Oct 28, 2014

உலகம் சதிகாரர்களால் நிரம்பியிருக்கிறது

ஆறாவது படிக்கும் போது ஒரு சமூக அறிவியல் டீச்சர் இருந்தார். சிலம்புச் செல்வி என்று பெயர். ஒல்லியாக இருப்பார். வயதும் குறைவாகத்தான் இருக்கும். படித்து முடித்தவுடன் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதனால் இந்த டீச்சரை ஏய்த்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் அப்படியெல்லாம் இல்லை.கடுகு. சுறுசுறுவென காரம் ஏறும். வகுப்பு தொடங்கிய ஒரு மாதம் வரைக்கும் பெரிய பிரச்சினை வரவில்லை. ஆனால் அதன் பிறகு வீட்டுப்பாடம் எழுதி வரச் சொல்லிவிடுவார்.

ஒரு பாடம் நடத்துவார். மறுநாள் அதற்கு கேள்வி பதில் எழுத வேண்டும். அந்தச் சமயத்தில் தினமும் எழுதுவது என்றால் வேப்பங்காய்தான். எழுதவே மாட்டேன். எனக்கு நான்கைந்து பேர் நண்பர்களாக இருந்தார்கள். தெள்ளவாரிகள். தினமும் அடி வாங்குவோம். எத்தனை நாளைக்குத்தான் அடி வாங்கித் தொலைவது? சுள் சுள்ளென்று வலிக்கும். அதுவும் மர ஸ்கேல் ஒன்றை வைத்திருப்பார். குனிய வைத்து முதுகில் சப் சப்பென்று வீசுவார். கண்டபடி சாபம் விட்டுக் கொண்டே முதுகைக் காட்டிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த டீச்சரிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அடித்துவிட்டு வெளியே துரத்திவிடுவார். ஆடுகளத்திற்கு ஓடிவிடுவோம். கொஞ்ச நேரம் அவரைத் திட்டிவிட்டு கில்லி விளையாடத் தொடங்கிவிடுவோம். இப்படியே இந்த வருடத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். 

அரையாண்டுத் தேர்வை நெருங்க நெருங்க அடியின் வீரியம் எகிறிக் கொண்டிருந்தது. எங்கள் குழுவிலிருந்த வடிவேலு பள்ளியை விட்டே நின்றுவிட்டான். அவனைப் போல இனி நானும் தப்பித்தே தீர வேண்டும் என முடிவு செய்து வீட்டில் வயிற்று வலி என்று கதைவிடத் தொடங்கியிருந்தேன். வாந்தி இல்லை. வயிற்றுப்போக்கு இல்லை. அப்புறம் ஏன் வயிற்று வலி என்று அவர்களுக்கு குழப்பம். இஞ்சி கசாயம் கொடுத்து படுக்கச் சொல்லி போர்த்திவிட்டார்கள். பத்து மணிக்கு மேலாக படுக்கவே முடியவில்லை. விளையாடச் செல்லலாம் என்று கால் அரிக்கிறது. ஆனால் எழுந்தால் அடுத்த நாள் பள்ளிக்குத் துரத்திவிட்டுவிடுவார்கள் என எல்லாவற்றையும் கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டியதாகிவிட்டது. 

மாலையில் விசாரித்தார்கள். வயிற்று வலி அதிகரித்திருப்பதாக கதை விட வேண்டியிருந்தது. இப்படியே இரண்டு நாட்கள் கட் அடித்தாகிவிட்டது. அடுத்த நாள் சோமசுந்தர டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் ஒரு தில்லாலங்கடி டாக்டர் என்று எனக்கு முதலில் தெரியாது. அவர் வயிற்றை அழுத்திப் பார்க்கத் தொடங்கிய தொனியிலேயே அவர் கண்டுபிடித்துவிடுவார் என்ற பயம் ஒட்டிக் கொண்டது. அடி வயிற்றில் அழுத்தி ‘இங்கே வலிக்குதா?’ என்றார். ‘இன்னும் கொஞ்சம் மேல’ என்றேன். தொப்புளின் மீது அழுத்தி ‘இங்கேயா?’ என்றார். ‘இன்னும் கொஞ்சம் மேல’ என்றார். இப்படியே நெஞ்சு வரைக்கும் வந்துவிட்டார். ‘தம்பி இது நெஞ்சுப்பா’ என்றார். ‘ஆமாமா நெஞ்சுதான் வலிக்குது’ என்று குண்டைப் போட்டேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரக் குழப்பம். பேயறைந்த மாதிரி ஆகிவிட்டார்கள். 

