Feb 6, 2015

வீரப்பன் என்னும் கடத்தல்காரன்

வீரப்பன் கூட்டத்தில் யாருக்காவது குரங்குக்கறி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அந்த இடத்தில் குரங்குகளே இல்லை. என்ன செய்வார்கள்? குரங்கு இல்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பெரிய பிரச்சினையே இல்லை. நல்ல புல்வெளியாகப் பார்த்து பக்கத்திலேயே துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு அச்சு அசலாக குரங்கு மாதிரியே கத்துவார்கள். ‘நம்ம ஆளு யாரோ கூப்பிடுறான்’ என்று ஒரு பெருங்கூட்டமே திரண்டு வரும். தேவைப்படும் குரங்காகப் பார்த்து டுமீர். அவ்வளவுதான். தோலை உரித்து கறி ஆக்கிவிடுவார்கள்.

‘இதெல்லாம் டுபாக்கூர். குரங்கு மாதிரியே யாராவது கத்த முடியுமா? நேரில் பார்த்தவன் மாதிரி கதைவிடுகிறான்’ என்று யாராவது சொல்லக் கூடும். நேரில் பார்த்தவர்கள் எழுதியதுதான். கிருபாகர்-சேனானி. கர்நாடகத்தின் மிக முக்கியமான வனவிலங்கு ஆர்வலர்கள். பந்திப்பூர் வனத்தில் நிழற்படங்களை எடுத்து முடித்துவிட்டு மின்சாரம் இல்லாத தங்கள் குடியிருப்பில் மாலை நேரமொன்றில் குளித்துக் கொண்டிருந்த போது வீரப்பன் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டவர்கள். வீரப்பனுக்கு இந்த இருவரும் மத்திய அரசில் முக்கியமானவர்கள் என்று யாரோ தவறுதலான தகவல் கொடுத்துவிட்டார்கள். கதவைத் திறந்து வந்து துப்பாக்கியைக் காட்டி இழுத்துச் சென்றுவிட்டார்கள்.

சேனானி என்று வீரப்பனுக்கு வாயில் நுழையாததால் சேனி என்று அழைக்கத் தொடங்குகிறான். கிருபாகர் கிருபா ஆகிவிட்டார். இவர்கள் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் ஒளிந்திருக்கிறார்கள். அந்த இடத்துக்கு வனத்துறையின் வண்டி ஒன்று வழக்கமாக வரும். வனத்துறை அதிகாரிகள், வெளிநாட்டுக்காரர்கள் ஆகியோர் வருவது வாடிக்கை. வந்தால் வளைத்து அமுக்கிவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் அன்றைய தினத்தில் முக்கியமான ஆட்கள் யாருமே வரவில்லை. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது மாதிரி வண்டியிலிருந்த மேற்கு வங்க விஞ்ஞானி ஒருவரையும் வனத்துறையின் கடைநிலை ஊழியர்கள் மூன்று பேரையும் வீரப்பன் குழு அழைத்துச் செல்கிறது.

அடுத்த பதினான்கு நாட்களுக்கு அந்தக் குழுவினரோடு தங்கியிருந்ததைப் பற்றிய அனுபவம்தான் இந்தத் தொகுப்பு. பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் மொழிபெயர்ப்பு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. வெகு இயல்பான மொழிநடை. இருநூறுக்கும் சற்று அதிகமான பக்கங்கள். நடுவில் வெகு சில பக்கங்கள் மட்டும் சற்று போர். ஆனால் மொத்தத்தில் மிகச் சுவாரஸியமான புத்தகம். 

பொதுவெளியில் வீரப்பனைப் பற்றிய பிம்பம் இருக்கிறது அல்லவா? வேட்டைக்காரன், கொலைகாரன், மூர்க்கன் இன்னும் என்னனென்னவோ- அதில் ஏகப்பட்ட பிம்பங்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்கிற புரிதலை எந்தவிதமான பாசாங்கும் இல்லாமல் இந்தப் புத்தகம் உருவாக்குகிறது.

பொதுவாகச் சொன்னால் வீரப்பன் முரட்டு கிராமத்தானாகத்தான் வாழ்ந்திருக்கிறார். ஆனால் பாபர் மசூதி இடிப்பிலிருந்து, வனத்தின் ரகசியங்கள், விதி மீதான நம்பிக்கை வரை மிகத் தெளிவாக உரையாடத் தெரிந்த மனிதன். ஆயிரக்கணக்கான யானைகளைத் தான் கொன்றிருப்பதாக இருக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றி வருத்தப்படும் மனிதன், தான் செல்லும் இடங்களிலெல்லாம் வேறு யாரோ வந்து கொன்று தந்தத்தை எடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்றும் ஆனால் வழக்கை என் மீது போடுகிறார்கள் என்று புலம்பும் காட்டுவாசி என்று வீரப்பனின் பல்வேறு முகங்கள் வெளிப்படுகிறது. வீரப்பன் மட்டுமில்லாது அவரோடு இருந்த சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட பிற கூட்டாளிகளைப் பற்றிய தகவல்களையும் போகிற போக்கில் புத்தகம் சொல்லிவிடுகிறது.

