இன்றைக்கு appraisal. பரதேசி படத்தில் கங்காணி கணக்கு முடிப்பது போல மேனேஜர் அழைத்து கணக்கு முடிப்பார். இந்த மீட்டிங்கில் என்ன பேசுவார் என்று நன்றாகவே தெரியும். “நீ தூள் டக்கரான வேலைக்காரன்; அப்பாடக்கரான அறிவாளி” என்றெல்லாம் அளப்பார். கேட்க கேட்க புல்லரிக்கும். புல்லரிப்பு தாங்க முடியாமல் சொறியத் துவங்கும் போது “ஆனா பாரு...இந்த வருஷம் கம்பெனியோட லாபம் சரியில்லை அதனால இவ்வளவுதான் கொடுக்க முடியும்” என்று கிள்ளிக் கொடுப்பார். கங்காணி பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே போகும் காட்சி மனத்திரையில் சோக கீதம் வாசிக்கும்.
ஒருவனுக்கு தூக்குதண்டனை கொடுப்பதாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் ‘தூக்குத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையாக மாற்றிவிடுகிறோம்’ என்று சொன்னால் ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டதே என்னும் சோகத்தைவிட தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சிதானே அவனுக்கு அதிகமாக இருக்கும். அப்படித்தான் இன்றைக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக appraisal இல் என்ன நடந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். ஒருவேளை மாட்டியிருந்தால் கடந்த வருடம் நான் சம்பாதித்தது மொத்தத்தையும் நஷ்ட ஈடாக கொடுத்திருந்தாலும் கட்டுபடியாகியிருக்காது. ஆனால் ஆண்டவன் நல்லவன் பக்கம் இருப்பான் போலிருக்கிறது. தப்பித்துவிட்டேன்.
‘மிர்ச்சி’ என்றொரு தெலுங்குப் படம் வந்திருக்கிறது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அது யாருக்கு வேண்டும்? அனுஷ்காதான் கதாநாயகி. அதுதான் முக்கியம். அவுட்டர் ரிங் ரோட்டிலிருக்கும் பெங்களூர் செண்ட்ரல் மாலுக்கு பக்கத்தில் ஒரு சந்து உண்டு. சந்தில் நுழைந்தால் Dead end வரும். இந்த இடம்தான் ஸ்பாட். அங்கிருந்து வலது பக்கமாக திரும்பும் இடத்தில் இரு குட்டிச்சுவர் இருக்கிறது. அந்தச் சுவரில் அனுஷ்காவின் குத்தாட்டப் போஸ்டர் ஒன்றை ஒட்டி கண்கள் மொத்தத்தையும் அந்த போஸ்டரில் அடமானம் வைக்கச் செய்துவிட்டார்கள். அனுஷ்காவின் முகத்தைப் பார்த்துவிட்டு “இந்தப் பொண்ணு எவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்கா பாருடா மணி” என்றுதான் நினைத்தேன். வேறெதுவும் நினைக்கவில்லை என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அனுஷ்காவோ தமன்னாவோ- மனதுக்குள் வந்துவிட்டால் இடத்தை காலி செய்ய சில நிமிடங்கள் தேவைப்படுமல்லவா? அந்த சில நிமிடங்களில்தான் என்ன வேண்டுமானாலும் நடந்து தொலையும்.
இந்த சந்தில்தான் என் பைக்குக்கு முன்பாக ஒரு வெள்ளை நிற ஆடி கார் சென்று கொண்டிருந்தது. A4 மாடல். இந்த கார் மீது எனக்கு எப்பவுமே ஒரு கண் உண்டு. இருபத்தொன்பது லட்ச ரூபாயாம். அடங்கொக்கமக்கா!
இயக்குநர் ஷங்கர் முன்பொரு காலத்தில் உதவி இயக்குநராக இருந்த போது “ஒரு மாருதி 800 காரும், தி.நகரில் ஒரு ப்ளாட்டும் வாங்க வேண்டும்” என்று கனவு கண்டதாக சமீபத்தில் ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் இப்பொழுது நினைத்தால் மாருதி 800 என்ன? ரோல்ஸ் ராய்ஸே வாங்க முடியும். எனக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஆல்டோவோ, ரோல்ஸ்ராய்ஸோ- கனவுதானே? பெரிய ரேஞ்சிலேயே இருக்கட்டும் என்று அவ்வப்போது ஆடியுடன் டூயட் பாடுவதுண்டு. அந்த ஆடி கார்தான் முன்னால் போய்க் கொண்டிருந்தது.
