Oct 13, 2014

ஏன் இப்படி இருக்கிறார்கள்?

நேற்று முன் தினம் பதிப்பாளரை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். பாதி வழியிலேயே பைக் பஞ்சர். சகுனம் சரியில்லை என்று திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் நகரத்தில் பஞ்சர் ஆவதை கெட்ட சகுனம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. வேகத்தடையோ அல்லது குழியோ இருக்கும். கொஞ்சம் வேகத்தைக் குறைத்து மேலே ஏறினால் பஞ்சர் ஆகிவிடும். சிரமப்பட வேண்டியதில்லை எப்படியும் நூறு அல்லது நூற்றைம்பது மீட்டரில் பஞ்சர் கடை வந்துவிடும். அவர்கள்தான் ஆணியைப் போட்டு வைக்கிறார்கள் என்று குற்றமெல்லாம் சுமத்தவில்லை. ஆனால் எனக்கு பஞ்சரான பல நாட்களில் இப்படித்தான் நடக்கிறது.

பெங்களூரில் கொஞ்ச நாட்களுக்கு முன் இப்படி ஒரு ஆளை கைது செய்துவிட்டார்கள். நகரின் முக்கியமான பகுதியில் இப்படி அடிக்கடி பஞ்சராகியிருக்கிறது. கொஞ்ச தூரம் சென்றால் ஒரு மனிதர் ஆட்டோவில் நடமாடும் பஞ்சர் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். பஞ்சர் அடைக்க இருநூறு முந்நூறு ரூபாயெல்லாம் கேட்பாராம். பஞ்சர் கடைக்காரருக்கு கெட்ட நேரமோ புகார் அளித்தவருக்கு கெட்ட நேரமோ தெரியவில்லை- புகார்தாரரின் வண்டியே திரும்பத் திரும்ப மூன்று முறை பஞ்சர் ஆகியிருக்கிறது. சந்தேகம் வந்து போக்குவரத்து காவல்துறையில் போட்டுக் கொடுத்துவிட்டார். அவர்கள் கண்காணித்து அமுக்கிவிட்டார்கள். அவர் காய்கறிக்கடைதான் நடத்தி வந்தாராம். பக்கத்திலிருந்த பஞ்சர் கடைக்காரர் இந்த டெக்னிக்கில் நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து இந்தத் தொழிலுக்கு மாறியிருக்கிறார். சொம்பும் போச்சுடா கோவிந்தா!

சொல்ல வந்த விஷயம் இந்த பஞ்சர்கடை பற்றியதில்லை.

பதிப்பாளரைச் சந்தித்து விட்டு வந்தது பற்றி. பதிப்பாளர் இந்த வருடம்தான் பதிப்பகம் ஆரம்பிக்கிறார். ஆறு புத்தகங்களைக் கொண்டு வருகிறார். சிறுகதைகள் ஒன்று, கவிதைகள் ஒன்று, சினிமா ஒன்று, கட்டுரைகள் இரண்டு போக ஒரு சினிமா பிரபலத்தின் புத்தகம் ஒன்று. குறைந்தபட்சம் முந்நூறு பக்கங்களாவது வரும் அந்தப் புத்தகத்திற்கான சில வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு திரும்ப வரும் போது மணி மதியம் இரண்டைத் தாண்டியிருந்தது. பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம் என்று ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட் பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த கால்வாயில் கூட்டமாக இருந்தது. கூட்டமாக இருந்தால்தான் மூக்கு வியர்த்துக் கொள்ளுமே? வண்டியை ஓரங்கட்டிவிட்டுச் சென்றால் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது. 

அந்த இடத்தில் முந்தின நாள் இரவிலிருந்து பைக் நின்றிருந்திருக்கிறது. யாரும் சந்தேகப்படவில்லை. சனிக்கிழமை காலையில் சுத்தம் செய்வதற்காக வந்தவர்களுக்குத்தான் சந்தேகம் வந்திருக்கிறது. ஆனால் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. மதியவாக்கில் உடல் மேலே வந்துவிட்டது. போலீஸார் வந்து கூட்டத்தை விரட்டத் தொடங்கியிருந்தார்கள். வண்டியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு குதித்திருக்கிறான். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து அதோடு சேர்த்து பர்ஸையும் வண்டி கவரிலேயேதான் வைத்திருக்கிறான். அப்படியே இருந்திருக்கிறது. பதிவு எண் மூலமாக குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்திருந்தார்கள். ஒரு இளம்பெண் கதறிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் யாரோ ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவள் அநேகமாக இறந்தவனின் மனைவியாக இருக்கக் கூடும். நாகரீகமாகத் தெரிந்தாள். அந்தக் குழந்தை அவர்களுடைய குழந்தையாக இருக்கக் கூடும். அந்தக் கால்வாயில் நீரோட்டமே இல்லை. தேங்கி நிற்கிறது. அந்தப் பக்கம் சென்றாலே மூக்கைத் துளைக்கும். எதற்கு குதித்தான் என்று தெரியவில்லை. பலூனாக உப்பி மிதந்து கொண்டிருந்தான். அவளைத் தேற்றுவதற்காக இரண்டு மூன்று பேர் அருகில் வந்து சேர்ந்தார்கள். அவனை வெளியே எடுக்கச் சொல்லி அவர்கள் போலீஸாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கிளம்பி வந்துவிட்டேன்.

