Jul 4, 2013

Artificial Intelligence

ரோபோடிக் துறையில் படு சூடான ஏரியா இது. என்னதான் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் சுயமாக சிந்திக்காத வரையிலும் ரோபோ என்பது உலோகத்தால் செய்யப்பட்டு ஆணிகளால்  முறுக்கப்பட்ட இயந்திரம்தானே. அதே இயந்திரத்தை சுயமாக யோசிக்க வைத்துவிட்டால்? இப்படி யாரோ ஒரு புண்ணியவான் விரும்பியதன் விளைவாக ரோபோவிற்கு அறிவூட்டும்  ஆராய்ச்சியில் இன்று ரோபோடிக் விஞ்ஞானிகள் படு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். 

ரோபோவை அறிவாளியாக்கில் All in all அழகு ராஜாவாக்கலாம் என்ற யோசனை இன்றைக்கு நேற்று உருவானதில்லை. கி.பி.1495 ஆம் ஆண்டிலேயே லியானார்டோ டா வின்சிக்கு மண்டைக்குள் ‘பல்ப்’ எரிந்திருக்கிறது. அவர் மனிதனைப் போலவே ஒரு இயந்திரத்தை உருவாக்கி விட வேண்டும் என விரும்பினாராம். கூகிளில் தேடிப்பாருங்கள்- அது பற்றிய ஏகப்பட்ட தகவல்கள் படங்களுடன் கிடைக்கிறது. அந்த காலகட்டத்திலிருந்தே சிந்திக்கக் கூடிய ரோபோ என்பது விஞ்ஞானிகளின் கனவாகவே இருந்து வந்திருக்கிறது. 

ரோபோ சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஏற்ற வகையில் செயற்கை அறிவை(Artificial Intelligence) உருவாக்கி ரோபோவுடன் இணைக்க வேண்டும். கிட்டத்தட்ட உலகில்  உள்ள அத்தனை பொருட்களையும், உயிர்களையுமே செயற்கையாக உருவாக்கிவிட்ட நம் ஆட்கள் இதிலும் கால் வைத்துவிட்டார்கள். ஆனால் அதற்கு முன்பாக மனித  மூளை எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.


மனிதனின் மூளை கோடிக்கணக்கான நரம்பணுக்களால் (நியூரான்) பின்னப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு நியூரானும் ஒரு குட்டி கால்குலேட்டர் மாதிரிதான். தனியொரு நியூரானின் பணி என்று பார்த்தால் அது துக்கிணியூண்டு வேலைதான். ஆனால் மூளைக்குள் இருக்கும் பல கோடி நியூரான்களின் சிறு சிறு வேலைகளை தொகுத்தால் அது பிரம்மாண்டமான வேலையாகிவிடுகிறது. நாம் பேசுவது, நடப்பதில் தொடங்கி ராக்கெட் விடுவது வரைக்கும் அத்தனைக்கும் அடிப்படை இந்த குட்டி நியூரான்களின் சின்னஞ்சிறு வேலைகள்தான்.

உதாரணமாக நம்மை யாராவது பெயர் சொல்லி அழைக்கும் போது அந்தச் சத்தம் காதுகளின் வழியாக மூளையை அடைகிறது. சத்தத்தின் அர்த்தத்தைக் கண்டறிய பல கோடி நியூரான்கள்   சுறுசுறுப்படைகின்றன. ஒரு நியூரான் தமக்கு கிடைக்கப்பெறும் தகவலின் சிறு பகுதியைக் கணித்து அதை ஒரு வெளியீடாக (output) மாற்றுகிறது. இந்த நியூரானின்  வெளியீடு மற்றொரு நியூரானுக்கு உள்ளீடாக(Input) அமைகிறது.  இவ்வாறு பல கோடி நியூரான்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற சிறு சிறு உள்ளீடுகளை ப்ராஸஸ் செய்து  கேட்டது வெறும் ஓசையில்லை அது உங்களின் பெயர் என மைக்ரோ நொடிகளில் அறிவிக்கின்றன. 

அந்தச் சமயத்திலேயே இன்னும் சில கோடி நியூரான்கள் பெயரைச் சொல்லி அழைத்தவர் அன்பாக அழைத்தாரா, கோபமாக அழைத்தாரா, வெறுப்புடன் அழைத்தாரா என்பதையெல்லாம்  ப்ராசஸ் செய்து கொண்டிருக்க இன்னும் சில கோடி நியூரான்கள் அழைத்தவருக்கு என்ன பதிலைச் சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. இப்படியெல்லாமா மூளை  செயல்படுகிறது என்பதைத்தானே யோசிக்கிறீர்கள்? இப்பொழுது கூட ‘யோசிக்கிறேன் பேர்வழி’ என்ற பெயரில் சில கோடி நியூரான்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். 

