Feb 7, 2015

எத்தனையாவது வருடம்?

வலைப்பதிவை எழுதத் துவங்கி இன்றிலிருந்து பதினோராவது ஆண்டு தொடங்குகிறது. பிப்ரவரி 7, 2005 ல் முதல் பதிவு. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கவிஞன் என்று பிரஸ்தாபித்துக் கொள்ள, எழுத்தாளன் என்று நிரூபித்துக் கொள்ளவெல்லாம் முயன்ற போது யாருமே சீந்தவில்லை. ‘Blog எழுதுவதெல்லாம் வீண் வேலை’ என்று நிறையப் பேரிடம் சொல்லியதுண்டு. ஆனால் வாசிக்கிறவர்களின் அறிவை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை என்ற நினைப்போடு ஒரு தருணத்தில் conversation mode க்கு மாறத் துவங்கியதிலிருந்துதான் அடுத்து செல்ல வேண்டிய பாதை தெளிவானது. 

பத்தாம் வருடம் முக்கியமானதாக இருந்திருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளை துவங்கப்பட்டது இந்த வருடத்தில்தான். பதிவு செய்தது, வங்கிக் கணக்கு தொடங்கியது என அனைத்து செயல்பாடுகளும் இந்த வருடத்தில்தான் நடந்திருக்கிறது. மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் என உருப்படியான காரியங்களைச் செய்ததும் இந்த வருடத்தில்தான். எழுதுவதன் வழியாக இத்தகைய செயல்களையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உருவானதை குறிப்பிட்டே தீர வேண்டும். எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்த நம்பிக்கைதான் யோசிக்கச் செய்திருக்கிறது.

எந்த முடிவுகளையும் தனிப்பட்ட முறையில் எடுப்பதில்லை. ஏதாவதொருவிதத்தில் தொடர்பில் இருப்பவர்களிடம் கருத்து கேட்டுவிடுவதுண்டு. தொடர்பில் இருப்பவர்கள் என்றால் நிசப்தம் வாசிப்பவர்கள்தான். அறக்கட்டளையாக பதிவு செய்யலாமா என்பதை மட்டும் இருபது பேரிடமாவது கேட்டிருப்பேன். அதில் பெரும்பாலானவர்களின் முகமே தெரியாது. மின்னஞ்சல் வழியாகவோ, ஃபேஸ்புக் அல்லது தொலைபேசி வழியாகத் தொடர்பில் இருந்தவர்கள். இதே போல சிலரிடம் ‘நிசப்தம் எப்படியிருக்கு? போரடிக்குதா?’ என்றும் அவ்வப்போது கேட்டு வைத்துக் கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. இத்தகைய கருத்துக்கள் நிறைய உதவுகின்றன. இப்படி பரவலான கருத்துக்களின் வழியாகவே நிசப்தம் தொடர்ந்து உருமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த வருடம் வெளியான மசால் தோசை 38 ரூபாய் தொகுப்பின் கட்டுரைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். ஐந்தாறு பேர்களிடம் ஐம்பது கட்டுரைகளைக் கொடுத்து அவற்றிலிருந்து இருபத்தைந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லியிருந்தேன். இந்த ஐந்தாறு பேர்களையும் இதுவரை நேரிலேயே பார்த்ததில்லை. ஒருவர் ஐடி ஊழியர், இன்னொருவர் ஐடி பெண்மணி, ஒருவர் குடும்பத் தலைவி, இன்னொருவர் ஓய்வு பெற்ற அதிகாரி, இன்னொருவர் கல்லூரி மாணவர், ஒருவர் சொந்தத் தொழில் செய்கிறார். இப்படி வெவ்வேறு மனிதர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளிலிருந்து இருபத்தைந்து கட்டுரைகள் முடிவு செய்யப்பட்டன. ஒருவிதத்தில் Pulse பார்ப்பதுதான். எல்லாவிதத்திலும் இது சரியாக இருக்கிறது. 

புத்தகத்தின் முதல் பக்கத்தில் நிறையப் பேருக்கு நன்றி சொல்லியிருப்பதாக ஒருவர் நக்கலடித்திருந்தார். அது பிரச்சினையில்லை. நான்கு பேர் நான்கு விதமாக பேசத்தான் செய்வார்கள்.

அத்தனை செயல்பாடுகளிலும் முகம் தெரியாதவர்கள் தோள் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள்தான் நம்பிக்கையைக் உருவாக்குகிறார்கள். இத்தகைய ஆதரவுகளும் நம்பிக்கையும் இல்லையென்றால் இப்பொழுது விழுந்திருக்கும் சிறு வெளிச்சத்தைக் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அதற்கு கைம்மாறாக என்ன செய்வது? நன்றி பாராட்டலைத் தவிர.

ஃபேஸ்புக் வழியாகவும் ட்விட்டர் வழியாகவும் தேடி வருபவர்களின் எண்ணிக்கைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது - அடுத்தவர்களின் பரிந்துரைகள் வழியாக வாசிக்கத் தொடங்குபவர்கள். ‘அவர் சொன்னாருன்னுதான் படிக்கத் தொடங்கினேன்’ என்று அநேகம் பேர் சொல்லியிருக்கிறார்கள். இத்தனைக்கும் எல்லோருடனும் தொடர்பு கொள்ள இயலாமல் போயிருக்கிறது. மின்னஞ்சல்களுக்கும் அலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் விட்டிருக்கிறேன். சில மின்னஞ்சல்கள் அனுப்பியவர்கள் அதன் பிறகு தொடர்பிலேயே இல்லாமல் போயிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் புரிந்து தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா என்ன? 

இதெல்லாம் சரிதான்.

திருப்பதி மகேஷிடமிருந்து முதல் வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மனைவியிடம் சொன்னேன். ‘பதினோராவது வருஷமா? உங்களுக்கு வயசாயிட்டே போகுதுங்க’ என்கிறாள். அவரவரர் பிரச்சினை அவரவருக்கு.

இன்னமும் எவ்வளவோ தூரம் போக வேண்டியிருக்கிறது. பெருமையெதுவும் அவசியமில்லை. ஆனால் மனதுக்குள் மிகப்பெரிய உந்துதல் இருக்கிறது. அதை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எழுத்திலும் செயல்பாட்டிலும் எந்தவிதமான குறை தெரிந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். 

வழக்கம்போலவே அத்தனை பேரின் வாழ்த்துக்களையும் ஆதரவையும் இனிவரும் காலத்திலும் எதிர்பார்க்கிறேன்.