தன் மனைவியைக் காணவில்லை என்று பரமசிவம் சொல்ல ஆரம்பித்து இந்த ஆடி முடிந்தால் ஒரு வருடம் ஆகிறது. சென்ற வருடம் ஆடிபெருக்குக்கு தூரி ஆடிவிட்டு பூப்பறிக்க போனவளை அதற்கு பிறகு பார்க்கவே இல்லை என்று சொல்லி வருகிறார். அவர் மட்டும் இல்லை, ஊர்க்காரர்களும் அன்றுதான் அவளை கடைசியாக பார்த்தார்கள். பச்சை நிறச் சேலையில் அத்தனை உற்சாகமாகத் திரிந்தாள். அடுத்தநாளே ஊர் பூராவும் தேடிப்பார்த்தாகிவிட்டது. ஊருக்கு அந்தப்பக்கமும் தேடிவிட்டார்கள். குளம், குட்டை, வாய்க்கால், வரப்பு என்று சுற்றுவட்டாரத்தில் ஒரு இடம் பாக்கியில்லை. துளி அடையாளம் கூட கிடைக்கவில்லை. புரட்டாசி வரைக்கும் பரமசிவம் முகம் இருண்டுதான் கிடந்தார். அதன் பிறகு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவ்வப்போது ‘ப்ச்’ என்பார். அது மனைவிக்கான ‘ப்ச்’ என்று மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பார். அதோடு சரி.
பரமசிவத்தை உங்களுக்கு தெரியாதல்லவா? உள்ளூர் பண்ணாடி. பரம்பரை பரம்பரையாக ஊருக்குள் நல்ல மரியாதை உண்டு. வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் சுற்றுவார். ஆனால் வெளிச்சோலிக்காரர். வீடு தங்கமாட்டார். குளத்து பிரச்சினை, வாய்க்கால் பிரச்சினை, புருஷன் - பெண்டாட்டி தகராறு என்று ஒரு இடம் கொள்ளாமல் சுற்றிக் கொண்டே இருப்பார். அதுதான் சுந்தராயாளுக்கு வருத்தம். இந்த சுந்தாராயாள் வேறு யாருமில்லை- பரமசிவத்தின் காணாமல் போன மனைவிதான். அட்டகாசமான அழகுக்காரி. தெருவில் நடந்து போனால் கிழம் கட்டையிலிருந்து அத்தனை ஆம்பளைக் கண்களும் அவளைத்தான் பார்க்கும். பார்க்கும் என்ன பார்க்கும்- மொய்க்கும் என்று வைத்துக் கொள்ளலாம். கால் கிலோ கொத்துச் சாவியை இடுப்பில் சொருகியிருப்பாள். சொருகிய சாவி புடவையை கீழே இழுக்கும் லாவகத்தில் விடலைகளின் கண்கள் செருகும். ஆனால் ஒரு பயலோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளமாட்டாள். யாராவது அண்ணி முறை வைத்தோ, அத்தை முறை வைத்தோ கிண்டலடித்தால் வெடுக்கென வெட்டிக் கொண்டு வந்துவிடுவாள்.
அதனால் அவளை பார்ப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பரமசிவம் இல்லாத நேரமாக பார்த்து சில தலைகள் வீட்டுக்குள் எட்டிப்பார்க்கும். தூண்டில் போடத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் பூட்டிய கதவுக்குள் இருந்தபடியே பதில் சொல்லி அனுப்பிவிடுவாள். வாயைத் திறந்து கேட்டாலும் கூட ஒரு சொம்பு தண்ணீர் கிடைக்காது. என்னதான் பொத்திப் பொத்திக் கிடந்தாலும் சுந்தாராயாள் காணமல் போனதிலிருந்து ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. ராமசாமிதான் அவளைக் கூட்டிப் போய் எங்கோ தங்க வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவளுக்கும் அவருக்கும் தொடுப்பு உண்டு என்கிறார்கள். கிருஷ்ணமணியின் மளிகைக் கடைக்கு இடுப்பை ஆட்டிக் கொண்டு நடக்கும் போது எதிர்படும் எல்லோரையும் முறைத்தபடியே நடப்பவள், ராமசாமியை பார்த்தால் மட்டும் அருகம்புல் அளவுக்கு சிரித்து வைப்பாள். பக்கத்துத் தோட்டத்துக்காரன் என்று சிரிக்கிறாள் என்றுதான் கொஞ்சம் பேர் நினைத்தார்கள். ஆனால் நாட்கள் நகர நகர ஊருக்குள் பேச்சு வேறு மாதிரி ஆகிவிட்டது. ஆனால் இதை பரமசிவம் காதுபடும்படி யாரும் பேச மாட்டார்கள்.
