Feb 19, 2015

வரையறை

என் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. இரண்டு வருடங்கள் பெங்களூரில் பணி புரிந்தேன். கடந்த 7 வருடங்களாக கலிபோர்னியாவில் இருக்கிறேன். 

சமீபத்தில் நீங்கள் எழுதி இருந்த ஒரு விஷயம் பற்றி கேட்க விரும்பி இந்த email அனுப்புகிறேன். நீங்கள் திரு. ஞானி அவர்களுக்கு நன்கொடை அளித்ததை பற்றி படித்தேன். அவரை பற்றி சமீபத்தில் நடிகர் திரு. சிவகுமார் அவர்களுடைய ஒரு பேச்சில் கேட்டேன். பின் நானாக தேடி அவரை பற்றி படித்தேன். நீங்கள் எழுதி இருந்ததை படித்தத்தில் இருந்து ஒரு விஷயம் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. திரு. ஞானி அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அவர்கள் இவரின் தேவைகளுக்கும், இவரை நன்றாக கவனித்துக் கொள்ளவும் ஒன்றும் செய்வதில்லையா? இதை ஏதோ curiosityக்காக கேட்கவில்லை. வாழ்வில் சில எதார்த்தங்களை புரிந்து கொள்ள விரும்பி தான் இதை கேட்கிறேன். 

நன்றி..
குமரசேன் ரங்கசாமி

அன்புள்ள திரு.குமரேசன்,

கோவை ஞானி அவர்களுடன் எனக்கு நீண்ட பரிச்சயம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசும் வாய்ப்பை விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் எனக்குத் தந்திருந்தார்கள். அது மிகுந்த உற்சாகமளித்த அழைப்பு. அந்தக் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் ஞானி அவர்கள் எழுந்து எதிர்மறையான கருத்து ஒன்றைச் சொன்னார். என்ன சொன்னார் என்று தெளிவாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அது என்னை மிகவும் வருந்தச் செய்தது. அதன் பிறகு ஞானி பற்றிய எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டேன். ஆனால் மெதுவாக ஒன்றைப் புரிந்து கொள்ள முடிந்தது- ஞானி போன்ற ஆளுமையை நிராகரிப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. யாராவது எங்கேயாவது அவரது செயல்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டேதான் இருந்தார்கள். உள்ளுக்குள் எவ்வளவுதான் வெறுப்பு இருந்தாலும் எதிர்கொண்டே தீர வேண்டியிருந்தது. அவரது செயல்பாடுகள் அவ்வளவு விரிவான தளத்தில் பரந்துபட்டது.

அதன் பிறகுதான் ஞானியின் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஞானியின் எழுத்துக்கள் மற்றும் அவரது சிற்றிதழ் தொகுப்புகளின் வழியாக தமிழ் இலக்கியத்திற்கு ஞானியின் பங்களிப்பு என்ன என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. கருத்தியல்கள் வழியாகவும், எழுத்து வழியாகவும் தொடர்ச்சியாக தமிழுக்கு பங்களிப்பு செய்திருக்கும் ஞானி அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவு செய்த போது இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. முதல் கேள்வி நீங்கள் கேட்டதுதான். ‘ஞானிக்கு வாரிசுகள் இருக்கிறார்களே’ என்பது ஒன்று. ‘நடிகர் சிவக்குமார் போன்றவர்கள் உதவுகிறார்களே’ என்பது இரண்டாவது.

இரண்டும் எவ்வளவு தூரம் அவருக்கு பயன்படுகின்றன என்றெல்லாம் தெரியாது. ‘உங்களுக்கு வாரிசுகள் இருக்கிறார்களே...அவர்கள் உதவுவதில்லையா’ என்றோ ‘வேறு என்ன உதவிகள் வந்திருக்கின்றன’ என்றோ கேட்பது எந்தவிதத்திலும் சரியான கேள்விகளாக இருக்க முடியாது. இதுகாறும் தான் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை பள்ளிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தவர் சிலரிடம் உதவி கோரியிருக்கிறார் என்பதும் உண்மைதான். 

இவையெல்லாம் ஒரு பக்கமாக இருக்கட்டும். அவருக்கு வழங்கப்பட்ட பணம் என்பது தமிழுக்கான அவரது பங்களிப்பிற்கான மரியாதைதானே தவிர அதை உதவி என்று சுருக்கிவிட முடியாது. அவரது பங்களிப்போடு ஒப்பிட்டால் இந்தத் தொகை மிக மிகச் சொற்பம்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது- ஏற்கனவே அறக்கட்டளையில் சேர்ந்திருந்த பணத்தில் இருந்து ஞானிக்குத் தரவில்லை. அறக்கட்டளையில் உள்ள பணம் வேறு வாய்ப்புகளில்லாத எளிய மனிதர்களின் மருத்துவ உதவிகளுக்காகவும், கல்வி சார்ந்த உதவிகளுக்காகவும்தான் பயன்படுத்தப்படும் என்பதால் ஞானி அவர்களுக்கு உதவும் திட்டமிருப்பதாக தனியாக அறிவிக்கப்பட்டது. மூன்று நான்கு நண்பர்கள் அளித்த தொகையைத் திரட்டித்தான் காசோலை வழங்கப்பட்டது. கடைசி இரண்டு நாட்கள் வரைக்கும் நாற்பதாயிரம்தான் சேர்ந்திருந்தது. கத்தாரில் வசிக்கும் நண்பர் ஐம்பதாயிரமாகத் தந்துவிடுங்கள் என்று சொல்லி தனது பங்களிப்பாக பத்தாயிரம் வழங்கினார். ஆக ஐம்பதாயிரம் ரூபாய்.

ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பலாம். எந்தெந்த காரியங்களுக்கு என்று சொல்லி வாங்கப்படுகிறதோ அந்தந்த காரியங்களுக்காக மட்டும்தான் அந்த நிதி ஒதுக்கப்படுகிறது. அதே போல ஒரு ரூபாய் கூட வீணாக்கப் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன். இதுவரைக்கும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

இந்த பதிலில் யதார்த்தத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

இது குறித்து மேலும் கேள்விகள் இருந்தாலும் அனுப்பி வையுங்கள். பொதுவெளியிலேயே பதில் சொல்லிவிடலாம். அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கட்டும்.

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்