‘நல்லா சொல்லு... நெஞ்சா வலிக்குது?’ என்று திரும்பத் திரும்ப கேட்டார். 

நெஞ்சு என்றால்தான் டாக்டரால் அழுத்திப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாது. எலும்பு இருக்கிறது அல்லவா?. ‘ஆமாம் நெஞ்சுதான்’ என்று என் வாதத்தில் உறுதியாக இருந்தேன்.

டாக்டருக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும். எழுந்து அமரச் சொன்னார். ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டினார். ‘ஒருவேளை இது கண்டுபிடித்துவிடுமோ’ என்று பயம் வந்தது. இருந்தாலும் விட்டுவிட முடியுமா? இருக்கிற காற்றையெல்லாம் நெஞ்சில் நிரப்பி வைத்தால் ஸ்டெதெஸ்கோப்பினால் கண்டுபிடிக்க முடியாது என்று தம் கட்டி வைத்தேன். ‘மூச்சை வெளிய விடு’ என்று அடிக்காத குறைதான். கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விட்டேன். அப்படியிருந்தாலும் கண்டுபிடித்துவிட்டார். அந்தக்காலத்து சினிமாவைப் போல ‘இதயத்தில் ஓட்டை இருக்கு’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ‘ஒண்ணுமே இல்லைங்க...அநேகமா ஃபுட் பாய்ஸனா இருக்கும்’ என்று பெரிய பன்னாகக் கொடுத்தார். 

ஆனால் நல்ல மனுஷன். ‘ரெண்டு நாள் வீட்டில் இருக்கட்டும்..ஸ்கூலுக்கு போக வேண்டாம்’ என்று ஆறுதல் அளித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு அடியில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு அப்புறம் அந்த சிலம்புச் செல்வியிடம் யார் அடி வாங்குவது? எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் வீட்டிற்கு வந்த பிறகு வயிற்றைக் கட்டிக் கொண்டு புரள ஆரம்பித்தேன். ஊரில் இருந்த சொந்தக்காரர்களெல்லாம் ரொட்டி, பழங்களோடு வந்து பார்க்கத் தொடங்கினார்கள். நம் ஊரில்தான் இந்த மாதிரி சமயங்களில் எல்லோரும் மருத்துவர்கள் ஆகிவிடுவார்களே? ஆளாளுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார்கள். ஒருவர் எந்திரம் கட்டச் சொல்கிறார். இன்னொருவர் நெருஞ்சி முள் கஷாயம் குடிக்கச் சொல்கிறார். இன்னொருவர் பார்லி அரிசி கஞ்சி மட்டும் கொடுக்கச் சொல்கிறார். அம்மாவும் விடுவேனா என்று அவர்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்து வாயில் ஊற்றத் துவங்கினார். இப்படி லிட்டர் லிட்டராக உள்ளே சென்ற ஏதோ ஒரு மருந்து நல்ல காரியத்தைச் செய்தது. அது வரை ஒழுங்காக இருந்த வயிற்றைக் கலக்கி விட்டது. அவ்வளவுதான். நோ கண்ட்ரோல்.

மயக்கம் போடாத குறைதான். தூக்கிக் கொண்டு போய் சோமசுந்தரரிடம் சரணாகதி ஆனார்கள். அவர் ‘சரி படுக்கை போட்டுடலாம்’ என்று மருத்துவமனையில் ஒரு அறையை ஒதுக்கிவிட்டார். என்னென்ன டெஸ்ட் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். மருத்துவருக்கும் மண்டை காய்ந்திருக்கும். ‘ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுறாங்க...பையன் இப்படிக் கிடக்கறானே...கோயமுத்தூர் ஆஸ்பத்திரிக்கு போலாமா’ என்று அம்மா அப்பாவை நச்சரிக்கத் தொடங்கினார். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, இரண்டு நாட்கள் ஆகட்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.

