Oct 31, 2014

எனக்கென்ன அவசரம்?

இனியொரு பத்து நாட்களுக்கு வேலையில் கவனம் செலுத்தலாம் என்றிருந்தேன். வேலை மாறிவிடலாம் என்றொரு திட்டம். ஆளுமைத் திறனுக்கான பயிற்சியளிப்பது, மேலாண்மைத்துறையில் பயிற்சியளிப்பது போன்ற வேலை ஏதாவது கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தால், ம்ஹூம். அதனால் இதுவரைக்கும் வேலை செய்த அதே துறையிலேயே மாறுவதுதான் உசிதம். ஆனால் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். அதனால் பத்து நாட்களுக்காவது ஃபேஸ்புக், வலைப்பதிவெல்லாம் மூட்டை கட்டி வைத்தால்தான் சாத்தியம். அப்படித்தான் இரண்டு நாட்களாக யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் ஒரு நண்பர் அழைத்திருந்தார். ஃபோனில்தான். பெயர் சஞ்சீவ். சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதற்கு வெகுநாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து பிரதீபா என்றொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தங்கள் நிறுவனத்திலிருந்து மடிக்கணினிகளை (லேப்டாப்) பள்ளிகளுக்கு வழங்குவதாகவும் அதற்காக சஞ்சீவ் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றும் எழுதியிருந்தார். இப்படியான மின்னஞ்சல்களை அவ்வப்போது யாராவது அனுப்புவார்கள். ஏதேனும் உதவி செய்வது குறித்தான பதிவுகளை எழுதினால் எமோஷனலாக உந்தப்பட்டவர்கள் எழுதுவார்கள். தங்கள் நிறுவனத்தில் இப்படியான நல்ல காரியங்களைச் செய்வதாகவும் தங்களால் அந்த உதவியை வாங்கித் தர முடியும் என்கிற ரீதியிலான மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. பிறகு பத்து நாட்களில் அமைதியாகிவிடுவார்கள். எனக்கும் வலியப் போய் கேட்பதற்கு சங்கடமாக இருக்கும் என்பதால் அதோடு அந்தத் திட்டம் நின்றுவிடும். அவர்களைத் தவறு என்று சொல்லவில்லை. அது மனித இயல்புதானே? திடீரென்று ஏதாவதொரு உந்துதலில் பேசிவிடுவோம். ஆனால் அது நம் சக்திக்கு மீறிய செயலாக இருக்கும். விட்டுவிடுவோம்.

உண்மையைச் சொன்னால் பிரதீபாவின் மின்னஞ்சலும் அப்படியானதாகத்தான் இருக்கும் என நினைத்திருந்தேன். அந்தச் சமயத்தில் பிரதீபாவைப் பற்றி சரியாகத் தேடிப்பார்க்கவில்லை.

பிரதீபாவின் மின்னஞ்சல் குறித்துதான் சஞ்சீவ் பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அவர்களது நிறுவனத்தின் இணையதளத்தில் தேடிப்பார்த்தேன். அமெரிக்காவில் வசிக்கும் பிரதீபா நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்டாக இருக்கிறார்.  அவசர அவசரமாக அவர் முதலில் எழுதியிருந்த கடிதத்தை தேடிப்பார்த்தால் அவரது நிறுவனத்தின் தலைவரை Ccயில் வைத்து அனுப்பியிருக்கிறார். அந்த ப்ரெஸிடெண்ட் அநேகமாக அமெரிக்கராக இருக்கக் கூடும். நான் தமிழில் பதில் அனுப்பியிருந்தேன். அங்கு என்ன ரஸாபாசம் நடந்தது என்று தெரியவில்லை.

சஞ்சீவ் எதைப் பற்றியும் கேள்வி கேட்கவில்லை. ஏழெட்டு லேப்டாப்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் எந்த முகவரிக்கு அனுப்பி வைப்பது என்றும் வினவினார். தகுதியான பள்ளிகளின் முகவரிகளைக் கொடுக்கிறேன் ஆனால் அதற்கு பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். ‘அதெல்லாம் நீங்களே பார்த்துக்குங்க...உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறேன்’ என்றார். பாதி விலைக்கு விற்றுவிட மாட்டேன் என்று ஏதோவொரு நம்பிக்கை அவருக்கு. 

கணினிகளாக(Desktop) இருந்தால் பிரச்சினையில்லை. எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். மடிக்கணினிகளைக் கொடுக்கும் போது அவற்றை சரியாகப் பயன்படுத்துவார்களா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் மூன்றாவது நாளில் ஏதாவதொரு ஆசிரியரின் வீட்டுக்குச் சென்றுவிடும் சாத்தியங்கள் இருக்கின்றன. 

ஒரு நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்டாக இருப்பவர் மெனக்கெட்டு இங்கு எழுதுவதையெல்லாம் படித்திருக்கிறார். நம்பிக்கையோடு ப்ரெஸிடெண்டாக இருப்பவரிடன் அனுமதியுடன் இந்த லேப்டாப்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்கிறார். எனக்கென்ன அவசரம்? வேலை மாறுவதை பத்து நாட்களுக்கு தள்ளி வைத்தால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது என்று நினைக்கிறேன். தாமதிக்காமல் நாளைக்கு ஊருக்குச் சென்று இரண்டு மூன்று பள்ளி தலைமையாசிரியர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்துவிட்டு வந்து பள்ளிகளின் விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

பிரதீபாவுக்கும், சஞ்சீவுக்கும் அவர்களது அமெரிக்க ப்ரெஸிடெண்டுக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு என் மீது நம்பிக்கையளிக்கும் விதமாக ஒவ்வொரு முறையும் உதவிக் கொண்டிருக்கும் அத்தனை நல்லவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.