பதினைந்து நாட்களுக்கு முன்பாக எங்கள் ஊர்ப்பையன் ஒருவன் இப்படித்தான் சோலியை முடித்துக் கொண்டான். அவனுடைய அண்ணன் எனக்கு வகுப்புத் தோழன். அண்ணன் நல்லபடியாக இருக்கிறான். தம்பியும் படித்திருக்கிறான். ஆனால் வேலை எதுவும் இல்லை. இது தவிர இன்னொரு ட்ராக்கில் காதல் கதை நடந்திருக்கிறது. அந்தக் காதலிலும் ஏதோ சிக்கல். வேலையும் இல்லை காதலும் இல்லை என உடைந்தவன் முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணிடம் பேசியிருக்கிறான். அடுத்த நாள் காலையில் பள்ளிபாளையம் பாலத்தின் மேலிருந்து எட்டிக் குதித்துவிட்டான். கீழே காவிரி அதிசயமாக ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறது. இழுத்துச் சென்ற காவிரி பாறைகளுக்குள் சிக்க வைத்துவிட்டு போயிருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு பாறை சிதைத்து, மீன் அரித்த அந்த உடலை மேலே தூக்கி வந்திருக்கிறார்கள். பர்ஸ் மட்டும் பேண்ட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறது. அதிலிருந்த ஓட்டுநர் உரிமத்தை வைத்து அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிலைமையில் இல்லை. அவ்வளவு சிதைவுகள். அதனால் ஆற்றங்கரையிலேயே பிரேதப் பரிசோதனையை முடித்து அங்கேயே எரித்து அங்கேயே கரைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். 

தினமும்தான் ஏதாவதொரு சாவுச் செய்தியைக் கேள்விப்படுகிறோம். பெங்களூரில் கவாலா என்றொரு ரவுடி இருந்தான். அவனுக்கும் குட்டி என்ற இன்னொரு ரவுடிக்கும் பகை. குட்டியை கவாலா வெட்டிக் கொன்றான். அடுத்த கொஞ்ச நாட்களில் கவாலாவை குட்டியின் ஆளான பாபு வெட்டிக் கொன்றான். பாபுவைக் கொல்ல கவாலாவின் ஆளான நஞ்சுண்டா திட்டமிட்டிருக்கிறான். இதைத் தெரிந்து கொண்ட ஒரு மத்தியஸ்தர் பாபுவையும் நஞ்சுண்டாவையும் தமது வீட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அழைத்திருக்கிறார். பேசிக் கொண்டிருக்கும் போதே நஞ்சுண்டா பாபுவின் கழுத்தில் கத்தியை வீசிவிட்டு தப்பித்துவிட்டான். பட்டப்பகலில் அந்த ஏரியாவே கதறல் சத்தமாக இருந்திருக்கிறது. செத்தவர்களுக்கு குடும்பம் இருக்கும். குழந்தைகள் இருக்கும்தான். ஆனால் இத்தகையை சாவுச் செய்திகளைக் கேட்கும் போது பரிதாபம் எதுவும் வருவதில்லை. குழந்தைகள் விளையாட்டு மாதிரி அவர்களுக்குச் சாவு. இவன் என்னைக் கிள்ளி வைத்தான அதனால் நானும் கிள்ளி வைப்பேன் என்பது மாதிரி. அவன் இவனைக் கொல்ல இவனது ஆட்கள் அவனைக் கொல்ல- சாவட்டும் என்றுதான் இருக்கிறது.

ஆனால் பள்ளிபாளையம் ஆற்றில் விழுபவனையும் ஹெச்.எஸ்.ஆர் சாக்கடையில் விழுபவனையும் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்களின் கதை கூட முடிந்துவிட்டது. அவர்களது குடும்பம் என்ன செய்யும்? அந்தக் குழந்தை என்ன செய்தது? இனிதான் அதன் வாழ்க்கையே தொடங்கிவிருக்கிறது. இனி ஒவ்வொரு காரியத்திற்கும் அடுத்தவர்களின் கையை எதிர்பார்க்கும். மற்ற குழந்தைகள் தங்களின் அப்பாவோடு கடைகளுக்குச் செல்லும் போது தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும். அடுத்த குழந்தை அப்பாவின் கையொப்பத்தோடு பள்ளிக்கு வரும் போது வருந்தும். ஒப்பீடு என்பது அதன் தவிர்க்க முடியாத வியாதியாகிவிடும். விபத்தில் இறப்பதையும் நோயில் இறப்பதையும் கூட விதி என்று நொந்து கொள்ளலாம். திமிரெடுத்து தற்கொலை முடிவெடுப்பவனை என்ன செய்வது? சாவதற்கு ஒரு வினாடி முன்பாக அந்தக் குழந்தையை நினைத்திருந்தால் கூட குதிக்கத் தயங்கியிருப்பானே? ஆனால் சரியான முட்டாள். கடிதம் எல்லாம் எழுதி சரியான இடத்தில் வைத்துவிட்டு இந்த கால்வாய்க்கு அருகில் வந்து அரைபாட்டில் பிராந்தியைக் குடித்திருக்கிறான். பாட்டில் அங்கேயேதான் கிடந்தது. போதை ஏறவும் எட்டிக் குதித்திருக்கிறான். அவனோடு சேர்ந்து அந்தக் குழந்தையின் எதிர்காலமும் அந்தச் சாக்கடைக்குள் மூழ்கியிருக்கிறது.