கம்பருக்கும் புரட்சித்தலைவி அம்மாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. தெரியும்தானே? தெரியாவிட்டால் பத்தியின் கடைசி வரியில்.
அதற்கு முன்னால்-
அண்ணாத்துரையை உங்களுக்கு பிடிக்குமா? எதற்கு பிடிக்கிறதோ இல்லையோ- ஒரு விஷயத்திற்காக எனக்கு பிடிக்காது- கம்பரமாயாணத்தை காமரசம் சொட்டும் காப்பியமாக சித்தரித்தது பெருங்கொடுமை. அதற்காகத்தான் கம்பரசம் என்ற புத்தகத்தையும் எழுதினார். எழுத்தை எழுத்தால்தானே எதிர்த்தார், ஒரு விதத்தில் நல்ல விஷயம்தான். விட்டுவிடலாம். ஆனால் அவரது அடிப்பொடிகள்தான் பிரச்சினை. திராவிடக் கட்சிகளில் ஒரு கொடும் பழக்கம் உண்டு அல்லவா? தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே தொண்டர்கள் பின்பற்றுவார்கள். ஊர் ஊருக்கு கம்பர் கழகம் இருப்பதற்கு போட்டியாக திராவிடக் கட்சியினர் ஆளாளுக்கு கம்பராமாயணத்தை எதிர்க்கத் துவங்கினார்கள்.
கம்பராமாயணத்தில் பத்தாயிரத்து ஐந்நூறு பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ‘கம்பரசம்’ வகையறாக்கள் குறைந்தபட்சம் நூறு பாடல்களையாவது வாசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.அரசியல்வாதிகள் எப்படியோ போகட்டும். உண்மையில் மற்ற தமிழிலக்கியங்களை விட கம்பராமாயணம் ஒரு படி மேல் என்று தைரியமாகச் சொல்லலாம். இந்துத்துவத்தை தூக்கிப் பிடிக்கிறது, ராம பஜனையை தமிழுக்குள் இழுத்து வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மொழியை இவ்வளவு அற்புதமாக இலக்கியத்தில் வேறு பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.
“தோள் கண்டார்; தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார்; தாளே கண்டார்; தடக் கை கண்டாரும் அஃதே;”
போன்ற பாப்புலர் வரிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், வாசித்தவரை பாடல்கள் ஒவ்வொன்றுமே Poetic ஆகத்தான் இருக்கின்றன.
“பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி”
“நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை, அற்றே
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை;”
“தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சே யோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே”
இப்படி சாம்பிள்களை ராமாயணத்திலிருந்து எடுத்து தூவிக் கொண்டே இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் எழுதுவதால் கம்பராமாயணத்தை முழுமையாக வாசித்திருக்கிறேன் என்று படம் காட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. “வாசித்த வரையில்” என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கம்பரை திடீரென நினைத்துக் கொள்ள காரணம், சுஜாதா தேசிகன். தேசிகனைப் பற்றி சுஜாதாவின் மொழியிலேயே சொன்னால் “சுஜாதாவின் தீவிர வாசகர், ரசிகன். சுஜாதாவின் கதைகளில் ஒரு அத்தாரிட்டி”. சுஜாதாவுக்கு தனது கதைகளில் ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் அதை தேசிகனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். அந்த அளவுக்கு சுஜாதாவின் எழுத்துக்கள் தேசிகனுக்கு அத்துப்படி.
தேசிகன் தனது கதைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வந்திருக்கிறார். தொகுப்பை பத்து பைசா பதிப்பகம் என்ற தனது பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிட்டிருக்கிறார். பதிப்பகத்தின் பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்ள விரும்பினேன். “நான் எழுதறது பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லைன்னு யாரும் சொல்ல முடியாது பாருங்க” என்றார். இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? சிரித்துக் கொண்டேன்.“அப்பாவின் ரேடியோ” என்பது தொகுப்பின் பெயர்.
ஒரு மழை பெய்யத் துவங்கவிருந்த மாலையில் புத்தகத்தை கொடுத்தார். வாசித்துக் கொண்டிருக்கிறேன். தொகுப்பில் ‘பெருங்காயம்’ என்று ஒரு கதை இருக்கிறது. கதையில் வரும் சடகோபன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவரது வீட்டில் தங்கியிருக்கும் அவரது தந்தை அங்கேயே இறந்துவிடுகிறார். காரியம் அத்தனையும் அந்த நாட்டிலேயே நடக்கிறது. இறப்பதற்கு முன்பாக “தேரெழுந்தூர் வீடு” என்று சொல்லிவிட்டு போய்ச் சேர்ந்துவிடுகிறார். அது சடகோபனின் தாத்தாவின் வீடு. சடகோபன் அந்த வீட்டை தேடி தேரெழுந்தூர் செல்கிறார். அங்கு போய் பார்த்தால் தனக்கு பேருந்தில் அறிமுகமான இஸ்மாயில் என்பவரின் தம்பியிடம் அந்த வீடு இருக்கிறது. இஸ்மாயில் நல்லவர்தான். ஆனால் வாங்கிய வீட்டை தர முடியாது என்று சொல்லிவிடுகிறார் என கதை முடிகிறது.
