Feb 19, 2015

நெருப்பு கூத்தடிக்குது

எங்கள் ஊரில் இருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை தெரியும். சிறு வயதில் வனத்தில் தீ பிடித்து எரியும் போது அம்மாவோ அப்பாவோ காட்டுவார்கள். பெரும்பாலும் ஒரே காரணம்தான் சொல்வார்கள். ‘மரத்தோட மரம் உரசி தீ பிடிச்சிருக்கு’. கல்லோடு கல் உரசினாலே தீ பிடிக்கிறது என்பதால் இதை நம்புவதில் பெரிய சிரமம் இல்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அப்படித்தான் அவர்களும் நம்பிக் கொண்டிருந்தார்கள். வெகுகாலத்திற்கு பிறகுதான் இதெல்லாம் கிட்டத்தட்ட மூடநம்பிக்கை என்று தெரியும்.  

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இளைஞர் குழாம் ஒன்று தாளவாடியைத் தாண்டிய வனப்பகுதிக்குச் சென்றிருக்கிறது. வண்டி நிறைய டாஸ்மாக் தெய்வங்கள். சத்தியமங்கலம் தாண்டியவுடனேயே ரத்தத்தில் கலக்கச் செய்துவிட்டார்கள். மலையேறிய பிறகு- முதலில் தாங்கள் மலையேறி அதன் பிறகு சத்தியமங்கலம் மலையேறியிருக்கிறார்கள்- போலீஸ்காரர் ஒருவர் தடுத்திருக்கிறார். பாட்டிலை எடுத்து ஒரே அடி. மண்டை உடைந்த போலீஸ்காரர் கடுப்பாகி மொத்தக் கூட்டத்தையும் நிலையத்தில் ஜட்டியோடு அமர வைத்திருக்கிறார்கள். அமைச்சரிடமிருந்து அழைப்பு. தலைமையிடம் எவ்வளவுதான் பம்மினாலும் இது போன்ற அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கெத்து காட்டுவார்கள் அல்லவா? ‘விட்டுடுங்க’ என்று ஒற்றை வார்த்தையில் உத்தரவிட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். தலைகால் புரியாமல் குடித்து கும்மாளமடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இது மாதிரி பல நூறு சம்பவங்களைக் கதைக் கதையாகச் சொல்கிறார்கள். வனத்திற்குள்ளேயே வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள். மது மாது என்று சகல ஏற்பாடுகளோடு சென்றுவிடுகிறார்கள். குடிப்பதோடு நிறுத்துவார்களா? தம் அடிப்பார்கள். அங்கேயே அடுப்பைக் கூட்டி சமையல் செய்வார்கள். camp fire என்ற பெயரில் ‘நெருப்பு கூத்தடிக்குது’ என்று ஆட்டம் போடுவார்கள். பொறி பறந்து சருகுகள் மீது விழும். புகைந்து புகைந்து வனத்தின் பகுதிகளைச் சாம்பலாக்கிவிடும். அதுதான் இப்பொழுது பார்த்த பக்கமெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

வனத்தில் தீ பிடிக்கிறதென்றால் இயற்கையாக நடப்பதற்கெல்லாம் வெகு குறைவான சாத்தியங்கள்தான் இருக்கின்றன. மற்றபடி மிக முக்கியமான ஒரேயொரு காரணம் உண்டு- அது மனிதன். ஏக்கர் கணக்கில் எரித்துத் தள்ளிவிடுகிறான். ஆயிரக்கணக்கான பூச்சிகளையும், பறவைகளையும் தீக்கிரையாக்கிறான். புல்வெளி எரிந்து சாம்பலாகிறது. யானையும் காட்டு எருமையும் மானும் சோற்றுக்கு என்ன வழியென்று பார்த்துவிட்டு ஊருக்குள் புகுகின்றன. மானைத் துரத்தி வரும் புலியும் சிறுத்தையும் ஆளை அடிக்கின்றன. ஆளை அடித்தால் நம்மாட்கள் விடுவார்களா? ரேஞ்சரைப் பிடித்து மெத்துகிறார்கள். ஊட்டியில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வனவிலங்கு தாக்கி இறந்த பெண்ணின் பிணத்தை சாலையில் போட்டு மறியல் செய்திருக்கிறார்கள். தெரியாத்தனமாக அந்தப் பக்கமாக வந்த அதிகாரிகளை பின்னியெடுத்துவிட்டார்கள். இந்த வன்முறைக் கூட்டத்தைச் சமாதானப்படுத்த வேண்டுமல்லவா? நேற்று தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த புலியைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மயக்கமடையச் செய்து பிடித்திருக்க முடியாதா என்ன? 

