Mar 21, 2013

புதுமாப்பிள்ளையின் முதல் சில நாட்கள்


கல்யாணம் முடிந்து பன்னிரெண்டு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. எனக்கு இல்லை- ரவிக்கு. அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ஆனது பன்னிரெண்டு நாட்களாகவே மாமனார் வீட்டில்தான் சுகவாசம். பெயரளவில்தான் சுகவாசம் உண்மையில் ரவி டார்ச்சராகிக் கிடக்கிறான். வீட்டை விட்டு அவனை தனியாக வெளியே விடுவதில்லை. கவிதாவுடன் வேண்டுமானால் வெளியே செல்லலாமாம் ஆனால் ஆறு மணிக்குள் வீட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவதென்றாலும் கூட ‘மேட்னி ஷோ’போகச் சொல்லி சாவடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே போக வேண்டாம் என்று சொன்னால் கூட ரவி ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கு ஒரு டப்பா காரணம் சொல்கிறார்கள். புதுமாப்பிள்ளையிடம் மாலை வாசம் அடிக்குமாம்- கல்யாணத்தின் போது அணிந்திருந்த பூமாலையின் வாசம்தான். பொழுது சாய்ந்த பிறகு இந்த வாசத்தோடு வெளியே சென்றால் காத்து கருப்பு பிடித்துக் கொள்ளும் என்று சொல்லி கடுப்பேற்றுகிறார்கள். பதினைந்து நாட்களுக்கு பிறகு வேண்டுமானால் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது வாசம் போய்விடும் போலிருக்கிறது. மாமியார் ரவியிடம் பேச்சுக் கொடுத்துக் கூட பேசுவதில்லை. மாமனார்தான் இந்த அழிச்சாட்டியத்தை செய்து கொண்டிருக்கிறார். இந்த ரூல்ஸையெல்லாம் கவிதாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறார். ரவிக்கு கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான்.

பன்னிரெண்டு நாளும் இரவில் என்ன செய்கிறான் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பகலில் நடக்கும் ஒரே உருப்படியான காரியம் சோறு தின்பதுதான். மூன்று வேளையும் விதவிதமான சோறாக்கி போடுகிறார்கள். அதில் நிறைய ஐட்டங்களை ரவி இப்பொழுதுதான் முதன்முதலாக கண்ணிலேயே பார்க்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சோறு மட்டும்  இல்லை நேராநேரத்துக்கு காபி, டீ, மிக்சர், போண்டா என்று மாமியார் வீட்டில் படம் காட்டுகிறார்கள். 

முதலில் ரவியிடம் பேசுவதற்கே வெட்கப்பட்ட கவிதா கடந்த ஐந்தாறு நாட்களாக அவனுக்காக உருகுகிறாள். அவனது இலையை பதார்த்தங்களால் நிரப்புவதிலிருந்தே அவன் மீதான பிரியத்தை புரிந்து கொள்ள முடியும். ரவியின் அருகாமையும் அரவணைப்பும் அவளுக்கு வேறொரு உலகத்தை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. ரவியும் ஒன்றும் சும்மா இல்லை. மினுமினுக்கும் ப்ரேஸ்லெட்டும், மைனர் செயினும், மோதிரமுமாக சுற்றுகிறான். எல்லாமே கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார்கள். மடமடப்பான புது லுங்கி, வெளுப்பான பனியன், மழித்த முகம் என்று ஆளே கிட்டத்தட்ட மாறிவிட்டான். வெளியில் போகாமல் இருப்பதைக் கூட சமாளித்துவிடலாம். மச்சினிச்சிகளைத்தான் சமாளிக்க முடிவதில்லை. வெயிட்...வெயிட்..குண்டக்க மண்டக்க நினைக்காதீர்கள்.

மச்சினிகள் செய்யும் அட்டகாசங்களை ரவியால் அடக்க முடிவதில்லை என்றுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றிரவு கவிதாவின் சித்தி மகள் வந்திருந்தாள். அவள் பெயர் ரவிக்கு ஞாபகத்தில் இல்லை. கல்லூரியில் படிக்கிறாளாம். நேற்று ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் “மச்சான் முகம் இப்படி உப்பிக் கெடக்கு, ராத்திரியில தூக்கமில்லையோ” என்று கிண்டலடிக்க ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்படி கிண்டலை எதிர்கொள்வது ரவிக்கு புதிது. அதுவும் பெண்களிடமிருந்து தாக்குதல் என்பதால் திகிலடித்துக் கிடந்தான். கவிதாவை அழைத்தான். தனது தங்கைகளிடமிருந்து அவனை காப்பாற்றிவிடுவாள் என்று நம்பித்தான் அழைத்தாள். அவளிடமும் “அக்கா, மச்சானுக்கு பாதாமும் முந்திரியும் கொடு. உனக்குத்தான் பிரையோஜனப்படும்” என்றாள்.  ஷாக் ஆன கவிதா அந்த இடத்திலிருந்து வெட்கப்பட்டவளாக ஓடிவிட்டாள். இப்படித்தான் ரவி திணறிக் கொண்டிருக்கிறான்.

