Oct 29, 2014

மனக்குகை ஓவியங்கள்

சில எழுத்தாளர்களை எப்படியாவது நமக்கு பிடித்துப் போய்விடும். இந்த ‘பிடிப்பு’ என்பது நமக்குள் கொண்டாட்டத்தை உருவாக்குகிறது என்று அர்த்தத்தில் இல்லை. எந்தப் பக்கத்தை எடுத்து வாசித்தாலும் ‘நேர்மையா எழுதியிருக்காரு’ என்கிற வகையிலான பிடிப்பு. எழுத்தைப் பொறுத்தவரையிலும் தனது வாழ்நாள் முழுவதும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் என்ற பட்டியலை உருவாக்கினால் அதில் சுந்தர ராமசாமியின் பெயரைச் சேர்த்துவிடுவேன். 

சுந்தர ராமசாமி மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சுமார் அறுபது சிறுகதைகளும் நூற்றியேழு கவிதைகளும் அவரது கணக்கில் அடக்கம். அவரது கட்டுரைகளும் விமர்சனங்களும் எந்தவிதத்திலும் தவிர்க்க முடியாதவை. நாவல் எப்படி இருக்க வேண்டும்? கவிதையின் நுணுக்கங்கள் என்ன? சிறுகதையின் சிக்கல்கள் என்பனவற்றையெல்லாம் அவரது விமர்சனக் குறிப்புகளின் வழியாக குறுக்குவெட்டில் புரிந்து கொள்ள முடியும். அவரது மொத்தக் கட்டுரைகள், விமர்சனங்கள், உரையாடல்களை எல்லாம் தொகுத்து காலச்சுவடு ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டிலேயே வந்துவிட்டது. ஆனால் விலைதான் 875 ரூபாய். அவ்வளவு பெரிய பட்ஜெட்டோடு எந்தக் காலத்திலும் புத்தகம் வாங்கச் சென்றதில்லை. பிறகு எங்கே வாங்குவது? 

தமிழில் புத்தகங்களின் விலை தாறுமாறாக இருக்கிறது. பதிப்பாளர்களிடம் பேசினால் நல்ல காகிதம், அட்டை வடிவமைப்பு என்றெல்லாம் உற்பத்திச் செலவு அதிகமாகிவிடுகிறது என்பார்கள். சராசரியாக ஒரு பக்கத்துக்கு முக்கால் ரூபாய்க்கு குறைவில்லாமல் விலை வைக்கிறார்கள். நூறு பக்கமுடைய புத்தகத்தின் விலை எழுபத்தைந்து ரூபாயாவது ஆகிறது. ‘என்னது ஐயாயிரம் ரூபாய்க்கு புக் வாங்குனியா?’ என்று அம்மாவிடமும் அப்பாவிடமும் கோர்த்துவிடும் விஷக்கொடுக்குகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் எப்படி இவ்வளவு விலை கொடுத்து புத்தகம் வாங்க முடியும்?  நம்மை மாதிரியான ஆட்களை பதிப்பாளர்கள் கவனத்தில் கொண்டால் தேவலாம். 

பெரும்பாலான பதிப்பகங்கள் இன்னொரு டெக்னிக் வைத்திருக்கிறார்கள். வாசகர்களுக்கு விற்கும் புத்தகங்களை நல்ல தாளில் அச்சடித்து அதிக விலைக்கு விற்றுவிடுவார்கள். நூலக ஆணை என்பது தரை டிக்கெட் மாதிரி. நூறு ரூபாய் புத்தகத்தை நாற்பது ரூபாய் அளவுக்குத்தான் கேட்பார்களாம். அதனால் நூலக ஆணைக்கு மட்டித்தாளில் அச்சடித்துக் கொடுத்துவிடுவார்கள். நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் லட்சணம் தெரியும். இதெல்லாம் அரசாங்கம் பார்த்துச் செய்ய வேண்டிய காரியம். நல்ல தாளில்தான் நூலகங்களுக்கு புத்தகங்கள் தர வேண்டும், அதற்கேற்ற விலையைக் கொடுத்து விடுகிறோம் என்றெல்லாம் உறுதியளித்தால் பதிப்பகங்களுக்கும் லாபம். நூலகங்களுக்கும் லாபம். வாசகர்களுக்கும் விலை குறைவாக கிடைக்கும்.

இங்குதான் நூலக ஆணை என்பதே இருப்பதில்லையே. அப்படியே கிடைத்தாலும் லஞ்சம் கொடுக்கும் பதிப்பகங்கள், அதிகார வர்க்கத்திற்கு தோதான பதிப்பகங்கள் போன்றவற்றிலிருந்துதான் புத்தகங்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கும் விலையை கொடுப்பதில்லை. கடைசியில் பதிப்பகங்கள் லாபம் பார்க்க இருக்கும் ஒரே வழி வாசகர்களின் பாக்கெட்தான். கையை வைத்துவிடுகிறார்கள்.