விவகாரத்தை விலாவரியாக சொல்வதற்கு முன் -
ராமசாமியைத் உங்களுக்கு தெரியுமா என்றே ஆரம்பிக்கலாம்தான். ஆனால் கொஞ்சம் பேர் ‘சோ’ராமசாமியாக இருக்குமோ என்று நினைக்கக் கூடும். வேறு சிலர் ஈ.வே.ராமசாமியை யோசிக்கக் கூடும். ஒரே பெயர்தான். ஆனால் எதற்கு வம்பும் குழப்பமும்? இரண்டு ராமசாமியுமே இல்லை. நான் கேட்டது சில்லாங்காட்டு ராமசாமியை. உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. நானே சொல்லிவிடுகிறேன். நாற்பது வயதைத் தாண்டிவிட்டார். பெற்றவர்கள் எப்பவோ போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கூடப் பிறந்தவர்களிலும் ஒன்றும் தேறவில்லை. அவரவர் வழியை பார்த்துக் கொண்டார்கள். எளந்தாரியாக சுற்றித்திரிந்த ராமசாமிக்கு கல்யாணமும் ஆகவில்லை. இப்பொழுதும் தனிக்கட்டைதான். கேரளாப்பக்கமாக போனால ‘செவச் செவ’ன்னு ஒரு புள்ளையைக் கட்டிக் கொண்டு வந்துவிடலாம் என்று சில புரோக்கர்கள் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் ராமசாமிதான் ஒத்துக் கொள்ளவில்லை. கருப்போ, வெளுப்போ எஞ்சாதியில்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டார். ஆனவரைக்கும் சொல்லிப் பார்த்தார்கள். மனுஷன் அசரவில்லை. எத்தனை நாளுக்குத்தான் தொங்குவார்கள்? இப்பொழுதெல்லா அவர் திருமணம் பற்றி யாரும் பேசுவதில்லை.
ராமசாமி சட்டை போடாமல்தான் பாதி நாள் திரிவார். திளைத்த வேப்பமரத்தை குறுக்கே அறுத்தது மாதிரியான நெஞ்சு. களை வெட்டுவதிலிருந்து பாத்தி கட்டுவது வரை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்ததில் எக்குத்தப்பாக வளர்ந்து கிடக்கிறது. கொழுந்தியா முறைப் பெண்கள் தெருவில் பார்க்கும் போதெல்லாம் எதையாவது சொல்லிச் செல்வார்கள். “துணி தப்பற கல்லக் காணோம்; மச்சானைக் மல்லாக்க போட்டு நாலு தப்பு தப்போணும்”
“மச்சா..யார மடக்க இப்படித் திரியறீங்க” என்றெல்லாம் பேசுவார்கள்.
ராமசாமி அசரக் கூடிய ஆள் இல்லை. “ஊட்டைத் தெறந்து வை வந்து மல்லாக்க படுத்துக்கிறேன்..பொறவு __________” என்பார் - இந்த 'டேஷ்’ சபை நாகரீகம் கருதி சென்சார் செய்யப்பட்டிருக்கிறது- அல்லது “உன்னைய மடக்கத்தான் இப்படித் திரியறேன்...ஊட்டுக்காரன் போனதுக்கப்புறம் சொல்லி உடு, வேட்டியை இளக்கிக்கட்டிட்டு வர்றேன்” என்று கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பார். கொழுந்தியாக்கள் கூட்டத்தோடு வந்திருந்தால் கெக்கபிக்கே என்று சிரித்தபடியே வெட்கம் வந்தது போல காட்டிக் கொண்டு ஓடிப்போவார்கள். தனியாக வந்திருந்தால் இன்னும் சில வார்த்தைகள் அவரோடு பேசுவார்கள். ராமசாமியோடு பேசுவது பழைய சோற்றுக்கு பச்சைமிளகாயைக் கடித்தது போல அத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வார்கள்.
“மச்சா..யார மடக்க இப்படித் திரியறீங்க” என்றெல்லாம் பேசுவார்கள்.
