Oct 11, 2014

யாருக்குத்தான் கவலையில்லை?

எதையெல்லாம் நாம் பாஸிட்டிவ் என்று நினைக்கிறோமோ அதை அப்படியே எதிர்மறையாக நினைக்கிற ஆட்கள் இங்குண்டு. ‘ஐய்யோ நைட் ஷிஃப்ட்டா?’ என்று பதறினால் ‘ஐ நைட் ஷிஃப்ட்’ என்று கொண்டாடுகிற ஆட்களை பார்ப்பது மாதிரிதான். ஒரே கவிதைதான். ஆனால் ஆளுக்கொரு அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் என்றால் ஜெயம் சதாவை போல கையை அடி வானத்தை நோக்கி வைத்துக் கொண்டு ‘போய்யா’ என்கிறவர்களும் இருக்கிறார்கள்.

ஆத்மாநாம் கவிதை பற்றிய கட்டுரைக்கு ஆக்னெஸ் வில்சன் என்பவரின் கமெண்ட் இதுதான் - 

நீங்கள் கவிதையில் எது அழகு என்று ரசிக்கிறீர்களோ அந்த காரணத்திற்காகத்தான் நான் அதை படிப்பதை தவிர்க்கிறேன். எனக்கு கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புரியவேண்டும். அந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் எல்லாம் எடுத்துக்கொள்வது போல இருக்கக்கூடாது. அப்படி எழுதும் கவிஞர்கள் வாசகர்களை ஏமாற்றுவது போலத் தோன்றும். காரணம், அவர்கள் உண்மையில் ஒரு நிகழ்வாக, சும்மா வரியை மடக்கி போட்டு ஏதோ எழுதியிருப்பார்கள். அதை, அதிக உணர்ச்சிவசப்படும் ஒரு புத்திசாலியான வாசகன் ஒரு ஆழமான கருத்தை அந்த வரிகளை வைத்து கற்பனை செய்வான். ஆனால் credit போவதோ அந்த கவிஞனுக்கு. உண்மையில் அந்த அற்புதமான கருத்துக்கு அந்த வாசகன் காரணமாயிருப்பான். கவிஞர் நினைத்துக்கொடிருப்பார், ‘அட... நான் ஏதோ கிறுக்கினதுக்கு இவன் என்னமா அர்த்தம் சொல்லறான் பாரு....’என.

ஆக்னெஸ் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. ‘இவன் கிறுக்குப்பயலாட்டம் எதையாவது எழுதி வைத்துவிட்டு போய்விடுவான். நான் மண்டை காய்ந்து அர்த்தம் கண்டுபிடித்தால் இவன் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வானா?’ என்று கேட்கிறார் என்றாலும் இது பதில் சொல்ல முடியாத கடினமான கேள்வி இல்லை.

புதிர்களைத் தீர்க்கிறோம். க்ரெடிட் அந்தப் புதிரை எழுதியவருக்கா செல்கிறது? விடுகதைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கிறோம். விடுகதை உருவாக்கியவரா காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறார்? சூடோக்குவுக்கான பதிலை எழுதி முடிக்கும் போது யாருக்கு சந்தோஷம் கிடைக்கிறது? கவிதையையும் இப்படித்தான் வாசிக்க வேண்டும். எழுதி முடித்தவுடன் கவிஞனுக்கும் கவிதைக்குமான பந்தம் அறுந்துவிடுகிறது. அதை புரிந்து கொள்ளும் அத்தனை க்ரெடிட்டும் வாசகனுக்குத்தான் சேரும். 

இப்பொழுதெல்லாம் நேரடியாகவும் எளிமையாகவும் எழுதப்படும் கவிதைகள்தான் ஓரளவு கவனம் பெறுகின்றன. அதை எழுதுவதும் எளிது, புரிந்து கொள்வதும் எளிது என்று காரணங்கள் இருக்கின்றன. ஆனால் காலங்காலமாகவே பாடலுக்குள் மறைந்திருக்கும் பொருளில்தான் சுவாரசியம் இருக்கிறது. 

