டெல்லி பெண்னை வன்புணர்வு செய்தவர்களை தண்டிக்கக் கோரி போராளிகள் களம் இறங்கியதில் அடிபட்ட போலீஸ்காரர் சுபாஷ் சந்த் தாமர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளை உடைய தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் ஒரே நபராக சுபாஷ் இருந்திருக்கிறார். இப்பொழுது சுபாஷ் குடும்பத்தின் ஜீவாதாரத்தை வெற்றிகரமாக சாய்த்திருக்கிறார்கள் களப்போராளிகளும், டெல்லி அதிகார வர்க்கமும்.
இந்த மரணத்திற்கு இரண்டு தரப்புமே பொறுப்பேற்க வேண்டும். யாராவது ‘பெரிய தலை’யைச் சந்திக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரியிருக்கிறார்கள். முதல்வர் ஷீலா தீட்சித் அல்லது டெல்லி கவர்னர் என யாரும் இவர்களை சந்திக்க வரவில்லை என்பதால் போராட்டக்காரர்கள் ஆட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேகம்தான் சுபாஷை சாய்த்திருக்கிறது. டெல்லி கவர்னரிலிருந்து, ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ஷிண்டே வரைக்கும் யாரை நோக்கி வேண்டுமானாலும் சுட்டு விரலை நீட்ட முடியும். அதே சமயம் போராட்டக்காரர்களை நோக்கியும் விரலை நீட்டலாம்.
போராட்டம் நடத்துபவர்கள் இரண்டு கோரிக்கைகளை முக்கியமானதாக முன்வைக்கிறார்கள்.
“குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளி”
“இனி வன்புணர்ச்சி நடக்காமல் தடு”
முதல் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்து மரண தண்டனை கொடுத்துவிடுவார்கள் அல்லது குற்றவாளிகள் கிடைக்காதபட்சத்தில் சாலையில் போகும் யாராவது சிலரை என்கவுண்ட்டரில் பொசுக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை சுட்டுவிட்டோம் என்று வழக்கை முடித்துவிடுவார்கள். ஆனால் இரண்டாவது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை. இது காலப்போக்கில் சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம். சமூகத்தை மனரீதியாக திருத்த வேண்டிய செயலை நீண்டகாலத் திட்டமாக அரசுகள் செயல்படுத்தத் துவங்கினால் மட்டுமே சாத்தியம்.
உண்மையில் இந்த சமூகம் புழுத்துக் கிடக்கிறது. காமத்திற்கும் வக்கிரத்திற்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்களால் நிரம்பிக் கிடக்கிறது. பெண்களை கண்களால் வன்புணர்வு செய்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் போது உடல் ரீதியாக கற்பழிக்கிறார்கள்*. இறுதியில் அவளது ஆடை அலங்காரம் ஆண்களை தூண்டி விடுகிறது என்று அந்தப் பெண்ணின் மீதாகவே எந்த வெட்கமும் இல்லாமல் குற்றத்தை சுமத்திவிடுகிறோம்.
இந்த லட்சணத்தில்தான் கலாச்சாரம், கட்டுப்பாடு என சகலத்திலும் அரசாங்கங்களும், கலாச்சாரக் காவலர்களும் மூக்கை நுழைக்கிறார்கள். திரைப்படம், விளம்பரங்கள் என சகலத்திலும் மேற்கத்திய கலாச்சாரத்தை உள்ளே புக அனுமதித்துவிட்டு “கலாச்சார ரீதியாக நீ இப்படித்தான் இருக்க வேண்டும்” என மக்களை கட்டுப்படுத்துவது முரட்டு நாயை கட்டி வைத்துவிட்டு ஒரு கறித்துண்டை அதன் கண்களில் படும்படியாக வைத்துவிடுவது போலத்தான். சந்தர்ப்பம் வாய்க்குமானால் சங்கிலியை அறுத்துக் கொள்ள நாய்கள் யோசிப்பதில்லை.
