வருடக்கடைசி வந்தாலும் வந்தது ஆளாளுக்கு டாப் 10 லிஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாவில் ஆரம்பித்து டிவி, சமையல், இலக்கியம் வரைக்கும் அல்லோலப்படுகிறது. நம்மைச் சுற்றிய உலகம் சர்வரோக நிவாரண நிபுணர்களால் நிரம்பியிருக்கிறது என இந்த லிஸ்ட்களைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த கில்மா பட நாயகி, சிறந்த நாட்டுவைத்திய சூரணம், சிறந்த கவிதைத் தொகுப்பு என அனைத்தையும் ஒரே லிஸ்ட்டில் போட்டு கலங்கடிக்கிறார்கள்.
ஆயா கடை புட்டு இருக்கும் அதே லிஸ்ட்டில்தான் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஸ்நாக்ஸூம் இருக்கிறது. இந்த லிஸ்ட்டுக்காரர்களால் எப்படி சகலத்திலும் கபடியாட முடிகிறது என பார்ப்பவர்கள் மூக்கின் மீது கால் வைக்க வேண்டும். இப்படி ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பதோடு நிறுத்திக் கொண்டால் நல்லது. அதைவிடுத்து இந்த டாப் டென், பாட்டம் ட்வெண்டி போன்றவற்றால் ஏதேனும் பயன் இருக்கிறதா என்று யாராவது கேட்டால் பொடணி அடியாக அடித்து அவன் சோலியை முடிக்க வேண்டியதுதான்.
லிஸ்ட்டை பார்க்கிற சுப்பனுக்கும் குப்பனுக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ, லிஸ்ட் போட்டவனுக்கு பயன் இருக்கிறது. லிஸ்ட் போடுகிறவனை ‘பெரிய ஆள்’ என்று சொல்ல யாருமே தயங்குவதில்லை என்பதால் முதல் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது. அப்புறம் நாம் சொறிந்து விட வேண்டியவர்கள் அல்லது நம்மை சொறிந்து விடுபவர்களை லிஸ்ட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் இன்னொரு வேலையும் எளிதாக முடிந்துவிடுகிறது.
இப்படி எல்லாவற்றையும் எளிதாக முடிக்க எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை. எளிய மனிதர்கள் தங்களைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளும் சிக்கல்களை நேரில் பார்த்துவிட்டால் அவற்றை நம்மால் எளிதில் தாண்டி வர முடிவதில்லை.
நேற்று காலை வீட்டிலிருந்து நேரத்திலேயே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டேன். இந்திராநகரிலிருந்து சி.வி.ராமன் நகருக்கு பிரியும் சாலையில் ஒரு காலி இடத்தின் முன்பாக கூட்டமாக நின்றிருந்தார்கள். எந்த இடத்தில் கூட்டமாக இருந்தாலும் மூக்கு வியர்த்து வண்டிக்கு சைடு ஸ்டாண்ட் போட்டுவிடுவேன். நேற்றும் அப்படித்தான். அது வெறும் காலி இடம் மட்டும் இல்லை. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்ட காலி இடத்தின் மூலையில் ஆஸ்பெஸ்டாஸ் ஸீட் வேய்ந்த ஒற்றை அறை. அந்த அறைக்கு முன்பாக நான்கைந்து போலீஸ்காரர்களும் சில ஆண்களும் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். வேறு ஒன்றுமில்லை- அதிகாலையில் தூக்கில் தொங்கியவனை கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த அறைக்கு வெளியில் அவனது மனைவியும் இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். மிக எளிய மனிதர்கள். குழந்தைகளில் பெரியவனுக்கு நான்கு வயது இருக்கலாம்.
இறந்து போனவன் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டானாம். நேற்று விடிந்தவுடனேயே கணவன் மனைவிக்கு இடையில் தகராறு வந்திருக்கிறது. தகராறு நடந்து கொண்டிருக்கும் போதே தான் வீட்டு வேலை செய்து வரும் இடத்திற்கு மனைவி சென்றுவிட்டாள். வேலையெல்லாம் முடித்துவிட்டு திரும்ப வந்த போதுதான் தன் கணவன் இறந்து கிடப்பதைப் பார்த்து கதறியிருக்கிறாள். அவளது புடைவையை விட்டத்தில் சொருகி தொங்கியிருக்கிறான். அருகாமையில் இருக்கும் மிகக் கொஞ்சம் பேர் அவளுக்கு உதவ வந்திருக்கிறார்கள். மிச்ச மீதியெல்லாம் தங்களது மொட்டை மாடியில் செளகரியமான இடம் பிடித்துக் கொண்டார்கள். இறந்து போனவனின் உடலை அறையை விட்டு வெளியே தூக்கி வரும் போது தெளிவாக பார்க்க வேண்டுமாம்.