மனிதனின் மூளைக்குள் இருக்கும் இத்தகைய நரம்பணு இணைவை செயற்கையாக உருவாக்கினால் அதுதான் ஆர்ட்டிபிசியல் நியூரல் நெட்வொர்க். இங்கு செயற்கையான ஒவ்வொரு நியூரானும் ஒரு ‘கணிதச் செயலாற்றி’யாக (A Mathematical Function) செயல்படுகின்றன. கணிதச் செயலாற்றி என்பதை எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ’கூட்டல்’’பெருக்கல்’அல்லது ‘வகுத்தல்’ என்ற ஒவ்வொன்றும் ஒரு கணிதச் செயல். ஒவ்வொரு செயற்கை நியூரானும் தனக்கு அளிக்கப்படும் ஒரு மிகச் சிறிய உள்ளீட்டைக் கணித்து மிகச் சிறிய வெளியீடாக மாற்றுகிறது. இப்படி கோடிக்கணக்கான செயற்கை நியூரான்கள் இணைந்து மனித மூளையை ஒத்த ஒரு செயற்கையான நியூரல் நெட்வொர்க்கை அமைக்கின்றன.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட நியூரல் நெட்வொர்க்கிற்கு பல்வேறுவிதமான உள்ளீடுகள் அளித்து பயிற்சியளிக்கப்படும். உதாரணமாக ’கதவு மூடியிருக்கிறது’என்பது உள்ளீடு என்று  எடுத்துக் கொண்டால் நியூரல் நெட்வொர்க் இந்த உள்ளீட்டைக் கணித்து ‘தாழ்ப்பாளை திறந்து உள்ளே போ’ என ரோபோவுக்கு உத்தரவிடும்படியாக பயிற்றுவிக்கப்படும். ’அறை வெப்பநிலை  முப்பது டிகிரிக்கும் குறைவாக இருக்கிறது’ என்பது உள்ளீடு என்றால் ‘ஏ.சி யை நிறுத்து’ என்பது வெளியீடாக இருக்கும். இப்படி பல்லாயிரக்கணக்கான உள்ளீடுகளால் செயற்கை நரம்பணு  அமைவுக்கு பயிற்சியளிக்கப்படும். இது ஒரு குழந்தைக்கு பயிற்சியளிப்பதைப் போலத்தான். நெருப்பு சுடும் என்பது எந்தக் குழந்தையின் மூளையிலும் ப்ரோகிராம் செய்யப்பட்டிருப்பதில்லை.  ஒரு முறை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தின் மூலமாக அது மெழுகுவர்த்தியானாலும், தீக்குச்சியானாலும் அல்லது ஊதுபத்தியானாலும் ஒரே விளைவுதான் என்பதை கற்றுக்கொள்கிறது.  இதே போன்ற பயிற்சிக்குப் பிறகு செயற்கை நரம்பணு அமைவும் சுயமாகவே சிந்திக்கத் துவங்குகிறது.

ஓவராக ஓட்டுகிறேனா? சரி நிறுத்திக் கொள்ளலாம்.

இத்தகைய செயற்கை அறிவு பொருத்தப்பட்டிருக்கும் ரோபோக்களுக்கு இராணுவத்தில் தனி ‘மவுசு’தான். தமது எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை எதிர்கொள்வதற்கான ரோபோடிக் தடுப்பு பீரங்கிகள் பெருமளவில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. விமானங்களை கண்டறியும் அத்தனை வசதிகளும் இந்த ரோபோவிற்குள் பொருத்தப்பட்டிருக்கும். எல்லைக்குள் எதிரியின் விமானம் நுழைகிறது என்பதைக் கண்டுபிடித்தவுடன் இந்த ரோபோவுக்கு மூக்கு வியர்த்துவிடும். விமானம் வரும் திசையை நோக்கி தாமாகவே திரும்பி தயார் நிலையில் நின்றுவிடும். அதோடு அசந்திருக்கும் தமது நாட்டு வீரர்களை உசுப்பிவிட ஒரு சைரனையும் எழுப்பிவிடும். ஒரு ராணுவ வீரர் ஓடி வந்து ’ட்ரிக்கர்’ஐ அழுத்த வேண்டியது மட்டும்தான் மிச்சம் வைக்கப்பட்ட வேலையாக இருக்கும். அவர் ட்ரிக்கரை அழுத்திய அடுத்த கணம் விமானம் சுக்கு நூறாகிவிடும். இத்தகைய ரோபோக்கள் செயற்கை அறிவால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க இராணுவ வீரர்கள் இத்தகைய விமானத்தடுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தார்கள். பயிற்சியின் போது ‘ட்ரிக்’கர் அழுத்துவதையும்  கூட’ஆட்டோமேடிக்’ஆக மாற்றி வைத்திருந்தார்கள். அறிவியல் எப்பொழுதுமே மனிதனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பயிற்சியின் போதும்  கட்டுப்படவில்லை. பயிற்சி என்பதை முழுமையாக உணராத ரோபோ ‘ட்ரிக்கர்’ஐ அழுத்தி இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தியது. மிக முக்கியமான இராணுவ வீரர்கள் கருகி சாம்பலாக உதிர்ந்தார்கள். இதற்கு  பிறகாக உலகம் முழுவதும் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் அதிகபட்ச கவனத்துடன் கையாளப்படுகின்றன. 

செயற்கை அறிவு பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட பாதிக்கிணறு தாண்டிவிட்டார்கள். மீதிக்கிணறுக்காக திணறிக்கொண்டிருக்கிறார்கள். திணறலுக்கு காரணம் இல்லாமல்  இல்லை. நம் ஆட்கள் இதயம், நுரையீரல் என ஒவ்வொரு உறுப்பையும் அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மனித மூளையை மட்டும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. ரொம்ப குழம்ப வேண்டாம்- மனைவியின் மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஒரே ஒரு கணவனை பார்த்திருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள். காலில் விழுந்து கும்பிட வேண்டும். இந்த ரேஞ்சில் மூளை பற்றிய புரிதலை வைத்துக் கொண்டு செயற்கை அறிவை செய்கிறார்களாம். ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸாம்!