அந்த இரண்டு நாட்களுக்கும் ட்ரவுசரை எல்லாம் கழட்டிவிட்டு மேலே வெறும் துண்டை மட்டும் போர்த்தியிருப்பார்கள். மருத்துவமனையில் ஒரு மலையாள நர்ஸ் இருந்தார். திருமணம் ஆன குண்டுப் பெண். அநியாயத்துக்கு கலாய்ப்பார். அவர் வரும் போது அம்மா வெளியே போய்விடுவார். துண்டை நீக்கிவிட்டு ஏதாவது சொல்வார். அப்புறம் சிரிப்பு வேறு. எனக்கு நாக்குத் தள்ளிவிடும். 

‘இனி இந்த ஆஸ்பத்திரியே வேண்டாம்’ என்கிற முடிவுக்கு வர வைத்த புண்ணியவதி அவர்தான். உடலில் வலு குறைந்திருந்தது. ‘இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்கம்மா’ என்று கதறத் துவங்கினேன். ‘வலி நிக்கட்டும்..போகலாம்’ என்று அவர்கள் இழுத்தடித்தார்கள். ‘அப்படின்னா அந்த மலையாளச்சியை உள்ள விடாதீங்க’ என்றேன். யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. உடலில் குளூக்கோஸ் ஏற்றியிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சரி ஆகத் தொடங்கியிருந்தது. பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் வந்திருந்தார். சிலம்புச் செல்வி டீச்சர் என்னைப் பற்றி நல்ல படியாக பேசுவதாக அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதுவரைக்கும் நோட்டில் எதுவும் எழுதவில்லை என்றால் பரவாயில்லை என்றும் இனி ஒழுங்காக எழுதினால் போதும் என்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்தார். 

கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. என்னை எப்படி நல்லபடியாக பேச முடியும்? அவர் சொன்னதில் உண்மை இல்லை. எல்லாம் பக்காவாக திட்டமிட்ட சதிச் செயல்.

உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று டாக்டர் கண்டுபிடித்துவிட்டார். அவர்தான் ‘பள்ளியில் விசாரிச்சு பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார். அப்பா விசாரித்ததில் சிலம்புச்செல்வி டீச்சர் போட்டுக் கொடுத்துவிட்டார். ‘அந்தப் பிரச்சினையைச் சரி செய்தால் போதும்’ என்று பள்ளியில் பேசச் சொல்லியிருக்கிறார். அப்பா தலைமையாசிரியரிடம் பேசியிருக்கிறார். உதவித் தலைமையாசிரியராக இருந்த இனியன்.கோவிந்தராஜூ ஒரு ஆசிரியரை அனுப்பி வைத்து இப்படி பேச வைத்திருக்கிறார்.

டாக்டர்தான் தில்லாலங்கடி ஆயிற்றே. மருத்துவமனை ஒன்றும் கெஸ்ட் ஹவுஸ் இல்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் அந்த நர்ஸை விட்டு கலாய்த்திருக்கிறார். அதனால்தான் அந்த நர்ஸ் வரும் போதெல்லாம் அம்மா வெளியே போய்விடுவதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். பேட்ஸ்மேன் இல்லாத க்ரவுண்ட். என்னை ஒவ்வொரு முறையும் க்ளீன் போல்ட் ஆக்கிவிட்டு போயிருக்கிறார் அந்த நர்ஸ்.

பள்ளியிலும் மருத்துவமனையிலும் Parallel Process நடந்திருக்கிறது. இந்த உலகம் சதிகாரர்களாக ஆகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ ஒரு சமயத்தில் ‘நீ அப்படியெல்லாம் ஃப்ராடு செஞ்சவன் தானே?’ என்று அம்மா சொன்ன போதுதான் எனது ப்ராடுத்தனத்தை சிதறடிக்க பின்னணியில் இத்தனை பேர் வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரியும்.

மருத்துவமனைக்கு வந்த அந்த ஆசிரியர் சொன்னதை நம்பி பள்ளிக்குச் செல்லத் துவங்கினேன். சிலம்புச் செல்வி டீச்சர் இனிமேல் என்னை அடிக்க மாட்டார் என்று கெத்தாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். பத்து நாட்கள் ஆகியிருக்கும். சிலம்புச் செல்வி டீச்சர் திருந்தவே இல்லை. முதுகுத் தோலை உரித்துவிட்டார். மறுபடியும் வயிற்று வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால் அந்த மலையாள நர்ஸ் துண்டைத் தூக்கிப் பார்ப்பார் என்று பயம் கவ்வத் தொடங்கியது. அதற்கு இந்த டீச்சரின் அடியே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.