Mar 22, 2013

மாராப்பு


முந்தாநாள் appraisal பற்றி எழுதிய போது இன்னொரு விவகாரம் ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் மென்பொருள் நிறுவனத்தில் நடந்த விவகாரம்தான். நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் இருக்கும். அப்பொழுது ஹைதராபாத்தில் இருந்தேன். எனக்கு வாய்த்த மேனேஜர் நல்ல மனிதர். ஆனால் வாய்தான் காது வரைக்கும் நீண்டிருக்கும். ஓட்டவாய். பேசிக் கொண்டே இருப்பார். அதிகமாக பேசும் மேனேஜர் கிடைப்பது ஒருவிதத்தில் நமக்கு நல்லதுதான். ஜால்ரா தட்டுவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

அப்பொழுதே நான் நன்றாக ஜால்ரா அடித்து பழகியிருந்தேன். அவர் என்ன சொன்னாலும் “ஜிங் ஜாக்”தான். அதனால் அவருக்கு என்னை மிகப் பிடிக்கும். போரடிக்கும் போதெல்லாம் என்னை இழுத்துக் கொள்வார். கறிக்கடையில் வெள்ளாட்டை கீழே போட்டு அறுப்பார்கள் அல்லவா? அப்படியொரு ஃபீலிங்தான் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும். வெள்ளாட்டையாவது நல்ல கதுமையான கத்தியை வைத்து வெறுக்கென அறுத்துவிடுவார்கள். சீக்கிரம் உயிர் போய்விடும். ஆனால் இந்த மேனேஜர் ரம்பத்தை வைத்து அறுப்பது போல அறுப்பார். அதுவும் மொன்னை ரம்பம். அறுப்பார் அறுப்பார் அறுத்துக் கொண்டே இருப்பார். 

‘ம்ம்ம்’ போட்டுக்கொண்டே கவனத்தை வேறு பக்கம் மேய விடும் கலையை இவரிடமிருந்துதான் பழகிக் கொண்டேன். அவர் பேசுவதற்கெல்லாம் ‘ஜிங் ஜாக்’ அடிக்கும் விதமாக ‘ம்ம்’ கொட்டிக் கொண்டே இருந்தாலும் கவனம் அங்கிருக்காது. அவரது வார்த்தைகள் இந்தக் காதில் நுழைந்து மற்றொரு காதில் தப்பித்துக் கொண்டிருக்கும். அதைத்தவிர அவரிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியும் இருக்காது. இப்படி ஓடிக் கொண்டிருந்த எங்கள் ஆட்டுமந்தை டீமில் ஆகஸ்ட் மாத வாக்கில் மது பாபு என்றொருவன் எங்கள் மேனேஜருக்கு கீழாக வந்து சேர்ந்தான். என்னைவிட வயதில் சிறியவன் என்றாலும் இதற்கு முன்பு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்ததால் நல்ல சம்பளத்துடன் வந்து சேர்ந்தான். ‘ஜிங் ஜாக்’ அடிப்பது கெளரவக் குறைச்சல் என நினைக்கும் பரம்பரையைச் சேர்ந்தவன் போலிருக்கிறது. மேனேஜர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். 

எங்கள் மேனேஜரிடம் குறிப்பிடத்தக்க விஷயம் இருந்தது. மேனேஜ்மெண்ட் என்ன சொல்கிறதோ அதை அச்சு பிசகாமல் ஒப்பித்துவிடுவார். ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. சில கணங்கள் மலங்க மலங்க விழித்துவிட்டு “I will get back to you" என்று மீட்டிங்கை முடித்துவிடுவார். அதற்கப்புறம் get ம் இருக்காது back ம் இருக்காது. நாங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். இந்த முறைகளில் குழப்படி செய்வதற்கென்றே மது பாபு டீமுக்குள் வந்துவிட்டான் போலிருக்கிறது. 

மீட்டிங் முடிந்த கையோடு Minutes of Meeting என்று மதுபாபு மின்னஞ்சல் அனுப்பிவிடுவான். மேனேஜர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எல்லாம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு மேனேஜரின் மேனேஜருக்கு Cc போட்டு அனுப்பத் துவங்கினான். வேறு வழியில்லாமல் அந்தக் கேள்விகளுக்கு மேனேஜர் பதில் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் அவருக்கு அத்தனை உவப்பானதில்லை. அவனை வழிக்கு கொண்டு வருவதற்கான அத்தனை பகீரத பிரயத்தனங்களையும் மேனேஜர் எடுக்கத் துவங்கினார். எதுவும் பலிக்கவில்லை என்பதுதான் சோகம்.

இன்னொரு உபாயமாக மீட்டிங் முடிந்தும் முடியாமலும் மேனேஜரே Minutes of meeting அனுப்பத் துவங்கினார். அவருக்குண்டான கேள்விகளை மட்டும் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சல் வந்திருக்கும். அவர் விடாக்கொண்டன் என்றால் மதுபாபு கொடாக்கண்டன். Missing Items என்று அவரது கேள்விகளையும் சேர்த்து பதில் அனுப்புவான். இப்படி இரண்டு முறை நடந்தது. கிட்டத்தட்ட மேனேஜரின் நாக்கு வெளித் தள்ளத் துவங்கிவிட்டது. நுரைத் தள்ளாமல் தப்பிப்பாரா என்று நாங்கள் குதூகலிக்கத் துவங்கினோம். ஆனால் அத்தனை பிரச்சினைகளும் எங்கள் தலைமீதுதான் இறங்கியது. தான் அசடு வழிவதை மறைக்க இன்னும் அதிகமாக பேசத் துவங்கினார். தனது கடந்தகால பிரதாபங்களை பட்டியலிடத் துவங்கினார். அவரது அறுப்பு தாங்கமுடியாமல் நாங்கள் இன்னும் அதிகமாக அல்லப்பட்டோம். 

