higgs Boson க்கு கடவுள் துகள் எனும் பிழையான பெயரை வைத்ததும் அல்லாமல், அது தொடர்பான அதீத பயத்தையும், Higgs-ஐ கண்டுபிடிப்பது தொடர்பாக மத நிறுவனங்களிடமிருந்து கடும் எதிர்ப்பையும் மீடியாக்காரர்கள் வாங்கித் தந்திருக்கிறார்கள். 

ஒரு காரின் உதிரிப் பாகங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஒன்று அதைக் கவனமாக அக்குவேறு ஆணிவேறாக கழற்றி ஆராயலாம். அல்லது (ஆளில்லாத) இரண்டு கார்களை (ஆளில்லாத பாலைவனத்தில் வைத்து) ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு, அவை உடைந்து சிதறிய துண்டுகளை ஆராயலாம். மிகமிகச் சிறியதான ப்ரோட்டானையும் எலக்ட்ரானையும் கழற்றிப் பார்ப்பதற்கு வேண்டிய நுண்ணிய கருவிகளை நம்மால் உருவாக்கவே முடியாது. அதனால், இரண்டாவது வழிமுறைப்படி அவற்றை மோதவிட்டு ஆராய்கிறோம்.

இதனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. இப்படிச் செய்யும்போது நுண்ணிய கருந்துளைகள் உருவாகலாம், ஆனால் அப்படி உருவாகும் கருந்துளைகளுக்கு போதிய நிறை இல்லாமையால் அவை ஆவியாகிவிடும் என்று சில விஞ்ஞானிகள் சொன்னார்கள். உடனே மீடியா இதன் முதல் பகுதியை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டது. "பென்னாம்பெரிய நட்சத்திரங்களையே உறிஞ்சி விழுங்கவல்ல ராட்சதர்களான கருந்துளைகளை பூமியில் உருவாக்கப் போகிறார்கள்" என கதற ஆரம்பித்தார்கள். அதேபோல ஹாக்கிங்கும் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார். இருந்தும் பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்து இதற்கு எதிராகவே இருக்கிறது. அது மட்டுமல்லாமல், LHC பரிசோதனையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்த பலநாட்டு விஞ்ஞானிகளின் குழுக்களும் தத்தமது அறிக்கைகளை ஆராய்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன.

இந்த அறிக்கைகளை வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி விஞ்ஞானிக்கு விஞ்ஞானி சாட்சி என தட்டிக்கழிக்க முடியாது. குழுவாக ஆராய்ச்சி செய்பவர்களைத் தவிர மற்ற விஞ்ஞானிகள், ஒரு காலை ஒருவர் வாரிவிடும் நண்டுகள் என்பதை கவனிக்க வேண்டும். இவர்களே மனமொத்து அறிக்கைகள் வெளியிடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்கும் என நம்பலாம்.

ஹிக்ஸ் ஆராய்ச்சி இப்படி என்றால், நியூட்ரினோ ஆராய்ச்சியில் குத்துமதிப்பாகக்கூட பாதகங்கள் எதிர்வுகூறப்படவில்லை. நியூட்ரினோ என்பது கதிரியக்கம் என அழைக்கப்பட்டாலும், மற்ற கொலைகார கதிர்கள் போல இல்லாமல் இது எதனோடும் உறவாடாத, யாரோடும் சேராத, சூதுவாது அறியாத ஒரு அம்மாஞ்சி. அதனால்தான் அதைக் கண்டறிய இவ்வளவு மெனக்கட வேண்டியிருக்கிறது.

உலகின் பல இடங்களில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் இது மாதிரியே ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகச் சரியாக Safety Regulations-ஐ பின்பற்றி செய்தால், கட்டுமானத்தால் வரும் சூழல் மாசுபாடுகளை பெருமளவு குறைக்கலாம். ஆனால், எல்லாவற்றிலும் ஊழலும் குறுக்கு வழிகளும் ஓட்டைகள் இருக்கும் ஒரு நாட்டு இந்தியா என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம். 