நேற்றிரவு பெங்களூரின் புறநகர்ப்பகுதியிலிருக்கும் நைஸ் ரோடு என்ற நெடுஞ்சாலையில் ஒரு சிறுத்தைப் புலி அலைந்திருக்கிறது. ஏதோ வாகனம் அடித்துச் சென்றிருக்கிறது. வனத்தையும் அழிக்கிறோம். வழியில்லாத வனவிலங்குகளையும் அழிக்கிறோம். 

கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்ட பணக்கார்களில் பெரும்பாலானவர்கள் தெங்குமராட்டா மாதிரியான இடங்களுக்கு கூத்தடிக்க கிளம்பிச் செல்வார்கள். ஆடு ஒன்றை வெட்டி கறியாக்கி வயிற்றை நிரப்பி, குடித்து, பாலித்தீன் தாள்களை வீசி நாசக்கேடாக்கிவிட்டு வந்து புளகாங்கிதம் அடைவார்கள். இவர்கள் வீசி வரும் நெருப்புத் துகள்கள்தான் வனத்தீக்கு அடிப்படையான காரணம் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

பழனி ஒரு காலத்தில் மிகப்பெரிய வனமாக இருந்திருக்கிறது. இப்பொழுது பாதிக்குப் பாதி மொட்டையடித்துவிட்டார்கள். நாகரிக வளர்ச்சியடைந்த பழனிமலையாண்டவன்தான் காரணம் என்று சொன்னால் அவ்வளவுதான் ‘இவன் ஒரு இந்து மத விரோதி’ என்று சீல் கட்டையை எடுத்து வந்து ஒரே குத்தாகக் குத்துவார்கள். இத்தனை நாட்கள் சொல்லியிருந்தால் இந்தப் பட்டம் மட்டும்தான் மிஞ்சியிருக்கும். இனிமேல் சீமானின் ஆட்களும் சேர்ந்து நரம்பு புடைக்கத் திட்டுவார்கள். அதே போல வேங்கடமலை பாலாஜிதான் ஏழு மலையை மொட்டையாக்கிக் கொண்டிருக்கிறான் என்றால் விடுவார்களா? அல்லது பண்ணாரி தாய்தான் சத்தியமங்கலத்தின் வனத்தை காலி செய்கிறாள் என்றால்தான் ஒத்துக் கொள்வார்களா? அதே மாதிரி சபரிமலை ஐய்யப்பனைக் கெட்டவன் என்று சொல்ல முடியுமா? ஆனால் இவர்கள் எல்லோருக்கும் பெரும்பங்கு இருக்கிறது. போக்குவரத்து வாகனங்கள் பெருகப் பெருக இவர்களைக் காணச் செல்லும் கூட்டம் பெருகுகிறது. வருமானத்தை பெருக்கிக் கொள்ள கோவில் நிர்வாகங்களும், அரசும் எல்லாவிதமான வசதிகளையும் வனத்திற்குள்ளேயே செய்து கொடுக்கிறார்கள். எந்த வனக் கோவிலுக்குள்ளும் சென்று வருவதற்கு பெரிய அளவில் சிரமப்பட வேண்டியதில்லை. கூட்டம் கூட்டமாகச் சென்று சீரழிக்கிறோம். வனங்களின் குடியிருப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதிலிருந்து வனப்பகுதிக்குள் செண்டிமெண்டலான விஷயங்களும் கேளிக்கை அம்சங்களும் அரங்கேறுவதைத் தடுப்பது வரையிலும் நம் புரிதல்களிலும் செயல்பாடுகளிலும் செய்ய வேண்டிய மாறுதல்கள் எவ்வளவோ இருக்கின்றன.