பெங்களூர் சாலைகளில் சில சல்லிப்பயல்கள் வண்டி ஓட்டுவார்கள். அவர்களிடம் லைசென்ஸ் இருக்காது ஆர்.சி புத்தகம் இருக்காது என்பதெல்லாம் வேறு கதை- வண்டியில் ப்ரேக்கே இருக்காது என்பதுதான் முக்கியம். இந்த வண்டியை வைத்துத்தான் வீலிங் அடிப்பார்கள். பின்னால் சக்கரம் மட்டும் நிலத்தில் இருக்கும். முன்பக்கச் சக்கரம் அந்தரத்தில் பறக்கும். ப்ரேக்கே இல்லாத வண்டியில் சைலன்சர் மட்டும் இருக்குமா? அதுவும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்கும். அப்படி ஒரு சல்லிப்பயல் வெகு வேகமாக முறுக்கிக் கொண்டு வந்தான். இந்த ட்ராபிக்கில் இப்படி சத்தம் எழுப்பிக் கொண்டு வருகிறானே என்று நினைத்து அனுஷ்காவை கோட்டை விட்டிருந்தேன். சில வினாடிகள்தான் இருக்கும். நெருங்கிவிட்டான். எனது வண்டிக்கு பக்கமாகத்தான் கொஞ்சம் இடம் இருந்தது என்பதால் கிட்டத்தட்ட உரசுமளவிற்கு வந்துவிட்டான். அமைதியாக நின்றிருக்கலாம். கொஞ்சம் நகர்ந்து கொள்ளலாம் என்று ஆக்ஸிலேட்டரை மெதுவாக முறுக்கினேன். வண்டி நகரத்துவங்கவும் அவன் எனது வண்டியின் முன் சக்கரத்தை முட்டவும் சரியாக இருந்தது.
“டொப்”.கதை முடிந்தது. எனது வண்டியின் பம்பர் ஆடியின் பின்பக்கமாக இடித்துவிட்டது. அனுஷ்கா, ஆடியெல்லாம் தாண்டி இப்பொழுது ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது “செத்தேன்”. ஆண்டவன் என் பக்கமாக இருந்தான் என்று சொன்னேன் அல்லவா? அந்த சல்லிப்பயலின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்திருப்பான் போலிருக்கிறது. சல்லிப்பயலும் தடுமாறி ஆடி கார் மீது ஒரு கீறலை அழுந்தப் போட்டுவிட்டான். போட்டவன் போட்டவன்தான். வண்டிகளுக்கிடையில் இருந்த சந்து பொந்துகளில் நுழைந்து அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தான். என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.
ஆடி கார்காரன் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தத் துவங்கியிருந்தான். ஆடி கார்காரனைத்தான் எல்லோரும் பாக்கிறார்களே தவிர சல்லிப்பயலை ஒரு பயல் கூட தடுக்கவில்லை. ஆடிக்காரனால் கதவை திறக்க முடியவில்லை. அத்தனை வாகன நெருக்கம். திக்கித் திணறி இறங்கியபோது நான் பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தேன். ஆஜானுபாகுவான ஆளாக இருந்தான். காரை பார்த்துவிட்டு தலை மீது கை வைத்துக் கொண்டான். பாவமாக இருந்தது. ஒருவேளை இரண்டு கீறலையும் நான் போட்டதாக அவன் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. வாலண்டியராக சென்று “இந்த ஒரு இடியை நான் இடித்தேன்; இன்னொன்றுதான் அவன் இடித்தான்” என்று சொல்லுமளவுக்கு நான் புத்தனுமில்லை. அந்த ஒரு கீறலுக்கான செலவைக் கொடுத்தாலும் கூட அடுத்த மாதம் பைசா இல்லாமல் பைக்குக்கு பெட்ரோல் அடிக்கக் கூட மனைவியிடம் கடன் வாங்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.
தலையில் கை வைத்தபடியே “ரெண்டு இடி இடிச்சிட்டு போய்ட்டான்..கூபேகாடு” என்றான். அவன் சொன்னதை கவனித்தீர்களா? இரண்டு கீறலையும் சல்லிப்பயல் போட்டுவிட்டதாக நினைத்திருக்கிறான். தப்பித்தாகிவிட்டது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட விசில் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அடக்கிக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தான். ஏதாவது பேச வேண்டுமல்லவா?
“நெம்பரை கவனிச்சீங்களா சார்?” என்றேன். அந்த வண்டியில் நெம்பர் ப்ளேட்டே இல்லை என்று எனக்குத் தெரியும் என்றாலும் வேறு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. முறைத்தார். இதற்கு மேல் நின்றால் ஆபத்து என்று தோன்றியது. அவர் வண்டியை ஓரம் கட்டிவிட்டு யாருக்கோ போன் செய்யத் துவங்கினார். நான் நைஸாக கம்பி நீட்டத் துவங்கினேன்.
வண்டி ஓட்டும் போது “பாவம் அந்த வண்டிக்காரன்” என்று தோன்றியது. ஆனாலும் “சந்து பொந்துக்குள்ளெல்லாம் எதற்கு ஆடி காரை ஓட்டுகிறான் அப்படித்தான் ஆகும்” என்றும் தோன்றியது. இந்த லாஜிக்கல் ஆர்க்யூமெண்ட் இப்போ தேவையா என்று நினைத்த போது வேறொரு இடத்தில் அதே மிர்ச்சி போஸ்டர் அதே அனுஷ்கா. கண்களை திருப்பத்தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பி.எம்.டபிள்யூவோ, ஆடியோ குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்றுதான் நாளையிலிருந்து சாமி கும்பிட வேண்டும் போலிருக்கிறது.