புத்தகத்தின் சுவாரசியம், தேசிகனின் கலக்கலான மொழிநடை என்பதையெல்லாம் வேறொரு சமயம் பேசலாம். இப்பொழுது அந்த தேரெழுந்தூர் is our point. எப்பொழுதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என சில புத்தகங்களைத் தேடிப்பார்த்தால் “அட, இதுதான் கம்பரின் சொந்த ஊர்”. சில புத்தகங்களில் திருவழுந்தூர் என்றிருக்கிறது. சில புத்தகங்களில் தேரெழுந்தூர் என்றே என்றிருக்கிறது. எது எப்படியோ, கம்பர் ஞாபகத்துக்கு வந்துவிட்டார்.
அங்கிருந்த காளிக்கு பூசை செய்யும் குடும்பத்தில்தான் கம்பர் பிறந்திருக்கிறார். கம்பருக்கு ஏன் அந்தப் பெயர் என்று ஆளாளுக்கு பீட்டர் விடுகிறார்கள். ஏகம்பன் என்ற சிவபெருமானின் பெயர் சுருங்கி கம்பன் ஆகிவிட்டது என்கிறார்கள். அப்புறம் ஏன் ராமரைப் பற்றி பாடல் எழுதி புரட்சித்தலைவிக்கு சம்பந்தம் உடையவர் ஆனார் என்று சந்தேகமாக இருக்கிறது. வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் அறிவில்லாமல் கம்பங்கொல்லைக்கு காவல் காத்ததாராம் அதனால் கம்பன் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது என்கிறார்கள்.
பெயர் அவ்வளவு முக்கியமில்லை. தமிழ் இலக்கியத்தில் ஏகப்பட்ட புலவர்களுக்கு பெயரே இல்லை. “செம்புலப் பெயல் நீர் போல” என்ற லவ் பாடலை எழுதியவரின் பெயர் யாருக்கும் தெரியாது. பார்த்தார்கள், பாட்டுவரியிலிருந்தே அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள். “செம்புல பெயனீரார்” ஆகிவிட்டார். அதேபோல கம்பரின் பெயர்க்காரணத்தை பற்றி பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன்.
கம்பருக்கு சம்பந்தமுடைய ஏகப்பட்ட சுவாரசியக் கதைகள் உண்டு. அதில் ஒன்றுதான் அம்பிகாபதி-அமராவதில் லவ்விங்ஸ். அம்பிகாபதி வேறு யாருமில்லை- கம்பரின் மகன் தான். வயசுக் கோளாறினால் சோழ மன்னனின் மகளான அமராவதிக்கு நூல் விட சோழன் செம டென்ஷனாகிவிட்டான். விட்டால் சோழன் சுளுக்கெடுத்துவிடுவான் என்று அம்பியும் அமராவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடுப்பான கம்பர் அதன் பிறகு சோழ நாடே வேண்டாம் என பாண்டிய நாட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கு நாட்டரசன் கோட்டையிலேயே இறந்தும் போனாராம். இன்னமும் அங்கே கம்பருக்கு சமாதி உண்டு.
கம்பரை பற்றி எழுதும் இடத்தில் இது தேவையில்லைதான். இருந்தாலும் Information is wealth அல்லவா? சொல்லிவிடுகிறேன். இந்த ஊர்தான் கொடுங்கோல் டைரக்டர் பேரரசுவின் சொந்த ஊர்.
கம்பர் பற்றி அவ்வப்போது பேசுவோம். இப்பொழுது கம்பருடன் புரட்சித்தலைவிக்கான தொடர்பை சொல்லி முடித்துக் கொள்ளலாம்.
கம்பர் “இராமவதாரத்தை” எழுதி முடித்து அதை எங்கு அரங்கேற்றம் செய்தார் தெரியுமா? ஸ்ரீரங்கம் கோவிலில்தான்.
இப்பொழுது நாமெல்லாம் என்ன சொல்ல வேண்டும்?
தனது தொகுதியில் கம்பராமாயணம் அரங்கேற அனுமதியளித்த புரட்சித்தலைவி வாழ்க!