நல்லவேளையாக சு.ராவின் இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம் அது. எதற்காக அனுப்பி வைத்தார்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. எதற்கு வம்பு? அடுத்த முறை அனுப்பலாம் என்று நினைக்கும் போது ‘அவனுக்கு அனுப்பினால் ஏன் எதற்குன்னு கேள்வி கேட்பானே’ என்ற நினைப்பு வந்தால் முகவரியை மாற்றி எழுதிவிடக் கூடும்.

புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். முழுமையாக வாசித்தேன் என்றெல்லாம் புருடா விடக் கூடாது. இவ்வளவு பெரிய புத்தகத்தையும் வாசித்து முடிக்க மூன்று மாதங்கள் தேவைப்படக் கூடும். தோராயமாக நாற்பது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசித்து முடித்த பிறகு புத்தகம் பற்றி விரிவாக எழுதலாம். இப்போது கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்து விருப்பமான கட்டுரைகளை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியத்தில் சுந்தர ராமசாமிக்கு பிறகு அவரளவுக்கு அடுத்த தலைமுறை படைப்பாளிகளை ஊக்குவித்தவர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வெறும் ஊக்கம் என்று மட்டும் சொல்ல முடியாது. விமர்சனம் செய்கிறார். இது சரியில்லை என்றால் சரியில்லை என்று சொல்கிறார். அப்படியான விமர்சகர்கள் இன்று அருகிப் போய்விட்டார்கள்.

இப்பொழுது தமக்கு விருப்பமான ஆட்களாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இல்லையென்றால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதே விமர்சனம் சு.ரா மீதும் வைக்கப்பட்டிருக்கிறது. குழுவை உருவாக்கினார் என்கிற ரீதியிலான விமர்சனங்கள். இந்தத் தொகுப்பில் கூட சமகால இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளில் சாரு நிவேதிதாவின் பெயரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஜெயமோகன், விமலாதித்த மாமல்லன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கும் சு.ரா சாருவை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. 

ஆனால் தமக்கு விருப்பமான எழுத்தாளர்கள் என்றாலும் அப்படியே ஏற்றி விடுவதில்லை. குத்திக் காட்டியிருக்கிறார். கறாராக விமர்சித்திருக்கிறார். அப்படியான விமர்சனங்களை இன்று எங்கே பார்க்க முடிகிறது? 

சு.ராவின் கட்டுரைகளை முழுமையாக வாசிக்கும் போது ஒரு அரசியல் இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். 

சு.ரா இறக்கும் போதுதான் நான் இலக்கியத்தை வாசிக்கவே தொடங்குகிறேன். என்னைப் போன்ற சு.ராவுக்கு பிந்தைய தலைமுறை வாசகர்களுக்கு இத்தகையை ஒரு தொகுப்பு முக்கியமானதாக இருக்கும். இலக்கியத்தின் முக்கியமான கூறுகள் எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார். தொட்டிருக்கிறார் என்பது சரியான சொல்லாக இருக்காது. பெரும்பாலான கட்டுரைகளும், கடிதங்களும் ஆழமான விஷயங்களைப் பேசுகின்றன. பிறரது புத்தகங்களுக்கு எழுதிய முன்னுரைகள் முக்கியமானவையாக இருக்கின்றன.

தனது காலத்தில் இலக்கியம் குறித்து அவர் உருவாக்கிய உரையாடல்களின் வழியாக தமிழ் இலக்கியத்தின் மடையை தொடர்ந்து போக்கு மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார். தட்டையான எழுத்துக்கள், சாரமற்ற வெற்றுக் கத்தல்கள் ஆகியவற்றின் மீது தொடர்ந்து தனது விமர்சனங்களைச் செய்திருக்கிறார். மிகுந்த கற்பனையான எழுத்தின் வழியாக வாசகனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜிமிக்குகள் பற்றி பேசியிருக்கிறார். இன்றைய காலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் சு.ராவின் இலக்கிய மதிப்பீடுகள் மிக அவசியமானவை. வெறும் தட்டையான எழுத்துக்களிலிருந்து அடுத்த படிக்கு நகர்வதற்கு அவை நிச்சயமாக உதவக் கூடும்.

சு.ராவின் மீதாக வைக்கப்படும் விமர்சனங்களின் பின்னணியில் எந்தக் காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண வாசகனின் பார்வையில் இருந்து பார்த்தால் சு.ராவின் கறார்த்தன்மையும் சொறிந்து கொடுக்காத எழுத்தும் அவரை எல்லாவிதத்திலும் தமிழின் முக்கியமான படைப்பாளியாகவும் விமர்சகராகவும் ஏற்றுக் கொள்கிறது.