Oct 11, 2014

எந்த ஃபோன் வாங்கலாம்?

இரண்டு நாட்கள் முன்பாக ஒரு நண்பர் யாரிடமோ ஃபோனில் சண்டையிட்டபடியே அலுவலகத்திற்குள் நுழைந்திருக்கிறார். தமிழர்தான். குற்றாலம் பக்கத்தில் ஊர். அவருக்கு வயது நாற்பதைத் தொடும். சப்தத்தை அதிகரித்தபடியே உள்ளே வந்திருக்கிறார். அவரை நிறுத்தி ‘பையை செக் செய்யணும்’ என்று செக்யூரிட்டி கேட்டிருக்கிறார். அது வழமையான செயல்பாடுதான். துழாவி பார்த்துவிட்டுதான் உள்ளே விடுவார்கள். இவருக்கு கோபம் ஏற்கனவே உச்சியில் இருக்கிறது. செக்யூரிட்டி குறுக்கீடு செய்யவும் எகிறி ஒரு அறைவிட்டுவிட்டார். விடுவார்களா? தோண்டித் துருவியிருக்கிறார்கள். கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். தவறு முழுவதும் நண்பரின் மீதுதான். மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆனால் அதோடு விடமாட்டார்கள் போலிருக்கிறது. இந்த வாரம் ரிசல்ட் தெரிந்துவிடும். பம்மிக் கொண்டிருக்கிறார். ஃபோனில் சண்டை போட்ட மனிதன் பல நூறு கிலோமீட்டர்களுக்கு அந்தப்பக்கமாக இருந்தபடியே சோலியை முடித்துவிட்டான். Technology rocks!

முன்பெல்லாம் பயணங்களின் போது சாலைகளின் மீது கவனம் இருக்கும் அல்லது பயணிகளை கவனித்துக் கொண்டிருப்போம். இப்பொழுது தொடரூர்திக்குள்ளும் பேருந்துக்குள்ளும் பாருங்கள். பதினைந்திலிருந்து முப்பத்தைந்து வயதானவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் செல்போனில்தான் உலகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அது கேம்ஸ், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், திரைப்படம் என்று ஏதாவதொரு வகையில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தங்களக்குத் தாங்களே சிரித்துக் கொள்கிறார்கள். அவ்வப்போது வெட்கப்படுகிறார்கள். அவ்வப்போது துள்ளுகிறார்கள். பயணங்களின் போது மட்டுமில்லை- வகுப்பறைகளில், காத்திருக்குமிடங்களில், நூலகங்களில், திரையரங்குகளில், அலுவலகங்களில் என்று ஒரு இடம் பாக்கியில்லை.

டெக்னாலஜி நல்ல விஷயம்தானே? தொலைத் தொடர்பை எளிமைப்படுத்தியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை தொட்டுவிட்டு வந்திருக்கிறோம். ஆத்திர அவசரம் என்றால் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடிகிறது. லட்சக்கணக்கில் சம்பாதிக்க உதவுகிறது. மருத்துவத்துறை கொடிகட்டுகிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்தானே?

தொழில்நுட்பம் நல்லதுதான். அது எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. ஓர் முக்கால் முக்கால், ஈர் முக்கால் ஒன்றரை என்று முக்கால் வாய்ப்பாட்டை அப்பா தலைமுறையில் படுவேகமாகச் சொல்வார்கள். இன்றைய தலைமுறையில் எட்டாம் வாய்ப்பாட்டைக் கூட அவ்வளவு வேகமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதுதான் செல்போனிலேயே கால்குலேட்டர் இருக்கிறதே? எதற்கு மனப்பாடம் செய்ய வேண்டும்? அது சரிதான். எத்தனை செல்போன் எண்களை மனப்பாடமாகச் சொல்லத் தெரியும்? நெருங்கிய நான்கு பேர்களின் எண்களைக் கூடத் தெரியாதவர்களின் சதவீதம்தான் அதிகமாக இருக்கும். இப்படி மூளைக்கு எல்லாவிதமான ஓய்வையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஓய்வு என்றும் சொல்ல முடியாது. நம் சிந்தனையை பிரஜோனமில்லாத ஒரு செயலுக்காக ஒருமுகப்படுத்தி வீணாக்குவது என்று சொல்லலாம். 

இந்தச் சமூகத்துக்கு தொழில்நுட்பம் நிறையக் கொடுத்திருக்கலாம். ஆனால் தனிமனிதனை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. தனிமனித உறவுகளின் விரிசலுக்கு, கொலைகளுக்கு, கொள்ளைகளுக்கு என பெரும்பாலான சீரழிவுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழில்நுட்பத்தின் தொடர்பு இருக்கிறது. சென்ற தலைமுறை வரை சற்று பரவலாக இருந்த அறிவு இப்பொழுது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பரவலான அறிவு என்று எதைச் சொல்கிறேன் என்றால் - இயற்பியல் தெரிந்த மனிதருக்கு வேதியியல் குறித்தான புரிதல் இருக்கும். துளியாவது வானியல் தெரிந்திருக்கும். சற்றேனும் சோதிடம், சமயம் குறித்தான புரிதல் இருக்கும். இன்றைக்கு அது குறுகியிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துறையில் நாம் வல்லுநராக இருக்கக் கூடும். ஆனால் பிற  துறைகளைப் பற்றி வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் நமக்கு நேரமே இருப்பதில்லை. ‘இருக்கிற வேலையையே செய்ய முடியவில்லை..இதுல வேற எதை படிக்கிறது?’ என்று சாக்குச் சொல்லிவிடுகிறோம். யோசித்துப் பார்த்தால் பிரையோஜனமில்லாத முக்கியத்துவமில்லாத வேலைக்குத்தான் ஒரு நாளின் அதிகமான நேரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். அந்த அதிகமான நேரத்தில் பெரும்பான்மையான நேரம் ஏதாவதொரு தொழில்நுட்பக்கருவியால்தான் இழக்கப்படுகிறது.