இந்த மரணமும், அதை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிகளில் இடம் பிடித்த கூட்டமும் நேற்றைய தினத்தை முழுமையாக தின்றுவிட்டது. மரணம் தன் பிரச்சினைகளை எளிமையானதாக்கிவிடும் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறான் போலிருக்கிறது. அவனது நீல நிற கால்சட்டையும், வலிமையான கைகளும் கண்களைவிட்டு அகலுவதாக இல்லை. மாலை வரை மனம் நிலையாக இல்லை.
மாலையில் வீடு திரும்பும் போது அவன் மறையத் துவங்கியிருந்தான். அலுவலகத்தில் பைக் ஸ்டாண்டிலிருந்து வெளியே வரும் போது கறுப்பு நிற சாண்ட்ரோ கார் படு வேகமாக முந்தியது. உள்ளே ஒரு பெண் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள். பெண் சிகரெட் பிடிக்கிறாள் என்பதை அழுத்தமாகச் சொன்னால் அது ‘செக்ஸிஸ்ட்’ கமெண்ட் ஆகிவிடுமாம். நமக்கெதுக்கு வம்பு? சோடியம் விளக்குகளால் ஜொலிக்கும் நகரத்தின் சாலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கியதில் அவளை விடவும் அழகான ப்ளக்ஸ் பேனர் நாயகிகள் என் மாலை நேரத்தை ஆக்கிரமிக்கத் துவங்கினார்கள். மடிவாலாவில் பெங்களூர் ட்ராபிக் போலீஸார் ஒரு பேனர் வைத்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் மரணம் நிச்சயம் என்ற வாசகம் இருக்கிறது. அருகிலேயே ‘மிஸ் யூ டாட்’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தார்கள். அதாவது ஆண்கள் மட்டும்தான் குடித்துவிட்டு ஓட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். It is not a sexist comment என்று நம்ப வேண்டுமாம்.
7 எதிர் சப்தங்கள்:
லிஸ்ட்டை பார்க்கிற சுப்பனுக்கும் குப்பனுக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ, லிஸ்ட் போட்டவனுக்கு பயன் இருக்கிறது. லிஸ்ட் போடுகிறவனை ‘பெரிய ஆள்’ என்று சொல்ல யாருமே தயங்குவதில்லை என்பதால் முதல் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது. அப்புறம் நாம் சொறிந்து விட வேண்டியவர்கள் அல்லது நம்மை சொறிந்து விடுபவர்களை லிஸ்ட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் இன்னொரு வேலையும் எளிதாக முடிந்துவிடுகிறது.//
கோபத்தை கூட ஒரு வேக நடையில் அழுத்தமாக சொல்வது உங்களால் மட்டுமே முடியும் .
இந்த சுவாரசியமான நடைக்காகவே இந்த வலைபூவில் இந்த வருடம் முழுதும் நான் அதிகம் உலாவி இருக்கிறேன்- என்று பிரகனப் படுத்துகிறேன்.
///லிஸ்ட்டை பார்க்கிற சுப்பனுக்கும் குப்பனுக்கும் பயன் இருக்கிறதோ இல்லையோ, லிஸ்ட் போட்டவனுக்கு பயன் இருக்கிறது. //
ஹி ஹி ஹி
இந்த வெகுஜன பத்திரிகைகள் தான் இந்தத் தொல்லைகளில் அதிகம் ஈடுபடுகின்றன. அதிக பக்கங்கள்! அதிக விலை! நானும் இது குறித்துச் சிந்தித்ததுண்டு. யாருக்காவது பத்து பைசா பிரயோஜனம் உண்டா என்று! எழுதுபவர்களுக்கும் பெரிய mileage என்று சொல்லக்கூடிய ஒன்றும் கிடைப்பதாகத் தெரியவில்லை. நல்ல வேளை! நீங்கள் ஒரு லிஸ்டும் போடவில்லை. இன்னும் தொ(ல்)லைக்காட்சிகள் ஒன்றும் இதுவரை விழித்தெழவில்லை.
நன்றி ஆறுமுகம்.
கிருஷ்ணமூர்த்தி, கரிகாலன் உங்களின் பாராட்டு உத்வேகம் அளிக்கிறது.
நன்றி பாலு.
அட்டகாசம் சார்...Interesting ஆ எழுதறீங்க..Keep it up...
நானும் பெங்களுருவில் தான் வசித்து கொண்டு இருக்கிறேன்.
உங்களின் எழுத்து நடையும் தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் முறையும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் !!!
Post a Comment