Jul 2, 2013

எப்போடா டிவியில் வருவே?

பழங்காலத்து அரட்டை அரங்கம், தற்காலத்து நீயா நானா, இன்னும் சில பல டாக்‌ஷோக்களை பார்க்கும் வழக்கம் உண்டா? இவை எல்லாம் சமூகத்தில் ஏதாவது மாற்றங்களை உருவாக்குகின்றனவா? எனக்கு பதில் தெரியவில்லை.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விசுவின் அரட்டை அரங்கம் படு பாப்புலராக இருந்தது. அப்பொழுது இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் சேலத்திலும் நடைபெற்றது. அப்பொழுதெல்லாம் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் படு உச்சத்தில் நின்றது என்பதால் சிறியவர்களும், பெரியவர்களுமாக ஏகப்பட்ட போட்டியாளர்கள் குவிந்துவிட்டார்கள். நான்கைந்து தேர்வுச் சுற்றுக்கள் இருந்தன. ஒவ்வொரு சுற்றில் வெல்லும் போதும் ‘கெத்தாக’ இருக்கும். தோற்று வெளியேறுபவர்களை நேருக்கு நேர் பார்க்கும் போது பரிதாபமாக முகத்தைக் காட்டி நடித்தாலும் உள்ளுக்குள் குளிர்ந்து கிடக்கும். இப்படியே ஒவ்வொரு சுற்றாகத் தாண்டி கடைசிச் சுற்றில் வென்ற பிறகு ‘நாளைக்கு ஷுட்டிங் வந்துவிடு’என்றார்கள். அப்பொழுது உலகமே குருட்டுவாக்கில் சுற்றுவதைப் போலிருந்தது. 

அந்தச் சமயத்தில் விடுதியில் நல்ல துணி எதுவும் வைத்திருக்கவில்லை. ஊருக்கு போய் எடுத்து வருவது என்று முடிவு செய்து கொண்டேன். துணியை விடவும் ஊருக்குள் தண்டோரா போட வேண்டும் என்பதுதான் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. எல்லாம் திட்டப்படியே நடந்தது. ஆயாவிற்கு மட்டும் அரட்டை அரங்கம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. சற்று விளக்க வேண்டியிருந்தது. டிவியில் பேசப் போகிறேன் என்றதும் பதறிவிட்டார். ‘அந்தப் பொட்டிக்குள்ள பதனமா போய்ட்டு வா சாமி’என்றார். அவரைப் பொறுத்தவரையிலும் டிவியில் வருபவர்கள் எல்லோருமே அந்த பெட்டிக்குள்தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லோருக்கும் செய்தி பரவிவிட்டது. அந்த நாள் முழுவதும் கால்கள் நிலத்தில் படாமல் திரிந்தேன். அம்மாவுக்கும் அரங்கத்திற்கு வர வேண்டும் ஆசை இருந்தது. நல்லவேளையாக, வேறு ஏதோ அலுவலினால் அவரால் வர முடியவில்லை. ஒருவிதத்தில் அது எனக்கு சந்தோஷம்தான். இந்த மாதிரி சமயங்களில் தெரிந்தவர்கள் யாராவது பக்கத்தில் இருந்தால் சுதந்திரம் இல்லாத ஃபீல் வந்துவிடும். 

ஊரிலிருந்து கிளம்பும் போது அணியாமல் வைத்திருந்த புத்தம் புதிய ஆடை ஒன்றை எடுத்துக் கொண்டேன்-பனியன் ஜட்டி உட்பட யாவும் புதியவை. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சம்பந்தமேயில்லாமல் கோபி பஸ் ஸ்டேண்டில் நல்ல செண்ட் பாட்டில் ஒன்றும் வாங்கிக் கொண்டேன்- பாஸ்போர்ட் சைஸ் படம் எடுக்க ஜீன்ஸ் போட்டுத்தான் நிற்க வேண்டும் என்பது போல.