சமூக ரீதியிலான மாற்றங்களைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்கு முன்பாக மடக்கிய முஷ்டியை கொஞ்ச நேரம் தளரவிடுவோம். தங்களை இந்திய ராணுவம் கற்பழித்துவிட்டதாக பல ஆண்டுகளாக போராடி வரும் வட கிழக்கு இந்தியப் பெண்களை நாம் ஏன் கண்டு கொள்ளவே இல்லை? ஜம்மு காஷ்மீரில் தங்கள் மீதான பாலியல் பலாத்காரங்களை முன்வைத்து பெண்கள் போராடிய போதெல்லாம் நாம் ஏன் கண்களை மூடிக் கொண்டோம்? தமிழக கிராமங்களில் போலீஸார் நடத்திய காமக் களியாட்டங்களைக் கேட்டபோதெல்லாம் நம் காதுகளை மூடிக் கொண்டது ஞாபகத்திற்கு வருகிறதா?
இதை எழுதுவது பெரும்பான்மையான மக்களின் கருத்துக்கு எதிரானதை பேச வேண்டும் என்ற ‘கவன ஈர்ப்பு’ Strategy இல்லை. உண்மையிலேயே நாம் பெரும்பான்மையான மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் மீடியா முன்னிலைப்படுத்தும் செய்திகளுக்காக மட்டுமே கவலைப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டத்தான்.
இப்பொழுது டெல்லியில் ஒரு பெண் இறந்ததற்கு பதிலாக ஒரு போலீஸ்காரருக்கு முடிவு எழுதிவிட்டோம். ஆனால் இதோடு நாம் ஓயப்போவதில்லை என்று தெரியும். அந்த காமுகர்கள் ஆறு பேரையும் கழுவிலேற்றியே தீருவோம். அவர்களைக் கொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அதே சமயம் கோவில்பட்டியிலும், பாகல்கோட்டிலும் மற்றும் இந்த தேசத்தின் பிறபகுதிகளிலும் பாலியல் சித்ரவைதைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் நூற்றுக்கணக்கான பெண்களுக்காகவும் என்ன செய்யப்போகிறோம்?
* கற்பழிப்பு என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனது உடலை யாருடன் பகிர வேண்டும் என ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் விருப்பத்தை கற்பு என எடுத்துக் கொள்ளலாம். அந்த விருப்பத்தையும் உரிமையும் வலுக்கட்டாயமாக சூறையாடும் செயலை கற்பழிப்பு என்றும் கற்பைச் சூறையாடுதல் என்றும் விளிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை
3 எதிர் சப்தங்கள்:
This appears to be a more matured article. Sorry for commenting in English. Google transliterate is not working at the moement. Explanation of "karpu" is beautiful.. Chastity is more of a mental thing and it hasn't got anything to do with one's body. Will be there in Cubbon Park on Jan.6th. See you.. Keep writing.
//தனது உடலை யாருடன் பகிர வேண்டும் என ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் விருப்பத்தை கற்பு என எடுத்துக் கொள்ளலாம். அந்த விருப்பத்தையும் உரிமையும் வலுக்கட்டாயமாக சூறையாடும் செயலை கற்பழிப்பு என்றும் கற்பைச் சூறையாடுதல் என்றும் விளிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை//
அப்போ ஒரு தீயவன் பலவந்தமாக சூறையாடும் போது கற்பு அழிந்துவிடுமோ?
//இறுதியில் அவளது ஆடை அலங்காரம் ஆண்களை தூண்டி விடுகிறது என்று அந்தப் பெண்ணின் மீதாகவே எந்த வெட்கமும் இல்லாமல் குற்றத்தை சுமத்திவிடுகிறோம்//
மிக சரி.
இந்த மிருகத்தனமான நடத்தையை பாருங்கள். இது 4 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. முறையான நீதி பெற உதவுங்கள். நாடு முழுவதும் இந்த விஷயத்தை பரப்புவதற்காக உதவுங்கள்.
http://www.theweekendleader.com/Causes/1470/naked-injustice.html
Post a Comment