Mar 13, 2015

டிபன் பாக்ஸ் குண்டு

புதிய தலைமுறை சானல் மீது குண்டு வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்று ஒரு நண்பர் ஆதங்கப்பட்டார். நம்மைச் சுற்றி நடக்கிற எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்லியே தீர வேண்டுமா என்ன? மீறி ஏதாவது சொல்லித் தொலைத்தால் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடலாம் என்று தோன்றியதுதான் காரணம்.

கருத்துரிமைப் போராளிகள் ‘மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்து அமைப்புகள் துள்ளுகின்றன’ என்கிறார்கள். ஆமாம். இல்லையென்றெல்லாம் சொல்லவில்லை. ஏன் துள்ளுகிறார்கள்? 

அதற்கு முன்பாக எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஏன் பெரும்பாலான ஊடகங்கள் இந்து மதத்தை குறி வைத்துத் தாக்குகின்றன?. தெரியவில்லை. ‘தாலி பாரமா’ என்கிற கேள்வியைக் கேட்கும் இதே ஊடகத்தால் பர்தாவைப் பற்றிய கேள்வியை வெளிப்படையாக எழுப்ப முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் முக்கியமானதுதான். ஆனால் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்துவிடக் கூடிய ஓவியர்களால் மேரி மாதாவை வரைந்துவிட முடிவதில்லை. ஏன்? .சரஸ்வதியையும் லட்சுமியையும் கலைக்கண்களோடு பார்க்க அறிவுறுத்துபவர்களால் சார்லி ஹெப்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை மிக மென்மையாகத்தான் எதிர்க்க முடிகிறது. 

இத்தகைய விவகாரங்களில் இங்கு ஏன் காரசாரமான விவாதங்கள் நடைபெறுவதில்லை? சிறுபான்மையினரை வருந்தச் செய்துவிடக் கூடாது என்கிற எண்ணம்தான் தமிழ் கருத்து சுதந்திரப் போராளிகளின் இத்தகைய மென்மையான நிலைப்பாட்டுக்கு காரணம் என்றெல்லாம் சலாம் அடிக்கக் கூடாது. ஒருவித பயம்தான் காரணம். இஸ்லாமியர்களைப் பற்றி வாயைத் திறக்கவே முடியாது. கிறித்துவர்களைப் பற்றி மேம்போக்காக வாயைத் திறப்பார்கள். ஆனால் இந்து மதத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கிழித்துத் தொங்கவிடலாம். தங்களது டிஆர்பியை ஏற்றிக் கொள்ள முடியும். இல்லையா?

இந்து மதத்தை யாராவது எதிர்த்தால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்து மதம் விமர்சனம் செய்யப்படுவதிலும் சங்கடம் இல்லை. ஆனால் அதே சமயம் இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றியும் கிறித்துவ சமயத்தின் சிக்கல்களைப் பற்றியும் வெளிப்படையான விமர்சனம் செய்வதற்கான தகுதி அந்த மனிதருக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன். இந்து மதத்தின் மீது சாணத்தைக் கரைத்து ஊற்றும் அந்த மனிதருக்கு பிற மதங்களை நோக்கி கைநீட்டும் திராணியாவது இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புவேன். இங்கு முக்கால்வாசிப் பேர்களுக்கு அந்தத் தகுதியே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால் பேனாவைத் தூக்கிக் கொண்டு மைக்குக்கு முன்பாக நின்றுவிடுகிறார்கள்.

‘இந்து மதத்தை விமர்சித்தால் மட்டும் கண்டுகொள்ள ஆளே இல்லை’ என்கிற எண்ணம் இந்துக்களிடம் பதிந்து போயிருக்கிறது. அதே எண்ணம்தான் இந்து இளைஞர் சேனை போன்ற போனாம்போக்கி அமைப்பைச் சார்ந்தவர்களிடமும் இருக்கிறது. தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இப்படியான சில்லரைத் தனங்களைச் செய்கிறார்கள். இவர்களின் செயல்பாடுகளை ஆதரிக்க முடியாதுதான். தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஊடகங்களுக்கு ஏன் இந்து மதம் கிள்ளுக்கீரையாக இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடிவதில்லை.