ராமசாமி அசரக் கூடிய ஆள் இல்லை. “ஊட்டைத் தெறந்து வை வந்து மல்லாக்க படுத்துக்கிறேன்..பொறவு __________” என்பார் - இந்த 'டேஷ்’ சபை நாகரீகம் கருதி சென்சார் செய்யப்பட்டிருக்கிறது- அல்லது “உன்னைய மடக்கத்தான் இப்படித் திரியறேன்...ஊட்டுக்காரன் போனதுக்கப்புறம் சொல்லி உடு, வேட்டியை இளக்கிக்கட்டிட்டு வர்றேன்” என்று கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பார். கொழுந்தியாக்கள் கூட்டத்தோடு வந்திருந்தால் கெக்கபிக்கே என்று சிரித்தபடியே வெட்கம் வந்தது போல காட்டிக் கொண்டு ஓடிப்போவார்கள். தனியாக வந்திருந்தால் இன்னும் சில வார்த்தைகள் அவரோடு பேசுவார்கள். ராமசாமியோடு பேசுவது பழைய சோற்றுக்கு பச்சைமிளகாயைக் கடித்தது போல அத்தனை ருசியாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வார்கள்.
ராமசாமியின் இந்த கேரக்டரும், அவரைப் பார்க்கும் போது சுந்தாராயாளின் அருகம்புல் சிரிப்பும் ஊருக்குள் சுற்றிய வதந்திக்கு பெட்ரோல் ஊற்றியது. இந்த வதந்தியில் எத்தனை தூரம் உண்மை இருக்கிறது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. பொறாமைக்காரர்கள் கூட கிளப்பிவிட்டிருக்கலாம். ‘நெருப்பில்லாமல் புகையுமா?’ என்று நீங்கள் எதிர்கேள்வி கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
இந்தச் செய்தி பரமசிவம் காதுகளுக்கு போனதாகத் தெரியவில்லை- அப்படித்தான் மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர் அவ்வளவு சாதாரணமாக நடந்து கொண்டார். விவகாரம் இப்படி போய்க் கொண்டிருந்த போதுதான் சுந்தாராயாள் காணமல் போனதும் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் பரமசிவத்திடம் துக்கம் விசாரிக்க வந்தவர்களோடு சேர்ந்து ராமசாமியும் வந்திருந்தார். மற்றபடி ராமசாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சுந்தராயாள் குன்னத்தூரில் காரை வீட்டில் குடி இருக்கிறாள் என்றும், அந்தியூரில் செங்கல் சூளையொன்றில் இருக்கிறாள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் யாரும் பார்க்கவில்லை. இதெல்லாம் காற்றுவாக்கில் வந்த செய்திதான்.
ஊருக்குள் செய்திகள் தாறுமாறான வேகத்தில் பரவுகின்றன. அதற்கு காரணமிருக்கிறது. சென்ற வருடம்தான் மழை பொய்த்துவிட்டதே! அதனால் ஊருக்குள் ஒரு வருடம் விவசாயமே இல்லை. வறண்டு கிடந்த வாய்களுக்கு சுந்தராயாள் விவகாரம்தான் வெற்றிலை பாக்காக மாறியிருந்தது. என்னதான் வறட்சி வந்தாலும் சில்லாங்காட்டு கிணற்றில் மட்டும் தண்ணீர் வற்றியதே இல்லை. அது பாழுங்கிணறு. நூறடி ஆழம் இருக்கும். எட்டிப்பார்க்கக் கூட பயப்படுவார்கள். சென்ற வருடமும் அப்படித்தான். கிணற்றில் தண்ணீர் இருந்தது. ஆனால் பரமசிவம் விவசாயம் செய்யவில்லை. பொண்டாட்டி போன துக்கம் ஒரு பக்கம் என்றால் ‘ஊரே காஞ்சு கெடக்குது, எனக்கு மட்டும் என்ன வெள்ளாமை வேண்டுது’ என்று சொல்லிவிட்டார். அதனால் அவர் தோட்டமும் குறையாகத்தான் கிடந்தது.
ஆனால் இந்த வருடம் நிலைமை மாறிவிட்டது. நல்ல மழை. பவானிசாகர் அணையிலும் நீர்மட்டம் ஐம்பது அடியைத் தாண்டிவிட்டதாம். தடப்பள்ளியில் பாசனத்திற்கென தண்ணீர் திறந்துவிட்டார்கள். ஊருக்குள் எல்லோருக்கும் சந்தோஷம். ராமசாமிதான் முதல் ஆளாக விவசாயம் செய்வார் என்று நினைத்தார்கள். அதுதான் வழக்கமும் கூட. விடிந்தும் விடியாமலும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு சேறாடுவதற்கு வயலில் இறங்குவார். ஆனால் இந்த முறை ஆளைக் காணவில்லை. ஒரு நாள், இரண்டு நாள் ஆனது. அவர் வயல் மட்டும் காய்ந்து கிடந்தது. முடிவு செய்துவிட்டார்கள். சுந்தாராயாளோடு சேர்ந்து கம்பி நீட்டிவிட்டார் என்று வெளிப்படையாக பேசிக் கொண்டார்கள்.