மேனஜருக்கு வந்த சோதனை இதோடு முடியவில்லை. மேனேஜர் குடியிருந்த தெருவிலேயே மதுபாபுவும் குடியேறினான். இதன் பிறகு டீ குடிப்பதாக இருந்தாலும் சரி; மதிய உணவுக்கு செல்வதாக இருந்தாலும் சரி. மதுபாபுவை அழைத்துக் கொண்டுதான் செல்வார். மதுபாபு அவரிடம் சிக்கிக் கொண்டதால் நாங்கள் தப்பித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மேனேஜரும் மதுபாபுவும் ஒன்றாகவே சுற்றினாலும் மதுபாபு மீது அவருக்கு பிரியம் எதுவும் வந்திருக்கவில்லை. அவன் தன்னுடனேயே இருப்பது ஒருவிதத்தில் நல்லது என்று அவர் நினைத்திருக்கக் கூடும். 

இருந்தாலும் மதுபாபுவிடம் பெரிதாக எந்த மாற்றமுமில்லை. கேள்வி கேட்டுக் கொண்டேதான் இருந்தான். பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் என்னையும் அதிசயமாக மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அன்றும் வழக்கம் போலவே மேனேஜர்தான் பேசிக் கொண்டிருந்தார். மதுபாபு என்னைப் போல வெறும் “ம்ம்” கொட்டாமல் இடையிடையே பேசிக் கொண்டிருந்தான். மேனேஜர் சொல்வதையெல்லாம் எதிர்த்தும் பேசினான். அவன் பேசுவதையெல்லாம் மேனேஜர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். 

மேனேஜருக்கு அன்றைய தினத்தில் ஒன்பது கிரகங்களும் நீச்சத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பெண்களின் உடை பற்றிய பேச்சை துவங்கினார். பெண்கள் மாராப்பு அணிவது தவறென்றும் அது ஆண்களால் உருவாக்கப்பட்ட அடிமைச் சின்னம் என்றும் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகாத பருவம். இன்றைய தினம் கிளுகிளுப்பாக இருக்கும் போலிருக்கிறது என உற்சாகமாகத் துவங்கியிருந்தென். பெண்களின் உடலை போகப்பொருளாக மாற்றுவதற்காகத்தான் பெண்களுக்கு இந்த மாதிரியான உடையை அந்தக் காலத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அடிமைத்தனத்தை உடைக்க விரும்பும் பெண்கள் முதலில் மாராப்புகளையும், துப்பட்டாக்களையும் கொளுத்த வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். 

இப்பொழுது மதுபாபுவின் ஆட்டம். “அப்படியானால் பெண்கள் மாராப்பு இல்லாமல் வரும் போது ஆண்கள் தவறாக பார்க்கக் கூடாது” என்றான். 

உற்சாகமான மேனேஜர் “exactly! கொஞ்ச நாட்களுக்கு வெறித்துப் பார்ப்பார்கள் ஆனால் போகப் போக சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். 

நான் வழக்கம் போல “ம்ம்ம்” என்றேன்.

மதுபாபு தொடர்ந்தான் “அப்போ நம் வீட்டு பெண்களுக்கும் அந்தச் சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்ன்னு சொல்லுறீங்களா?” என்றான். அவன் கொக்கி போடுவது போலவே பட்டது.

“அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன்” என்று சலித்துக் கொள்வது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டார்.

மேனேஜருக்கு ஒன்பது கிரகங்களும் நீச்சம் என்றேன் அல்லவா? அது பலித்தது. “ஒருவேளை உங்கள் மனைவி துப்பட்டா இல்லாமல் வரும் போது- நீங்கள் குறிப்பிட்ட அந்த கொஞ்ச நாட்களுக்கு வீதியில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் வெறித்துப் பார்த்தால் எப்படி எடுத்துக்குவீங்க” என்றான் மதுபாபு.

எனக்கு தலை மீது வெடிகுண்டு விழுந்தது போல இருந்தது. அவருடன் ஒரே வீதியில் இருந்து கொண்டு இப்படியொரு நினைப்போடு சுற்றியிருக்கிறான் போலிருக்கிறது என்று அதிர்ச்சியாகியிருந்தேன். மேனேஜரின் முகம் சுருங்கி, இருண்டு ஒரு வழியாகிவிட்டது. அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவில்லை என்பதைவிடவும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். ஏதோ மழுப்பினார். ஒரு மீட்டிங் இருக்கிறது என்று கிளம்பினார். ஆனால் படு டென்ஷனாகிவிட்டார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு அப்பொழுது மதுபாபுவிடம் பேசுவதற்கே பயமாக இருந்தது. நானும் அந்த இடத்திலிருந்து கழண்டு கொண்டேன். இந்த அக்கப்போர் நடந்தது பிப்ரவரி மாதத்தில். மார்ச் மாத இறுதியில்தான் appraisal. மேனேஜர் அவனுக்கு குறிவைப்பார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் சரியான காரணம் சிக்கவில்லை. ஆனால் மேனேஜர்கள் நாகபாம்புகள் அல்லவா? 12 ஆம் தேதி அவருக்கும் ஒரு காரணம் சிக்கியது. மதுபாபு செமத்தியாக சிக்கிக் கொண்டான். அதை நாளைக்கோ அல்லது இன்னொரு நாளைக்கோ சொல்கிறேன்.