இப்படியாக இந்து மதத்தை விமர்சிப்பதை, குறிப்பிட்ட சாதியை விமர்சிப்பதை என எல்லாவற்றையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கத் தொடங்கினால் இந்த நாட்டில் கருத்துரிமைக்கான இடமே இல்லாமல் போய்விடும் என்பார்கள். அதுவும் சரிதான். ஆனால் விமர்சிப்பவர்களின் மனப்போக்கு குறித்தான சந்தேங்களும் எழும் அல்லவா? ஏன் திரும்பத் திரும்ப ஒரே இலக்கையே தாக்குகிற மனப்பான்மை இங்கே நிலவுகிறது? ‘இல்லை இல்லை அவர் இஸ்லாமிய மதத்தை விமர்சனம் செய்துதான் ஊர்விலக்கம் செய்தார்கள்’ ‘இவர் கிறித்துவமதத்தை விமர்சித்தார்’ என்றெல்லாம் யாராவது உதாரணங்களைக் காட்டினால் அவை பெரும்பாலும் விதிவிலக்குகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக. உறுதியாகச் சொல்ல முடியும்.

கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை என்று பேசுவதெல்லாம் சரிதான். ஐஎஸ் தீவிரவாதிகளின் அழிச்சாட்டியங்கள் பற்றி எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறோம்? சரி அது எங்கேயோ நடக்கிறது. விட்டுவிடலாம். பங்களாதேஷில் சமீபத்தில் ஒரு எழுத்தாளரை வெட்டிக் கொன்றார்கள் அதைப் பற்றி எத்தனை எழுத்தாளர்கள் விரிவாக பேசினார்கள். அதுவும் வேறொரு நாடு. விட்டுவிடலாம். நம் ஊரில் நடைபெறும் மதமாற்ற பிரச்சாரங்களைப் பற்றி பேசுகிறோமோ? இஸ்லாமிய சட்டங்களைப் பற்றி எழுதுகிறோமோ? இஸ்லாமிய வஃக்ப் போர்டின் சொத்து விவரங்கள் தெரியுமா? அதெல்லாம் அந்தந்த மதத்தின் தனிப்பட்ட விவகாரங்கள் என்று சொல்லி வாயை அடைப்பார்கள்.

இப்படித்தான் இருக்கிறது சூழல். ஆளாளுக்கு ஒரு அஜெண்டா. தெளிவாக இருக்கிறார்கள். இந்து மதத்தை அடிக்க வாய்ப்புக் கிடைத்தால் குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு வந்து மொத்திவிட்டுப் போகிறார்கள். அதற்கு எதிராக காவித் தீவிரவாதிகள் டிபன் பாக்ஸ் குண்டைத் தூக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் எதைத் தொட்டால் டிஆர்பி ரேட் எகிறும் என்று ஊடகங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எதைப் பேசினால் பிறர் நம்மை கவனிப்பார்கள் என்பது குறித்து கருத்துப் போராளிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆளாளுக்குத் தங்களின் அஜெண்டாவில் தெளிவாக இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை.

எனக்கு என் மதத்தைப் பற்றியும் எனது சாதியைப் பற்றியும் சுய விமர்சனங்கள் இருக்குமாயின் அது ஒரு தனிமனிதனின் கருத்து. அதே விமர்சனத்தை பொதுப்படையாக ஊடகத்தில் முன்வைக்கும் போது அதையும் சுயவிமர்சனம் என்ற பெயரில் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் அதைத் தெரிந்தேதான் ஊடகங்கள் செய்கின்றன என்று தோன்றுகிறது.

இந்து மதத்தின் மீது மிகப்பெரிய பற்றுதல் எனக்கு இல்லை. ஆனால் அதற்காக கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தை மறைமுகமான அஜெண்டாக்களுடன் விமர்சனம் செய்பவர்களைப் பார்த்தால் எரிச்சல் வரத்தான் செய்கிறது. என் மனைவிக்கு தாலி முக்கியமில்லாமல் இருக்கலாம். ஆனால் என் அம்மாவுக்கு அது இன்னமும் முக்கியமானதுதான். அதைக் கழற்றி வைப்பது குறித்து அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவரிடம் போய் ‘இது பெண்ணடிமைத்தனத்தின் சின்னம்’ என்றால் கையில் கிடைக்கும் எதை எடுத்து வேண்டுமானாலும் என்னைத் தாக்குவார். அதனால் அமைதியாக விட்டுவிடுவேன்.

இத்தகைய விவாதங்கள் அவசியமானவைதான். ஆரோக்கியமானதுதான். ஆனால் அதற்கு முன்பாக தங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து ஏதேனும் நிரூபணம் இருக்க வேண்டும். ‘இந்த விஷயத்தை எடுத்தால் பற்றிக் கொள்ளும்’ என்கிற எதிர்ப்பார்ப்போடுதான் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கையே நடத்துகிறார்கள் என்னும் போது என்ன கருத்தை நாம் சொல்வது?