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல். கோவலனும், கண்ணகியும் கவுந்தியடிகளும் மதுரையை நோக்கிச் செல்லும் போது மாங்காட்டு மறையோன் என்றொரு வைதிகர் எதிர்ப்படுகிறார். அவரிடம் மதுரை செல்வதற்கான வழியைக் கேட்கிறார்கள். அவர் சிவபெருமானின் சூலம் போல இருக்கும் மூன்று வழிகளில் மதுரை செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு பாதை பற்றியும் விளக்குகிறார். இடது புறமாகச் சென்றும் மதுரையை அடையலாம். வலதுபுறமாகச் சென்றும் அடையலாம். நேராகச் சென்றும் அடையலாம். ஆனால் ஒவ்வொரு பாதையும் தனித்துவமானவை.

இந்த ஒரு பாடலை வைத்து எவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன என்று தமிழாசிரியர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம். 

மறையோன் சொல்லிச் சென்றது வெறும் பாதை மட்டுமில்லை- இடதுபக்க பாதையைப் பற்றிச் சொல்லும் போது அதில் திருமாலின் பெருமைகளை விவரித்து வைணவ பிரச்சாரத்தைச் செய்கிறார் என்கிறார்கள். அந்தப்பாடலில் சிவபெருமானின் சூலமும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் பெருமையும் இடம் பெறுகிறது. அதன் வழியாக சைவத்தின் பெருமையும் சொல்லப்படுகிறது என்கிறார்கள். கவுந்தியடிகள் சமணர். வலமும் வேண்டாம் இடமும் வேண்டாம் என நடுவில் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் நடுவழியைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக சமணத்தின் தத்துவத்தை அழுத்தமாகச் சொல்கிறார்கள் என்கிறார்கள். 

இளங்கோவடிகள் இதையெல்லாம் யோசித்து எழுதியிருப்பாரா என்று தெரியாது. ஆனால் இந்தக்காலத்தில் இந்தப் பாதையை வைத்துக் கொண்டு பி.ஹெச்.டி புத்தகமே எழுதுகிறார்கள். இளங்கோவடிகளின் காலத்தில் நெடுங்குளத்திலிருந்து மதுரை செல்வதற்கு மூன்று வழிகள் இருந்திருக்கக் கூடும். அவர் அதை மட்டுமே குறிப்பிட்டு சிலப்பதிகாரத்தின் இந்தப் பகுதியை எழுதியிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இப்பொழுது ஆராய்ச்சிகள் நடப்பதில்லையா? அப்படித்தான். 

ஒரு நல்ல கவிதையில் கவிஞன் வேறு ஏதோ ஒன்றை மனதில் நினைத்துத்தான் எழுதியிருப்பான். அதுதான் சாத்தியம். தனது அனுபவத்திற்கு ஏற்ப வாசகன் வேறொரு அர்த்தத்தை எடுத்துக் கொள்கிறான். அந்த அனுபவத்தை வாசகனுக்குள் கிளறிவிடுகிறான் அல்லவா?  அந்த க்ரெடிட்டை கவிஞனுக்குக் கொடுத்தால் போதும். அப்படியே கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

இதை Reader's space எனச் சொல்லலாம். வாசகர்கள் யோசிப்பதற்கான இடம். ‘இதுவா இருக்குமோ? அதுவா இருக்குமோ?’ என்றெல்லாம் ஒரு கவிதைய வாசித்துவிட்டு நமது யோசனை றெக்கை கட்டுகிறதல்லவா? அதுதான். 

ஆக்னெஸ் சொல்வதையும் முற்றாக மறுக்கவில்லை. இப்பொழுது கவிதை என்று சொல்லிக் கொண்டு எழுதுகிறவர்களில் முக்கால்வாசிப்பேருக்கு கவிதையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதுதான் நிதர்சனம். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இதைச் சொன்னால் உதைப்பார்கள் என்றாலும் அதுதான் உண்மை. தங்களின் சித்து விளையாட்டுக்களை காட்டுவதற்கான இடமாக கவிதையை நினைத்துக் கொண்டு எதை எதையோ செய்து வாசகர்களை குழப்பியடிக்கிறார்கள். இப்படித்தான் ஒரு பெரும் வாசகர் கூட்டத்தை தலை தெறித்து ஓடச் செய்துவிட்டார்கள். இதுதான் சிக்கல். ஆனால் இதுவொன்றும் தீர்க்க முடியாத பிரச்சினையில்லை. கவிதையை தரம்பிரிக்கப் பழகிவிட்ட வாசகனிடம் இந்த சித்து வேலையைக் காட்ட முடியாது. பொடனியிலேயே சாத்தி கவிதையைக் கடாசிவிடுவான். 

