Feb 6, 2015

ஜோர்டான் கொலை

நீங்கள்தானே பொதுத்தேர்தலில் மோடியை ஆதரித்து எழுதினீர்கள்? குஜராத் கலவரம் எதுவும் கண்களுக்குத் தெரியாமலே எழுதினீர்களா? ஜோர்டான் பைலட் எரியூட்டப்பட்டது மட்டும் தங்களுக்குத் தெரிகிறதே என்பதற்காக இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேனே தவிர ஐஎஸ்ஸின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை.
                                                                                                               - சர்புதீன்

இதே மணிகண்டன் தான் மோடியை ஆதரித்து எழுதினான்.  

உண்மையைச் சொன்னால் மோடியை ஆதரித்ததால் எனக்கு பத்து பைசா பிரயோஜனம் கிடையாது. மாறாக ஒன்றிரண்டு இழப்புகள் உண்டு. ஒரு விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரையில்- தமிழகத்தில் பரவலாக கவனம் பெற்ற விருது அது- கடைசி கட்டத்தில் என் பெயர் இருந்திருக்கிறது. எழுத்து, அறக்கட்டளை வழியாகச் செய்யும் சில காரியங்கள் போன்றவற்றின் காரணமாக எனது பெயரைச் சேர்த்திருந்தார்களாம். ஆனால் இறுதிக்கட்டத்தில் நிராகரித்துவிட்டார்கள். நிராகரிப்பதற்காக இரண்டு பேர்கள் சொன்ன காரணம் ‘அவன் மோடியை ஆதரித்தான்’. நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இது நடந்த சம்பவம்தான். அது பற்றிய வருத்தம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் இப்பொழுதாவது மோடியை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிடலாம் அல்லவா? ஆனால் இன்னமும் மோடியை ஆதரிப்பதற்காக முன்வைத்த காரணங்கள் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன். 

அந்தச் சமயத்தில் மோடிக்கு மாற்றாக ‘இவர்தான் பிரதமர்’ என்று எந்தக் கட்சியினாலும் சுட்டிக்காட்ட முடியவில்லை. ஏற்கனவே பத்தாண்டு ஊழல் கறைபடிந்திருந்த காங்கிரஸ் ஆட்சியையும் பல்லாண்டுகளாக முழு மெஜாரிட்டி இல்லாத ஆட்சிகளையும் பார்த்துச் சலித்துப் போயிருந்த சூழலில் மோடி போன்ற ஒருவரால்தான் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என நம்பினேன். இதை மறுக்கவில்லை.

எனக்கு எந்த அஜெண்டாவும் கிடையாது சர்புதீன். 

கட்சி, அமைப்பு, மதம், சாதி அல்லது கொள்கை என்ற எந்தச் சார்புகளின் அடிப்படையிலும் யாரையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ தேவையில்லை என்பதுதான் என் நிலை. உதிரியாகத் திரிகிறேன். இதே மனநிலையில்தான் எனக்கான கருத்துக்களை முன் வைக்கிறேன். அதே சமயம் ஒரு மனிதன் எந்தவிதத்திலும் முழுமையான நடுநிலைவாதியாக இருக்க முடியாது என்று தெரியும். ஆனால் நேர்மையாக இருக்க முடியும். 

என்னைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலானவற்றில் எனக்கான சில புரிதல்கள் உண்டு. அது வாசிப்பின் வழியாகவோ அல்லது உரையாடல்களின் வழியாகவோ உருவான புரிதல்கள். ஆனால் ஒரு விஷயத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறேனோ அதை அப்படியே வெளிப்படுத்திவிடுகிறேன். ‘இதைச் சொன்னால் அவர்கள் தவறாக நினைப்பார்களோ’ அல்லது ‘அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டுமோ’ என்று யோசிப்பதில்லை. நகாசு பூச வேண்டும் என்றோ அல்லது பாசாங்கு செய்ய வேண்டும் என்றோ மெனக்கெடுவதில்லை. இதைத்தான் நேர்மை என்று நம்புகிறேன்.

ஆனால் ஒன்று- நான் நினைப்பதுதான் சரியென்றும் அதுதான் இறுதியானது என்றும் எந்தக் காலத்திலும் சொல்லிக் கொண்டதில்லை. பேசுவதும் எழுதுவதும் தவறு என்றால் திருத்திக் கொள்வதிலும் சங்கடம் இல்லை. இத்தகைய ஒரு மனநிலைதான் எனக்கான பலத்தைக் கொடுக்கிறது என்ற நம்பிக்கையிருக்கிறது. இப்படியேதான் தொடர்ந்து இயங்கப் போகிறேன்.

இந்த ஒரு விளக்கத்துடன் உங்கள் கேள்வியை அணுகுகிறேன். குஜராத் படுகொலைகளையும் ஐ.எஸ் தீவிரவாதத்தையும் எப்படி ஒப்பிட முடியும் என்று புரியவில்லை. ஐஎஸ் தீவிரவாதிகள் ‘நாங்கள்தான் செய்கிறோம்’ என்று வீடியோ எடுத்துக் காட்டுகிறார்கள். தெனாவெட்டாகச் சொல்கிறார்கள். குஜராத் சம்பவம் அப்படியானதா என்ன? 

தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். உங்களுக்கு சந்தேகமிருப்பின் விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறேன். இந்தச் சம்பவம் மட்டுமில்லை- எதைப் பற்றி வேண்டுமானாலும் விரிவாக பேசுவோம் சர்புதீன்.