பன்னிரெண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இதற்கு மேல் தாங்க முடியாது என இன்று காலையில்தான் மாமனார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியோடு கிளம்புவதாக முடிவு செய்துவிட்டான். இன்னும் மூன்று நாட்கள் ஆகட்டும் என்ற பேச்சுகளை நாசூக்காக தவிர்த்தான். ரவியின் ஊருக்கும் மாமனார் ஊருக்கும் அதிகம் தொலைவு இல்லை. ரவியின் மாமனார் எந்த ஊர் என்றே சொல்லவில்லை பார்த்தீர்களா? புளியம்பட்டி தெரியுமா?. அன்னூருக்கும் அவினாசிக்கும் இடையில் இருக்கும் அதே புன்செய் புளியம்பட்டிதான். அந்த ஊருக்கு பக்கத்திலிருக்கும் கவுண்டம்பாளையம்தான் ரவிக்கு சொந்த ஊர். இந்த ஊர் ரொம்ப ஃபேமஸ். நடிகர் சிவக்குமார் இருக்கிறாரல்லவா? அவரின் மனைவி இந்த ஊர்க்காரர்தான். சூர்யாவின் அமத்தா, அப்பிச்சியெல்லாம் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சூர்யா முன்னொரு காலத்தில் சரவணனாக ட்ரவுசர் போட்டு திரிந்த கதைகளை ரவியின் அம்மா சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில் இந்த ஊரில் புகையிலை வியாபாரம் கொடிகட்டிக் கொண்டிருந்தது. ரவியின் அப்பா கூட புகையிலை வியாபாரிதான். இப்பொழுதெல்லாம் மழையும் இல்லை தண்ணியும் இல்லை. அந்த ஊரில் இருந்துதான் ரவி தினமும் புளியம்பட்டி மில்லுக்கு வேலைக்கு போய்வருகிறான். 

ரவியின் மாமனார் கொஞ்சம் வசதியானவர். புளியம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஹோட்டல் வைத்திருக்கிறார். ரவி அவ்வப்போது இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவதுண்டு. தனது சாதிக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகு மாமனாருக்கு ரவி மீது சற்று கவனம் அதிகம். கெட்டபழக்கம் இல்லாத பையன் என்பதால் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ரவிக்கு தன் மகளை கட்டி வைத்துவிட்டார். ரவியின் மாமியாருக்கு இந்த சம்பந்தத்தில் ஆரம்பத்தில் விருப்பமில்லைதான். ஆனால் ரவிக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பாவும் எப்பவோ போய் சேர்ந்துவிட்டார். அம்மா மட்டும்தான். பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம் என்று அவரும் சம்மதித்துவிட்டார்.

கல்யாணத்திற்கு பிறகு மாப்பிள்ளையையும் கூடவே வைத்துக் கொண்டு ஹோட்டல் பொறுப்புகளை ரவியிடம் கொடுத்துவிட விட வேண்டும் என்று மாமனார் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் ஆனதும் ஆகாததுமாகச் சொன்னால் மாப்பிள்ளை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடும் என்று அமைதியாக இருந்துவிட்டார். கொஞ்ச நாட்களுக்கு அதே மில் வேலைக்கு போய் வந்தால் தப்பில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ரவியின் பைக்தான் மாமனாரின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. அரதப்பழசான அதை தனது மருமகன் ஓட்டுவதில் அவருக்கு விருப்பமில்லை. மாற்றிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

ரவியும், கவிதாவும் கவுண்டம்பாளையத்திற்கு கிளம்பினார்கள். கவிதா அடக்கமாட்டாமல் அழுதாள். அவளது அம்மாதான் சமாதானப்படுத்தினார். ரவியின் மாமனாருக்கும் மகளை பிரிவது குறித்து வருத்தம்தான். தனது கவனத்தை சிதறடிக்கும் விதமாக ரவியிடம் பேச்சுக் கொடுத்தார். “ஊருக்கு போயிட்டு ஒரு நாள் சாயந்திரமா புளியம்பட்டி வாங்க மாப்ள. ஒரு பைக் புக் பண்ணிடலாம்” என்றார். ரவி தலையாட்டிக் கொண்டான். ரவிக்கு அந்த வார்த்தைகள் உற்சாகமானதாக இருந்தன. தனது செகண்ட் ஹேண்ட் பைக்கை இனிமேல் ஓட்ட வேண்டியதில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது.

பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போதே கவிதாவிடம் “இன்னைக்கு சாயந்திரமே புளியம்பட்டி போய்ட்டு வரட்டுமா?” என்றான். கவிதாவுக்கு அதில் மறுப்பு சொல்ல எதுவுமில்லை. வீட்டில் ரவியின்  அம்மாதான் இரண்டொரு நாள் கழித்து போகலாம் என்றார். ஆனால் ரவிக்கு இருப்பு கொள்ளவில்லை.  தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் மாமனாரின் ஹோட்டலில் இருந்தான். அந்தச் சமயத்தில் மாமனார் வெளியே சென்றிருந்தார். அவர் வரும் வரைக்கும் தந்தி பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தான். கள்ளக்காதல் செய்திகளால் பக்கங்கள் நிரம்பியிருந்தன. அரை மணி நேரம் இருக்கும். மாமனார் வந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டான். அவரும் தூரத்திலேயே இவனது பைக் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.

இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். “போய் பைக் புக் பண்ணிடலாங்களா?” என்றார். 

ஃபார்மாலிட்டிக்காக “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான். ஆனால் இன்றே செய்துவிட வேண்டும் என்று உள்ளூர ஆசைப்பட்டான்.

“வந்ததது வந்துட்டீங்க. அப்புறம் எதுக்கு தவணை” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே பைக் பற்றியெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தான். நீல நிற சூப்பர் ஸ்பெண்டர் புக் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். ஹீரோ ஷோரூமுக்கு வெளியிலேயே பூக்கடை இருந்தது. தனது மகளுக்கு ஒரு முழம் மல்லிகைப்பூவை வாங்கி ரவியிடம் கொடுத்துவிட்டு சிரித்தார். அதை சிரிப்பு என்று சொல்ல முடியாது. முறுவல் எனலாம்.

“கவிதாவ பார்த்துக்குங்க மாப்ள. பொசுக்குன்னு ஏதாச்சும் பேசிப் போடாதீங்க” என்ற போது ரவியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அது ஒருவித கெஞ்சலான தொனி. அவரது கைகளில் ஈரப்பதம் இருந்தது. ஈரப்பதத்தையும் மிஞ்சிய கதகதப்பும் இருந்தது. ரவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பூவை பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு “கவலைப்படாதீங்க மாமா” என்றான். அவருக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. பேச்சை மாற்ற விரும்பியிருப்பார் போலிருக்கிறது.

“டீ குடிக்கலாங்களா?” என்றார்.

“வேண்டாங்க மாமா. இப்பவே லேட்டாகிடுச்சு” என்றான். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். சாயுங்காலத்தில் அவன் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை வந்தவராய் அவனை வீட்டிற்கு போகச் சொல்லி அறிவுறுத்தினார். மாமனாரை அவரது ஹோட்டலில் விட்டுவிட்டு ரவி உடனே கிளம்பிவிட்டான். இன்னும் இருபது நிமிடங்களுக்குள் ஊருக்கு போய்விடுவான். மல்லிகைப்பூ வாசனை அவனது முகத்தில் வீசிக் கொண்டிருந்தது.

புளியம்பட்டியிலிருந்து கவுண்டம்பாளையம் செல்வதற்கு நால்ரோடு தாண்டித்தான் போக வேண்டும். ரவி இடது பக்கம் திரும்ப வேண்டும். திரும்பவதற்கு பதிலாக கோயமுத்தூர் சாலையில் நேராக போய்க் கொண்டிருந்தான். காரணமாகத்தான். அந்தப்பக்கம் ரங்கநாதன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்தே பல காலம் ஆகிவிட்டது. பேசிவிட்டு போய்விடலாம் என்றுதான் நினைத்தான். ரங்கநாதனும் இவனை பார்த்துவிட்டு கையசைத்தான். ரவி நால்ரோட்டிலிருந்து ஐம்பது மீட்டர் கூட தாண்டியிருக்க மாட்டான். அவிநாசியிலிருந்து பால் வேன் ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையில் இருக்கும் தடுப்பரண்களை மோதவிருக்கும் சமயத்தில்தான் அதை தவிர்ப்பதற்காக டிரைவர் ப்ரேக்கை அழுத்தினார். அது எந்த பலனையும் தரவில்லை. இழுத்துக் கொண்டு சென்ற வேன் ரவியின் பைக் மீது மோதியது. அடித்த வேகத்தில் இரண்டு அடி உயரத்துக்கு வண்டியிலிருந்து மேலெழும்பிய ரவி கீழெ விழுந்தான். ரங்கநாதன் ஓடி வந்தான். ரவி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். காதில் ரத்தம் வரத் துவங்கியது. ரங்கநாதன் பதறிக் கொண்டிருந்தான். பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பூ சிதறிக்கிடந்தது என்று சொன்னால் ‘க்ளிஷே’வாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் கிடந்தது. 

கவுண்டம்பாளையத்திற்கு தகவல் போவதற்கு இன்னும் சில நிமிடங்களாவது ஆகும். ரவியின் அம்மா சாமி படங்களுக்கு முன்பு விளக்கு பற்ற வைத்துக் கொண்டிருந்தார். கவிதா சட்னி அரைப்பதற்கு அம்மிக்கல்லைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
                                            *************

பிற கதைகளை வாசிக்க: மின்னல் கதைகள்