உதாரணமாக வீடியோகேம்களும், போகோ சேனலும், சோட்டா பீமும் தங்களைத் தாண்டி குழந்தைகளை யோசிக்கச் செய்வதில்லை. பதின்ம வயதினரின் பெரும்பாலான நேரத்தை சாட்டிங் எடுத்துக் கொள்கிறது. அதைத் தாண்டி அவர்களை சிந்திக்க விடுவதில்லை. அதை விட சற்று வயது முதிர்ந்தவர்களை சோஷியல் மீடியாக்கள் அள்ளிக் கொள்கின்றன. இப்படி ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை தொழில்நுட்பத்துக்கு எழுதி வைத்திருக்கிறோம். தப்பிக்கவே முடிவதில்லை.

செல்போன் கம்பெனிகளும் நம்மை விடுவதில்லை. கேம்ஸ், எப்.எம், கேமிரா, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று எதெல்லாம் முடியுமோ அதையெல்லாம் சேர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள் நாம் தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அசைத்துவிடக் கூடாது என்று பார்த்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். மிகச் சிறந்த டெக்னாலஜி அடிமைகளாக நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு நாட்கள் செல்போன் இல்லை. ஏதோ வைரஸ் வந்துவிட்டது. வேலை செய்யவில்லை. ஆரம்பத்தில் கை உடைந்தது போலத்தான் இருந்தது. ஆனால் அப்படி இல்லை. யாரிடமும் தொடர்பு இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் யாராவது வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியிருக்கவில்லை. அரை மணிக்கு ஒரு முறை ஃபேஸ்புக்கில் யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா என்று பார்க்கவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது ஜிமெயிலைத் திறக்கவில்லை. என்டிடிவியின் செய்தி அப்டேட் பார்க்கவில்லை. ‘எப்போ கிளம்புவீங்க?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை. ஏகப்பட்ட நேரம் மிச்சமாகியிருக்கிறது. ஒருவிதமான விடுதலை உணர்வு என்று கூடச் சொல்லலாம்.

டெக்னாலஜியிலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்வது பெரும்பாடுதான். ‘இனிமேல் அலுவலகத்தில் ஃபேஸ்புக்கைத் திறக்கவே கூடாது’ என்று எனக்கு நானே சத்தியம் செய்தாலும் சாத்தியமாக்க முடிவதில்லை. எனக்கு மனதை கட்டுப்படுத்தவே தெரிவதில்லை. இதையெல்லாம் இவ்வளவு நாட்களாக யோசிக்கவே இல்லை என்பதே கூட ஆச்சரியமாக இருக்கிறது. நல்லவேளையாக இந்த வைரஸ் வந்து சேர்ந்தது. இது பற்றி யோசிக்கவும் நேரம் கிடைத்தது. யோசித்து புது ஃபோன் வாங்கியிருக்கிறேன். 

சாம்சங் குரு. வெறும் ஆயிரத்து நூறு ரூபாய்தான். ஃபோன் செய்யலாம். வருகிற அழைப்பிற்கு பதில் சொல்லலாம். வேறு எதுவுமே இல்லை. எடுத்துக் கொடுத்துவிட்டு சேல்ஸ்மேன் மேலும் கீழும் பார்த்தார். ‘இதை வாங்க எதுக்கு லேப்டாப் பையோடு வந்திருக்கிறான்’ என்று நினைத்திருக்கக் கூடும். பில் போட்டுக் கொண்டிருந்தபோது இன்னொரு நபர் ஐபோனின் அடுத்த மாடலுக்கு முன்பதிவு செய்ய வந்திருந்தார். ஐம்பத்து மூன்றாயிரம் ரூபாயாம். இன்னும் பத்து நாட்களில் இந்தியாவில் கிடைக்கத் தொடங்கிவிடும் என்றார்கள். ‘கங்கிராட்ஸ் சார்...நீங்க அறுபத்தியிரண்டாவது முன்பதிவு’ என்று கடைக்காரர் சொன்னார். அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அவ்வளவு பிரகாசம். அவ்வளவு பெருமிதம். முக்கால் வினாடிக்கு எங்கள் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. சிறைக்குள்ளே வருபவரைப் பார்க்கும் போது விடுதலையாகி வெளியேறுபவர் ஆசுவாசமாக பார்ப்பார் அல்லவா? அப்படி பார்த்துவிட்டு வந்தேன். அந்த மனிதருக்கு புரிந்திருக்காது.