சமீபத்தில் ஒரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. ‘யாருக்கானது பூமி’ என்கிற கட்டுரைத் தொகுப்பு. வனங்களைப் பற்றி தமிழில் எழுதுவதற்கான ஆட்கள் குறைவு. அதுவும் அடுத்த தலைமுறை ஆட்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியொரு மனிதரின் புத்தகத்தைப் பார்த்த போது உற்சாகமாக இருந்தது. பா.சதீஸ் முத்து கோபால். முப்பத்தைந்து வயதுக்குள்தான் இருக்கும். புத்தகம் முழுவதும் இயற்கை சார்ந்த கட்டுரைகள். பன்னிரெண்டு கட்டுரைகள். அத்தனையும் சதீஸின் சொந்த அனுபவங்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

பத்ரா வனத்திலிருந்து பிலிகிரி ரங்கன் திட்டா வரைக்கும் அவர் சுற்றிய அனுபவங்களைத்தான் கட்டுரைகளாக்கியிருக்கிறார். வனப்பகுதியில் விலங்குகளின் எண்ணிக்கைகளைக் கணக்கெடுத்ததிலிருந்து வெகு நேரம் காத்திருந்து ஒற்றைப் பறவையைப் பார்த்தது வரையிலும் மனிதர் மெனக்கெட்டிருக்கிறார். பழனி மலைத் தொடர்ச்சி, ஐரோப்பாவில் பறவைகளைக் கண்டது என கட்டுரைகள் நீள்கின்றன. 

வனம் அதன் சிக்கல்கள் அதை எவ்வாறு மனிதன் சீரழித்துக் கொண்டிருக்கிறான் உள்ளிட்டவற்றில் நமது புரிதலை பெருமளவில் இந்தப் புத்தகம் விரிவுபடுத்துகிறது என்று சொல்லியாக வேண்டும்.

புத்தகம் முழுவதும் வன உயிர்களின் படங்களால் நிறைந்திருக்கின்றன. வண்ணப்படங்கள் இல்லை என்பது வருத்தமான விஷயம்தான். அடுத்த பதிப்பு வருமானால் அகநாழிகை பதிப்பகத்தார் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.

இன்னொரு விஷயம்- கட்டுரைகள் முழுவதும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களால் நிரம்பியிருக்கின்றன. சில இடங்களில் வெறும் தமிழ்ப்பெயர்களை மட்டும் கொடுத்திருக்கிறார். ஆங்கிலப் பெயரையும் கொடுத்திருந்தால் கூகிளில் தேடுவதற்கு வசதியாக இருந்திருக்கும். ஒருவிதத்தில் இதுதான் புத்தகத்தின் சுவாரசியத்தை சற்று குறைப்பதாகத் தோன்றியது. இவ்வளவு பறவைகளின் பெயர்களை வாசிப்பது பன்னிரெண்டாம் வகுப்பின் அறிவியல் புத்தகத்தை படிப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் அதைக் குறையாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு அந்தப் பறவைகளில் ஐந்து சதவீதம் கூடத் தெரியவில்லையே என்கிற குற்றவுணர்ச்சியைத்தான் மனம் குறையாக மாற்றிவிட்டது என நினைக்கிறேன்.

நிறை குறை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். சூழலியல், கானுயிர்கள் என்று முப்பது வயதின் தொடக்கத்தில் ஒரு இளைஞர் தன்னை வருத்திக் கொள்கிறார். இவ்வளவு பெயர்களுடன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். எல்லாவிதத்திலும் இந்தப் புத்தகத்தை மிக முக்கியமானதாகக் கருத வேண்டியிருக்கிறது. இதே துறை சார்ந்த எழுத்தை ஆங்கிலத்தில் செய்தால் அவருக்கான புகழ் பன்மடங்கு பெருகிவிடும். பணம் சம்பாதிக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் தமிழில் எத்தனை பேர் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்களைக் கொண்டாடுவார்கள் என்று தெரியாது. இருந்தாலும் ஏதோவொரு காரணத்திற்காக தமிழில் எழுதியிருக்கிறார். இதே வேலையைத் தொடர்ந்து செய்வார் என்று நம்புவதைக் காட்டிலும் தொடர்ந்து இவரைப் போன்றவர்கள் தமிழில் எழுத வேண்டும் என்று அந்த பண்ணாரித் தாயையும் , பழனியாண்டவரையும் வேண்டிக் கொள்கிறேன். 

இயற்கை ஆர்வலர்களுக்கு அவசியமான புத்தகம். என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு மகனுக்கும் மகளுக்கும் படம் காட்டுவதற்காகவாவது பயன்படும். இரண்டு வகையறாவுக்குள்ளும் வராதவர்கள் வனவியல் சார்ந்த இந்த குட்டி என்சைக்ளோபீடியாவை சதீஸின் முயற்சியை பாராட்டும் விதத்தில் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். 

ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.