கவிதையில் தரம்பிரித்தல் ஒன்றும் பெரிய காரியமில்லை. பயிற்சி இருந்தால் போதும். பழகிவிடலாம்.

பசுவய்யாவின் கவிதை ஒன்று-

மனச்சுமை மனிதனை
மீண்டும் சந்தித்தேன்
கொண்டை ஊசியாக வளைந்திருந்தான்
அவன் வாய்
அவன் பாதங்களைக் கவ்விக் கொண்டிருந்தது
உடலும் உள்ளமும் ஆத்மாவும்
சுமையாகக் கனக்கிறது என்று அழுதான்
மரணம் விடுதலை தராதா என்றேன்
மரண பயத்தில்தான்
இரண்டாக மடிந்தேன் என்றான்.

இந்தக் கவிதை ஓரளவு நேரடித்தன்மை கொண்டது. எப்பொழுதுமே மன அழுத்தத்தில் இருப்பவனைச் சந்திக்கிறார். அவனது வாய் பாதம் வரைக்கும் வளைந்திருக்கிறது. அத்தனை சுமைகளை மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறான். ‘செத்தாவது தொலைக்கலாமே..விடுதலை கிடைக்குமே?’ என்கிறார். ‘யோவ்...செத்துப் போயிடுவேனோங்கிற பயத்துலதான் ரெண்டா மடிஞ்சிருக்கேன் போய்யா’ என்கிறான். 

எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு சுமையை ஏற்றிக் கொண்டேயிருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான். எதிர்ப்படுகிற ஒவ்வொரு மனுஷனுக்குமே கவலை இருக்கத்தான் செய்கிறது. ஒருவனுக்கு பணம் பற்றிய கவலை என்றால் இன்னொருவனுக்கு உடல்நிலை பற்றிய கவலை. ஒருவனுக்கு வேலை பற்றிய கவலை என்றால் இன்னொருவனுக்கு திருமணம் பற்றிய கவலை. ஒருவனுக்கு மனைவி பற்றிய கவலை என்றால் அவளுக்கு குழந்தைகள் பற்றிய கவலை. எதிர்காலம் பற்றிய கவலை. உறவுகள் பற்றிய கவலை. இங்கு யாருக்கு கவலையில்லை? கவலைகளை ஏற்றி வைத்துக் கொண்டேயிருந்தால் இடுப்பு மடங்கி வாய் பாதங்களைக் கவ்விக் கொள்ளும் அளவுக்கு வளைந்து போவதுதான் மிச்சம். தூக்கி வீசு. சாகிற வரைக்கும் பிரச்சினைகள் நம்மோடு ஒட்டிக் கொண்டேதான் இருக்கும். கவலைகளை இறக்கி வைத்துவிட்டு வாழ்கிற வழியைப் பார்க்கலாம்.

இதுதான் இந்தக் கவிதையிலிருந்து நான் புரிந்து கொள்ளும் அர்த்தம். எல்லாவற்றையும் மனதுக்குள் ஏற்றி வைத்துக் கொண்டேயிருந்தால் அப்படியே இருக்க வேண்டியதுதான்- சாகிற வரைக்கும்.

கவிதையின் தொனியைப் பாருங்கள். நறுக். கடைசி வரியைப் படித்தவுடன் நம்மையும் மீறி ஒரு சிரிப்பு வந்துவிடும். அதன் பிறகு யோசிக்கத் தொடங்கிவிடுவோம்.

(தமிழின் முக்கியமான எழுத்தாளரான சுந்தர ராமசாமி, கவிதைகளை பசுவய்யா என்ற பெயரில் எழுதினார். நாவலாசிரியர், கறாரான விமர்சகர் என்ற பல பரிமாணங்களைக் கொண்ட பசுவய்யா தனது வாழ்நாளில் 107 கவிதைகளை எழுதியிருக்கிறார்)