ஞாயிற்றுக்கிழமை மாலையில்தான் ஷூட்டிங். ஆனாலும் காலையில் பல் தேய்ப்பதிலிருந்தே அட்டகாசங்களை ஆரம்பித்துவிட்டேன். முப்பத்தியிரண்டு பல்லுக்கும் சேர்த்து முக்கால் மணி நேரம் ஆனது. பிறகு ஷேவிங், அப்புறம் ஃபேசியல்- இந்த ஃபேசியல் நானே செய்து கொண்டது. சோப்பை முகத்தில் பூசி வறு வறு என தேய்த்துக் கொண்டேயிருந்தேன். முகம் வீங்கி விடுவது போல ஆனவுடன் ஐஸ்கட்டி வைத்து அமுக்க வேண்டியிருந்தது. மாலை நான்கு மணிக்குத்தான் அரங்கத்திற்கு வரச் சொன்னார்கள். நான் மதியம் ஒரு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டேன். பேருந்தில் சென்றால் சட்டை அழுக்காகிவிடும் என்பதால் விடுதியிலிருந்து அரங்கத்திற்கு ஆட்டோவில் சென்றேன். அநேகமாக கல்லூரியில் படித்த காலத்தில் ஆட்டோ ஏறியது அதுதான் முதல் மற்றும் கடைசி முறை.

ஐந்தரை மணிநேரம் ஷூட்டிங் நடந்தது. எப்படியோ கைதட்டு வாங்கும் அளவிற்கு பேசியாகிவிட்டது. இனி கீழே இறங்கினால் தோள் மீது வைத்துத் தூக்கிக் கொள்வார்கள் என்று நினைத்தேன். நினைப்புதானே பொழைப்பைக் கெடுக்கும்! ம்ஹூம். சீந்த நாதியில்லை. யாரோ ஓரிருவர் பாராட்டினார்கள். அவ்வளவுதான். அதுவரைக்கும் இருந்த அத்தனை தலைக்கனமும் வத்திப் போனது. இரவு சாப்பிட்டிருக்கவில்லை. விடுதிக்குச் செல்வதற்காக டவுன் பஸ் ஏறிய போது மற்றவர்களைவிட நான் எந்தவிதத்திலும் பெரியவன் இல்லை என்று தோன்றியது. பேருந்திலிருந்த மற்றவர்கள் அந்நேரத்தில் குறைந்தபட்சம் பசியில்லாமலாவது இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் பசியோடு காய்ந்து கிடந்தேன். இருந்தாலும் ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக அப்பொழுதும் ஒரு மூலையில் கொஞ்சம் திமிர் இருந்தது.

நிகழ்ச்சியின் பதிவு முடிந்த சில வாரங்களுக்கு பிறகு சன் டி.வியில் ஒளிபரப்பானது. டிவியில் வந்தவுடன் ‘பெரிய ஆள்’ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தேன். அதுவும் வேலைக்கே ஆகவில்லை. எங்கள் ஊரில் மட்டும் பங்காளிகளில் சில பேர் சிரத்தை எடுத்து பார்த்தார்கள். அன்றைய தினம் சொந்தக்காரர்களிடம் கொஞ்சம் பரபரப்பாகியிருந்தேன். அவ்வளவுதான். மற்றவர்களுக்கு எல்லாம் அந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போலவேதான் இருந்தது. ‘உலகம் தலைகீழாகிவிடும்’ ‘நான் ஸ்டார் ஆகிவிடுவேன்’ போன்ற என் எதிர்பார்ப்புகளில் கல்லெடுத்து வீசிவிட்டு அன்றைய தினமும் மெதுவாகவே எழுந்தார்கள். கறி தின்றார்கள். தூங்கினார்கள். மாலையில் வாக்கிங் சென்றார்கள். மறுநாள் வழக்கமான அலுவலை பார்த்தார்கள். வேறெதுவும் நடக்கவில்லை.