வீரப்பன் கூட்டத்தினர் அளவுக்கு வனம் பற்றிய அறிவுடையவர்களை இனிப் பார்ப்பது சிரமம் என்கிற ரீதியில் தொகுப்பு நகர்கிறது. அதில் நிச்சயம் உண்மை இருக்கும். கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் வனத்திற்குள்ளேயே திரிந்த கூட்டம் அது. . எங்கேயோ ஒரு அணில் கத்துவதை வைத்து காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கணித்துவிடுவார்களாம். கடத்தப்பட்டவர்களுடன் கூட்டமாக நடந்து கொண்டிருக்கும் போது விலங்குகளின் கால்தடங்களைப் பார்த்திருக்கிறார்கள். இவர்களை அழைத்து ‘இது என்ன?’ என்று வீரப்பன் கேட்ட போது இவர்களுக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஒரு புலி ஆண் மானை வேட்டையாடிய கால்தடங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைச் சொல்வது கூட அவ்வளவு பெரிய விஷயமில்லை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அந்த வேட்டையை ஓரங்க நாடகமாக நடத்திக் காட்டுகிறார். அவ்வளவு துல்லியமாக இருந்தது என்று சிலாகிக்கிறார்கள். சிலாகிப்பவர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை- காலங்காலமாக வனத்திற்குள்ளேயே திரியும் வன ஆர்வலர்கள்.

வீரப்பன் சிறுவனாக இருந்த போது வனத்துக்குள் ஆடுகளையே விடமாட்டார்களாம். சொற்ப ரூபாய்க் கணக்கில் தங்கம் விற்ற அந்தச் சமயத்தில் ஆட்டை வனத்துக்குள் விட்டால் ஐந்து ரூபாய் அபராதம் விதிப்பார்களாம். ஐந்து ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அதன் பிறகு ஆடுகளை மேய்த்துப் பழகிய போது கொஞ்சம் கொஞ்சமாக வனம் அழியத் தொடங்கியது என்கிற வருத்தத்தை வீரப்பன் சொல்வது கவனிக்கத்தக்கது. மேட்டூர் வனம் அழிந்ததில் ‘மேச்சேரி ஆடு’என்ற ஆட்டு இனத்தை அறிவியல் ரீதியாக உருவாக்கி அந்தப் பகுதி மக்களிடையே பரவலாக்கியது மிக முக்கியக் காரணம் என்று எப்பொழுதோ படித்த சூழலியல் கட்டுரையொன்று ஞாபகத்தில் இருக்கிறது. அந்தவிதத்தில் வீரப்பனின் புரிதல் ஆச்சரியமளிக்கக் கூடியது.

ஒரு சமயம் வீரப்பனும் அவரது நண்பரும் காட்டில் படுத்து உறங்கியிருக்கிறார்கள். திடீரென்று நண்பர் அலறியிருக்கிறார். இருட்டில் எதுவுமே தெரியவில்லை. வீரப்பன் தடவிப்பார்த்த போது தென்னை மரம் போல என்னவோ தட்டுப்பட்டிருக்கிறது. நாற்பதடி தூரம் தாண்டி விழுந்து அதிகாலையில் மயக்கம் தெளிந்த போதுதான் தெரிந்திருக்கிறது தான் யானையால் தூக்கி வீசப்பட்டது பற்றி. 

இன்னொரு சமயத்தில் மிக அருகில் வந்துவிட்ட கரடியை வேறு வழியே இல்லாமல் சுட்டுக் கொன்றது, அடுத்த நாள் அதே தடத்தில் சென்ற போது இரண்டு குட்டிகள் தனது இறந்து போன அம்மாவிடம் பாலுக்காக சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது உட்பட பல்வேறு விஷயங்களை வீரப்பன் பகிர்ந்து கொள்வது புத்தகத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.

வீரப்பனின் மனிதாபிமானம், இறைபக்தி, வீரப்பன் பேசும் தத்துவங்கள், அவர் அரசாங்கத்தை கையாளும் முறை, காடுகளில் இருக்கும் கம்பளிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் என புத்தகம் பல்வேறு பரிணாமங்களைக் காட்டுகிறது. காலச்சுவடு வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் என் வாசிப்பளவில் மிக முக்கியமான புத்தகமாகத் தோன்றுகிறது. என்னதான் குற்றவாளி என்றாலும் வீரப்பன் ஒரு ஜாம்பவான் என்பதை மறுக்க முடியவில்லை. சற்று அதிகப்படியான excitement போலிருந்தாலும் அதுதான் உண்மை.

வீரப்பன் கூட்டத்தின் உணவு முறை, தேவைப்பட்டால் வீரப்பனே மருந்து எடுத்து மற்றவர்களுக்கு ஊசி போட்டு விடுவது என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ரங்கசாமி போட்டுக் கொடுக்கும் டீயைக் குடித்தால் வாய் ஒட்டிக் கொள்ளுமாம். ரங்கசாமிதான் ஆஸ்தான சமையல்காரர். உதடுகள் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு சர்க்கரையை அள்ளிக் கொட்டியிருப்பாராம். ரங்கசாமிக்குத் தெரிந்தது இரண்டு மெனு. காலையில் சாம்பாரும் சோறும். இரவில் சோறும் சாம்பாரும். அவ்வளவுதான். எப்பொழுதாவது கவிச்சை உண்டு. இப்படி படு ஜாலியாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்த போது வீரப்பன் நம்மையும் கடத்தியிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவிதமான க்ரேஸி விருப்பம்தான். ஆனால் அப்படியொரு எண்ணம் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை. வீரப்பனுக்கு பொது மன்னிப்போ அல்லது ஏதாவதொரு தண்டனையோ கொடுத்து விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவரிடமிருந்து வனம், அதன் ரகசியங்கள் குறித்தான மிக அதிகமான தகவல்களைக் கறந்திருக்க முடியும். அது நிச்சயமாக தென்னிந்திய வனம் பற்றிய மிகப்பெரிய என்சைக்ளோபீடியாவாக இருந்திருக்கும். 

ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.