Feb 20, 2015

அமாவாசையும் அப்துல்காதரும்

தெருக்கூத்தில் கட்டியங்காரனுக்கு என்ன வேலை இருக்குமோ அந்த வேலை ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. கொரிய மொழியின் முக்கியமான இயக்குநரான கிம் கி டுக்கின் ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கு அமாவாசையன்று இந்த அப்துல்காதரை அழைத்திருக்கிறார்கள். நவீன சினிமா பத்திரிக்கையான நிழல் நடத்தும் இந்த அரங்கு நாளை சென்னையில் நடக்கிறது. நிகழ்வில் பேசவிருக்கும் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, லக்‌ஷ்மி சரவணக்குமார், கே.என்.சிவராமன், சரோலாமா, ஒருங்கிணைப்பாளர் தம்பிச்சோழன் ஆகியோருடன் அறிமுகம் உண்டு. மற்றவர்களைப் பற்றித் தெரியாது என்றாலும் நிச்சயமாக ஏதாவதொருவிதத்தில் சினிமாவுடன் சம்பந்தமுடையவர்களாகத்தான் இருப்பார்கள். Odd man out என்றால் ஒருத்தன் மட்டும்தான் வெளியே நிற்க வேண்டியிருக்கும். 

சினிமா பற்றி இதுவரைக்கும் பேசியதில்லை. அதைச் சொன்ன போது ‘பார்ப்பீர்கள் அல்லவா?’ என்றார்கள். பார்க்கிற வழக்கம் உண்டு. ஹைதராபாத்தில் இருந்த போது எஸ்.வி.ராமகிருஷ்ணன் மூலம் அறிமுகம் கிடைத்தது. அங்கு ஒரு சினிமா க்ளப் உண்டு. மாதம் பத்து திரைப்படங்களாவது திரையிடுவார்கள். உறுப்பினராகியிருந்தேன். ஆனால் அந்தப் பருவத்தில் வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பதற்கு வேறு காரணமிருந்தது. ஹங்கேரி, ப்ரான்ஸ் படங்கள் பிடித்த அளவுக்கு ஈரானியப் படங்கள் பிடிக்காத காலம் அது என்று சொன்னால் புரிந்து கொள்வீர்கள் அல்லவா? அதே காரணம்தான். வெளிப்படையாகவெல்லாம் சொல்ல முடியாது என்பதால் ஜம்ப் அடித்துவிடலாம். இப்பொழுதெல்லாம் கருந்தேள் ராஜேஷ், சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் பரிந்துரைக்கும் படங்களைப் பார்த்துவிடுவதுண்டு. ஆனால் அவர்கள் எழுதுவது போல நுணுக்கமாகவெல்லாம் கவனிப்பதில்லை. ‘பிடிச்சிருக்கு’ ‘பிடிக்கலை’ என்று இரண்டு வகையறாவுக்குள் அடக்கிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவதுதான் வழக்கம். புது எழுத்து இதழில் ஒரு முறை ஹங்கேரியப் படங்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன். பிரசுரமாகி வந்த பிறகு ‘நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை’ என்று தோன்றியது. அதன் பிறகு கமுக்கமாகிவிட்டேன்.

‘உங்களையெல்லாம் மதிச்சு கூப்பிட்டிருக்காங்க...ஒழுங்கா தயாரிச்சுட்டு போங்க’ என்று ஒரு வாரமாக இடித்துரைப்பு. இதுவரைக்கும் அந்தப் படத்தை மூன்று நான்கு முறை பார்த்திருக்கிறேன். இணையத்தில் அயல்மொழிப் படங்களுக்கான சில திரைவிமர்சனங்களைத் தேடிப் பார்த்த போது பயமாக இருந்தது. நாயகன் அணிந்திருக்கும் உடையின் நிறத்தையெல்லாம் வைத்து ‘இது ஒரு குறியீடு’ என்று எழுதியிருந்தார்கள். படித்த போது வயிற்றிலிருந்து ஒரு உருண்டை வந்து தொண்டையில் அடைத்துக் கொண்டது. இந்த அளவுக்கெல்லாம் யோசிக்கிற திறன் குருவிக்குஞ்சு மூளைக்கு இல்லை என்று ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்ன போது ‘உங்களுக்கு என்ன தோணுதோ அதை அப்படியே பேசுங்கள்’ என்றார்கள். பேசுவது பிரச்சினையில்லை. யாராவது கேள்வி கேட்டால்தான் பிதுக் பிதுக்கென்று முழிக்க வேண்டும். பார்வையாளர்களாக வருபவர்கள் எல்லாம் தங்கங்களாக இருந்துவிட்டால் நாளைக்கு சமாளித்துவிடலாம் என்றுதான் நினைக்கிறேன். 

வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். நடுவில் நான் பேசும் போது மட்டும் தம் அல்லது டீ அடித்துவிட்டு வர வெளியே சென்றுவிட்டால் போதும். மொத்தக் கூட்டமும் சுவாரஸியமாக இருந்தது போன்ற ஃபீல் வந்துவிடும். இறுதியில் கிம் கி டுக்கின் திரைப்படம் ஒன்றை திரையிடுகிறார்கள். என்ன படம் என்று தெரியவில்லை.