இதை எல்லாவற்றையும் முக்கியமான விஷயம் ஒன்று நடந்தது. அடுத்த நாள் கல்லூரிக்கு சென்ற போது ரொம்ப நாளாக பேச வேண்டும் என்று நினைத்திருந்த நித்யா அவளாகவே வந்து பேசினாள். ஆனால் அவள் பேசாமலேயே இருந்திருக்கலாம்- “நல்லா பேசுனீங்க அண்ணா” என்ற வாக்கியத்தில் மூன்றாவது சொல்லை மட்டும் அழுத்திச் சொன்னாள். கொஞ்ச நஞ்ச சந்தோஷமும் சுத்தமாக காலியாகிவிட்டது.

அதன் பிறகு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளிலெல்லாம் கலந்து கொள்ளவில்லை. ‘டச்’விட்டுப் போனது.

பெங்களூர் வந்த பிறகு ஒரு டிவியில் பேசுவதற்காக அழைத்தார்கள்- வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தோஷம். ‘உருப்படியாக என்னமோ செய்யறான்’என்றார்கள். அவர்களைப் பொறுத்த வரையிலும் டிவியில் வருவதும், யாராவது பிரபலங்கள் ஃபோனில் அழைத்துப் பேசுவதும் மட்டும் ‘உருப்படியாகச் செய்தல்’ என்பதற்கான அடையாளங்கள். மற்றவை எல்லாம் ‘வேலை கெட்ட வேலை’- அது வாசிப்பதாக இருந்தாலும் சரி, எழுதுவதாக இருந்தாலும் சரி. 

அது ஒரு புதிய சேனலுக்கான நிகழ்ச்சி. என்னிடம் சில கதைகள் கேட்டிருந்தார்கள். ஏழெட்டு கதைகளுடன் தயாராக இருந்தேன். இப்பொழுதெல்லாம் கோர்வையாக தமிழில் பேசுவதில்லை. மைக், லைட், கேமரா என்ற செட்டப்புகளில் குழறிவிடுவேன் என்று தோன்றியது. அப்படித்தான் நடந்தது. கதை சொல்லும் போது ரெக்கார்ட் செய்து கொண்டார்கள். பாண்டிச்சேரிக்கு அருகில் மரக்காணம் என்ற இடத்தில் வைத்து ஷூட்டிங் நடந்தது. ஐந்து கதைகளைச் சொல்லி முடிக்க இரவு எட்டு மணியாகிவிட்டது. அதோடு சரி. அந்த சேனலில் ஏதோ கசமுசா நடக்க சேனலே வராமல் நின்று போனது. ‘எப்போடா டிவியில வருவே?’ என்று வீட்டில் கேட்டுக் கேட்டு சலித்து போய்விட்டார்கள். 

இன்று இதை எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கும் அல்லவா? இருக்கிறது. நேற்று வேறொரு டிவியில் கூப்பிட்டார்கள். இந்த வரியை எழுதும் போதும் ‘ஸப்பான்ல ஸாக்கிசான் கூப்டாக; அமெரிக்கால மைக்கேல் சாக்ஸன் கூப்டாக’ என்ற டயலாக் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. வேறு வழியில்லை. கவுண்டமணியைத் தாண்டித்தான் அடுத்த வரிக்கு ‘ஜம்ப்’ அடித்தாக வேண்டும். இதையெல்லாம் எழுதினால் யாராவது கேள்வி       கேட்க வும் வாய்ப்பு உண்டு. ‘அவனவன் தூங்குறது தவிர மத்த நேரம் பூரா டிவி ஸ்டுடியோவிலேயே கிடக்கறான். நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பார்கள். ஆனால் அடுத்தவர்கள் கேள்வி கேட்பதற்காக எழுதாமல் இருக்க முடியுமா?

இப்பொழுதெல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. டிவியில் பேசுவதனால் யாருடைய கருத்திலும் நம்மால் Influence செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை. தனது கருத்தோடு ஒத்திருந்தால் ‘சரியா பேசுறான்’ என்பார்கள். முரண்பாடாக இருந்தால் ‘உளர்றான்’ என்பார்கள். அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். அதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. எனக்கு இருக்கும் ஒரே சந்தேகம் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து சென்னை சென்று கலந்து கொள்ளும் அளவிற்கு நிகழ்ச்சியில் ‘வொர்த்தாக’ பேசுவேனா என்பதுதான்.