எனவே, இந்த ஆராய்ச்சிக்கூடத்தை regulations-ஐ கறாராக பின்பற்றி கட்டிமுடித்து பராமரிப்பதற்கு இந்தியர்களுக்கு திராணி இருக்கிறதா எனும் பெரிய கேள்விக்குறிதான் இங்கே முட்டுக்கட்டையாக இருக்கிறதே தவிர நியூட்ரினோ தமிழ்நாட்டை அழித்துவிடுமா இல்லையா எனும் அபத்தமான பயம் இல்லை.

- அபராஜிதன்

                                                                       ***
                                                                     (2)

இந்தக் கட்டுரை நியுட்ரினோ பற்றிய புரிதலுக்கு வித்திடுகிறது. நன்றி.

என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மண்ணையும், மரத்தையும், நீரையும் அழித்துத்தான் ஒரு துகளைக் கண்டுபிடிக்க வேண்டுமா? பத்தாயிரம் வருஷங்களாக இந்த பூமி ரொம்பவும் மெதுவாகத்தான் மாறி வந்திருக்கிறது. ஆனால் கிபி 1800 களின் பின்னாலான வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும். ஓசோன் வளி மண்டலத்தில் துளை உருவாக்கியதிலிருந்து இத்தனை வியாதிகளை உருவாக்கியது வரை அனைத்தும் நீங்கள் மெச்சுகிற அறிவியல்தான் கொண்டு வந்திருக்கிறது. கேன்சர் வியாதிக்காரர்கள் லட்சக்கணக்கில் பெருகியிருக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட தப்பிப்பதில்லை அய்யா. ஆஸ்துமா, சிறுநீரக பாதிப்பு என்று திரும்பிய பக்கமெல்லாம் வியாதிகள்தான்.  இந்த அறிவியல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் சீரழிக்கிறது. உங்கள் வயது பிள்ளைகள் காலையில் எழுந்தால் ஒருவேளை சாப்பாட்டை ஒழுங்காக சாப்பிடுறீங்களா? எதுக்கெடுத்தாலும் ஓட்டம்தான். 

எதுக்கு ஓடுறோம் என்று ஒரு நிமிஷம் யோசிக்கறீர்களா? மூன்று வேளை சாப்பாட்டுக்குத்தான் இவ்வளவு போராட்டமும். அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரம்?

ஒரு பக்கம் வசதிகள். இன்னொருபக்கம் மரணங்கள். இவ்வளவு அவரசத்தையும் அறிவியல்தான் உண்டு பண்ணியிருக்கிறது. 

அவசரகதி ஆராய்ச்சிகளைச் செய்து என்ன பலன்? எதுக்கு என்றே தெரியாமல் கண்டுபிடிக்கிறார்களாம்.

எங்கள் காலத்தில் ப்ளேக் நோய் வந்தால் ஊரே காலியாகிவிடும். காலரா வந்தாலும் அப்படித்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல் ஒன்றில் வாசித்திருப்பீர்களே. போலியோ வரும். அம்மை வரும். அதையெல்லாம் ஒழித்துவிட்டோம் என்று பெருமை பேசிய போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது?

பேர் தெரியாத நோவுகள் ஆட்களை கொல்லுகின்றன. மருத்துவமனைப் பக்கம் போகவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அழுவதைப் பார்க்கவே முடிவதில்லை. பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பேர் தெரியாத நோய். இதுதான் இந்த அவசர அறிவியலின் விளைவு. எப்பவோ நியுட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபெல் பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதை இந்தியாக்காரனும் வாங்கியாக வேண்டும். அதற்குத்தான் 1500 கோடி. 

எனக்கு 75 வயதாகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியன். இத்தனை வருஷங்களாக இந்த பூமி சிதைவதை பார்த்துட்டு இருக்கேன். இது ரொம்ப வேகம். ரொம்ப ஆபத்து.

- ராதாகிருஷ்ணன்.