பரமசிவம் வழக்கம் போல வெள்ளையும் சுள்ளையுமாக வயலில் வந்து நின்றார்.
*******
சுந்தாராயாள் காணாமல் போனதற்கு முந்தின வாரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பரமசிவம் வீட்டிற்குள் சுந்தாராயாள் இல்லாததை கவனித்துவிட்டார். வழக்கமாக பரமசிவத்திற்கு அத்தனை எளிதில் தூக்கம் கலையாது. இடியே இறங்கினாலும் அசையாமல் கிடப்பார். அதுதான் சுந்தாராயாளுக்கு வசதியாகப் போய்விட்டது. ராமசாமியை தொண்டுபட்டிக்கு வரச் சொல்லிவிடுவாள். காரியம் முடிந்த பிறகு பூனைக்குட்டி கணக்காக உள்ளே வந்து படுத்துக் கொள்வாள். அன்றுதான் ஒருநாளும் இல்லாத திருநாளாக பரமசிவம் எதற்கோ எழுந்துவிட்டார். சுந்தாராயாளைக் காணாமல் வீட்டிற்குள் தேடியவர் சமையல் அறை ஜன்னலில் இருந்து பார்த்த போது தொண்டுப்பட்டியில் படல் அசைந்து கொண்டிருந்தது. ஏதோ நடக்கிறது என்று மோப்பம் பிடித்த போதுதான் ‘அது’ நடந்து கொண்டிருந்தது. கால் மணி நேரத்துக்கு பிறகு ராமசாமி நிதானமாக வேட்டியை சரி செய்தவாறே நடந்து போனான். தொண்டுபட்டிக்கு வெளியே வந்தவன் சுந்தாராயாளை இழுத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போனான். பரமசிவத்துக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. விலகிய மாராப்பை சுருட்டி எடுத்துக் கொண்டு சுந்தாராயாள் வாய் நிறைய சிரிப்பும் வெட்கமுமாக வீட்டிற்குள் வந்த போது எதுவும் தெரியாதது போல பரமசிவம் படுத்துக் கொண்டார்.
இதன் பிறகுதான் காணாமல் போனது நடந்தது. காணாமல் எல்லாம் போகவில்லை. ஆடிப்பெருக்கன்று பூப்பறிக்க போய்விட்டு தனியாகத்தான் வந்தாள். ‘ஊரே ஒண்ணா வரும் போது இவ மட்டும் தனியா வர்றா பாரு தேவிடியா முண்டை’ என்று கருவிக் கொண்டிருந்தார் பரமசிவம். ராமசாமியுடன் சுற்றிவிட்டு வருகிறாள் என்றும் நினைத்தார். அன்றிரவு பாயில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவளின் குரல்வளை மீது காலை வைத்து மிதித்துக் கொன்றதே பரமசிவம்தான். அவர் மிதித்த மிதியில் அவளால் பெரிதாக கத்த முடியவில்லை. அப்படியே கத்தினாலும் தோட்டத்திற்குள் வீடு இருப்பதால் வெளியாட்களுக்குத் காதில் விழ வாய்ப்பே இல்லை. பரமசிவத்தின் மிதியில் அவள் இறந்தது முடிவானவுடன் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக்கி கிணற்றுக்குத் தூக்கிப் போனார். பெருங்கல்லோடு அவளைச் சேர்த்து நைலான் கயிற்றால் கட்டி உள்ளே தள்ளியபோது அவரையும் மீறி கொஞ்சம் அழுகை வந்தது. வேட்டி நுனியில் கண்களைத் துடைத்துக் கொண்டு வேகமாக வந்து படுத்துக் கொண்டார். அதன் பிறகு நடந்ததெல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே.
இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. ராமசாமியும் அதே கிணற்றுக்குள்தான் இரண்டு நாட்களாகக் கிடக்கிறார் என்று எனக்கும், பரமசிவத்துக்கு மட்டும்தான் தெரியும். இப்பொழுது உங்களுக்கும் சொல்லியாகிவிட்டது. ஆனால் எப்படிக் கொன்றார் என்று எனக்கும் தெரியவில்லை. ஆசுவாசமாக ஒரு நாள் அவரிடம் கேட்டுவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன். அதுவரை வெளியில் சொல்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.